Connect with us

Tamil Cinema News

நதிநீர் இணைப்பைப் பேசும் ‘பூமராங்’

Published

on

பூமராங் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’.

தெலுங்கு ‘அர்ஜூன் ரெட்டி’ புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய ஆர்ஜே பாலாஜி,

“எல்லாமே இருந்தா தான் படம் எடுப்பேன் என சொல்லாமல் இருப்பதை வைத்து படத்தை மிகச் சிறப்பாக எடுப்பவர் இயக்குனர் கண்ணன். மோதலில் தான் காதல் உருவாகும் என்பது போல, எனக்கும் கண்ணன் சாருக்கும் உரசலில் தான் நட்பு ஆரம்பித்தது. எனக்கு கதை எழுதுவதில் ஒரு நம்பிக்கை வர முக்கிய காரணம் ‘இவன் தந்திரன்’ படம் தான்.

ஒரு ஹீரோவாக இருந்தாலும் எந்த பிரதிபலனும் பாராமல் உதவக் கூடியவர் அதர்வா. பல காட்சிகளில் எனக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுக்கச் சொன்னார். அவரின் அர்ப்பணிப்பு மிக அபாரமானது. நதிநீர் பிரச்சினையை, நதிநீர் இணைப்பை பற்றியும் பேசும் மிக முக்கியமான படம் பூமராங்,” என்றார்.

இசையமைப்பாளர் ரதன் பேசுகையில்,

“நான் இந்த இடத்துக்கு வரக் காரணம் என் அம்மா தான். அவர் என் மீது வைத்த நம்பிக்கைதான் நான் இங்கு இருக்கிறேன். ‘அர்ஜூன் ரெட்டி’ படத்துக்கு பாராட்ட என்னை அழைத்தார் கண்ணன் சார். அங்கு போன பிறகு நாம படம் பண்ணலாமா என சொன்னதோடு, அடுத்த நாளே என் பெயரை படத்தின் விளம்பரத்தில் சேர்த்தார்.

தமிழில் ஒரு நல்ல படத்தில் இங்கு வந்து சேர்ந்தது மகிழ்ச்சி. சமீபத்தில் மறைந்த என் தந்தைக்கு இந்தப் படத்தை சமர்ப்பிக்கிறேன். நல்லதொரு கருத்தை சொல்லும் ஒரு முக்கியமான படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

இந்துஜா பேசும் போது,

“அதர்வா, ஆர்ஜே பாலாஜியுடன்தான் எனக்கு அதிக காட்சிகள் இருந்தது. எனக்கு நடிக்க மிகவும் எளிதாக இருக்கும்படி முழு சுதந்திரம் கொடுத்தார் கண்ணன் சார். ஆர்ஜே பாலாஜியின் மார்க்கெட் இப்போது இன்னும் ஏறியிருக்கிறது, எல்லோரும் தியேட்டரில் போய் படத்தை பார்ப்பீர்கள் என நம்புகிறேன்,” என்றார்.

இயக்குனர் ஆர். கண்ணன் பேசுகையில்,

“ஒரு படம் நினைத்த மாதிரி வரணும்னா அதற்கு நாயகனின் ஆதரவு நிச்சயம் தேவை. அதர்வா அந்த வகையில் படத்தின் மிகப் பெரிய தூணாக இருந்தார். அடுத்த படத்திலும் நாங்கள் இணைகிறோம். எப்ரல் மாதம் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம். இந்த படம் இந்த அளவுக்கு வர முக்கிய காரணமாக இருந்த பங்கஜ் மேத்தா, அன்புச்செழியன், ராம் பிரசாத் ஆகியோருக்கு நன்றி.

படத்தை நல்ல தேதியில் வெளியிட எனக்கு ஆதரவாக இருக்கும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சாருக்கு நன்றி. ‘இவன் தந்திரன்’ படத்துக்குப் பிறகு எனக்கு இது முக்கியமான படம். அந்த படம் நன்றாக ஓடினாலும், ஒரு சில காரணங்களால் நாங்கள் எதிர்பார்த்த வரவு இல்லை. ஒரு நல்ல திரைப்படத்தை ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை. இந்த படத்தையும் ரசிகர்கள் வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்,” என்றார்.

