Connect with us

Tamil Cinema News

உண்மையான சூப்பர் ஸ்டார்கள் யார் ? – விவேக்

Published

on

ezhumin audio launch news

வையம் மீடியாஸ் சார்பில் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் திரைப்படம் ‘எழுமின்’.

தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி கதை நடக்கும் இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பல நூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்புக் கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, ஹிப் ஹாப் தமிழா ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

விழாவில் பேசிய செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில்,

“இவ்வளவு மாணவர்கள் மத்தியில் இந்த விழா மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகிறது. நடிகர் விவேக் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். அவர் பல நல்ல கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்வதினால் தான் வாழும் கலைவாணராக இருக்கிறார். வருகின்ற காலங்களில் இளைஞர்கள் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமான கருத்தைக் கூறும் இந்தப் படம் வரவேற்பை பெறவேண்டும்.

முன்பெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் எல்லாம் எங்களுக்கு பாடங்கள். அப்படி இந்த “எழுமின்” திரைப்படமும் இன்றைய தலைமுறைக்கான பாடமாக அமைய வேண்டும். தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு எப்படியோ அப்படித் தான் சிலம்பாட்டமும். அதுவும் வீரத்தின் அடையாளமாக இருக்கிற ஒரு விளையாட்டு தான். தமிழ் சினிமா நூற்றாண்டு காணும் இந்த காலத்தில், “எழுமின்” திரைப்படம் ஒரு முக்கியமான கருத்தை எடுத்து வருகிறது.

இப்படம் கூறுவதைப் போல, தற்காப்புக் கலைகளை மாணவர்கள் அவசியமாகக் கற்க வேண்டும். கோவாவிற்கு திரைப்பட விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு தமிழ் சினிமாக்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது. காரணம் இதைப் போல அழுத்தமான கதைகளுடன் இன்னமும் இங்கு படங்கள் வந்து கொண்டிருப்பதால் தான். எனவே, நம் தமிழ் இளைஞர்கள் “எழுமின்” திரைப்படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி பேசும்போது,

“இரண்டு அமைச்சர் பெருமக்கள் இங்கே வந்திருக்கிறார்கள். ஒருவர் விளையாட்டுத் துறை, இன்னொருவர் செய்தித்துறை. இவர்கள் முன்னிலையில் ஒரு பணிவான கோரிக்கையை வைக்கிறேன். தயவுசெய்து இந்த “எழுமின்” திரைப்படத்தை ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவியரும் பெற்றோருடன் பார்ப்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். அதற்கு இந்த திரைப்படத்திற்கு ஏதேனும் சிறப்பு அந்தஸ்து வழங்கி, வரிவிலக்கு அளித்திட ஆவண செய்ய வேண்டும். இதனைக் கேட்பதற்கான காரணம், இந்தத் திரைப்படம் நிச்சயமாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். குறைந்தபட்ச விழிப்புணர்வையாவது மாணவர்களுக்கு வழங்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில், இந்தத் திரைப்படத்தில் நடிக்க வந்த பிறகு “கிக் பாக்சிங்” கற்றுக் கொண்ட சிறுவன் இப்போது ஸ்டேட் லெவலில் தங்கப் பதக்கத்தை வெல்லும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார். தற்காப்பு கலைகளின் முக்கியத்துவத்தை நிச்சயமாக “எழுமின்” திரைப்படம் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும்,” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இசையமைப்பாளர் டி.இமான் பேசும்போது,

“மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. காரணம், விவேக் நடித்த நிறைய படங்களுக்கு ஆரம்ப காலகட்டங்களில் இசையமைத்திருக்கிறேன். அப்போது ஒன்றை புரிந்துகொண்டேன், விவேக் சார் ஒரு நல்ல மோட்டிவேட்டர். தொடக்கத்தில் நிறைய குழப்பங்களோடு இருந்த என்னை, வழி நடத்தியவர்களில் விவேக் சார் முக்கியமானவர். சுந்தர். சி இயக்கத்தில் “தகதிமிதா” என்ற படத்திற்கு நான் இசையமைத்திருந்தேன். அந்த படத்தின் பாடல்களை பிடித்திருந்ததால் என்னிடம் தொலைபேசியில் விவேக் சார் பேசினார். “காதலை யாரடி முதலில் சொல்வது” என்ற பாடலை மிகவும் பாராட்டி பேசினார். அப்போது அவர் ஒன்றைச் சொன்னார், “இறைவன் உங்களைப் பார்த்து சிரிக்கணும்” என்று. காலம் போக போகத் தான் தெரிந்தது அன்று அவர் சொன்னதற்கான அர்த்தம். “Arise Awake Achieve” என்று ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவர் சொல்ல வேண்டும். இளைஞர்களை மோட்டிவேட் செய்யக் கூடிய இந்த “எழுமின்” மாதிரியான சினிமாக்கள் நிறைய வரவேண்டும். இருட்டு அறைக்குள்ளே நல்லதையும் விதைக்க முடியும் என்பதனை நிரூபிக்க வேண்டும். அந்த வகையில் நிச்சயம் “எழுமின்” மாணவர்களை மொட்டிவேட் செய்யும்” என்று பேசினார்.

