Connect with us

Tamil Cinema News

தோழர், உலகின் உன்னதமான வார்த்தை – ராஜு முருகன்

Published

on

gypsy single track launch

ஒலிம்பியா மூவில் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

‘வெரி வெரி பேட்…’ எனத் தொடங்கும் அந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த சிங்கிள் ட்ராக்கைத்தான் படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்அம்பேத்குமார், ஒளிப்பதிவாளர் எஸ்கே செல்வகுமார், படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்டா, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் ராஜுமுருகன், படத்தின் நாயகன் நடிகர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் ஜீவா, நடாஷா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ‘சே ’என்ற பெயரில் குதிரை ஒன்றும் நடித்திருக்கிறது.

நிகழ்ச்சியில் பாடலாசிரியர் யுகபாரதி பேசுகையில்,

“இயக்குநர் ராஜு முருகனை நான் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கிறேன். ஆனால் அவரோ என்னை ‘உள்ளே’வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அது இந்த படத்தில் நடைபெறுகிறதா ?, அல்லது அடுத்து வரும் படங்களில் நடைபெறவிருக்கிறதா? என்று தெரியவில்லை. இந்தப் பாடலில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் தான் படம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கும். அதையும் கடந்து இயக்குநர் ராஜு முருகனின் முந்தைய இரண்டு படங்களில்லாத காட்சிப்படிமத்தை இந்த படத்தில் பார்க்க முடியும்.

இந்தப் படத்தின் கதை, ஏறக்குறைய தமிழ் திரையுலகில் அனைத்து தயாரிப்பாளர்களாலும் கேட்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட கதை. அதனை பல தடைகளையும் கடந்து தயாரித்ததற்காகவும், இந்தப் படம் இனிமேல் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கலுக்காகவும், அதனை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதற்காகவும் தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர்களுக்கு படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திட்டமிட்டதை விட கூடுதலான பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. அத்துடன் எங்களையெல்லாம் ஜாமீனில் எடுக்கவேண்டிய செலவும் இருக்கிறது.

இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்காகநடிகர் ஜீவாவை பாராட்டுகிறேன். அவர் ஏற்கனவே ‘ஈ, கற்றது தமிழ்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் இந்த ஜிப்ஸி படமும் அமையும். அவருடைய திரையுலகப் பயணத்தில் இந்தப் படம் முக்கியமான படமாக அமையும். படத்தில் அவர் கதைக்குள் பயணித்திருக்கிறார். அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டவிதம் ஆச்சரியத்தை அளித்தது. அவரை ஆறு மாதம் தலைமுடி, தாடியை வளர்க்க வைத்து, முகபாவனையை மாற்றியமைத்து, இந்தியா முழுவதும் நடக்க வைத்து, குதிரையிடம் உதை வாங்க வைத்து, இப்படி பல விசயங்களை அவர் எதிர்கொண்டு, அற்புதமாக நடித்திருக்கிறார்.

‘ஜிப்ஸி’ யில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நீள் இந்தியாவின் குறுக்குவெட்டு தோற்றத்தைப் பார்க்கலாம். இதன் பின்னணியில் உள்ள அரசியல், அதிகாரம் எளிய மக்களை எப்படி வதைக்கிறது ? என்பதையும் பார்க்க முடியும். அத்துடன் நாம் மனிதநேயத்தை நோக்கி நகர வேண்டியதன் கட்டாயச் சூழலையும் இந்தப் படம் உணர்த்தும். தேர்தலுக்கு முன் இந்தப் படம் வெளியாக வேண்டும் என நான் விரும்புகிறேன். வந்தால் ஆரோக்கியமான முறையில் மாற்றம் ஏற்படலாம் என்று நம்புகிறேன்.

