Connect with us

Tamil Cinema News

மக்கள் மீது நம்பிக்கை இருந்தது – பா ரஞ்சித் நன்றி

Published

on

pariyerum perumal thanks pa ranjith

நீலம் புரொடக்ஷன்ஸ் பா ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், கதிர், ஆனந்தி மற்றும் பலர் நடித்த ‘பரியேறும் பெருமாள்’ படம் கடந்த வாரம் வெளியாகி உலகெங்கும் வெற்றிநடை போட்டு வருகிறது.

எந்த விதமான சாதி, பேதம் பார்க்காமல் அனைத்து ரசிகர்களும் இந்தப் படத்தைப் பார்த்து மகத்தான ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவிக்க பத்திரிகையாளர்களைப் படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, கராத்தே வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா RK, கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும் போது,

“இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயங்காட்டினார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாகக் கொண்டாடுவார்கள் என்று நம்பினேன், அது நடந்தது.

அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல, எதையும் சொல்ல வேண்டிய முறையோடு சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். இது வெற்றிச் சந்திப்பு அல்ல, நன்றி அறிவிப்பு மட்டும் தான். ஏனெனில் இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் பெரிதாக கொண்டாடினார்கள். ஒருமுறை எழுதியதோடு நிறுத்தி விடாமல் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன் இதுபோன்ற படங்களை தயாரிக்கும்,” என்றார்.

இயக்குனர் ராம் பேசுகையில்,

“இந்தப்படத்தின் வணிக ரீதியான வெற்றி தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி. பா.ரஞ்சித் படங்கள் வருவதற்கு முன்பும் தலித் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ரஞ்சித் வந்த பிறகு தான் தலித் பற்றி மேடையில் பேசியே ஆகவேண்டும் என்ற நிலை வந்தது.

எனக்கும் மாரி செல்வராஜுக்குமான உறவு தந்தை மகனுக்குமான உறவு என்று பலரும் சொன்னார்கள். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. ஒரு தந்தை தன் பையனை அழைத்து நடந்து வருகிறார். மகன், நிலா அருகே போவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று கேட்டான். இப்படியே நடந்தால் நூறு வருடங்கள் ஆகும் என்றார் தந்தை. இருவரும் நடந்து வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் விளக்கு எரிந்தது. அந்த விளக்கு அருகே நிலாவும் நட்சத்திரமும் இருந்தன. அப்போது மகன் சொன்னான் இதோ நிலாவிற்கு அருகே வந்துவிட்டோம் என்று. அதுபோல் தான் மாரிசெல்வராஜ் என்னிடம் வரும்போது, நான் அவனிடம் ஓடு… படி… எழுது… இதுபோதாது என்று விரட்டிக் கொண்டே இருப்பேன். பனிரெண்டு வருடம் கழித்து இதோ அவன் நிலாவாக மாறிவிட்டான். எங்கள் வீட்டு நிலாவை நீங்கள் கொண்டாடுவதில் உள்ளபடியே மகிழ்ச்சி”, என்றார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது,

“பரியேறும் பெருமாளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்று மிகவும் பயந்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக பத்திரிகையாளர்கள் அனைவரும் பாராட்டியது மறக்க முடியாதது. அத்தனை பேருக்கும் நன்றி.

எல்லோரும் முதல் படத்திலேயே இப்படியான காட்சிகளை எடுக்க முடிந்தது எப்படி என கேட்டார்கள். எல்லாமே ரஞ்சித் அண்ணா என்கிற ஒருவர் கொடுத்த நம்பிக்கை தான் காரணம். அதற்கெல்லாம் அவருக்கு நன்றி கூறப் போவதில்லை, கடைசி வரை அவர் கூடவே தான் இருப்பேன். என்னுடைய உதவி இயக்குநர்கள், தயாரிப்பு தரப்பினர், கேமராமேன், எடிட்டர் எல்லோருக்குமே எனது நன்றிகள்.

சந்தோஷ் நாராயணன் சார் இந்தப் படத்தை முழுவதுமாகப் புரிந்து கொண்டு வேலை செய்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு எல்லோரும் படத்திற்காக முழுமையாக உழைத்தார்கள், அவர்களுக்கும் நன்றி.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் அத்தனை பேரும் பாராட்டினார்கள். பரியனின் அப்பாவாக நடிக்க சரியான நபரை தேர்வு செய்ய அலைந்து திரிந்தோம். தமிழ்நாடு முழுக்க சுற்றினோம். அதன் பின்னர் நிஜத்திலேயே கூத்துக்கலைஞரான தங்கராஜை பிடித்தோம். அவரை ஒரு சோளக்கொல்லையில் நடு இரவில் சந்தித்தேன். முதலில் ஒரு ஒப்பாரி பாடலை பாட சொன்னேன். அரை மணி நேரம் அவர் பாடியது உருக வைத்தது. உடனே அவரை தேர்ந்தெடுத்தோம்.

படத்தில் உள்ளதற்கும், நிஜத்திற்கும் நிறைய வேறுபாடு கொண்டவர் அவர். நிஜத்தில் பயங்கரமாக கோபப்பட கூடிய ஒரு ஆள். முக்கியமான அந்த காட்சியில் அழ முடியாது என மறுத்தார், ஆனால் நான் அழுது காண்பித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார். நிர்வாணமாக ஓடும் காட்சியில் நடிக்க முதலில் மறுத்தார். முழுக்கதையையும் விளக்கிய பின்னர் ஒப்புக்கொண்டார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் படம் பார்க்கும்வரை எனக்கு பதற்றம் இருக்கும்”, என்றார்.

