January 22, 2019

‘ரௌடி பேபி’ ஒரே நாளில் 2 புதிய சாதனை

பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி, டொவினோ தாமஸ் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் தேதி வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘மாரி 2’.

அப்படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் சூப்பர் ஹிட்டான ஒரு பாடல். அதற்கு அந்தப் பாடலுக்கு யு டியூபில் கிடைத்த வரவேற்பே ஒரு சாட்சி.

‘ரௌடி பேபி’ பாடலின் லிரிக் வீடியோ, நவம்பர் மாதம் 28ம் தேதி யு டியூபில் வெளியானது. வெளியான நாளிலிருந்தே அந்தப் பாடல் யு டியுபில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்று அந்தப் பாடல் யு டியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

நேற்று மாலை 6.30 மணிக்கு அந்தப் பாடலின் முழு வீடியோ யு டியுபில் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்திற்குள் 60 லட்சம் பார்வைகளைக் கடந்து யு டியுப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இதற்கு முன்பு, ‘சர்கார்’ படத்தில் இடம் பெற்ற ‘சிம்டாங்காரன்’ பாடல் 3 நாட்களில் 50 லட்சம் பார்வைகளைக் கடந்தது. ஆனால், ‘ரௌடி பேபி’ பாடல் 19 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

ஒரே நாளில் ‘ரௌடி பேபி’ பாடல் இரண்டு புதிய சாதனைகளைப் படைத்துள்ளது.

Related Posts