இயக்குநர் ராஜுமுருகன் இந்த சமூகத்தில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் எழுத்து போராளி. உண்மையான கலைஞனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருப்பவர். இந்தத் திரைத்துறையில் சமூக அரசியலையும், மக்கள் விடுதலையையும் பேசும் அவரை வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அவர்களை இசையமைக்க ஒப்பந்தம் செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அவருடைய இசையமைப்பில் வெளியான பாடல்களில் ஒரு நாடோடி மனப்பான்மை பரவியிருக்கும். இந்தப் படமும் ஒரு நாடோடியின் கதை என்பதால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி அவரை இசையமைக்க கேட்டுக்கொண்டோம். இந்தப் படத்தில் இடம் பெறும் பாடல்களின் சந்தத்திற்காக இசையமைக்காமல், இசையாலும், காதலாலும் நிரம்பி வழியக் கூடிய ஒரு நாடோடியின் வாழ்க்கைக்கு பொருத்தமான இசையை அவர் கொடுத்திருக்கிறார்” என்றார்.

தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசுகையில்,

“நான் வந்தவாசி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், இயக்குநர் ராஜு முருகனின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். ஒரு முறை சென்னையின் முன்னாள் மேயரும், சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்ரமணியம் அவர்கள் ஒரு விழாவிற்காக ராஜு முருகனை சிறப்பு விருந்தினராக அழைக்க பணித்த போது, அவருடன் பயணித்தேன். அப்போது ஜிப்ஸி படத்தின் கதையைச் சொன்னார். பட்ஜெட்டையும் சொன்னார். ஆனால் சொன்ன பட்ஜெட்டை விட அதிகம் செலவாகியிருந்தாலும், ஜோக்கர் போன்ற படத்தை இயக்கிய இயக்குநர் படம் என்பதால்அதன் தரத்திற்காக முழு ஒத்துழைப்பு அளித்தேன். இந்த படம் ஒலிம்பியா மூவிசுக்கு சிறந்த படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்றார்.

இயக்குநர் ராஜுமுருகன் பேசுகையில்,

“இந்த படத்திற்கு அடையாளமாக இருக்கும் இந்த பாடலை முதன்முதலாக ஊடகவியலாளர்கள் முன் திரையிடவேண்டும் என்று விரும்பினேன். தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் இந்தப் படத்தை இந்த தரத்தில் தற்போது எடுத்திருக்க இயலாது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படம் அரசியல் படமல்ல. ஒரு அமைப்பு சார்ந்து எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு நியாயமான படம்.என்னைப் பொருத்தவரை வாழ்க்கையும் அரசியலும் வேறுவேறு அல்ல.

இந்த படத்திற்கு ‘தோழர் சந்தோஷ் நாராயணன் இசையில்’ என்று விளம்பரப்படுத்தினேன். உடனே சிலர் என்னைத் தொடர்பு கொண்டு ஏன் சந்தோஷ் நாராயணனை தோழர் ஆக்கிவிட்டீர்கள் ? என கேட்டார்கள். தோழர் என்பது உலகின் உன்னதமான வார்த்தை. தோழர் என்பது ஒரு கட்சி சார்ந்த வார்த்தையல்ல. தோழர் என்பது அன்பின் வார்த்தை. அதன் பொருளை தற்போது மாற்றிவிட்டார்கள்.

யாரெல்லாம் நீதிக்காக போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம். அநீதிக்கு எதிராக தன்னை ஏதேனும் ஒரு தளத்தில் நிறுத்திப் போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம். அந்த வகையில் இந்த படத்தில் ஜிப்ஸியும் ஒரு தோழன் தான். ஒரு தோழனின் குரலாகத் தான் ஜிப்ஸி இருக்கிறது.

இந்த படம் லவ் வித் மியூசிக்கலி படம். இந்த படத்தில் ஒன்பது பாடல்கள் இருக்கிறது. அதில் சிறிது அரசியல் கலந்திருக்கிறது. அதிலும் எளிய மக்களின் நியாயமான அரசியல் பேசப்பட்டிருக்கிறது. இந்த படம் வெளியாகி தயாரிப்பாளர் செய்த முதலீடு அவருக்கு திரும்ப கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான அனைத்து கமர்சியல் அம்சங்களும் இதில் இருக்கிறது. இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.

இந்த பாடலில் தோன்றிய தோழர் நல்லக்கண்ணு ஐயா உள்ளிட்ட உண்மையான கள போராளிகளுக்கும் நன்றி,” என்றார்.