நாயகன் அதர்வா பேசும் போது,

“படம் எப்போது ஆரம்பித்து எப்போது முடித்தோம் எனத் தெரியவே இல்லை. மிக வேகமாக முடித்து விட்டோம். ‘பூமராங்’ என்றால் கர்மா. நாம் என்ன செய்தோமோ அது தான் நமக்கு திரும்ப வரும். இந்தப் படத்தில் பிரச்சார தொனி எதுவும் இருக்காது.

எங்கள் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக படத்தை எடுத்திருக்கிறோம். ரதன் ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் தமிழில் நிறைய படங்கள் இசையமைக்க வேண்டும். இந்துஜா, மேகா ஆகாஷ் இரண்டு பேருக்குமே நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு. தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை. நல்ல கருத்தை தாங்கி இந்த பூமராங் வந்திருக்கிறது, அனைவரையும் சென்று சேரும் என நம்புகிறேன்,” என்றார்.

இந்த சந்திப்பில் நடிகை மேகா ஆகாஷ், படத்தொகுப்பாளர் ஆர்கே செல்வா, எம்கேஆர்பி ப்ரொடக்‌ஷன்ஸ் எம்கே ராம் பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tamil Cinema News

நம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்

Published

on

நம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்

‘காலா’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்த நடிகையானவர் சாக்ஷி அகர்வால்.

அடுத்து ராய் லட்சுமி நடிப்பில் தயாராகி உள்ள ‘சின்ட்ரெல்லா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கடுத்து எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தை இயக்கி அனீஸ் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் சாக்ஷி அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.

தான் தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி சாக்ஷி அகர்வால் கூறுகையில்,

“ரஜினி சார் சினிமாவில் பெரிய அடையாளம் அவர் படம் மூலமாக எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது மகிழ்ச்சியானது. இப்போது கதையின் நாயகியாக சின்ட்ரெல்லா படத்தில் ராய்லட்சுமியோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் அப்படம் என் கரியரில் மைல்கல்லாக அமையும்.

எழில் சார் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் உடன் நடித்து வரும் ஹாரர் கலந்த காமெடி படமும் எனக்கு வேறொரு தளத்தை அமைத்துத் தரும். நான் அடிப்படையில் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் எழில் சார் படத்தின் ஆடிஷனில் கேமராமேன் யூ.கே செந்தில் என்னை “இவர் தான் நம் படத்திற்குச் சரியாக இருப்பார்” என்று அழுத்தமாகச் சொன்னார்.

எழில் சார் நம்மிடம் நமக்கே தெரியாமல் இருக்கும் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தச் செய்துவிடுவார். அவரோடு வேலை செய்வது ஆகப் பெரும் சந்தோஷம். அதேபோல் ஜீவி பிரகாஷ் போல ஒரு ஸ்வீட் மனிதரைப் பார்க்கவே முடியாது. படத்தில் நமக்கான இடத்தை அதிகப்படுத்தி அழகு பார்ப்பார். அவரோடு நடிக்கும் எல்லா நடிகைகளுக்கும் மீண்டும் அவரோடு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும்.

இயக்குநர் அனீஸ் சாரின் திருமணம் எனும் நிக்காஹ் படம் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாத அழகியல் சினிமா. அவரின் அடுத்தப்படத்தில் நான் ஹீரோயினாக நடிக்க இருப்பது மகிழ்ச்சி. உணர்வுகளை மிகச்சரியாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தரும் படங்களுக்காக காத்திருக்கிறேன்.

