Connect with us

Movie Reviews

கடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்

Published

on

kadaikutty-singam-review

தெருக்கூத்தில் இருந்து நாடகம், நாடகத்தில் இருந்து திரைப்படம், திரைப்படத்திலிருந்து டிவி தொடர்கள். பல முன்னணி திரைப்பட இயக்குனர்கள்தான் குடும்பப் பாங்கான தொடர்களை இயக்கி டிவி தொடர்களுக்கும் ஒரு பெயரை வாங்கிக் கொடுத்தார்கள்.

குடும்பங்கள், உறவுகள் ஆகியவற்றுடன் ஒரு திரைப்படம் வந்தாலே அதை டிவி தொடர்கள் என்று ஏளனம் செய்ய தற்போது புதிய கூட்டம் ஒன்று கிளம்பியிருக்கிறது.

ஒவ்வொருவருக்குப் பின்னும் ஒரு குடும்பம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படங்கள் வருவது குறைந்துவிட்டது என்று கூறுபவர்களே ஒரு குடும்பப் பாங்கான படம் வந்துவிட்டால், அதை உடனே டிவி தொடர் என விமர்சிப்பது மட்டரகமானது.

இவர்கள் ‘இருட்டு முறையில் முரட்டு குத்து’ மாதிரியான படங்களை வரவேற்கும் ரசிகர்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இயக்குனர் பாண்டிராஜ், விவசாயம், கூட்டுக்குடும்பத்தின் பாசம், மோதல், காதல் என இன்றைய தலைமுறை அதிகம் உணர்ந்திருக்காத ஒரு களத்தை, குடும்பத்தை நம் கண்முன் யதார்த்தமாய் காட்டியிருக்கிறார்.

சில திரைப்படங்களில் வரும் வழக்கமான காட்சிகள், கதாபாத்திரங்கள் ஆகியவை மட்டும்தான் இந்தப் படத்தில் எதிர்மறையாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு சில விஷயங்கள். ஆனால், அவற்றையும் மீறி பல சிறப்பான காட்சிகள், உணர்வுபூர்வமான காட்சிகள், விவசாயத்தின் பெருமை, விவசாயியின் பெருமை, அப்பா, அக்கா, அக்கா மகள் உறவுகளின் பாசம், சாதிப் பிரிவு வேண்டாம் என்பது என பார்த்துப் பார்த்துப் பாராட்ட வேண்டிய பல காட்சிகளை படத்தில் வைத்திருக்கிறார்.

கடைக்குட்டி சிங்கம் குணசிங்கம் ஆக குணச்சித்திர கதாநாயகனாக கார்த்தி கலக்கலாய் நடித்திருக்கிறார். இம்மாதிரியான படங்களிலும், கதாபாத்திரங்களிலும்தான் ஒரு நடிகரின் திறமை முழுமையாக வெளிப்படும். அந்த விதத்தில் ஒரு காட்சியில் கூட எந்தவித குறையும் இல்லாமல் இயல்பாய் நடித்திருக்கிறார் கார்த்தி.

ஒரு பாசமான அப்பா, ஐந்து மகள்களையும், ஒரு மகனையும், பேரன், பேத்திகளையும் பெற்றவர், இரண்டு தாரங்களுக்குக் கணவர் என சத்யராஜ் வேறொரு பரிமாணத்தில் தனி முத்திரை பதிக்கிறார்.

நாயகிகளிக சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா. அழகுக்கும் ரசனைக்கும் சாயிஷா, நடிப்பிற்கு மற்ற இருவர் என ஏரியாவை பிரித்துவிட்டிருக்கிறார் இயக்குனர். மூவருமே அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு. சாயிஷாவுக்கு மட்டும் கார்த்தியுடன் டூயட் வைத்து, மற்றவர்களுக்கு இயக்குனர் வைக்காமல் விட்டுவிட்டார். கனவில் கூட அவர்களுக்கு டூயட் இல்லை. அதற்கான காரணம் படத்தின் கிளைமாக்சில் புரியும்.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள….என கூறினால் ஒரு பெரிய பட்டியலே போட வேண்டும். அவர்களில் சூரி நகைச்சுவையுடன், குணச்சித்திர நடிப்பிலும் பிரமாதப்படுத்தி இருக்கிறார். சரவணன் சில காட்சிகளில் வந்தாலும் ஒவ்வொரு காட்சியிலும் கைதட்டல் பெறுகிறார். இளவரசு, மாரிமுத்து, ஸ்ரீமன், விஜி சந்திரசேகர், பானுப்ரியா, மௌனிகா, தீபா, யுவராணி, இந்துமதி மணிகண்டன், ஜீவிதா கிருஷ்ணன், ஜான் விஜய், பொன்வண்ணன் என ஒவ்வொருவரும் அவர்களுக்காகக் கிடைத்த காட்சிகளில் அவர்களுடைய இருப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வில்லனாக சந்துரு, வழக்கமான தமிழ் சினிமா வில்லன்.

இமான் இசையில், ‘தண்டோரா…., சண்டக்காரி’ பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். வேல்ராஜ் ஒளிப்பதிவில் கிராமமும், சத்யராஜ் வீடும் மனதில் அப்படியே பதிகின்றன. திலீட் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் அதிரடி. காட்டுக்கள் நடக்கும் சண்டையும், கிளைமாக்ஸ் சண்டையும் அசத்தல்.

இடைவேளைக்குப் பின்னர் மட்டும் திரைக்கதையில் கொஞ்சம் தடுமாற்றம், ஆனால், அதை அழுத்தமான, உணர்வுபூர்வமான கிளைமாக்ஸ் சரி செய்துவிடுகிறது.

கடைக்குட்டி சிங்கம் –  சிங்க நடை…

Movie Reviews

குப்பத்து ராஜா – விமர்சனம்

Published

on

குப்பத்து ராஜா விமர்சனம்

ஒரு படத்திற்கு வெறும் கதைக்களமும், கதாபாத்திரங்களும் மட்டும் போதாது. அவற்றைச் சிறப்பாக்கும் விதத்தில் நல்ல கதையும் வேண்டும். அப்படி இல்லை என்றால் அது ரசிகர்களைக் கவரும் வாய்ப்பும் குறைவாகத்தான் இருக்கும்.

இந்தப் படத்தின் இயக்குனர் பாபா பாஸ்கர், அவர் வளர்ந்த இடங்களைப் பற்றியும், அவர் பார்த்த மனிதர்களைப் பற்றியும் படத்தில் சரியாகச் சேர்த்திருக்கிறார். ஆனால், அவற்றிற்கான ஒன்றுக்கொன்று முடிச்சான கதை இல்லாமல் போனதால் இந்த ‘குப்பத்து ராஜா’ ரசிகர்களிடம் ஆட்சி செய்ய முடியாமல் போய்விட்டார்.

வட சென்னையில் உள்ள ஒரு ஏரியா. தவணை கட்டாத பைக்குகளைத் தூக்கிக் கொண்டு வருபவராக ஜி.வி.பிரகாஷ்குமார். அவருடைய அப்பா எம்எஸ் பாஸ்கர், பார்த்திபன், மற்றும் சிலர் ஏரியாவின் பெரிய மனிதர்களாக இருப்பவர்கள். அவர்களுக்கும் ஜிவி பிரகாஷுக்கும் ஆகவே ஆகாது. ஒரு நாள் எம்எஸ் பாஸ்கர் கொல்லப்பட, அதற்குக் காரணமானவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஒரு படத்திலேயே பல விஷயங்களைச் சொல்ல வேண்டும் என இயக்குனர் நினைத்ததால் திரைக்கதை அல்லாடுகிறது.  ஜிவி பிரகாஷ், பாலக் லால்வானி காதல், ஜிவி பிரகாஷ், பாஸ்கர் அப்பா மகன் பாசம், பார்த்திபனின் ஏரியா பாசம், பூனம் பஜ்வாவின் பிரகாஷ் மீதான பாசம், ஏரியா மக்களுக்காகச் செலவு செய்யத் தயங்காத சேட்டின் பணப் பாசம், அந்தப் பகுதி மக்களை வெறுக்கும் கவுன்சிலர் வில்லத்தனம் என அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இரண்டிரண்டு காட்சிகள் என குழப்பத்துடன் கதையை நகர்கிறது. எப்படியோ ஆரம்பித்து, எப்படியோ நகர்ந்து, எப்படியோ முடிகிறது படம்.

ஜிவி பிரகாஷ் , தர லோக்கல் ஆசாமியாக நடிக்க கடுமையாக முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவருடைய தோற்றமே அதற்குப் பொருத்தமாக அமைந்துவிட்டது. இருந்தாலும் அவர் எகிறி எகிறி அடிக்கிறார் என்பது நம்பும்படியாக இல்லை.

பாலக் லால்வானி, காதல் நடிப்பதைக் காட்டுவதில் கூட ஓவர் ஆக்டிங் செய்கிறார். சரியான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தால் தமிழில் ஒரு இடத்தைப் பிடிக்கலாம். யோகி பாபு எந்தக் காட்சியில் சிரிக்க வைத்தார் என்று யோசித்தால் ஞாபகமே வரவில்லை.

பூனம் பஜ்வா கதாபாத்திரம் எல்லாம் நம்பும்படி இல்லை. கிளாமருக்காக வலியத் திணிக்கப்பட்டது போன்று இருக்கிறது. ஏரியா மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் பார்த்திபன் கதாபாத்திரத்தை வில்லனைப் போலக் காட்டுவது தேவையற்றது.

தான் நடிக்கும் படத்திற்கே சிறப்பான பாடல்களைப் போட முடியாமல் தவிக்கிறார் ஜிவி பிரகாஷ்குமார்.

படத்திற்காகப் போடப்பட்ட செட், கதாபாத்திரங்களுக்கான நட்சத்திரத் தேர்வு பொருத்தமாக உள்ளன. அதில் மட்டும் இயக்குனர் பாபா பாஸ்கர் பளிச்சிடுகிறார். கதை, திரைக்கதையில் எதை, எதையோ அள்ளிப் போட்டு படத்தை நிரப்பியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில்  வட சென்னை கதைகளுக்கு சில வருடங்களுக்கு ‘குட்பை’ சொல்வது நல்லது.

Continue Reading

Movie Reviews

ஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்

Published

on

ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்

ஆஸ்கர் விருது வென்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, கேரள மாநிலம், திருச்சூரில் நடக்கும், பிரம்மாண்டமான பூரம் விழாவை ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்ற அவரது லட்சியப் பணியை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

இதை ஒரு டாகுமென்டரியாகவும், கொஞ்சம் டிராமா எபெக்டிலும் படமாக்கியிருக்கிறார்கள். மும்பையில் இருக்கும் ரசூல் பூக்குட்டியை அந்த விழாவை ஒலிப்பதிவு செய்து கொடுக்கும் வேலைக்காக வரவழைக்கிறார் தயாரிப்பாளரான அஜய் மாத்யூ. ஆனால், அவர் ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டியை அதிகமாகவே அவமானப்படுத்துகிறார். காட்சிக்குக் காட்சி இருவரும் ‘ஈகோவால்’ மோதிக் கொள்கிறார்கள். அதிலும் அஜய் மாத்யூ பேசும் வசனங்கள் ஓவராகவே உள்ளன.

அந்தத் திருவிழாவில் கலந்து கொண்டு வாத்திய இசையையும், சத்தங்களையும் ஒலிப்பதிவு செய்ய வரும் ரசூல் பூக்குட்டி, ஒரு டாகுமென்டரி இயக்குனராகவே மாறி திருவிழாவில் கலந்து கொள்ளும் மற்ற கலைஞர்களைப் பற்றித்தான் படமாக்குகிறார். அதற்குப் பதிலாக, அந்தத் திருவிழாவை ஒலிப்பதிவு செய்ய எத்தனை மைக்குகள் வைக்க வேண்டும், அவற்றை எப்படியெல்லாம் பொருத்தி, ஒலிப்பதிவு செய்வார்கள் என்பதைக் காட்டியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

ரசூல் பூக்குட்டி முடிந்த வரை நடிக்க முயற்சித்திருக்கிறார். அவருடைய நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தைப் போலவே சினிமா கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். அதைவிடுத்து அவர் அவமானப்படுத்தப்படுவது போன்ற காட்சிகள் அவர் மீதான மதிப்பைக் குறைக்கும் காட்சிகள்.

அஜய் மாத்யூ, ஒரு தயாரிப்பாளர் அவருக்குப் பிடிக்காதபடி மற்றவர்கள் நடந்து கொண்டால் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதைக் காட்டுகிறார்.

படத்தில் உள்ள திருவிழா இசையமைப்புகள் ஒவ்வொன்றும் நம்மையும் ஆடவைக்கும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளன.

சொன்ன கதையை முற்றிலும் பாசிட்டிவ்வாக சொல்லியிருக்கலாம். ஒரு சினிமாவைப் போல பார்க்க முடியாத குறை இருந்தாலும் ஒரு திருவிழாவை நேரில் பார்த்த அனுபவம் நிச்சயம் கிடைக்கும்.

Continue Reading

Movie Reviews

உறியடி 2 – விமர்சனம்

Published

on

உறியடி 2 விமர்சனம்

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் கடந்த சில வருடங்களாக மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளாக ஸ்டெர்லைட் ஆலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் குழாய், என கெமிக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்து வருகின்றன.