நடிகர் ஜீவா பேசுகையில்

“ஒரு நாட்டுப்புற பாடகர், இந்தியா முழுவதும் சுற்றித் திரிகிறார். அவருக்கு கிடைத்த அனுபவங்களுக்கு பிறகு அவர் புரட்சிகரமான பாடகராக மாறுகிறார். அவர் ஏன் அப்படி மாறுகிறார் என்றால் அதன் பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது, என்று இந்த படத்தின் கதையை ஒன்லைனாக இயக்குநர் ராஜு முருகன் என்னிடம் சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கேரக்டரைசேஷன் ஆச்சரியப்படுத்தியது. கதையில் ஒரு உண்மை இருந்தது.

மனித நேயத்தை மதிக்கவேண்டும், இயற்கையும் கொண்டாட வேண்டும் என்பதை உரக்கச் சொல்லும் கதை. இந்தியா முழுவதும் பயணிக்கும் போதுதான் இந்தியா எவ்வளவு அழகானது என்பதையும் இந்த படம் உணர்த்தும். எல்லா மனிதர்களின் உணர்வுகளும்ஒன்று தான் என்பதை அற்புதமாக சொல்லியிருக்கிறார்.

படம் முழுவதும் என்னுடன் ஒரு குதிரை நடித்திருக்கிறது. இந்த படத்திற்காக வித்தியாசமான தோற்றம் ஒன்றையும் இயக்குநர் உருவாக்கியிருந்தார். இது போன்ற ஒரு கதையை சூப்பர் குட் பிலிம்ஸில் நிச்சயமாக எடுத்திருக்க மாட்டோம். இதனை துணிந்து எடுத்த தயாரிப்பாளர் அம்பேத்குமாருக்கு நன்றி

கற்றது தமிழ்,ஈ போன்ற படங்களில் ஏன் நடிப்பதில்லை ? என்று என்னை கேட்ட போது, இந்தக் கதையை கேட்டதால் இந்த கதையின் மீது நம்பிக்கை வந்தது.

நாகூர்,வாரணாசி, ஜோத்பூர், காஷ்மீர் என இந்திய முழுவதிற்கும் பயணித்து படமாக்கினோம். இந்த படம் வெளியான பிறகு ஜீவா ஒரு லக்கியான நடிகர் என்று அனைவரும் பாராட்டுவார்கள். இதற்காக இயக்குநருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த படம் வெற்றிப்படமாக மட்டும் இல்லாமல் என்னுடைய கலையுலக பயணத்தில் முக்கியமான படமாகவும் இருக்கும்,”என்றார்.

Tamil Cinema News

விஜய் சேதுபதி வசனம் எழுதும் ‘சென்னை பழனி மார்ஸ்’

Published

on

விஜய் சேதுபதி வசனம் எழுதும் சென்னை பழனி மார்ஸ்

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’.

முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்துக் கொண்டு ஒரு டிராவல் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் பிஜூ.

தமிழில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை இயக்கியதற்குப் பிறகு மீண்டும் இயக்கும் படம் இது.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை நோக்கிய கனவும் நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். அல்லது போராடிப் பார்த்து விட்டிருக்கலாம். சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு அற்புதக் கனவை ப்ளாக் காமெடி ஜானரில் ரசிக்க ரசிக்கச் சொல்லியிருக்கும் படம் தான் ‘சென்னை பழனி மார்ஸ்’.

பிஜூ திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் ஆகியவற்றை கவனிக்க, தனக்கேயுரிய ப்ளாக் காமெடி உணர்வை வசன முலாமாகப் பூசி மெருகேற்றியுள்ளாராம் விஜய் சேதுபதி.

பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார், தட்சிசிணாமூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை விக்னேஷ் ஜெயபால் எழுதியுள்ளார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Continue Reading

Tamil Cinema News

எஸ்ஜே சூர்யாவை மாற்றிய ‘மான்ஸ்டர்’ வெற்றி

Published

on

எஸ்ஜே சூர்யாவை மாற்றிய மான்ஸ்டர் வெற்றி

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்வதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சூர்யா.

அப்போது அவர் பேசுகையில்,

“நான் நல்லது செய்யும்போது பாராட்டி, தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. புகழை அனைவருக்கும் சேர்க்க அவர்கள் தவறியதில்லை. அதற்கு ஆதாரம்தான் இப்படத்தின் வெற்றி. இந்த வெற்றியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உதவி இயக்குநராக பணியாற்றிய காலத்தில் ஸ்டுடியோக்களில் நடக்கும் படப்பிடிப்பிற்கு ரூ.50/- கொடுத்து வேடிக்கைப் பார்ப்பேன். பாலைவனத்தில் ஒட்டக மனிதனாக நடந்து வந்தபோது இந்த பயணம் சோலைவனமாகத் தெரிகிறது. நேற்று மக்களோடு திரையரங்கில் சென்று படம் பார்த்தேன்.

‘இறைவி’ படக்குழுவினரும், பாபிசிம்ஹாவும் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். அவருடைய குழந்தையும், மற்றும் அங்கு வந்திருந்த குழந்தைகளும் எலி வரும் காட்சிகளில் ஆளுக்கொரு விதமாக ஓசை எழுப்பி உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

ஒரு நடிகனாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் 25 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு நிறைவேறியிருக்கிறது. இந்த புதுபயணம் தொடரும். என் படத்திற்கு குடும்பத்தோடு வந்து பார்க்கும்போது இத்தனை நாள் இதை தவறவிட்டோமே என்று குற்றவுணர்வு வருகிறது. இத்தனை ஆண்டுகள் நான் ஏன் இதை செய்யவில்லை ? என்று தோன்றியது.

எலியால் தொடங்கிய இந்த பயணத்தை இதே போல் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்பு என்னைத்தேடி வரும் என்றும் நம்புகிறேன்.

இந்த படத்திற்கு திரையரங்கத்தின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஏனென்றால், இப்படத்தில் குத்துப்பாடல், காதல் காட்சிகள் எதுவும் இல்லாததால் தரமான படத்தை அனைவரும் ஆர்வமாக வந்து பார்க்கின்றனர். ‘நியூ’ படத்தின் பெரிய வெற்றியைக் கொடுத்தீர்கள். அதேபோல் இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது.

‘வாலி‘-யில் என்னை உயரத்தில் வைத்ததும் அதன்பிறது நான் தவறு செய்து சறுக்கும்போது என்னைத் தட்டிக் கேட்ட பத்திரியாளர்களுக்கு நன்றி.

இப்படம் புதிய பயணத்தின் தொடக்கமாக கருதுகிறேன். எலியின் மூலம் பிள்ளையார் சுழி போட்டு இந்த பயணம் தொடங்கியிருக்கிறது. இயக்குநர் நெல்சனின் கதைக்கு நான் கருவியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

என் படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும். ஆனால், ‘இறைவி‘-யில் இருந்து அது மாறியிருக்கிறது. என்னை நம்பி தரமான பாத்திரம் கொடுத்த கார்த்திக் சுப்புராஜுக்கும் நன்றி. ராஜுமுருகன் இப்படம் ‘ஜென்’ கதையை படமாக எடுத்தது போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

எலியை நான் பிள்ளையாரின் வாகனமாகத்தான் பார்க்கிறேன். ஆகையால் என் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்குமா என்ற பயம் எனக்கில்லை. படம் பார்க்கும்போது நீங்கள் என்ன உணர்ந்தீர்களோ, அதை நெல்சன் கதை கூறும்போதே நான் உணர்ந்தேன்.

ஒரு நடிகனாக உழைப்பதே நான் விரும்பும் சரஸ்வதி, என் நடிப்பு. அதன் மூலம் லட்சுமி வரவேண்டும் என நினைக்கிறேன். லட்சுமி என்று பணம், புகழ் இரண்டையும் குறிப்பிட்டுதான் கூறுகிறேன். ஒரு தமிழ் படம், அடுத்து ஹிந்தி, பிறகு தமிழ், தெலுங்கு இந்த வரிசையில் நடிக்க விரும்புகிறேன்.

நான் சாதாரண வாழ்க்கைதான் வாழ விரும்புகிறேன். எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிவில்லையென்றால் என் கையில் இருக்கும் கதையைக் கொண்டு நானே நடிப்பேன்.

‘உயர்ந்த மனிதன்’ படத்தில் நடிக்கும் போது அமிதாப்பச்சன் சார் ஒவ்வொரு காட்சியும் ஒரே டேக்கில் நடித்து விடுவார். ஒரு எக்ஸ்டிரா டேக் கூட வாங்கமாட்டார். ஒவ்வொரு காட்சியையும் முதல் வாய்ப்பாக கருதி நடித்துவிடுவார். 59 ஆண்டுகாலமாக அவர் வெற்றியின் ரகசியம் இதுதான்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ செல்வராகவனின் இயக்கத்தில் நன்றாக வந்திருக்கிறது. ‘மாயா‘ படத்தின் இயக்குர் அஷ்வின் இயக்கத்தில் ‘இறவாக்காலம்‘ என இரண்டு படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

விஜய், அஜித் இருவருமே எந்த முடிவெடுத்தாலும் அதைச் சரியாக செய்து வெற்றியடையக் கூடியவர்கள். அது அரசியலாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, இருவருக்கும் வெற்றி பெறும் வல்லமை இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன்.

வாழ்க்கையில் நாம் அடையும் தோல்வி அனைத்தையும் கற்றுக் கொடுக்கும். ஒரு படம் தயாரித்தால் போதும் அனைத்தும் அடங்கிவிடும்.

சினிமாவில் ஒரு தவறுசெய்துவிட்டால் அடுத்த வாய்ப்பு வருவதற்கு 8 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை வேறுவழியில்லாமல் கிடைத்த வேலையெல்லாம் செய்தாக வேண்டும்.

தயாரிப்பு பணியை எடுத்ததே நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் தான். ‘உயர்ந்த மனிதன்‘ பல தடைகளைத் தாண்டி விரைவில் அனைத்து பிரச்னைகளும் முடிந்து கண்டிப்பாக வெளியாகும்,” என்றார் எஸ்ஜே சூர்யா.

Continue Reading

Tamil Cinema News

ஜிப்ஸி, எமோஷனலான படம் – ஜீவா

Published

on

ஜிப்ஸி, எமோஷனலான படம் - ஜீவா

ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ஜீவா, நடாஷா சிங், சன்னி வேய்ன், லால் ஜோஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜிப்ஸி.

இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர், திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.

மலையாள இயக்குநர் லால்ஜோஸ் பேசும்போது,

“முதலில் என்னை நடிக்க அழைத்தார்கள். நான் ஆள்மாத்தி என்னை அழைத்து விட்டார்கள் என்று நினைத்தேன். சென்னைதான் என்னை இயக்குநர் ஆக்கியது. இந்தப்படத்தில் சின்ன ரோல் தான் என்று நினைத்தேன். ஆனால் பெரிய ரோல். ஸ்பாட்டில் நடிகராக இருக்கும் போது பெரிய பதட்டம். படிச்ச டயலாக்ஸ் எல்லாம் மறந்து போனது. சூட்டிங் முடிந்த போது இனி நான் தப்பித்தேன் என்று நினைத்தேன். ஆனால் டப்பிங்கும் நான்தான் பேசணும் என்றார்கள். பேசி இருக்கிறேன். இந்த ஜிப்ஸி ஒரு அபூர்வ சினிமா. பெரிய இயக்குநர்களின் பெயரைப் பார்த்து தான் நாங்கள் படம் பார்ப்போம். அதேபோல் வருங்கால சந்ததியினர் ராஜு முருகன் பெயரைத் தேடுவார்கள்,” என்றார்.

பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது,

“ஜீவா எத்தனையோ படங்கள் நடித்திருக்கிறார். ஆனால் இதுதான் அவர் பெயருக்கான படம். என் தம்பி ராஜு முருகனுக்கு அண்ணனாக நன்றிச் சொல்லிக்கொள்கிறேன். அவன் தேசியவிருது வாங்கி இருக்கிறான். வாங்க இருக்கிறான். அதைவிட எல்லாம் பெருமை இந்தப்படத்தில் பாந்த்சிங் போன்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறான். அதுதான் பெருமை. நான் சந்தோஷ் நாராயணன் சாரின் பெரிய ரசிகர். இந்தப்படத்தின் காரணி அம்பேத்குமார். அவர் இனிஷியல் S. அவர் எதற்குமே நோ சொன்னதே கிடையாது. தேனிசை செல்லப்பா பற்றி இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. ஈழத்தில் நடந்த கொடுமைகளைச் உலகுக்கு சொல்ல பாடல்கள் மூலமாக நிதி திரட்டியவர். இந்த ஜிப்ஸி மிகப்பெரிய வெற்றியை அடையும்,” என்றார்

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது,

“முதல்முறையாக என் ஸ்டுடியோவில் குக்கூ படத்தின் இசைப்பதிவு தான் நடந்தது. ராஜுமுருகன் ஒரு மாமனிதன். இந்தப்படத்திற்கு ஜிப்ஸி என்ற பெயரைக் கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏன்னா எல்லா கலைஞர்களும் ஒரு ஜிப்ஸியாக இருக்க ஆசைப்படுவார்கள். அந்த அனுபவத்தை மொத்தமாக கொடுத்த ராஜு முருகன் அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் அம்பேத்குமார் இதுவரை எங்கள் வேலைகளில் தலையிட்டதே இல்லை. எல்லாவிதமான கல்ச்சர் உள்ள மக்களுக்கும் கர்நாடக இசையைக் கொண்டு சேர்க்கும் டி.எம் கிருஷ்ணா இந்தப்படத்தில் பாடி இருக்கிறார். இந்தப்படத்தில் பாடகர்கள் உள்பட 200 இசை கலைஞர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த ஜெனரேஷனின் பெஸ்ட் ரைட்டராக அறிவு அவர்களைப் பார்க்கிறேன். அவர் எழுதிய பாடல் எனக்குப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. ஜீவா உள்பட எல்லோரும் பயங்கரமாக உழைச்சிருக்காங்க. இந்தப்படம் உணர்வு ரீதியாகவும் டெக்னிக்கலாகவும் சிறப்பாக வந்திருக்கிறது,” என்றார்

தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசும்போது,

“ஒலிம்பியா மூவிஸின் ஜிப்ஸி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. நானும் ராஜு முருகனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னபட்ஜெட் படம் ஒன்று பண்ணலாம் என்று பேசினோம். யுகபாரதி வீட்டில் இருந்து யாரை ஹீரோவாகப் போடலாம் என்று பேசினோம். யுகபாரதி ஜீவாவைச் சொல்லவும் உடனே முடிவு செய்தோம். அதன் பின் இந்தப்படம் பெரியபடமாக வளரத் துவங்கியது. எனக்கு எல்லாத் தரப்பிலும் நண்பர்கள் உதவி வருகிறார்கள். அவர்களுக்கும் என் குடும்பத்திற்கும் நன்றி,” என்றார்

நடிகர் ஜீவா பேசும்போது,

“ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். என் வீட்டிலே நான் ஜிப்ஸி போலத்தான். இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி ஆனேன். ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இன்னைக்கு நாம போன், நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும். இந்தப்படத்திற்கு நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன். இந்தப்படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான். ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும். ராஜு முருகன் ஒரு கம்யூனிஸ்ட். இந்தமாதிரியான ஆடியோ லாஞ்ச்கள்தான் நிறைய நடக்க வேண்டும். பாந்த்சிங் போன்றவர்களை அறிமுகப்படுத்திய இந்த மேடை மிகச்சிறப்பான மேடை. இந்தப்படத்தில் உழைத்த அனைவருமே உண்மையாக உழைத்திருக்கிறார்கள். எனக்கு நல்ல ஒரு ஆல்பத்தை இந்தப்படம் மூலம் தந்த இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு நன்றி,” என்றார்

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!