Connect with us

Upcoming Movies

இயற்கை அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ‘மரகதக்காடு’

Published

on

maragathakkadu

ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு’.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.

இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது.

‘மரகதக்காடு’ படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது காடுகளின் வழியாக பசுமை வழிச்சாலை அமைக்க அரசாங்கம் முழு மூச்சுடன் முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில் மரகதக்காடு படத்தின் இயக்குநர் மங்களேஸ்வரன் பசுமை வழிச் சாலை மற்றும் இயற்கை அழிப்பு குறித்து தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் பகிர்ந்து கொண்டார்.

வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கையை அழித்துவிடக்கூடாது என்கின்ற கருத்தை மையமாக வைத்தே மரகதகாடு படத்தை இயக்கியுள்ளேன். பூமிக்குள் புதைந்து கிடக்கும் கனிமங்களை எடுக்கிறோம் என்கிற பெயரில் நடந்து வரும் இயற்கை அழிவைப் பற்றி தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன்.

ஒரு காட்டை உருவாக்குவதுதான் கஷ்டம். காட்டை நாடாக்குவது ரொம்பவே சுலபம். காட்டை அழிப்பதற்கு ஆறு மாதங்கள் போதும். இதோ இப்போது பசுமை வழிச்சாலை அமைக்கிறோம் என்கின்ற பெயரில் அது தான் நடக்கிறது. அது பசுமை வழிச்சாலை அல்ல. பசுமை அழிப்புச் சாலை என்று சொல்லுவது தான் சரியாக இருக்கும். பசுமை வழிச் சாலையின் அறுபது சதவீதம் சாலை காடுகளுக்குள் தான் அமைய இருக்கிறது.

காடுகளை ஒட்டி நகரங்களும் சாலைகளும் உருவாகும்போது யானைகளும் வன விலங்குகளும் ஊருக்குள் வருவது அதிகரிக்கத்தான் செய்யும். ஒன்றை அழித்து இன்னொன்று வளர்ந்தால் அது வளர்ச்சி அல்ல. இருப்பதை அழித்துவிட்டு அதன் மேல் புதிதாக ஒன்றை உருவாக்கி அதை நாட்டின் வளர்ச்சி என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இயற்கையை பாதுகாக்காமல் வருகின்ற எந்த வளர்ச்சியும் மனிதனைப் பாதுகாக்காது. அழிவுக்குத் தான் அழைத்துச் செல்லும். சாலைகளோ தொழிற்சாலைகளோ வேண்டாம் எனக் கூறவில்லை.

இயற்கையை அழிக்காமல் மாற்று வழிகளில் அதை அமைக்க வேண்டும். ஒரு அரசாங்கமே காடுகளை அழிக்கும் செயலை முன்னின்று செய்யக்கூடாது. ஆள்பவர்களும் அரசு அதிகாரிகளும் மக்களுக்கான நீண்ட காலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு விசுவாசமாக இல்லை. ஒரு திட்டத்தால் யாருக்கு எவ்வளவு வருமானம் என்ற வியாபாரம் நோக்கம் சார்ந்து செயல்படக்கூடாது. அரசாங்கம் இயற்கையை வணிகமாக பார்க்க ஆரம்பித்துவிட்டது. அதன் காரணமாகத்தான் விளை நிலங்களில் கூட தொழிற்சாலை கட்ட கிளம்பி வருகிறார்கள்.

பசுமைக் காடுகளை வெட்டி பசுமை வழிச்சாலை.. அமைப்பதா.. ?

அரசியல்வாதிகளும், அரசாங்கமும் தங்களின் பை நிரம்பினால் போதும் மக்களின் சுவாசப்பை என்ன ஆனால் என்ன? என்று ஒரு கார்ப்பரேட் நிறுவனம்போல் மாறிவருகிறது.. தண்ணீர் வருகின்ற கிணற்றை மூடிவிட்டு உனக்கு வாட்டர் பாக்கட் தருகிறேன் என்று சொன்னால், அது எவ்வளவு அபத்தமோ அப்படிதான் இயற்கையை அழித்து உருவாக்கப்படும் வளர்ச்சியும்.

இதைவிட கொடுமை என்னவென்றால் காகிதமற்ற பரிவர்த்தனை செய்வோம், அதன் மூலம் மரங்களைக் அழிக்காமல் காப்போம் என்று கூறிக்கொண்டே இன்னொரு பக்கம் வளர்ச்சி என்கிற பெயரில் மரங்களை அழிப்பது அரசாங்கத்தின் இரு முகங்களை அப்பட்டமாக காட்டுகிறது.

இயற்கையைக் காக்க வேண்டும் என்றால் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை. அதற்காக சமூக விரோதிகள் என பட்டம் கிடைத்தாலும் பரவாயில்லை.. பதிமூன்று உயிர்களை விலை கொடுத்து தானே ஒரு ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிந்திருக்கிறது..

“என் பிணத்துமேல ஏறி உங்க ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்…உலகத்திலேயே மலிவானது ஏழையின் உயிர் தான். மனித உயிருக்கு விலைவைக்க நீங்கள் யார்?” என்கிற அழுத்தமான வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் இயற்கை அழிப்புக்கு எதிரான குரலை “மரகதக்காடு” படத்தில் பதிவு செய்துளேன்.

காட்டை அழித்து மலையைத் தகர்த்து பூமிக்கு அடியில் உள்ள மரகதத்தை தேடாதீர்கள். நம் கண்களுக்கு முன்னால் தெரியும் ஒவ்வொரு மரமும் ஒரு மரகதம் தான். மரக்கத்தக்காடு படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தானும் ஒவ்வொரு மரமாவது வைக்கவேண்டும். வீடு என் சொத்து.. மரம் நாட்டுக்கு சொத்து என்கின்ற உணர்வை இந்த படம் நிச்சயம் ஏற்படுத்தும்.

தண்ணீரை விற்க ஆரம்பித்த போது எந்த எதிர்ப்பையும் காட்டாமல் இருந்தோம்..

இன்று வீடு தோறும் தண்ணீர் கேண்கள். அடுத்ததாக, சென்னையில காற்று விற்பனைக்கு வந்திருக்கு.

6 லிட்டர் ஆக்ஸிஜன் 645 ரூ. பிளிப்கார்டில் விற்கிறாங்க..இப்பவும் கோபம் வரலைன்னா.. வரும் தலைமுறை நம்மை மன்னிக்காது. அதுமட்டுமல்ல இருக்கிற காட்டை, யார் அழித்தாலும் கோபம் வரணும்.. அந்த தார்மீகக் கோபத்தை என் படம் உருவாக்கும்.

8 வழிச் சாலையை எதிர்க்கும் மக்களாகட்டும் சமூக ஆர்வலர்களாகட்டும் அரசாங்கத்தினால் கைது செய்யப்படுகிறார்கள்… அப்படியிருக்கும்போது தைரியமாக எட்டு வழிச்சாலையை எதிர்க்கிறீர்களே?? என்றால் இயக்குநர் மங்களேஸ்வரன்,

வளர்ச்சித் திட்டங்கள் ஒன்று மக்களை பாதிக்காதவை இரண்டு, மக்களை, இயற்கையை, கனிம வளங்களை பாதிப்பவை என்று பிரிக்கலாம்.

இதில் 8 வழிச்சாலை மக்களை .. அவர்களின் உணவு ஆதாரத்தை .. இயற்கையை அதன் கனிம வளங்களை சூறையாடிவிட்டு… ஆண்டுக்கணக்கில் வேர்விட்டிருக்கும் மரங்களை வேரோடு பிடுங்கிவிட்டு வளர்ச்சிப் பணி என்று பெயரிட்டுக்கொள்வது இந்நாட்டின் எதிர்காலத்தை அந்த மண்ணின் வளத்தை அழித்துவிட்டுச் செய்யும் அரசாங்கத்தின் சுயநலமான வளர்ச்சித்திட்டம் என்றே சொல்வேன்.

ஒரு அரசாங்கத்தின் ஆயுள் 5 வருடம்தான். ஆனால் அவர்கள் நாம் சிறுபிள்ளையிலிருந்து பார்த்து பேணிவரும் வளங்களை எடுக்கும்போது.. மக்களதிகாரத்திற்குட்பட்டே வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.

அங்குள்ள எந்த மக்களும் 8 வழிச்சாலைக்காக தவம் இருக்கவில்லை. அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவே ஓலமிடுகிறார்கள். வளத்தை தக்கவைத்துக்கொள்ளவே போராடுகிறார்கள். அதை அடக்கு முறையால் செயல்படுத்தத் துடிக்கும் அரசு மக்களுக்கானதாக இருக்க முடியாது.

இம்மண்ணின் வளங்களை காப்பாற்றும் அரசாக இருக்க முடியாது. நான் எடுத்துவைத்திருக்கும் படம் இயற்கை வளத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம்.

இந்த திட்டத்தை நான் எதிர்க்காவிட்டால் என் படத்திற்கே துரோகம் செய்வது போலாகிவிடும். மண்ணின் வளங்களை பாதிக்காத திட்டங்களை கொண்டுவரும்போது அரசைக் கொண்டாடத்தானே செய்கிறோம்??

படத்திற்கு எந்தவிதமான எதிர்ப்பு வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். காரணம் “மரகதக்காடு” படத்தில் சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் உண்மை”.

செப்டம்பரில் படம் வெளியாக இருக்கிறது… படம் பார்க்கும்போது அது சொல்லும் செய்தியும் அதன் வலியும் உங்களுக்குப் புரிய வரும்,” என்கிறார் இயக்குநர் மங்களேஸ்வரன் .

தொழில் நுட்பக் கலைஞர்கள்:

நடிகர்கள் :

அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, இலியாஸ் காத்தவன், ‘அறம்’ ராமச்சந்திரன், மணிமாறன், பாபா லக்ஷ்மண், வெஞ்சாரமோடு மோகன், ராஜு மோகன், ரமேஷ்

ஒளிப்பதிவு: நட்சத்திர பிரகாஷ்
எடிட்டிங்: சாபு ஜோசப்
சண்டைப் பயிற்சி : மிராக்கிள் மைக்கேல்
கலை இயக்குநர்: மார்டின் டைட்டஸ்
நடன இயக்குநர்: ஜாய் மதி
இசை : ஜெயப்பிரகாஷ்
பாடலாசிரியர்கள்: விவேகா, மீனாட்சி சுந்தரம், அருண் பாரதி, சாரதி, ரவீந்திரன்
காஸ்ட்யூம் டிஸைனர்: செல்வம்
விளம்பர வடிவமைப்பு: கெட் இன் ட்ரீம்ஸ் ஸ்டூடியோஸ் மணிகண்டன்
பி.ஆர்.ஓ : A. ஜான்
தயாரிப்பு: கே. ரகு நாதன் (ஆர் ஆர் ஃபிலிம்ஸ்)
கதை திரைக்கதை வசனம் இயக்கம் : மங்களேஸ்வரன்

Upcoming Movies

உச்சகட்டம் – விரைவில்…திரையில்…

Published

on

உச்சகட்டம் - விரைவில்...திரையில்

திகில், அதிரடி, த்ரில்லர் திரைப்படங்களை படைப்பதில் வல்லவரும், அதற்காகவே பல்வேறு சிறப்பு விருதுகளையும் பெற்றவருமான இயக்குனர் சுனில் குமார் தேசாய், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ‘உச்சகட்டம்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

தமிழில் ‘உச்சகட்டம்’ என்றும், ‘உத்கர்ஷா’ என மற்ற மூன்று மொழிகளிலும் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம், வருகின்ற மார்ச் 22ம் தேதி திரைக்கு வருகிறது.

ஆர்.தேவராஜ் தி கிரியேஷன்ஸ் சார்பாக இத்திரைப்படத்தை தயாரிக்க, ஏஜிஎஸ் சினிமாஸ் உலகெங்கும் இதனை வெளியிட இருக்கிறது.

திகில், மர்மம், எதிர்பாராத திருப்புமுனைகள், குறிப்பிடத்தக்க அதிரடி காட்சிகள் என படம் முழுவதும் நிறைந்திருக்கிறதாம்.

