‘கோலி சோடா 2’ – இயல்பான இன்பவல்லி சுபிக்ஷா

ரப் நோட் புரொடக்சன்ஸ் சார்பில் பாரத் சீனி தயாரிக்க விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கும் படம் ‘கோலி சோடா 2’.

சமுத்திரக்கனி, க்ருஷா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, பாரத் சீனி, எசக்கி பரத், வினோத், ரேகா, ரோஹிணி, ஸ்டன் சிவா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் நாயகிகளில் ஒருவராக சுபிக்ஷாவும் நடித்திருக்கிறார். ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா அடுத்து இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் நாயகர்களில் ஒருவரான பாரத் சீனிக்கு ஜோடியாக நடிக்கிறார் சுபிக்ஷா.

படம் பற்றி அவர் கூறியதாவது,

“கடுகு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறியது என்றாலும், எனக்கு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது. ரசிகர்கள் என்னை கடுகு சுபிக்‌ஷா என்று அழைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் விஜய் மில்டன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம் என நினைத்தேன். ஆனால் உடனடியாக அந்த வாய்ப்பு என் வீட்டுக் கதவை தட்டும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

படத்தில் என் கதாபத்திரத்தின் பெயர் இன்பவல்லி. பக்கத்து வீட்டுப் பெண் போன்ற ஒரு ஜாலியான கதாபாத்திரம். படத்தை பற்றியும், என் கதாபாத்திரத்தை பற்றியும் விவாதிக்கும் போது விஜய் மில்டன் சார், இயல்பாக நடித்தாலே போதும், எந்த முன் தயாரிப்பு வேலையும் அந்த கதாபாத்திரத்துக்கு தேவையில்லை என்றார்.

கடந்த முறை கடுகு படத்தில் எனக்கும் பாரத் சீனிக்கும் ஒரு சில காட்சிகளே இருந்தன. அதைப் பற்றி நான் விஜய் மில்டன் சாரிடம் சொன்னேன். அதை விஜய் மில்டன் சீரியஸாக எடுத்து கொண்டார் போல, கோலி சோடா 2 படத்திலும் எங்களை நடிக்க வைத்து, எனக்கும் பாரத் சீனிக்கும் அழுத்தமான காட்சிகளைக் கொடுத்திருக்கிறார். பாரத் சீனி ஆக்‌ஷன் காட்சிகளை விட காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

‘கோலி சோடா 2’ உலகம் முழுவதும் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது.

Related Posts