Connect with us

Movie Reviews

எல்கேஜி – விமர்சனம்

Published

on

lkg-movie-review

அரசியல் படம் என்றால் அதில் மக்களுக்கு பல விஷயங்களைப் புரிய வைக்கும் விதத்தில் கருத்துள்ள படமாக எடுக்க வேண்டும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கிளைமாக்சில் சொல்வது மட்டும்தான் கருத்து.

மற்றபடி படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை வெறும் கிண்டல், கேலி ஆகியவற்றுடன் மட்டுமே படம் நகர்கிறது.

துண்டு துண்டாக காட்சிகளை வைத்துள்ளதால் இது என்ன மாதிரியான படம் என புரிந்து கொள்வதற்கே குழப்பமாக இருக்கிறது. திடீரென நகைச்சுவையாக நகர்கிறது, திடீரென சீரியசாக நகர்கிறது, திடீரென காதலை நோக்கி நகர்கிறது. இலக்கில்லாமல் பயணிக்கும் திரைக்கதைதான் படத்தின் பலவீனம். அதை முடிந்தவரையில் சில சமகால அரசியல் கிண்டல் வசனங்களை வைத்து சமாளித்துள்ளார்கள்.

லால்குடியில் ஆளும் கட்சியின் வார்டு கவுன்சிலராக இருப்பவர் பாலாஜி. அவருக்கு அப்பா நாஞ்சில் சம்பத்தைப் போல பிழைக்கத் தெரியாத அரசியல்வாதியாக இருக்கக் கூடாது என்பது கொள்கை. அப்பாவை அதிகம் வெறுப்பவர். அவர் வசிக்கும் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் முதல்வர் இறந்து போவதால் அங்கு இடைத் தேர்தல் வருகிறது. ஒரு அரசியல் ஸ்டன்ட் செய்து அங்கு எம்எல்ஏ சீட் வாங்கி விடுகிறார் பாலாஜி. ஆனால், அங்கு சீட் கிடைக்காததால் அதே கட்சியைச் சேர்ந்த ஜேகே ரித்தீஷ், பாலாஜியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றே தீருவேன் என கட்சித் தலைவரிடம் சவால் விடுகிறார். அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கிளைமாக்ஸ்.

மூச்சு விடாமல் பேசுவதும் நகைச்சுவை என நினைத்துக் கொண்டிருக்கிறார் பாலாஜி. படத்தின் திரைக்கதை போலவே காட்சிக்குக் காட்சி அவருடைய கதாபாத்திரம் மாறிக் கொண்டே இருக்கிறது. திடீரென நகைச்சுவை நடிகராகிறார். திடீரென சீரியசான நாயகனாகிறார். சமீப காலங்களில் நடந்த தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளை அநியாயத்திற்குக் கிண்டலடிக்கிறார். ஒரு படம் இப்படி செய்துவிடலாம். ஆனால், தொடர்ந்து நாயகனாக நடிக்க வேண்டும் என்றால் வெவ்வேறு விதமாக யோசிக்க வேண்டும்.

வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் பிரியா ஆனந்திற்கு இல்லை என்பது மிகப் பெரும் ஆறுதல். பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் வேலை செய்வோம் என்ற கார்ப்பரேட் கம்பெனியின் நிர்வாகி. அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எதைச் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று ஆலோசனை சொல்லும் கம்பெனியில்தான் அவர் வேலை பார்க்கிறார். பாலாஜியும்  இவரும் காதலித்து விடுவார்களோ என எதிர்பார்த்தால் காதலை விட அரசியல்தான் முக்கியம் என்று சொல்லிவிடுகிறார்கள். அதனால், படத்தில் டூயட்டுகளுக்கும் வேலை இல்லை.

கதை, திரைக்கதை, வசனத்தை பாலாஜியே எழுதியிருப்பதால், அவருடைய கதாபாத்திர இமேஜை காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருந்திருக்கிறார். ஆனால், மற்ற கதாபாத்திரங்களில் பிரியா ஆனந்த் கதாபாத்திரத்தைத் தவிர அனைத்து கதாபாத்திரங்களையும் கொஞ்சம் கேவலமான எண்ணம் கொண்டவர்களாகவே சித்தரித்திருக்கிறார். அவர்களுக்கெல்லாம் கதாபாத்திரங்களாக சரியான இமேஜ் கிடைத்துவிடக் கூடாது என்பதைப் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் மேடைப் பேச்சில் வல்லவரான நாஞ்சில் சம்பத் கதாபாத்திரத்தை இப்படி மோமசமாக உருவாக்கியிருக்கக் கூடாது. அவர் பேசுவது, அடிக்கடி திருக்குறள் சொல்வது ஆகியவற்றைக் கிண்டலடித்திருக்கிறார்கள். ஜேகே ரித்தீஷ் கதாபாத்திரப் பெயரை ராமராஜ் பாண்டியன் என வைத்து முதல் காட்சியிலேயே அவருடைய இமேஜைக் காலி செய்து ஜோக்கர் ஆக்கியிருக்கிறார்கள். முதல்வர் ராம்குமார் கதாபாத்திரம் கூட சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

லியோன் ஜேம்ஸ் இசையில் பழைய பாடலான ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்’ பாடல் மட்டும் கணீரென்று ஒலிக்கிறது.