ஒரு புத்தாண்டு தினத்தின் முந்தைய 48 மணி நேரத்தில் நடக்கின்ற பல்வேறு நிகழ்வுகளை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்கரு அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு உல்லாச விடுதியில் நடக்கின்ற ஒரு கொலை, அது ஏற்படுத்துகின்ற பெருங்குழப்பங்கள், என இவற்றால் கதையின் முக்கிய கதாப்பத்திரங்கள் தமது இலக்கை அடைய முடியாத நிலை என கதை பயணிக்கிறது. கதாபாத்திரங்கள் முன்னிறுத்தி பெரும் மர்மங்கள் நிறைந்த இத்திரைப்படத்தில், கொலை, துரோகம், காதல், காமம், மர்மம், அதிரடி சண்டைக் காட்சிகள் என கமர்ஷியலான படமாக உருவாகியுள்ளது.

அடுத்தடுத்து மாறுகின்ற விறுவிறுப்பான காட்சிகள், பித்துப்பிடித்த கதாபாத்திரங்கள், கொலைக்கு பின் மறைக்கப்படும் நிகழ்வுகளும் அதன் நோக்கங்களும் என கதையும், வசனங்களும் கதையின் போக்கை இறுதி நிமிடம் வரையில் விறுவிறுப்பாக வைத்திருக்குமாம்.

‘சிங்கம் 3’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த தாகூர் அனூப் சிங், இத்திரைப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார். தாகூர் ஒரு உடற்பயிற்சி விரும்பி, ஒரு ஆணழகன். உடல்நலம் மீது தீராத அக்கரை கொண்டவர். இதற்காகவே பல சர்வதேச விருதுகள் பெற்றவர் என்றாலும், ஒரு திறமையான நடிகராகவும் இருக்கிறார். அவருக்கு இணையாக சாய் தன்ஷிகா, ‘தடம்’ தன்யா ஹோப் என இருவர் நடித்துள்ளனர்.

‘வேதாளம்’ புகழ் கபீர் துஹான் சிங் இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ‘ஆடுகளம்’ கிஷோர், ஷ்ரவன் ராகவேந்திரா, வம்சி கிருஷ்ணா, ஷ்ரத்தா தாஸ் ஆகியோரும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சஞ்சய் சவுத்ரி இசை அமைத்திருக்கிறார். பழம்பெரும் இசையமைப்பாளர் சலீல் சவுத்ரியின் மகனான இவர் 1998ம் ஆண்டு ‘என்னு சொந்தம் ஜானகிகுட்டி’ எனும் மலையாளப் படத்தில் அறிமுகமாகி, ‘சர் ஃபரோஷ்’ எனும் ஹிந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்து, தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.

கன்னட திரையுலகுக்குப் பெருமை சேர்த்த முன்னணி இயக்குனர்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ள சுனில் குமார் தேசாய். நான்கு முறை கர்நாடக அரசின் திரைப்பட விருதுகளைப் பெற்ற ஒரு இயக்குனர். அவரது முதல் திரைப்படமான ‘தர்கா’ அவருக்கு கன்னட அரசின் ‘சிறந்த இயக்குனர்’ மற்றும் ‘சிறந்த வசனகர்த்தா’ விருதுகளை பெற்றுத் தந்தது. ஆர் பி சவுத்ரி தயாரிப்பில் இத்திரைப்படம் தமிழில் ‘புரியாத புதிர்’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. இயக்குனர் கே எஸ் ரவிக்குமாருக்கு அதுவே முதல் திரைப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சுனில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் அமைப்பதில் வல்லவர். எந்த ஒரு குறிப்பிட்ட வடிவமைப்புக்குள்ளும் சிக்காத ஒரு சிறந்த, திறமையான படைப்பாளி என்பதும் அவரது படைப்புகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரது மிகச்சிறந்த படைப்புகள் வரிசை “தர்கா, உட்கர்ஷா, சங்கர்ஷா, நிஷ்கர்ஷா, பெலடிங்கள பாலே, நம்மூர மண்டர ஹூவே” மற்றும் பல படங்கள் என நீள்கிறது.

