January 22, 2019

பரதேசி – விமர்சனம்

Image00012

ம் அனைவரிடத்திலும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நம்ம வீட்டுப் பையன் என்னதான் படித்து நல்ல மதிப் பெண் வாங்கினாலும் , அடுத்த வீட்டுப் பையனுடன்தான் ஒப்பிட்டுப் பேசுவோம்.

ஹாலிவுட் படங்கள், ஈரான் படங்கள், கொரியன் படங்கள், ஜப்பான் படங்கள், பெங்காலி படங்கள், மலையாளப் படங்கள் என பல படங்களைப் பற்றிப் பேசும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

தயவு செய்து ‘பரதேசி’ படத்தைப் பாருங்கள். தமிழ் சினிமாவின் பெருமைக்காக பாலா பதிவு செய்துள்ள இந்த படத்தைப் பற்றி பாராட்டிப் பேசுங்கள்.

இல்லை, நான் அந்த ஸ்டார், இந்த ஸ்டார், என வெவ்வேறு ஸ்டார்களின் படங்களைப் பற்றித்தான் பாராட்டிப் பேசுவேன் என்று சொன்னால் தமிழ் சினிமாவின் தரம் என்றுமே உயராது.

கடந்த பல வருடங்களாக யதார்த்த தமிழ் திரைப்படங்களின் படைப்பாளியாக பேசப்பட்டு வரும் இயக்குனர் மகேந்திரனுக்கு அடுத்து பாலா என்கிற படைப்பாளி தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த அதிகமாகவே போராடிக் கொண்டிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

இன்று நாம் யாரும் பாராட்டிப் பேசாமல் போனாலும், இன்னும் பல வருடங்கள் கழித்து, தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசும் போது பாலா என்ற இயக்குனர் நிச்சயம் பேசப்படுவார். அதுவே, இயக்குனர் பாலாவுக்குக் கிடைக்கப் போகும் மாபெரும் வெற்றி.

1939ம் ஆண்டு நடக்கும் கதை. பஞ்சத்தில் அடிபட்டு பின் தங்கிய நிலையில் உள்ள ஒரு கிராமத்தில் ‘தண்டோரா’ போட்டுக் கொண்டு வீடு வீடாக சென்று பிச்சை எடுத்து பிழைப்பை ஓட்டுபவர் அதர்வா. இவருக்கும் அதே கிராமத்தில் இருக்கும் வேதிகாவுக்கும் காதல்.

பிச்சை எடுப்பவனுக்கு என் பெண்ணை தர மாட்டேன் என வேதிகாவின் அம்மா பிரச்சனையை எழுப்பி பஞ்சாயத்தைக் கூட்டுகிறார். அப்போது, மலைப்பிரதேச தேயிலைத் தோட்டத்துக்கு  வேலை பார்க்க ஆட்களை கூலிக்கு அழைத்துச் செல்லும் ‘கங்காணி’ ஜெர்ரி அந்த ஊருக்கு வருகிறார்.

பஞ்சம் பிழைப்பதற்காக அதர்வாவும் ஊரிலிருந்து ஒரு கூட்டமும் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்க்க பயணமாகிறார்கள். இவர்கள் அங்கே கொத்தடிமைகளாக்கப்பட்டு என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதி கதை.

‘ஒட்டுப் பொறுக்கி என்கிற ராசா’வாக அதர்வா. சதுரவட்டை ஹேர்ஸ்டைலும், கோணியை மேலாடையாகவும், ஒரு நான்கு முழ வேட்டியை கீழாடையாகவும் அணிந்து கொண்டு , கையில் தண்டோராவுடன், ‘இது நியாயமா…….’ என அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே இந்த படத்தில் அவருக்குக் கிடைத்துள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

அப்பாவி மாதிரி சுற்றி வந்தாலும், வேதிகாவை ‘நான் உன்னை நினைக்கிறேன்’ என சரியாக கரெக்ட் செய்து விடுகிறார். போகப் போக அவர் கதாபாத்திரத்திற்குள் நாமும் முழுமையாக சரணடைந்து விடுகிறோம். மூன்றாவது படத்திலேயே நல்ல வாய்ப்பு. ‘பரதேசி’யை உடும்புப் பிடியாக பிடித்து விட்டார் அதர்வா. (அடுத்த படத்துல பேமென்ட்டை ஏத்திடாதீங்க).

செவத்தப் பொன்னு வேதிகா இங்கு கருத்தப் பொன்னு ‘அங்கம்மா’. மேக்கப் போட்டதே தெரியாத மாதிரியான மேக்கப். ஒப்பனைக் கலைஞருக்கு நமது வாழ்த்துக்கள். ஆரம்பத்தில் சில காட்சிகளில் கொஞ்சம் ஓவராகவே நடித்து விட்டார் வேதிகா. அவ்வளவு ஆர்வம், அங்கம்மா கதாபாத்திரத்தில்.

ஒரு சிறுமிக்குத் தாயாக நடித்ததற்காகவே தன்ஷிகாவை தனியாகப் பாராட்டலாம். கொஞ்சமான காட்சிகளில் வருவது போல் தோன்றினாலும் நல்ல படைப்புகளில் தானும் இருக்க வேண்டும் என்பதை ‘மரகதம்’ கதாபாத்திரம் மூலம் அழுத்தமாகவே உணர்த்தியிருக்கிறார்.

கங்காணி – ஜெர்ரி, தங்கராசு – உதய் கார்த்திக், கருத்தக் கன்னி – ரித்விகா, குரூஸ் – மோகன், அதர்வாவின் பாட்டி – கச்சம்மாள், டாக்டர பரிசுத்தம் – சிவசங்கர் மாஸ்டர், மற்றும் படத்தில் கூட்டத்தில் ஒருவராக வந்து செல்பவர்கள் உட்பட அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். அதிலும், ஆரம்பப் பாடல் ஒன்றில் ஒரு மேளத்தை ஆர்வத்துடன் அடிக்கும் சிறுவன் கூட கவனத்தை ஈர்க்கிறான்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் ‘அவத்தப் பையா….’, ‘செங்காடே….’ ‘செந்நீர்தானா….’ பாடல்கள் கதையோட்டத்துடன் பொருத்தமாக அமைந்து வைரமுத்துவின் பாடல் வரிகளாலும் ரசிக்க வைக்கின்றன.

செழியன் ஒளிப்பதிவும், கிஷோரின் படத்தொகுப்பும், நாஞ்சில் நாடன் வசனமும், சி.எஸ். பாலசுந்தரத்தின் வசனமும், பூர்ணிமா ராமசாமியின் உடை வடிவமைப்பும் ‘பரதேசி’க்கு சரியான பக்க பலங்கள்.

இவ்வளவு பாராட்டி எழுதித் தள்ளுகிறீர்களே, ஒரு குறை கூட சொல்ல மாட்டீர்களா என நீங்கள் கேட்பது எங்களுக்கும் புரிகிறது.

இதற்குப் பதில்,

‘தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ…’ என்ற பாடல்தான் மனதில் எழுகிறது.

‘பரதேசி’ – தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு அருமையான பதிவு.

Related Posts