இசையமைப்பாளர் “ஹிப்-ஹாப்” ஆதி பேசும்போது,

“எழுமின் முக்கியமான திரைப்படம். இது முழுக்க முழுக்க மாணவர்களுக்கானது. இன்றைய மாணவர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படமாக இது இருக்கும் என நம்புகிறேன். காரணம், 2020-ஆம் அண்டில் மாணவர்கள் நிறைந்த தேசமாக இந்தியா இருக்கும். நம் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் 2027-இல் நிச்சயம் இந்தியா வல்லரசாகும். இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும் போதே, மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்பது தெரிகிறது” என்று பேசினார்.

நடிகர் விவேக் பேசும்போது,

“தமிழ்நாட்டில் சமீபமாக பல சூப்பர் ஸ்டார்கள் உருவாகி இருக்கிறார்கள். “ஜல்லிக்கட்டு” போராட்டத்தை முன்னின்று நடத்தி வென்று காட்டிய மாணவர்கள் தான் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார்கள். நான் 4 பேருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். முதலாவது, தன்னம்பிக்கையால் உயர்ந்த நடிகர் தனுஷுக்கு. நான் கேட்டவுடன் மறுக்காமல் வந்து ஒரு பாடலைப் பாடி கொடுத்திருக்கிறார். இரண்டாவது இசையமைப்பாளர் அனிருத்திற்கு. மூன்றாவது நன்றி, இசையமைப்பாளர்கள் ஆதி மற்றும் இமான் இருவருக்கும்,” என்றார்.

விழாவில் நடிகர் தனுஷ் பாடிய “எழடா” பாடலும், இசையமைப்பாளர் அனிருத் பாடிய “எழு எழு” பாடலும் மாணவர்களுக்காக பிரம்மாண்டமான திரையில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டது.

Tamil Cinema News

நம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்

Published

on

நம்பிக்கையுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால்

‘காலா’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்த நடிகையானவர் சாக்ஷி அகர்வால்.

அடுத்து ராய் லட்சுமி நடிப்பில் தயாராகி உள்ள ‘சின்ட்ரெல்லா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கடுத்து எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தை இயக்கி அனீஸ் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் சாக்ஷி அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.

தான் தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி சாக்ஷி அகர்வால் கூறுகையில்,

“ரஜினி சார் சினிமாவில் பெரிய அடையாளம் அவர் படம் மூலமாக எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது மகிழ்ச்சியானது. இப்போது கதையின் நாயகியாக சின்ட்ரெல்லா படத்தில் ராய்லட்சுமியோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் அப்படம் என் கரியரில் மைல்கல்லாக அமையும்.

எழில் சார் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் உடன் நடித்து வரும் ஹாரர் கலந்த காமெடி படமும் எனக்கு வேறொரு தளத்தை அமைத்துத் தரும். நான் அடிப்படையில் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் எழில் சார் படத்தின் ஆடிஷனில் கேமராமேன் யூ.கே செந்தில் என்னை “இவர் தான் நம் படத்திற்குச் சரியாக இருப்பார்” என்று அழுத்தமாகச் சொன்னார்.

எழில் சார் நம்மிடம் நமக்கே தெரியாமல் இருக்கும் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தச் செய்துவிடுவார். அவரோடு வேலை செய்வது ஆகப் பெரும் சந்தோஷம். அதேபோல் ஜீவி பிரகாஷ் போல ஒரு ஸ்வீட் மனிதரைப் பார்க்கவே முடியாது. படத்தில் நமக்கான இடத்தை அதிகப்படுத்தி அழகு பார்ப்பார். அவரோடு நடிக்கும் எல்லா நடிகைகளுக்கும் மீண்டும் அவரோடு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும்.