அதனால், இந்த ‘உறியடி 2’ படத்தைப் பல மக்களும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பாக இந்தப் படத்தைப் பார்த்து சில பல அரசியல் உண்மைகளை உணர முடியும். அந்த அளவிற்கு தெள்ளத் தெளிவான காட்சிகளுடன், வசனங்களுடன் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜயகுமார்.

செங்கதிர்மலை என்ற கிராமத்தில் அமைந்துள்ள ‘பாக்சினோ’ என்ற கெமிக்கல் ஆலை வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்தை உற்பத்தி செய்கிறது. அந்த கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார் கெமிக்கல் என்ஜினியரிங் முடித்த விஜயகுமார். அந்த ஆலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ‘எம்ஐசி’ என்ற நச்சு வாயு கசியும் ஆபத்துடன்தான் கம்பெனி செயல்பட்டு வருகிறது. ஒரு நாள் அந்த வாயுக் கசிவால், விஜயகுமார் நண்பர் ஒருவர் உட்பட சிலர் இறந்து போகிறார்கள். கம்பெனியை மூட ஊர் மக்களை ஒன்று திரட்டுகிறார் விஜயகுமார். ஆனால், கம்பெனி நிர்வாகம் அந்தப் பகுதி ஆளும் கட்சி, சாதிக்கட்சி தலைவர்களை விலைக்கு வாங்கி கம்பெனியை தொடர்ந்து நடத்துகிறது. ஆனால், பெரிய அளவிலான வாயுக் கசிவு நடைந்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். அதன் பின் வீறு கொண்டு எழுகிறார் விஜயகுமார். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸ்.

ஒரு காதல் கதையாக ஆரம்பமாகும் படம் போகப் போக, மக்கள் பிரச்சினை, அரசியல், போராட்டம் என பல திருப்பங்களுடன் நகர்கிறது. விஜயகுமார் இயக்கி, எழுதி, நாயகனாகவும் நடித்து அவருடைய சமூக அக்கறையை வெளிக்காட்டுகிறார். அவருடைய தோற்றமும், நடிப்பும் பக்கத்து வீட்டுப் பையன் போல் யதார்த்தமாக அமைந்துள்ளது.

கதாநாயகியாக விஸ்மயா. விஜயகுமாருக்கு உதவும் காதலியாக நடித்திருக்கிறார். இருவருக்கும் இடையிலான காதல் காட்சிகள் குறைவுதான் என்றாலும், அவை சுவாரசியமாக படமாக்கப்பட்டுள்ளன.

கம்பெனி முதலாளி ராஜ் பிரகாஷ், ஆளும் கட்சி அரசியல்வாதி ஆனந்த்ராஜ், சாதி சங்கத் தலைவர் சங்கர் மூவரும்தான் படத்தின் வில்லன்கள். வழக்கமான நடிகர்கள் இல்லாமல் புதுமுகங்களாக இவர்கள் இருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தைத் தருகிறது.

கோவிந்த் வசந்தா இசையமைப்பில் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு கூடுதல் உத்வேகத்தைத் தருகிறது. குறிப்பாக பின்னணி இசையில் காட்சிகளின், வசனங்களின் தாக்கத்தை இன்னும் அதிகமாக்குகிறார் கோவிந்த். ஆனால், சில காட்சிகளில் வசனங்களைக் கேட்கவிடாமல் பின்னணி இசையின் சவுண்ட் அதிகமாக உள்ளது.

அறிவியில் தெரியாத மக்களுக்கு கெமிக்கல் பெயர்கள் இடம் பெறுவதும், அவை என்னென்ன கெடுதலைச் செய்யும் என்பதும் புரியவே புரியாது. கெமிக்கல் ஆலைகள் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து தெளிவான முடிவு படத்தில் இல்லை. பாதுகாப்பு அம்சங்களுடன் அப்படிப்பட்ட கம்பெனிகளை நடத்துவது தவறில்லை என்ற புரிதல் இயக்குனரிடம் மறைமுகமாகத் தெரிகிறது. ஆனால், அவரே படத்தில் லஞ்சம் வாங்கிக் கொண்டு பலர் தவறு செய்வதையும் காட்டியிருக்கிறார். இப்படி சில முரண்கள் படத்தில் இருக்கின்றன.

கிளைமாக்ஸ் முன்பாக வரை ஒரு யதார்த்தமான படம் போலத் தெரியும் படம், பின்னர் பழைய கமர்ஷியல் படங்கள் போல சினிமாத்தனமாக முடிவது அதிர்ச்சியாக உள்ளது.

இருந்தாலும் சமூக அக்கறை கொண்ட படங்களை இந்தக் கால இளம் படைப்பாளிகளும் கொடுக்க முன்வருவது பாராட்டுக்குரியது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!