November 17, 2018

லேட்டா வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – ரஜினிகாந்த்

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, படத் தொகுப்பாளர் ஆண்டனி, கலை இயக்குனர் முத்துராஜ், சண்டைப் பயிற்சியாளர் சில்வா, ஒலிப்புதிவு இயக்குனர் ரசூல் பூக்குட்டி, விஎப்எக்ஸ் இயக்குனர் ஸ்ரீனிவாச மூர்த்தி உள்ளிட்டவர்களும் பல திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில்,

“ 2 .0 படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் சரியாக நடிக்க முடியவில்லை. எனவே படத்தில் இருந்து நான் வெளியேறுவதாகக் கூறினேன். வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுப்பதாகச் சொன்னேன். ஆனால் ஷங்கர் விடவில்லை. படம் முக்கியம் அல்ல, நீங்கள் தான் முக்கியம் என்று தயாரிப்பாளர் சுபாஷ் சொன்னார். உடல்நிலை சரியான பிறகு கூட படத்தை எடுக்கலாம். ஆனால் நான் திரும்ப வர வேண்டும் என்று சுபாஷ் சொன்னார். இவரை போன்ற ஒரு நல்ல நண்பரை பார்ப்பது கடினம்

முதலில் படப்பிடிப்பு துவங்கும்போது 300 கோடி பட்ஜட்டில் துவங்கியது. கடைசியில் 550 கோடியில் வந்து நின்றது. கண்டிப்பாக அதைவிட இரண்டு மடங்கு லாபத்தை படம் ஈட்டும். எப்போது வரனும் என்பது முக்கியமல்ல வெற்றி பெறுவதுதான் முக்கியம். லேட் ஆனாலும் கரெக்டா வரனும். வந்தாச்சு, வெற்றி உறுதியாகிவிட்டது. ஹிட் ஆக்குவதுதான் பாக்கி. நான் படத்தைச் சொன்னேன். வாழ்த்து கூறிய எனது நண்பர் கமல்ஹாசனுடன் ஷங்கர் இணையும் ‘இந்தியன் -2’ மாபெரும் வெற்றி பெறும்,” என்றார்.

விழாவில் மற்றவர்களும் படத்தைப் பற்றிய அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

Related Posts