இயக்குநர் அனீஸ் சாரின் திருமணம் எனும் நிக்காஹ் படம் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாத அழகியல் சினிமா. அவரின் அடுத்தப்படத்தில் நான் ஹீரோயினாக நடிக்க இருப்பது மகிழ்ச்சி. உணர்வுகளை மிகச்சரியாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தரும் படங்களுக்காக காத்திருக்கிறேன்.

நிச்சயம் இந்த ஆண்டு எனக்கு தமிழ்சினிமாவில் முக்கியமான ஆண்டாக இருக்கும். எழில் சார் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் பாவாடை, தாவணி கட்டிக்கொண்டு நெல்லைத் தமிழில் பேசி நடித்து வருகிறேன்,” என்கிறார்.

சாக்ஷி அகர்வால் நெல்லைத் தமிழில் பேசி நடிப்பதைப் பார்த்து படக்குழுவினரே பாராட்டினார்களாம்.

Continue Reading

Tamil Cinema News

‘களவாணி 2’ படத்தின் வில்லன் இவர்தான்….

Published

on

‘களவாணி 2’ படத்தின் வில்லன் இவர்தான்....

சற்குணம் இயக்கத்தில், விமல், ஓவியா மற்றும் பலர் நடிக்கும் ‘களவாணி 2’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் அரசியல் அதிரடி வில்லனாக துரை சுதாகர் நடிக்கிறார். தன்னை பப்ளிக் ஸ்டார் என அடையாளப்படுத்திக் கொண்டு வரும் இவர் இந்தப் படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கிறார்.

சிறிய படங்களில் ஹீரேவாக நடித்த துரை சுதாகர் சினிமாவில் நடிகராக நிலைக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தார். அப்போதுதான் ‘களவாணி 2’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் நடித்த பிறகு அவருக்கு புதிய வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறதாம்.

“வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடமாகட்டும், சிறியதோ, பெறியதோ எந்த வேடமாக இருந்தாலும் மக்கள் மனதில் நிற்கும்படியான வேடமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். திடீரென்று தோன்றி திடீரென்று மறையும் நட்சத்திரமாக இல்லாமல், மக்கள் மத்தியில் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் மக்களின் நட்சத்திரமாக இருப்பதற்காகவே சினிமாவில் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறேன்,” என்கிறார் துரை சுதாகர்.

‘களவாணி 2’ படத்திற்குப் பிறகு முன்னணி வில்லன் நடிகர்கள் வரிசையில் தானும் நிச்சயம் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.

Continue Reading

Tamil Cinema News

‘ஹவுஸ் ஓனர்’ படத்தை வாங்கிய எஜிஎஸ் சினிமாஸ்

Published

on

ஹவுஸ் ஓனர் படத்தை வாங்கிய எஜிஎஸ் சினிமாஸ்

‘ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி’ ஆகிய படங்களை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்து இயக்கியுள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’.

ஜுன் 21ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை எஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது.

இது பற்றி லட்சமி ராமகிருஷ்ணன் கூறுகையில்,

“இதுபோன்ற நிகழ்வுகள் உண்மையில் மிகவும் அரிதாகவே நடக்கின்றன. உண்மையில் பெரிய படங்களுக்கு தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள் அவற்றுக்குதான் முன்னுரிமை தருவார்கள்.

ஏஜிஎஸ் சினிமாஸ் எங்கள் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருப்பது எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யம். தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிப்பது, பெரிய படங்களை ரிலீஸ் செய்வதற்கு பெயர் போன ஏஜிஎஸ், எங்களை போன்ற சிறிய பட்ஜெட்டில் உருவான படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டியிருப்பது உற்சாகத்தை அளிக்கிறது.

இது எங்கள் குழுவினருக்கு மட்டும் கிடைத்த வெற்றி என்று நான் கூற விரும்பவில்லை, நல்ல கதைகளை கொண்ட படங்களுக்கு பெரிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது என்று தான் கூறுவேன்.

ஏஜிஎஸ் சினிமாஸ் படத்தின் வெளியீட்டுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருப்பதால், மிகப்பெரிய அளவில் படம் மக்களை சென்று சேரும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்தப் படம் மனித உறவுகளைப் பற்றி பேசுவதோடு, ஒரு அழகான காதல் கதையையும் கொண்டிருக்கிறது. எளிய மற்றும் யதார்த்தமான படமான இதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன்” என்றார்.

‘பசங்க‘ கிஷோர், லவ்லின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பில், ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!