Connect with us

Tamil Cinema News

‘ஐரா’ – நயன்தாராவா இது ?

Published

on

airaa

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கே.எம். சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘ஐரா’. கலையரசன், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் பார்வை, டீசர் ஏற்கெனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

நயன்தாரா நடிக்கும் முதல் இரட்டை வேடப் படமான ‘ஐரா’ படத்தின் ‘மேக தூதம்’ பாடல் நயன்தாராவின் வித்தியாசமான தோற்றத்திற்காக ரசிக்கப்பட்டு வருகிறது.

அந்தப் பாடல் பற்றி படத்தின் இயக்குனர் சர்ஜுன் கூறுகையில்,

“இந்தப் பாடலை ஏற்கெனவே கேட்டவர்கள் எளிதாக இதை கண்டுபிடித்திருப்பார்கள் என நம்புகிறேன். ‘பவானி’ என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் பாடல். அவளுடைய கனவுகள், அபிலாஷைகள், தனக்கு பிடித்த ஆன்மாவுடனான மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்காக ஏங்குவது போன்றவற்றை வெளிப்படுத்தும் படல்.

பத்மப்ரியா ராகவன், தாமரை, சுந்தரமூர்த்தி ஆகியோரின் சிறப்பான முயற்சிகளைப் பாராட்டுகிறேன். ஸ்லோ பாய்ஸனாக ரசிகர்கள் மனதில் இறங்கிக் கொண்டிருக்கும் இந்த அழகான பாடலை கொடுத்த மூவரையும் பிரித்துப் பார்க்க முடியாது.

தாமரை எப்பொழுதும் உணர்ச்சிகளின் அமுதம், அவரின் பாடல் வரிகள் மூலம் நிபந்தனையற்ற அன்பின் மேன்மையை உயர்த்துவார். பாடல் உருவாக்கும்போது இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி பாடல் வரிகளும், குரலும் மிக தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்தினார். இதனால் மென்மையான இசையை இழைய விட்டிருந்தார். அது தான் பாடலில் தாக்கத்தை தீவிரப்படுத்தியது.

பாடலில் வெற்றிக்கு பத்மப்ரியா ராகவனின் பங்கும் மிக முக்கியமானது. காட்சிகளும், பாடலின் சூழ்நிலையும் மற்றும் நயன்தாராவின் பிரம்மாண்டமான திரை ஆளுமையும் பாடலுக்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்தப் படம் நயன்தாராவின் 63வது திரைப்படமாகும். படத்தை இயக்கும் போது அவரது நடிப்பை ஒரு ரசிகராக பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக ‘பவானியின்’ கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.

Tamil Cinema News

‘எல்கேஜி’ அதிகாலை காட்சி, விஷ்ணு விஷால் – ஆர்ஜே பாலாஜி மோதல்

Published

on

lkg-vishnu-vishal-rj-balaji

தமிழ் சினிமாவில் புத்தம் புதிய படங்கள், அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது ஒரு ‘இமேஜ்’ சார்ந்த விஷயமாக இருந்தது.

அது ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரது படங்களுக்குத்தான் அதிகமாக இருந்தது. கடந்த சில வருடங்களாக அவர்களது படங்களின் அதிகாலைக் காட்சிகள் என்றால் டிக்கெட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு இருந்தது.

அதிகாலை காட்சி திரையிடப்பட்டுவிட்டால் நாமும் அவர்களைப் போல ஸ்டார் ஆகிவிடலாம் என நினைத்து சில நடிகர்கள் அவர்களது படங்களையும் அதிகாலைக் காட்சி திரையிட ஏற்பாடு செய்கிறார்கள்.

அந்த வரிசையில் நகைச்சுவை நடிகராக இருந்து, ‘எல்கேஜி’ படத்தின் மூலம் ஹீரோவாக உயர்ந்துள்ள ஆர்ஜே பாலாஜியின் ‘எல்கேஜி’ படத்திற்கு அதிகாலை காட்சி 5 மணிக்கு என சமூக வலைத்தளங்களில், குறிப்பாக டிவிட்டரில் பரப்புரை செய்யப்பட்டது.

