January 22, 2019

இயக்குனர் அமீரின் சைக்கிள் கனவு…

வி.பி.புரொடக்ஷன் தயாரிப்பில் அமீரின் உதவியாளர் அஸ்லம் இயக்கும் ‘பாகன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு அமீர் பேசியதாவது:

‘பாகன்’ படம் சைக்கிளோடு தொடர்புடையது. எனது சைக்கிள் அனுபவம் புதுமையானது. காதலி போல கடைசி வரை அது எனக்கு கிடைக்கவே இல்லை. வசதியான குடும்பத்தில பிறந்தாலும் 3 வயதிலேயே தந்தையை இழந்தேன். அம்மா படிக்காதவள். அவளுக்கு எனக்கு என்ன தேவை என்று தெரியவில்லை. வீட்டுக்கு பக்கத்திலேயே பள்ளிக்கூடம் இருந்ததால் சைக்கிள் வாங்கித் தரவில்லை. மேல் படிப்பு படிக்கும்போதும் சைக்கிள் வாங்கித் தரவில்லை. என் அண்ணன்களுக்குகூட அம்மா சைக்கிள் வாங்கித் தரவில்லை. எங்காவது விழுந்து விடுவார்களோ என்ற பயம்தான் காரணம். பக்கத்து வீட்டில் ஒரு சைக்கிள் இருந்தது. அதனால் அவர்கள் என்ன வேலை சொன்னாலும் செய்து கொடுப்பேன். காரணம் அவர்கள் சைக்கிள் தருவார்கள். அழகான சைக்கிள் என்பது வெறும் கனவாகவே இருந்தது. கல்லூரி 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்ததால் பஸ்சில் சென்றேன். அப்போதும் சைக்கிள் வாங்கவில்லை. பிற்காலத்தில் இயக்குனராகி சம்பாதித்த பிறகு முதலில் வாங்கியது கார்தான். கடைசிவரை சைக்கிள் எனக்கு கைகூடாமலே போய்விட்டது.

எனது உதவியாளராக இருந்தவர்தான் இந்தப் படத்தின் இயக்குனர் அஸ்லம். அவரும், சமுத்திரக்கனியும் எனக்கு பூசாரியாக இருந்தாக சொன்னார்கள். பூசாரியாக இருக்க நான் ஒன்றும் கடவுள் இல்லை. கடவுள் ஒருவர்தான். அப்படிப் பார்த்தால் பாலாவிடம் நான் 15 ஆண்டுகள் பூசாரியாக இருந்தேன். திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரும். திண்டுக்கல் தியேட்டரில்தான் என் தயாரிப்பாளர் என்னை இயக்குனராக அறிவித்தார். அப்போது அறிமுகமானவவர்தான் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அவரைப் பற்றி சசிகுமார் என்னிடம் நிறைய சொல்லியிருக்கிறார். சுப்பிரமணியபுரத்துக்கு ஜேம்ஸ் வசந்தனை புக் பண்ணியபோது நான் சசியிடம் யோசித்து செய் என்றேன். பின்னர் ஒரு நாள் பாடலை போட்டுக் காட்டியபோது சரியாக வருமா என்று கேட்டேன். பின்னர் அதை படத்தில் பார்த்து வியந்தேன்.

இயக்குனர் அஸ்லம் என்னிடம் பணியாற்றினார். இந்த கதையை அவர் பல வருடம் வைத்திருந்தார். என்னிடம் சொல்லாமல் ஒரு சாதாரண கம்பெனிக்கு அந்த கதையை எழுதிக் கொடுத்துவிட்டு அந்த தயாரிப்பாளின் மகன் நடிக்க ஏற்பாடு செய்துவிட்டு வந்துவிட்டார். இப்படி அவசரப்பட்டு விட்டானே இனி அவன் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தேன். ஆனால் அவன் வணங்கிய கடவுள் அவனை கைவிடவில்லை. படத்தை அந்த தயாரிப்பாளர் கைவிட்டார். நான் ஸ்ரீகாந்த் நடிக்க கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டு நடித்தார். இப்போது படம் அழகாக உருவாகியிருக்கிறது.

சினிமாவில் ஒருவரை ஒருவர் பாராட்ட வேண்டும். அந்த கலாச்சாரம் இப்போது வளர்ந்திருக்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள் ஒருத்தரை ஒருத்தர் பாராட்டிக் கொள்கிறார்கள். சிலர் நாம் எழுந்து விட்டால் நம் இடத்தில் இன்னொருவர் உட்கார்ந்து விடுவாரோ என்று நினைக்கிறார்கள். அது தவறு. சினிமா ஒன்றும் முக்கு சந்தல்ல. அது பெரிய பீச். நாம் இங்கிருந்து சென்றால், வேறொருவர் இன்னொரு திசையிலிருந்து நம்மை விட வேகமாக வந்து கொண்டிருப்பார். எல்லோரையும் அள்ளி அணைத்துக் கொள்ளும் இடம் சினிமா.

வேறு மாநிலம், வேறு மொழி கலைஞர்களை கூட அன்பாக அள்ளி அணைத்துக் கொள்கிறோம். இந்தப் படத்தை கன்னடத்தை சேர்ந்தவர்கள் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் எந்த வேறுபாடும் பார்க்காமல் இங்கு அனைவரும் கலந்து கொண்டிருக்கிறோம். இங்கே பேசிய கர்நாடக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். நாங்கள் உங்களுக்கு ரஜினியையும், அர்ஜுனையும் தந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். இன்னும் நிறைய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களை தாருங்கள் அள்ளி அணைத்துக் கொள்கிறோம். அதோடு கொஞ்சம் தண்ணீரும் தாருங்கள் என்று கேட்கிறோம். இங்கு நாங்கள் செலுத்தும் அன்பை உங்களுக்கு நாங்கள் தரும் ஆதரவை உங்கள் சட்டமன்றத்தில் காவிரி பிரச்சினை வரும்போது சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். விழாவில் இயக்குனர்கள் அமீர், சுசீந்திரன், சமுத்திரக்கனி, விஜய், பிரபு சாலமன், கரு.பழநியப்பன், நடிகர் ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த், ராமகிருஷ்ணா, நடிகைகள் நமீதா, சுஜா வாருணீ, ஜனனி ஐயர், தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் சிவா, வேந்தர் மூவீஸ் ரகு மற்றும் கர்னாடக மந்திரி அணில் லாட், சந்தோஷ் லாட் எம். எல். ஏ. , நந்தீஸ் ரெட்டி எம். எல். ஏ. ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

Related Posts