‘அமைதிப்படை’ போன்ற அரசியல் படங்களை இன்று வரை கொண்டாடும் நமக்கு ‘எல்கேஜி’ படத்தையெல்லாம் அரசியல் படம் என்றே சொல்ல வராது. இது ஒரு ஸ்பூப் காமெடிப் படம் அவ்வளவுதான்.

எல்கேஜி – கத்துக்குட்டி

Movie Reviews

மிஸ்டர் லோக்கல் – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 3/5

Published

on

மிஸ்டர் லோக்கல் விமர்சனம் - 4 Tamil Cinema

ராஜேஷ் படம் என்றாலே கண்டிப்பாக நகைச்சுவையாக இருக்கும் என்பதை அவருடைய முதல் படத்திலேயே ஆரம்பித்துவிட்டார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே’ ஆகிய படங்கள் அவருடைய வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பிடித்தவை.

அந்தப் படங்களைப் போல இந்த ‘மிஸ்டர் லோக்கல்’ படமும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அந்த அளவிற்கு இல்லை என்றாலும் அதில் பாதியளவிற்காவது இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

கதை என்பது புதிதாக இல்லை என்பதுதான் இந்த ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் சிக்கல். அதை தன் நடிப்பால் சரி செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இவருடன் ராதிகா, ஹரிஜா ஆகியோர் இணைந்து ஒரு நடுத்தரக் குடும்பத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

படத்தில் யோகி பாபு, சதீஷ், ரோபோ சங்கர் என மூவர் காமெடிக்காக. ஒரு சந்தானம் இல்லாத ராஜேஷ் படத்தில் மூன்று நகைச்சுவை நடிகர்கள் தேவைப்படுகிறது. இவர்களில் யோகி பாபு மட்டும் அதிகமாக கலகலக்க வைக்கிறார்.

கார் ஷோரூமில் வேலை செய்பவர் சிவகார்த்திகேயன். அவருக்கும் மீடியா கம்பெனி ஒன்றின் உரிமையாளரான நயன்தாராவுக்கும் மோதல் வருகிறது. அந்த மோதலை அப்படியே காதலாக்கக் பார்க்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால், சிவகார்த்திகேயனை எந்த அளவிற்கு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அவமானப்படுத்துகிறார் நயன்தாரா. அதையும் மீறி தன் காதலில் உறுதியாக இருக்கிறார் சிவா. முடிவில் அவரது காதல் வெற்றி பெற்றதால் இல்லையா என்பதுதான் மிஸ்டர் லோக்கல்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா இருவருக்கும் படத்தில் எலியும் பூனையுமாக எதிரெதிர் இருக்கும் கதாபாத்திரங்கள்தான். ஒருவருக்கு மற்றொருவர் சளைத்தவரில்லை என இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் ‘டக்கு டக்கு’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது.

ஏற்கெனவே பார்த்து பழக்கமான கதைதான் என்றாலும் என்டர்டெயின்மென்டாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.

மிஸ்டர் லோக்கல் – ஓகே ஓகே.

Continue Reading

Movie Reviews

மான்ஸ்டர் – விமர்சனம்

Published

on

மான்ஸ்டர் விமர்சனம் - 4 Tamil Cinema

‘ஈ’யை வைத்து எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்து ரசித்தாகிவிட்டது. அப்புறம் எலியை வைத்து படமெடுத்தால் ரசிகர்கள் ரசிக்க மாட்டார்களா என்ன ?.

சொல்ல வந்த விஷயத்தை சுவாரசியமாகச் சொன்னால் ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த ‘மான்ஸ்டர்’.

பலருடைய வீட்டில் எலித் தொல்லை என்பது கண்டிப்பாக இருக்கும். அப்படி ஒரு எலியால் எப்படிப்பட்ட சிரமங்களை நாயகன் அனுபவிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் குழந்தைகளும் ரசிக்கும் விதத்தில் ஒரு சுவாரசியமான காமெடிப் படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

எஸ்ஜே சூர்யா வாங்கிய வீட்டிற்குள் ஒரு எலி புகுந்து கொண்டு அட்டகாசம் செய்கிறது. அந்த எலியால் அவருடைய நிம்மதி எல்லாம் போகிறது. தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பிரியா பவானி சங்கருக்காக வாங்கி வைத்த காஸ்ட்லி ஷோபாவைக் கூட கடித்துக் குதறி நாசம் செய்கிறது.

அதே சமயத்தில் அந்த வீட்டிற்குள் ஒரு ரஸ்க்குக்குள் வைரங்களை வைத்து மறைத்து வைத்த அனில்குமார், அந்த வைரங்களை எடுக்க திட்டமிடுகிறார். சூர்யா வீட்டிற்குள் இருக்கும் எலி வைரம் வைத்திருந்த ரஸ்க்கை சாப்பிட்டதைக் கண்டுபிடிக்கிறார். எலியை விரட்டும் பெஸ்ட் கன்ட்ரோலர் போல வீட்டுக்குள் அடிக்கடி வந்து வைரங்களைத் தேடுகிறார்.

எலி சிக்கியதா, வைரங்கள் கிடைத்ததால், எலித் தொல்லையிலிருந்து சூர்யா தப்பித்தாரா இல்லையா என்பதுதான்ன் படத்தின் மீதிக் கதை.

இதுவரை நாம் பார்த்த எஸ்ஜே சூர்யா வேறு, இந்தப் படத்தில் நாம் பார்க்கும் சூர்யா வேறு. திருமண வயதைக் கடந்தவராக, ஒரு எலியால் சிக்கிக் கொண்டு நிம்மதியை இழப்பவராக, தனக்கும் ஒரு அழகான பெண் கிடைத்துவிட்டாளே என்று மகிழ்ச்சியடைபவராக புதிய பரிமாணத்தில் ரசிக்க வைக்கிறார்.

பிரியா பவானி சங்கர், அழகான குடும்பத்துப் பெண்ணாக வந்து ஆர்பாட்டமில்லலாமல் அழகான புன்சிரிப்புடன் கவர்கிறார்.

சூர்யாவின் நண்பராக கருணாகரன், தனி காமெடியனாக கலக்குகிறார். அவருடைய ஒன்லைன் வசனங்கள் சிரிக்க வைக்கின்றன.

ஒரு வீட்டுக்குள்யேயே சூர்யா, எலி என திரும்பத் திரும்ப காட்சிகள் நகர்வது கொஞ்சம் போரடித்தாலும் நகைச்சுவை படம் முழுவதும் நிரம்பியிருப்பதால் ‘மான்ஸ்டர்’ ரசிக்க வைக்கிறது.

மான்ஸ்டர் – எலியின் மிரட்டல்

Continue Reading

Movie Reviews

நட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 3/5

Published

on

நட்புனா என்னானு தெரியுமா விமர்சனம் - 4 Tamil Cinema

தமிழ் சினிமாவில் நட்பை மையமாக வைத்து நிறைய படங்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன. அவற்றில் சில படங்கள் காதலை மையமாக வைத்தும், சில படங்கள் நட்பை மையமாக வைத்தும் எடுக்கப்பட்டவையாக இருக்கும்.

இந்த ‘நட்புனான என்னானு தெரியுமா’ படம் இரண்டையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.

அறிமுக இயக்குனர் சிவா அரவிந்த் இடைவேளை வரை கொஞ்சம் தடுமாறினாலும இடைவேளைக்குப் பிறகு கலகலப்பான படத்தைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்கிறார்.

கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் மூவரும் சிறு வயதிலிருந்தே மிகவும் நெருங்கிய நண்பர்கள். பத்தாவதுக்கு மேல் தாண்டாதவர்கள். திருமணம் நடத்திக் கொடுக்கும் ‘வெட்டிங் பிளானர்’ பிசினஸை ஆரம்பிக்கிறார்கள். இடைவேளை வரை இதைச் சுற்றித்தான் கதை நகர்கிறது. பின்னர் ரம்யா நம்பீசன் கதைக்குள் வந்த பிறகுதான் அவர் ஒருவருக்காக மூன்று நண்பர்களும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அதிலிருந்துதான் படத்தின் கலகலப்பு ஆரம்பமாகிறது. கவினை ரம்யா காதலிக்க மற்ற இருவரும் கவினை விட்டுப் பிரிய நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா, கவின் ரம்யா காதல் ஒன்று சேர்ந்ததா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சரவணன் மீனாட்சி டிவி தொடரிலேயே தன் காமெடி நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் கவி.ன். ஏறக்குறைய அது மாதிரியான கதாபாத்திரம் என்பதால் எந்த தடுமாற்றமும் இல்லாமல் நடித்து ரசிக்க வைக்கிறார்.

ரம்யா நம்பீசன் படத்தில் மிகவும் தாமதமாகத்தான் வருகிறார். பெரிய அளவில் நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் வரும் சில காட்சிகளில் ரசனையாகவே நடித்திருக்கிறார்.

புதுமுகம் ராஜு ஒரு பக்கம் காதல் தோல்வியிலும் சிரிக்க வைக்கிறார். மறுபக்கம் அருண்ராஜா காமராஜ் இரண்டு நண்பர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு சிரிக்க வைக்கிறார்.

தரன் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். இடைவேளை வரை தாக்குப் பிடித்து உட்கார்ந்தால் இடைவேளைக்குப் பின் ஒரு என்டர்டெயின்டான படத்தைப் பார்த்த திருப்தி கிடைக்கும்.

நட்புனா என்னானு தெரியுமா – ஏமாற்றமில்லை

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!