Tamil Cinema News

1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்

Published

on

1000 கோடி வசூலித்த அஜித்-தின் 6 படங்கள்

தமிழ்த் திரையுலகத்தில் ‘ஓபனிங் ஸ்டார்’ என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்.

அவர் நடித்து வெளிவரும் படங்கள் நன்றாக இருக்கிறதோ இல்லையோ முதல் சில நாட்கள் நல்ல வசூலைக் கொடுக்கும். அதன் பின்னர்தான் படம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து வசூல் ஏறும், இறங்கும்.

1993ம் ஆண்டு வெளிவந்த ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித்.

அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அதற்கடுத்து 1995ல் வெளிவந்த, ‘ஆசை’ படம்தான் அஜித்தின் முதல் வெற்றிப் படமாக அமைந்தது.

1996ல் வெளிவந்த ‘காதல் கோட்டை’, 1998ல் வெளிவந்த ‘காதல் மன்னன்’, 1999ல் வெளிவந்த ‘வாலி’ ஆகியவை 90களில் அஜித்தின் மிகப் பெரிய வெற்றிப் படங்கள்.

அதன் பின் ஏஆர் முருகதாஸ் இயக்கிய முதல் படமான 2001ல் வெளிவந்த ‘தீனா’ படத்தில்தான் அஜித்தை ‘தல’ என அழைக்க ஆரம்பித்தனர். அந்தப் படத்திற்குப் பின் அஜித் நடித்து வெளிவந்த படங்கள் நல்ல ஓபனிங்கைத் தர ஆரம்பித்து கமர்ஷியல் ஹீரோவாக அவர் உயர்ந்தார்.

தொடர்ந்து சில படங்கள் தோல்வி அடைந்தாலும் கூட அவருடைய அந்த ஓபனிங் ஸ்டார் இமேஜ் அப்படியே இருக்கிறது.

2007ல் வெளிவந்த ‘பில்லா’ படத்திற்குப் பிறகு அஜித் தமிழ் சினிமா உலகில் பெரும் வளர்ச்சி பெற்றார்.

கடந்த ஆறு வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் சுமார் 1000 கோடியை வசூலித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் இன்று டிவிட்டரில் டிரென்டிங்கை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி,

ஆரம்பம் – 135 கோடி
வீரம் – 118
என்னை அறிந்தால் – 125
வேதாளம் – 152
விவேகம் – 206
விஸ்வாசம் – 253 கோடி. வசூலித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

‘விஸ்வாசம்’ படம் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘பேட்ட’ படத்தை விட அதிகமாக வசூலித்துள்ளது.

அஜித் தற்போது ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.

Continue Reading

Tamil Cinema News

சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’

Published

on

சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ராங்கி

சரவணன் யார் என்பதை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்புண்டு.

சர்வானந்த், ஜெய், அஞ்சலி, அனன்யா மற்றும் பலர் நடிக்க 2011ல் வெளிவந்து அனைவரையும் நெகிழ வைத்த காதல் படமான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கியவர்தான் சரவணன்.

அதன் பின் ‘இவன் வேற மாதிரி, வலியவன்’ ஆகிய படங்களையும், கன்னடத்தில் ‘இவன் வேற மாதிரி’ படத்தை ‘சக்ரவியூகா’ என்ற பெயரில் இயக்கினார்.

விபத்து ஒன்றில் சிக்கியதால் ஓய்வில் இருந்த சரவணன், நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இப்போது ‘ராங்கி’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் முருகதாஸ் கதை எழுதி உள்ளார்.

த்ரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.

Continue Reading

Tamil Cinema News

காஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை

Published

on

காஞ்சனா 3 - முதல் நாள் வசூலில் சாதனை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், தமன் பின்னணி இசையில், ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, நிக்கி டம்போலி மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் ‘காஞ்சனா 3’.

இந்தப் படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலாக சுமார் 10 கோடி வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் சுமார் 4 கோடியும், மற்ற இடங்களில் சுமார் 5 கோடியும் வசூலித்திருக்கலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் நாளில் மட்டும் மொத்தமாக 20 கோடி வரை இந்தப் படம் வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.

இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் ‘பேட்ட, விஸ்வாசம்’ ஆகிய படங்கள் மட்டுமே முதல் நாள் வசூலாக தமிழ்நாட்டில் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது அந்த வரிசையில் ‘காஞ்சனா 3’ படமும் சேர்ந்துள்ளது.

‘காஞ்சனா’ வசூலை ‘காஞ்சனா 2’ முறியடித்தது, அது போல ‘காஞ்சனா 2’ வசூலை ‘காஞ்சனா 3’ நிச்சயம் முறியடிக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி நெகட்டிவ்வான விமர்சனங்கள் சில வந்தாலும், தியேட்டர்காரர்கள் அந்த விமர்சனங்கள் மொத்தமாக 50 பேர் எழுதுவதுதான். ஆனால், தியேட்டருக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் படத்தை ரசிக்கிறார்கள், அவர்களது விமர்சனம்தான் முக்கியமானது என்கிறார்கள்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!