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் அதிகாலை 5 மணிக்கு காட்சி என பிரமோஷன் செய்யப்பட்டது. அதைப் பார்த்ததும் நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் ஒரு டிவீட் போட்டார்.

அதில், “அதிகாலை 5 மணி காட்சிகள் அதன் மதிப்பை இழந்து வருகின்றன. அது இப்போது ஒரு தந்திரமாக ஆகி வருகிறது,”  என்று போட்டிருந்தார். அது ‘எல்கேஜி’ படத்தைத்தான் குறிக்கிறது என்பதை அதன் நாயகன் பாலாஜியே பதிலளித்து காட்டிக் கொடுத்துவிட்டார்.

அவர் பதிவிட்ட டிவீட்டில், “இந்த 5 மணி காட்சி ஒரு தந்திரம் என நான் நினைத்தால், அப்புறம் தியேட்டர் ஓனர் கிட்ட டைரக்டா கேட்டு கன்பர்ம் பண்ணிக்கிட்டேன். நாங்கள் ரெகமேண்டேஷன் சீட் வாங்கவில்லை, மெரிட் சீட்டுதான் வாங்கியிருக்கிறோம்,” எனக் கூறியிருக்கிறார்.

அதோடு, ஒரு வாட்சப் சாட்டிங்கையும் பதிவிட்டிருக்கிறார். அது விஷ்ணு விஷாலுடன் நடந்ததாகத்தான் இருக்கும்.

அதைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலும் கடுமையாக சில டிவீட்டுகளைப் பதிவிட்டு கடைசியா, “சிறிய படங்களுக்கு அதிகாலைக் காட்சிகள் கிடைப்பது மகிழ்ச்சியே. அது சினிமாவுக்கு நல்லதுதான். ஆனால், சிலர் ஆக்கபூர்வமான விமர்சனம் என்ற பெயரில் மக்களைத் தவறாக வழி நடத்துவது எனக்கு மகிழ்ச்சியானது அல்ல,” என கூறியிருக்கிறார்.

விஷ்ணு விஷாலை எப்போதோ ஒரு முறை ஆர்.ஜே. பாலாஜி கிண்டலடித்து விமர்சனம் செய்திருக்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் விஷ்ணு விஷால் இன்று டிவிட்டரில் சண்டை போட்டிருக்கிறார் போலிருக்கிறது. அதற்கு கீழே உள்ள அவருடைய டிவிட்டர் பதிவு மூலம் புரியலாம்.

 

Continue Reading

Tamil Cinema News

கண்ணே கலைமானே, நிச்சயம் ஏமாற்றாது – சீனு ராமசாமி

Published

on

kanne-kalaimane-press-meet

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வசுந்தரா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கண்ணே கலைமானே’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், நாயகனுமான உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் சீனு ராமசாமி, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, தமன்னா, வசுந்தரா, வடிவுக்கரசி, சரவண சக்தி, ஷாஜி, ஒளிப்பதிவாளர் ஜலேந்தர் வாசன், படத் தொகுப்பாளர் காசி விஸ்வநாதன், கலை இயக்குனர் விஜய் தென்னரசு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குனர் சீனு ராமசாமி பேசியதாவது,

‘தென்மேற்குப் பருவக்காற்று’ படம் வந்த பின் அடுத்த படத்திற்காக இரண்டு வருடங்கள் காத்திருந்தேன். அப்போது ரெட் ஜெயன்ட் உதயநிதி சார் என்னை அழைத்து ‘நீர்ப் பறவை’ படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். அது போல, ‘தர்மதுரை’ படத்தை இயக்கி இரண்டு ஆண்டுகள் இடைவெளி விழுந்த போது மீண்டும் என்னை அழைத்து ரெட் ஜெயன்ட் மூர்த்தி சார் இந்த வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார்.

ஆனால், மூர்த்தி சார், படத்தில் ஒரு குத்துப்பாட்டு வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தக் கதைக்கு எங்குமே அப்படி ஒரு சூழல் பொருந்தவில்லை. அதனால், அதை வைக்கவில்லை. கடைசியில் உதயநிதி சாரிடம் சொல்லி அந்தப் பாடல் வைப்பதைத் தவிர்த்துவிட்டேன்.

