December 16, 2018

கனா, ஒரு உணர்வுபூர்வமான படம் – அருண்ராஜா காமராஜ்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் திபு நினன் தாமஸ் இசையமைப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிறப்புத் தோற்றத்தில் சிவகார்த்திகேயன், மற்றும் பலர் நடிக்கும் படம் கனா.

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட இந்தப் படத்தின் டிரெய்லர் 37 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப் பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்று சேர்ந்துள்ளது.

இது குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறும்போது,

“எங்கள் எதிர்பார்ப்புகளைத் தாண்டி இந்த டிரெய்லர் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது மொத்த குழுவுக்கும் மகிழ்ச்சி. டிரைலரை வெளியிட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு நன்றி.

பெண்களின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் கடின உழைப்பு ஆகியவை எப்போதுமே நமக்கு உற்சாகம் அளிப்பதாகும். குறிப்பாக, அவர்கள் தடைகளை உடைத்து கிரிக்கெட்டில் சாதிப்பது சாதாரண விஷயமல்ல. இது என் எண்ணம் மற்றும் நம்பிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமும் சமீபத்திய ஐ.சி.சி. டி 20 உலகக் கோப்பையில் இதை கண்டிருக்கிறது.

இப்படம் வெறுமனே பெண்களின் கனவுகளையும் சாதனைகளையும் சொல்வதைத் தாண்டி, யதார்த்தமான முறையில் அவர்களுக்கு பின்னால் நின்று சாதிக்கத் துணையாக நிற்பவர்களைப் பற்றிடச சொல்லும் படமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

கனாவில் தந்தை மற்றும் மகள் இடையே உள்ள பிணைப்பு, முழு படத்தையும் எமோஷனாக அலங்கரித்திருக்கும். மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ், அப்பாவாக சத்யராஜ் மிக நிறைவாக செய்திருக்கிறார்கள். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட அத்தியாயங்கள் நிஜ வாழ்க்கையில் நம்மை பிரதிபலிப்பதோடு, ஊக்கமளிக்கும் என்பதையும் நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.

கனா படத்தின் இசை ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

Related Posts