December 16, 2018

‘ஆண் தேவதை’க்காகக் காத்திருக்கும் ரம்யா பாண்டியன்

‘ஜோக்கர்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக தன் முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தவர் ரம்யா பாண்டியன்.

தற்போது ‘ஆண் தேவதை’ படத்தில் நடித்து முடித்து அதன் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

படம் பற்றிய அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“ஜோக்கர்’ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி சார் தான், ‘ஆண் தேவதை’ படம் பற்றி சொல்லி, அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குனர் தாமிராவும் படத்தின் கதையையும், கேரக்டரையும் விரிவாக சொல்லவே, இந்தப் படத்திற்குள் உடனடியாக வந்துவிட்டேன்.

‘ஜோக்கர்’ படத்திற்கு அடுத்ததாக இந்தப்படம் வந்தால் எனது கேரியரில் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். காரணம் ‘ஜோக்கர்’ படத்தில் நீங்கள் பார்த்த மல்லிகாவுக்கும் இதில் பார்க்கப்போகும் ஜெஸிகாவுக்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை நடிப்பிலும் தோற்றத்திலும் காட்டியுள்ளேன்.

சமுத்திரக்கனி சார் செட்டில் எந்நேரமும் பரபரப்பா இருப்பார். அவருடன் நடித்த காட்சிகளில் எந்த பதட்டமும் இல்லாமல் தான் நடித்தேன். அந்த அளவுக்கு அவர் எனக்கு உற்சாகம் கொடுத்ததும், நான் தமிழ்ப் பொண்ணு என்பதும் கூட காரணமாக இருக்கலாம்.

இயக்குனர் தாமிரா நம்ம ஊரு பொண்ணு என்பதால் என்னை ரொம்ப பாசமாகவே நடத்தி வேலை வாங்கினார். இந்தப் படம் ஒப்புக் கொள்வதற்கு முன்னால் சில சந்தேகங்கள் எனக்கு இருந்தது. அதுபற்றி அவர் எனக்கு விளக்கம் கொடுத்து, என்னை சம்மதிக்க வைத்தார். அதுமட்டுமல்ல, ஷூட்டிங் ஸ்பாட்டில், வசனங்களை இன்னும் இம்ப்ரூவ் பண்ணுவார். எனக்கு மொழி பிரச்னை இல்லாததால், நானும் டக்கு டக் என வசனங்களை உள்வாங்கி நடிக்க ரொம்ப ஈஸியாவே இருந்தது.

ஒருநாள் படப்பிடிப்பு தளத்துல இப்படி வசனத்தை இன்னும் பட்டை தீட்டுற போது ஒரு மிகப் பெரிய விவாதமே நடந்துச்சு, ஆரோக்கியமான விவாதம் தான். அதனால், படத்தில் அந்த காட்சி ரொம்ப சிறப்பா வரும்னு அப்பவே எங்களால் கணிக்க முடிஞ்சது. அதே சமயம் நாங்கள் பெரும்பாலும் சிங்கிள் டேக்ல ஓகே பண்ணிடுவோம் என்பதால் டைரக்டர் தாமிரா திட்டமிட்டபடி ஒவ்வொரு நாளும் எடுக்கவேண்டிய காட்சிகளை தாமதம் இல்லாம எடுக்க முடிஞ்சது.

என்னோட நடிப்பைப் பாராட்டி படப்பிடிப்பு தளத்திலேயே பணமுடிப்பு பரிசா தந்தாங்க, அதை என்னால மறக்கவே முடியாது. அதுமட்டுமல்ல, டப்பிங் பேசின போதும் அதுபோல ரெண்டு தடவை பணமுடிப்பு வாங்கினேன். சுத்தியிருக்கிறவங்க பாராட்டினாலும் கூட, ஒரு கதையை, என்னோட கேரக்டரை உருவாக்கின இயக்குனர், தான் நினைத்த மாதிரியே வந்து விட்டதாக சொல்லி பரிசு தர்றது எவ்வளவு பெரிய விஷயம்.

அடுத்தடுத்த படங்களில் குடும்ப தலைவியா நடிக்கிறீங்களேன்னு நிறைய பேர் கேட்டாங்க. குடும்பத் தலைவி என்றாலும் இந்தப் படத்துல நார்மலா ஐடி வேலைக்கு போற பொண்ணா தான் நடிச்சிருக்கேன். ஒருத்தரை ஒரு கேரக்டர்ல பிடிச்சுப் போய் ரசிச்சு பார்த்தாங்கன்னா, அடுத்ததா அவங்கள எந்த கேரக்டர்லயும் பொருத்திப் பார்க்குற அளவுக்கு ஜனங்களோட மனோபாவம் இப்ப மாறிக்கிட்டே வருது. அதனால் ரம்யா பாண்டியன் இப்படித்தான்னு முத்திரை குத்திருவாங்களோன்னு பயப்பட தேவையில்லை.

‘ஜோக்கர்’ படம் மல்லிகாவைத்தான் ரசிகர்களிடம் அதிகமாகக் கொண்டு போய் சேர்த்தது. ஆனால் ‘ஆண் தேவதை’ படம் ரம்யா பாண்டியனை முழுமையாக வெளிப்படுத்தும் . ஏன்னா ‘ஜோக்கர்’ படம் வந்தப்ப ரம்யா பாண்டியனா நான் வெளிய தெரியவே இல்லை. நிறைய பேர் நம்பவே இல்லை. அவ்வளவு ஏன் இயக்குனர் பா.ரஞ்சித் சார் கூட படம் வெளியாகி ஒரு வருஷம் வரைக்கும் நான் ஏதோ பெங்காலி பொண்ணுன்னு தான் நினைச்சிட்டு இருந்தாராம். மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் மூலமா உண்மை தெரிஞ்சதும் என்னை கூப்பிட்டு ரொம்பவே பாராட்டினார்.

மும்பை , மலையாளத்தில் இருந்து ஹீரோயின்கள் வந்த நிலையில் இப்போ கொஞ்சம் மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு. காரணம் நம்ம தமிழ்ப்பொண்ணுங்களும் சினிமாவுல இறங்கிட்டு வர்றாங்க.

இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால், இந்தப்படம் வெளியான பின், எனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் தேடி வரும் என்பதால் வேறு படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. காரணம் ஒரு படத்தில் நடிக்க கதை, கேரக்டர் அல்லது டீம் என ஏதாவது ஒரு விஷயமாவது நம்மைக் கவர வேண்டும் இல்லையா…? அப்படி மூன்றும் கலந்த ஒரு படமாக ‘ஆண் தேவதை’ எனக்குக் கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான்.

இந்தப் படம் வெளியான பின்னாடி, நான் இன்னும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாகப் பதிவேன். ஆண் தேவதைக்கு அடுத்து என்ன விதமான படம், கேரக்டர் பண்ணப் போறோம்னு எதுவும் தீர்மானிக்கலை. ஆனா, கொஞ்ச நேரம் வந்தாலும் கூட, அது ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த மாதிரி இருக்கணும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்,” என்கிறார் ரம்யா பாண்டியன்.

தாமிரா இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஆண் தேவதை’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

Related Posts