November 17, 2018

சர்கார் – 2 நாளில் 100 கோடி வசூலித்து சாதனை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் நவம்பர் 6, தீபாவளி அன்று உலகம் முழுவதும் சுமார் 3000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது.

இப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 65 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தகவல் வெளியானது. தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 30 கோடியும், கேரளாவில் சுமார் 6.5 கோடியும், கர்நாடகாவில் 6.5 கோடியும், ஆந்திரா, தெலுங்கானாவில் 4 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் சுமார் 1 கோடியும், வெளிநாடுகளில் 15 கோடியும் என வசூலித்துள்ளதாகத் தெரிகிறது.

நேற்றைய இரண்டாம் நாளிலும் முதல் நாளை விட கொஞ்சம் மட்டுமே குறைவான தொகையை வசூலித்துள்ளது. நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டும் இப்படத்தின் வசூல் 100 கோடியைக் கடந்து தமிழ்த் திரையுலகத்தில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இதுவரை ரஜினிகாந்த் படங்கள் மட்டுமே முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்ததாக இருந்தது. அதை தற்போது விஜய் படமான ‘சர்கார்’ படம் முறியடித்துள்ளது.

கேரளாவில் இதுவரை எந்த ஒரு படமும் வசூலிக்காத 6.5 கோடி ரூபாயை முதல் நாளில் வசூலித்து மலையாளத் திரையுலகினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சென்னையில் மட்டும் இரண்டு நாளில் 4.7 கோடி ரூபாய் வசூலித்து சென்னை வசூலில் சாதனை படைத்துள்ளது.

பட வெளியீட்டிற்குப் பின்னும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘சர்கார்’ படத்தின் வசூல் 300 கோடி ரூபாயை சாதாரணமாகக் கடக்கும் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

Related Posts