நட்சத்திரங்கள்

தாகூர் அனூப் சிங், சாய் தன்ஷிகா, தன்யா ஹோப், கபீர் துஹான் சிங், கிஷோர், ஷ்ரத்தா தாஸ், பிரபாகர், வம்சி கிருஷ்ணா, ஷ்ரவன் ராகவேந்திரா, மஞ்சுநாத்

தொழிட்நுட்பக் கலைஞர்கள்

கதை, இயக்கம் – சுனில் குமார் தேசாய்
தயாரிப்பாளர் – தேவராஜ் ஆர்
பின்னணி இசை – சஞ்ஜோய் சவுத்ரி
ஒளிப்பதிவு – பி ராஜன், விஷ்ணு வர்தன்
படத்தொகுப்பு – பி எஸ் கெம்பராஜூ
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

Continue Reading

Upcoming Movies

பட்டிபுலம் – விரைவில்…திரையில்…

Published

on

பட்டிபுலம் - விரைவில்...திரையில்...

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படம் ‘பட்டிபுலம்’.

இப்படத்தில் யோகி பாபு, வீரசமர், அமிதா ராவ், சேரன் ராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராகப் பணியாற்றிய சுரேஷ் இப்படத்தை இயக்குகிறார்.

படம் பற்றி சுரேஷ் கூறியதாவது,

“நான் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராகப் பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டைப் பெaறலாம் என்பதை கற்றுக் கொண்டேன்.

அந்த பார்முலாபடி யோகி பாபுவை இந்தப் படத்தில் பயன்படுத்திக் கொண்டேன். அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம் இல்லை, படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார். அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப்படுத்தி இருக்கிறார். படத்தில் யோகி பாபு கதாபாத்திரத்திற்குப் பேய் என்று பெயர் வைத்திருக்கிறோம்.

கிழக்கு கடற்கரை சாலையில் ‘பட்டிபுலம்’ என்ற ஊர் இருக்கு. அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவது, அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது, ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது தான் கதை.

இதை நகைச்சுவையாகவும், பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர்.

‘பட்டிபுலம்’ படம் மார்ச் 22ம் தேதி வெளியாகிறது.

ஒளிப்பதிவு – ஆர்.கே.வர்மா
இசை – வல்லவன்
எடிட்டிங் – ஆர்.ஜி.ஆனந்த்
கலை – வீரசமர்
நடனம் – விஜய் ரக்‌ஷித்
ஸ்டண்ட் – மகேஷ்
பாடல்கள் – மா.கா.பா.ஆனந்த், வல்லவன், கானா ராஜேஷ், கானா வினோத்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
தயாரிப்பு மேற்பார்வை – அயன்புரம் ராஜு
கதை திரைக்கதை வசனம், இயக்கம் – சுரேஷ்
தயாரிப்பு – திருமுருகன்

Continue Reading

Upcoming Movies

சத்ரு – விரைவில்…திரையில்…

Published

on

chathru

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’.

இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் நவீன் நஞ்சுண்டான் கூறியதாவது,

இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப் படம். விறு விறுப்பான திரைக்கதை கொண்ட, ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்த படம்.

இந்த படத்தைப் பார்த்த மைல்ஸ்டோன் மூவிஸ் G.டில்லிபாபு சார் படத்தை ரிலீஸ் செய்கிறார். தரமான வெற்றிப் படங்களான மரகத நாணயம், ராட்சசன் என பார்த்து பார்த்து தயாரிக்கும் டில்லிபாபு ‘சத்ரு’ படத்தை வெளியிடுகிறார் என்றால் அதை எங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம்.

குற்றவாளிகளாக. யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலிஸ் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பது தான் ‘சத்ரு’. படம் மார்ச் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது,” என்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
இசை – அம்ரிஷ்
பாடல்கள் – கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ
எடிட்டிங் – பிரசன்னா.ஜி.கே
கலை – ராஜா மோகன்
ஸ்டன்ட் – விக்கி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நஞ்சுண்டான்

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending