December 16, 2018

2.0 விமர்சனம்

ஹாலிவுட் படங்களைப் பார்க்கும் போது, மக்களை அழிக்க நினைக்கும் வில்லன்கள் அமெரிக்க நகரங்களான நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ ஆகீயவற்றைத்தான் தாக்குவார்கள்.

நகரத்து மக்களைக் காப்பாற்ற வில்லன்களை எதிர்த்து சூப்பர் மேன்கள், ஸ்பைடர்மேன்கள், பேட்மேன்கள் என சூப்பர் ஹீரோக்கள் களம் இறங்குவார்கள். அப்போதெல்லாம், பாவம் அமெரிக்க நகரங்களுக்குத்தான் சினிமாவில் எப்படியெல்லாம் தாக்குதல்கள் நடக்கிறது என எண்ணத் தோன்றும்.

அது முதல் முறையாக இப்போது இந்தியாவிற்கு, தமிழ்நாட்டிற்கு அதிலும் சென்னைக்கு நடக்கிறது என்றால் தமிழ் சினிமாவும் ஹாலிவுட் அளவிற்கு மாறிவிட்டது என்றுதானே அர்த்தம்.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வு வந்துவிடுகிறது. இப்படி ஒரு படத்தை யோசித்த, கருவாக்கிய, உருவாக்கிய இயக்குனர் ஷங்கரைப் பாராட்ட வார்த்தைகளைத் தேட வேண்டும். இந்தியத் திரையுலகம், ஏன் ஹாலிவுட் திரையுலகம் இதுவரை கண்டிராத கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் காட்சிகள் படத்தை பிரமிப்புடன் ரசிக்க வைக்கின்றன.

தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார் இயக்குனர் ஷங்கர். இனி, எதிர்காலத்தில் வரப்போகும் படங்களை 2.0 படத்தை வைத்து ஒப்பிட்டுப் பேசும் ஒரு நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

இந்த பூமி மனிதர்கள் மட்டுமே வாழ படைக்கப்படவில்லை. பறவைகள், விலங்குகள்  என மற்ற உயிரினங்கள் வாழ்வதற்கும் படைக்கப்பட்டது. நம் வசதிக்காக, மற்ற உயிரினங்கள் அழிவதற்கு நாம் காரணமாக அமையக் கூடாது என்ற உயர்ந்த கருத்தை வலியுறுத்தும், ஒரு சுற்றுச்சூழல் படம் 2.0.

குழந்தையாகப் பிறந்த போதே தன்னை உயிர்ப்பித்தது ஒரு பறவை என்பதை உணர்ந்த அக்ஷய்குமார் வளர்ந்ததும் பறவையியல் வல்லுனர் ஆக இருக்கிறார். மக்கள் பயன்படுத்தும் செல்போன் கதிர்வீச்சால் பறவைகள் மடிகின்றன என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கிறார். அதனால், கதிர்வீச்சைக் குறைக்க வேண்டும், செல்பேன் நிறுவனங்களைக் குறைக்க வேண்டும் எனப் போராடுகிறார். நீதிமன்றம் சென்றும் அவர் போராட்டம் தோற்றுப் போகிறது. அந்த விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறார்.

மரணத்திற்குப் பின் தான் வளர்த்த, இறந்த பறவைகளின் சக்தியுடன் பறவை சக்தியாக உருவெடுக்கிறார். செல்போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும், கம்பெனிகளுக்கு எதிராகவும் மீண்டும் போராடுகிறார். அதனால், நாட்டின் தகவல் தொடர்பு பாதிக்கப்படுகிறது. ரோபோட் விஞ்ஞானி ரஜினிகாந்த் அதற்காக அரசாங்கத்திற்கு உதவுகிறார். மீண்டும் சிட்டி ரோபோட்டுக்கு உயிர் கொடுக்கிறார். அதையும் அழித்துவிடுகிறார் பறவை மனிதன் அக்ஷய்குமார். பின்னர், சிட்டி 2.0 வெர்ஷனை உருவாக்குகிறார்கள். அது பறவை மனிதனை அழித்து மக்களைக் காப்பாற்றுகிறதா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

ரஜினிகாந்த், விஞ்ஞானி வசீகரன், சிட்டி ரோபோ, 2.0 வெர்ஷன் ரோபோ, 3.0 வெர்ஷன் ரோபோ என நான்கு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒரு ஸ்டைல் என நம்மை வசீகரிக்கிறார். இந்த வயதிலும் ரஜினியின் சுறுசுறுப்பையும், நடிப்பையும் இந்தக் காலத்தில் தங்களை சூப்பர் ஸ்டார்களாக நினைத்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் கவனிப்பது நல்லது.

ரோபோ நிலா-வாக எமி ஜாக்சன். எப்படி அப்படியோ ரோபோ மாதிரி நடிக்கிறார் என்பது ஆச்சரியம். அவருடைய மேக்கப்பும், ஆடைகளும் அசத்தல். எந்த நடிகைக்கும் கிடைக்காத மிகப் பெரும் வாய்ப்பு எமிக்கு. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பறவையியல் வல்லுனர் ஆக வயதான கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார். அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான பின்னணி கொடுத்துள்ள நடிகர் ஜெயப்பிரகாஷ். சுற்றுச் சூழல் மீது பறவைகள் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளார். ஆனால், இங்கோ மனிதர்களைக் காப்பாற்றுவதை விட ஸ்டைர்லைட் ஆலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பறவையியல் வல்லுனர் கதாபாத்திரத்தில் நம்மை கண்ணீர் விட வைக்கிறார் அக்ஷய். பின்னர் பறவை மனிதனாக மாறிய பின் மிரள வைக்கிறார்.

‘எந்திரன்’ படத்தின் வில்லன் அதில் இறந்து போனதால், அவருடைய மகன் கதாபாத்திரத்தை உருவாக்கி இந்த ‘2.0’ விலும் வில்லனாக்கியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் அப்பா செய்த தவறையே இதில் மகனும் செய்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் அமைச்சர் கலாபவன் ஷாஜோன் கலகலக்க வைக்கிறார்.

ஏஆர் ரகுமான் பின்னணி இசையில் வேறு ஒரு தரத்தைக் கொடுத்திருக்கிறார். புல்லினங்காள் பாடலின் காட்சிப்படுத்தல் அழகோ அழகு. ராஜாளி பாடல் பின்னணியில் மட்டுமே ஒலிக்கிறது. எந்திர லோகத்து … பாடல் படம் முடிந்த பின்தான் வருகிறது.

ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, படத் தொகுப்பாளர் ஆண்டனி, கலை இயக்குனர் முத்துராஜ் படத்தை உலகத் தரத்திற்குக் கொண்டு செல்வதில் இயக்குனர் ஷங்கருடன் சிறப்பாகக் கை கோர்த்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ஒவ்வொரு படம் வரும் போதும் தமிழ் சினிமா வேறு ஒரு தளத்திற்குச் செல்லும். இந்தப் படம் ஒரு இன்டர்நேஷனல் படமாகவே தெரிகிறது. இனி, இந்திய சினிமா என்று சொல்லும் போது தமிழ் சினிமாவையும், இயக்குனர் ஷங்கரையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒரு இயக்குனிரின் கற்பனைத் திறனுக்கு இந்தப் படம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

3 டியில் படத்தைப் பார்ப்பது உங்களுக்கு விஷுவல் டிரீட் ஆக இருக்கும்.

குழந்தைகள், குடும்பங்கள், நண்பர்கள் என அனைவருடனும் ரசித்துப் பார்க்க வேண்டிய படம்.

2.0 – வேற லெவல்…

Related Posts