பெண்களை, பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட ஒரு படத்திற்கு கதாநாயகனாக நடிக்க சம்மதித்த உதயநிதியின் பெருந்தன்மைதான் இந்தப் படம் உருவாகக் காரணம். மற்ற கதாபாத்திரங்களுக்குப் பெயர் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் சூழல்தான் இப்போது இருக்கிறது. இந்தப் படத்தில் மற்ற கதாபாத்திரங்களுக்குப் பெயர் கிடைத்தாலும் தானும் நடிக்க வேண்டும் என்று இருந்தார் உதயநிதி.

ரொம்ப இயல்பான, யதார்த்தமான ஒரு நடிகர் உதயநிதி. வாய்ப்பு கொடுத்தால் நான் இதைச் சொல்லவில்லை. இது மாதிரி யதார்த்தமான கதைக் களங்கள் கொண்ட படங்களில் அவர் நடித்தால் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக இருப்பார். அவ்வளவு இயல்பான நடிப்பை இந்தப் படத்தில் அவரிடம் பார்த்தேன். கிளிசரின் போடாமல் அழுது நடித்தார்.

படத்தின் ஆரம்பத்தில் அவருக்கு சில புரிதல் இல்லாமல் இருந்தது. படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களில் படத்தின் கமலக் கண்ணன் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்.

வேற யாருமே செய்ய முடியாத அளவிற்கு அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார். சில காட்சிகளில் நாம் சொல்வதைத் தாண்டியும் சிறப்பாக நடித்தார். முழு சுதந்திரம் கொடுத்தார். நன்றாகச் செய்யுங்கள் என்று எப்போதும் சொல்லிக் கொண்டே தயாரிப்பு நிறுவனத்தில் உற்சாகம் கொடுத்தார்கள்.

படப்பிடிப்பு நடந்த நாட்கள் எனக்கு ஆனந்தமான நாட்களாகவே போனது. படத்தில் நடித்த அனைவருமே அவ்வளவு சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

தமன்னா, ஒரு நல்ல ஆன்மா. காட்சியைச் சொன்னவுடன் புரிந்து கொண்டு அதை உள்வாங்கி அவ்வளவு யதார்த்தமாக நடித்தார். ஒரு கலையரசி அவர். நேரம் தவறாமல், பொருத்தமான ஆடை அணிந்து அப்படி நடித்துள்ளார்.

படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். தொழில்நுட்பக் கலைஞர்களும் நல்ல படம் கொடுக்க ஒத்துழைத்தார்கள்.

இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது, தவறான படத்தை நான் நிச்சயம் எடுக்க மாட்டேன்.

Continue Reading

Tamil Cinema News

என் மக்களின் பாராட்டே மிகப் பெரிய விருது – செழியன்

32 சர்வதேச விருதுகளை வென்ற டூ லெட், பிப்ரவரி 21 வெளியீடு

Published

on

tolet movie news

“கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர்” உள்ளிட்ட சிறந்த படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் இயக்குநர் செழியன்.

அவர் முதல் முறையாக இயக்கியுள்ள ‘டு லெட்’ படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகிறது.

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் முதன் முதலாகக் கலந்துகொண்டது ‘ டு லெட்’ படம். 2017ல் கொல்கத்தாவில் நடைபெற்ற 23வது சர்வதேசத் திரைப்பட விழாவில் 23வது சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியப் படங்களுக்கானப் பிரிவில் சிறந்த படம் எனத் தேர்வாகியது. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 32 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.

படம் பற்றி இயக்குனர் செழியன் அவரது எண்ணங்களைப் பகிர்ந்தார்.

“தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சனைக்குரியதாக மாறியுள்ளது. நடுத்தர மக்கள்தான் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் அப்படி வாடகைக்கு வீடு தேடி அலையும் ஒரு சாமானியனின் பிரச்சினைதான் ‘டு லெட்’ படத்தின் மையக்கரு.

