December 11, 2018

‘மர்மயோகி’ பணத்தைத் திருப்பித் தர கமல்ஹாசன் சம்மதம்

கமல்ஹாசன் இயக்கம் நடிப்பில் நாளை வெளிவர உள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்திற்குத் தடை விதிக்கக் கோரி பிரமீட் சாய்மீரா என்ற நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட பிரமீட் சாய்மீரா நிறுவனம் ஒரே சமயத்தில் பல படங்களைத் தயாரிப்பதாக அறிவித்தது. சில படங்கள் மட்டுமே ஆரம்பமாகி முடிக்கப்பட்டு வெளியானது. சில படங்கள் முடிந்தும் வெளியாகவில்லை, சில படங்கள் ஆரம்பமாகி அப்படியே நின்றுவிட்டன. பின்னர் அந்த நிறுவனமும் படத் தயாரிப்புகளை நிறுத்தியது.

அந்த நிறுவனம் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் 2008ம் ஆண்டு ‘மர்மயோகி’ என்ற படத்தைத் தயாரிக்க ஒப்பந்தம் போட்டது. படத் தயாரிப்புக்காக 6.90 கோடி ரூபாயும், கமல்ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்க 4 கோடி ரூபாயும் வழங்கியதாகத் தகவல் வெளியானது.

ஆனால், அந்தப் படம் அதன் பின் ஆரம்பிக்கப்படவில்லை. இதனிடையே, கமலிடம் கொடுக்கப்பட்ட 4 கோடி ரூபாய் சம்பளத்திற்கு வட்டியுன் திருப்பித் தரக் கோரி பிரமீட் சாய்மிரா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கின் போது கமல்ஹாசன் தரப்பிலிருந்து ‘மர்மயோகி’ படத்தை இயக்கி நடிக்க முன்பணமாக 4 கோடி ரூபாய் பெறப்பட்டதாகவும், அந்த பணம் படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகளை முடிக்க சரியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு படத்தைத் தயாரிக்க அந்த நிறுவனம் பணம் தராததால் படம் தடைபட்டது. வேறு தயாரிப்பாளர் கிடைத்ததும் அந்தப் பணத்தைத் திருப்பித் தருவோம் என கமல்ஹாசன் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து, வழக்கையும் தள்ளுபடி செய்தது.

‘விஸ்வரூபம் 2’ நாளை வெளியாக உள்ளதால் இந்த வழக்கு ஒரு சிக்கலாகவே இருந்தது. இப்போது அந்த சிக்கல் நீங்கி படம் நாளை உறுதியாக வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts