January 22, 2019

கொம்பு – விரைவில்…திரையில்…

ஸ்ரீ சாய் ஸ்ரீனிவாசா நிறுவனத்தின் சார்பில் எம். பன்னீர்செல்வம், பி. வானதி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்பு’.

ஈ. இப்ராகிம் இயக்கத்தில் தேவ்குரு இசையமைக்கும் இப்படத்தில் ‘லொள்ளுசபா’ ஜீவா கதாநாயகனாக நடிக்க, ‘தமிழ்ப்படம்’ நாயகி திஷா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சுவாமிநாதன், காயத்ரி, அஷ்மிதா ஆகியோரும் நடிக்கின்றனர்.

படம் பற்றி இயக்குனர் இப்ராகிம் கூறுகையில்,

தமிழ் சினிமாவில் எப்போதும் இரண்டுவித படங்களுக்கு என்று தனி இடமுண்டு. ஒன்று திகில், இன்னொன்று நகைச்சுவை. என்னதான் கருத்து சொல்ல படங்கள் வந்தாலும் மக்களை இவ்வகை திரைப்படங்கள் ரசிக்க வைக்க மறப்பதில்லை. அதுவும் திகிலும் நகைச்சுவையும் சேர்ந்து வருகின்ற படங்கள் மக்களின் பெரும் கவனிப்புக்கும் ஆதரவுக்கும் முன்வரிசையில் இடம் பிடிக்கின்றன. இப்படி வெற்றி பெற்ற படங்களுக்கு நாம் பல உதாரணம் காட்டலாம்.

அப்படி திகிலும், நகைச்சுவையும் சேர்ந்து வெளிவரக் காத்திருக்கும் படம் தான் ‘கொம்பு’. திகில், பேய் படங்கள் வித்தியாசப்படுவது கதை சொல்லப்படும் விதத்திலும் அந்த கதையின் பயத்தை மக்களை உணர வைக்கும் நடிகர்களின் நடிப்பிலும்தான் வித்தியாசப்படுகிறது. .

ஏற்கனவே திகில் படங்களில் நம்மை பயப்படுத்தியும் சிரிக்கவும் வைத்த நடிகர் பட்டாளமே இந்த படத்திலும் இருப்பதால் நம்மை பயத்தோடு சிரிக்கவும் வைப்பார்கள். புதுமையைக் காட்ட வேண்டும் என்ற ஆவலும், அந்த புதுமையை எவ்வளவு எளிதாக மக்களின் மன ஓட்டதோடு ஒத்துப்போகும் அளவுக்கு திரைக்கதையில் சொல்லமுடியும் என்ற முனைப்புடனும் காட்டி உள்ளோம். அது மட்டும் இல்லாமல் இக்கதை வெறும் திகில், பேய் படம் என்று மட்டும் இல்லாமல் பெண்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என்பதையும் கூறியிருக்கிறோம்.

நடிகர் ஜீவா ஏற்கனவே நடித்த காமெடி, காதல் என்ற தளங்களில் இருந்து தன்னை திகில், காமெடி, காதல் என்ற மூன்று தளங்களையும் சேர்த்து தன்னை வித்தியாசப்படுத்தி நிரூபிக்க ‘கொம்பு’ மூலம் முயற்சி எடுத்திருக்கிறார்.

நடிகை திஷா பாண்டே தமிழ் படத்தில் நடித்ததற்கு பிறகு இப்படத்தின் மூலம் கதைக்குத் தேவையான நடிப்பையும், திரைக்குத் தேவையான அளவு கவர்ச்சியும் என தனக்கான முத்திரையை மீண்டும் பதித்துள்ளார்.

‘கொம்பு’ படத்தின் திகில் மக்களின் மனதை எவ்வாறு சென்றடைகிறது எவ்வாறு ஈர்க்கிறது என்பதை ரிலீஸ் வரை பொறுத்திருந்து திரையில் முழுதாய் காண்போம்,” என்கிறார் இயக்குனர்.

சுதீப் ஒளிப்பதிவையும், கிரேசன் படத் தொகுப்பையும், ராதிகா நடனப் பயிற்சியையும், கஜினிகுபேந்தர் சண்டைப் பயிற்சியையும், கார்த்திகேயன் நிர்வாகத் தயாரிப்பையும் கவனிக்கின்றனர்.

Related Posts