பொதுவாகவே இங்கே ஒரு முழு நீள திரைப்படத்தை ஆரம்பித்து எடுத்து முடிப்பதற்குக் குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகி விடுகிறது. இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதற்கு கூடுதலாக ஒரு வருடம் எடுத்துக்கொண்டது. அவ்வளவுதான் அதனால் இதில் எந்த தாமதமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இப்போது சரியான நேரம் என்பதால் தியேட்டரில் ரிலீஸ் செய்கிறோம்.

பொதுவாகவே இங்கே குறைந்த பட்ஜெட் படங்கள் என்றால், அதிலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலரிடம் இளக்காரமான பார்வை இருக்கவே செய்கிறது.

மலையாள, வங்காள மொழி படங்கள் தேசியவிருது வாங்கினால், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த அரசுகள் 25 லட்சம், 40 லட்சம் அல்லது சொந்த வீடு என கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்கள். இன்னும் நம் ஊரில் அந்த நிலை வரவில்லை. ஒருவேளை ‘ டு லெட் ’ மாதிரி வருடத்திற்கு பத்து படங்கள் வரும் போது நம்மூரிலும் தேசிய விருது படங்கள் கவனிக்கப்பட வாய்ப்பு உருவாகலாம்.

விருதுகளுக்கு அனுப்பியதாலேயே அதை கலைப்படைப்புதானே என ஒதுக்கிவிடத் தேவையில்லை. சொல்லப்போனால் இதுதான் சிறந்த கமர்சியல் படம். பட்ஜெட்டில் படம் எடுத்தால், பட்ஜெட்டை தாண்டிய லாபம் கிடைப்பது உறுதி.

ஆம். இதில் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால் இது போன்ற படங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் போது, ஒரு பக்கம் நம் தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

அதே சமயம் இன்னொரு பக்கம் இப்படி திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியாக நீங்கள் ஒரு படத்திற்கு செலவு செய்த தொகை கிட்டத்தட்ட உங்களிடமே திரும்பி வந்துவிடும், அதுவும் ரிலீசுக்கு முன்னதாகவே.
.
பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், என்னிடம் படமெடுக்க 50 லட்ச ரூபாய் இருந்தால் போதும். அதை வைத்து நான் பத்து கோடி சம்பாதித்து விடுவேன் எனக் கூறுவார். அது எப்படி என்றால் இப்படித்தான். திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது, விருது பெறுவது, இவை அனைத்துமே படத்திற்கான அங்கீகாரத்தைத் தாண்டி அவற்றிற்கு பொருளாதார ரீதியாக உதவுகின்றன.

சில திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டும் படத்திற்கு விருது கிடைக்காவிட்டால் கூட அது நல்ல படம் என்பதை உணர்ந்து அங்குள்ள சேனல்கள் சில அந்தப் படத்தை ஒருமுறை ஒளிபரப்புவதற்கான உரிமையைக் கேட்டு அதற்காக ஒரு தொகையைக் கொடுக்கின்றன. இப்படி பல நாடுகளில் மொத்தம் ஆயிரக்கணக்கில் சேனல்கள் இருக்கின்றன. இந்த வணிகம் இங்கே பலருக்குத் தெரியவே இல்லை.

இந்த படத்தைத் தயாரிப்பது குறித்து ஒரு தயாரிப்பாளரிடம் சொன்னபோது பெரிய நடிகர்களை வைத்து, பெரிய பட்ஜெட்டில் பண்ணலாம் எனக் கூறினார். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அடுத்தவர் பணத்தில் அப்படி பரிசோதனை செய்து பார்க்க நான் விரும்பவில்லை. அதனால் தான் என் மனைவியே இந்த படத்தைத் தயாரித்தார்.

உலகம் முழுதும் சுற்றி பல விருதுகளை வாங்கிய இந்த படம், இங்கே என் மக்களிடம் பாராட்டைப் பெறும் போதுதான் அதை இன்னும் மிகப் பெரிய விருதாக நான் கருதுகிறேன். அதனால் வரும் பிப்-21ஆம் தேதிக்காகக் காத்திருக்கிறேன்” என்கிறார் இயக்குநர் செழியன்.

இந்தப்படத்தில் சந்தோஷ் நம்பிராஜன், ஷீலா ராஜ்குமார், ஆதிரா பாண்டிலட்சுமி, மாஸ்டர் தருண்பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

No feed items found.

Trending