நிச்சயம் இந்த ஆண்டு எனக்கு தமிழ்சினிமாவில் முக்கியமான ஆண்டாக இருக்கும். எழில் சார் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் பாவாடை, தாவணி கட்டிக்கொண்டு நெல்லைத் தமிழில் பேசி நடித்து வருகிறேன்,” என்கிறார்.

சாக்ஷி அகர்வால் நெல்லைத் தமிழில் பேசி நடிப்பதைப் பார்த்து படக்குழுவினரே பாராட்டினார்களாம்.

Continue Reading

Tamil Cinema News

‘களவாணி 2’ படத்தின் வில்லன் இவர்தான்….

Published

on

‘களவாணி 2’ படத்தின் வில்லன் இவர்தான்....

சற்குணம் இயக்கத்தில், விமல், ஓவியா மற்றும் பலர் நடிக்கும் ‘களவாணி 2’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் அரசியல் அதிரடி வில்லனாக துரை சுதாகர் நடிக்கிறார். தன்னை பப்ளிக் ஸ்டார் என அடையாளப்படுத்திக் கொண்டு வரும் இவர் இந்தப் படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கிறார்.

சிறிய படங்களில் ஹீரேவாக நடித்த துரை சுதாகர் சினிமாவில் நடிகராக நிலைக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தார். அப்போதுதான் ‘களவாணி 2’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் நடித்த பிறகு அவருக்கு புதிய வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறதாம்.

“வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடமாகட்டும், சிறியதோ, பெறியதோ எந்த வேடமாக இருந்தாலும் மக்கள் மனதில் நிற்கும்படியான வேடமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். திடீரென்று தோன்றி திடீரென்று மறையும் நட்சத்திரமாக இல்லாமல், மக்கள் மத்தியில் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் மக்களின் நட்சத்திரமாக இருப்பதற்காகவே சினிமாவில் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறேன்,” என்கிறார் துரை சுதாகர்.

‘களவாணி 2’ படத்திற்குப் பிறகு முன்னணி வில்லன் நடிகர்கள் வரிசையில் தானும் நிச்சயம் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.

Continue Reading

Tamil Cinema News

‘ஹவுஸ் ஓனர்’ படத்தை வாங்கிய எஜிஎஸ் சினிமாஸ்

Published

on

ஹவுஸ் ஓனர் படத்தை வாங்கிய எஜிஎஸ் சினிமாஸ்

‘ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி’ ஆகிய படங்களை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்து இயக்கியுள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’.

ஜுன் 21ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை எஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது.

இது பற்றி லட்சமி ராமகிருஷ்ணன் கூறுகையில்,

“இதுபோன்ற நிகழ்வுகள் உண்மையில் மிகவும் அரிதாகவே நடக்கின்றன. உண்மையில் பெரிய படங்களுக்கு தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள் அவற்றுக்குதான் முன்னுரிமை தருவார்கள்.

ஏஜிஎஸ் சினிமாஸ் எங்கள் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருப்பது எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யம். தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிப்பது, பெரிய படங்களை ரிலீஸ் செய்வதற்கு பெயர் போன ஏஜிஎஸ், எங்களை போன்ற சிறிய பட்ஜெட்டில் உருவான படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டியிருப்பது உற்சாகத்தை அளிக்கிறது.

இது எங்கள் குழுவினருக்கு மட்டும் கிடைத்த வெற்றி என்று நான் கூற விரும்பவில்லை, நல்ல கதைகளை கொண்ட படங்களுக்கு பெரிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது என்று தான் கூறுவேன்.

ஏஜிஎஸ் சினிமாஸ் படத்தின் வெளியீட்டுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருப்பதால், மிகப்பெரிய அளவில் படம் மக்களை சென்று சேரும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்தப் படம் மனித உறவுகளைப் பற்றி பேசுவதோடு, ஒரு அழகான காதல் கதையையும் கொண்டிருக்கிறது. எளிய மற்றும் யதார்த்தமான படமான இதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன்” என்றார்.

‘பசங்க‘ கிஷோர், லவ்லின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பில், ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!