November 17, 2018

சர்கார் – நீக்கப்பட உள்ள காட்சிகள் எவையெவை ?

ஆளும் அதிமுக அரசு சார்பாக ‘சர்கார்’ படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளை நீக்க வேண்டும் என அமைச்சர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து ‘சர்கார்’ படம் திரையிடப்பட்ட சில தியேட்டர்கள் முன்பாக நேற்று அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தியேட்டர்கள் முன்பாக இருந்த ‘சர்கார்’ பட பேனர்களை அவர்கள் கிழித்து எறிந்தனர்.

இதனிடையே, ‘சர்கார்’ படத்தில் இடம் பெற்ற அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதித்ததாக பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

‘சர்கார்’ படத்தில் இடம் பெற்றுள்ள அந்த சர்ச்சை காட்சிகளாக கருதப்படும் பின்வரும் காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்படலாம்.

படத்தில் முதல்வர் பழ. கருப்பையா மகளான வரலட்சுமி கதாபாத்திரப் பெயர் கோமளவல்லி என்பதைக் குறிப்பிடும் காட்சிகள்

வரலட்சுமி நடந்து வரும் போது கட்சிக்காரர்கள் குனிந்து வணங்கும் காட்சி

மருத்துவமனையில் மின்சாரத்துறை, போக்குவரத்துத் துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றை விமர்சிக்கும் காட்சிகள்

மக்களை பாதிக்கும் திட்டங்களை வைத்துதான் பணம் சம்பாதிக்கிறோம் என முதல்வர் பழ. கருப்பையா மேடையில் பேசும் காட்சி

கந்து வட்டி கொடுமையால் ஒரு ஏழைக் குடும்பம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கும் காட்சி

கண்டெய்னரில் பணம் பதுக்கி வைத்துள்ள காட்சி

மிக்சி, கிரைண்டர் ஆகிய இலவசப் பொருட்களை தீயில் தூக்கிப் போடும் காட்சி

ஆகிய காட்சிகள் நீக்கப்படலாம்.

ஆனால், படத்தில் விஜய் அடிக்கடி சிகரெட் பிடிக்கும் காட்சியை நீக்க வேண்டும் என யாரும் எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை. பாமகவினர் மட்டும் அந்தக் காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மறு தணிக்கை செய்யப்படும் வரை ‘சர்கார்’ படத்தின் காலை காட்சிகள் பல ஊர்களில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts