ஒரு ஆக்ஷன் படம்னா ஆக்ஷன் இருக்கணும், சென்டிமென்ட் படம்னா சென்டிமென்ட் இருக்கணும், காதல் படம்னா காதல் இருக்கணும். இந்த ‘தேவ்’ படமும் ஒரு காதல் படம்தான். படம் முழுக்க நாயகனும், நாயகியும் காதலிச்சிட்டே இருக்கிற படம்.
காதல் படம்னாலே வில்லன்கள் கண்டிப்பா இருப்பாங்க. ஆனா, இந்தக் காதல் படத்துல வில்லனே கிடையாது. காதலுக்கு காதலிக்கிற நாயகிதான் கொஞ்சமே கொஞ்சமான வில்லி. அதுவும் அவங்க குணத்தால, சுயநலத்தால வர வில்லத்தனம்.
அழ வேண்டாம், அதிகமா சிரிக்க வேண்டாம், அப்படியே ஒரு டிராவல் பண்ற மாதிரி ஜாலியா ஒரு படம் பார்க்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.
ஊரைச் சுத்தறது, அதையும் பிடிச்ச மாதிரி ஜாலியா, சாகசம் பண்ணிக்கிட்டே சுத்தறது நாயகன் கார்த்திக்கு ரொம்பவே பிடிக்கும். கூடவே, தன் பிரண்ட்ஸ் விக்னேஷ், அம்ருதா அவங்களோடதான் சுத்துவாரு. சின்ன வயசுல இருந்தே அடிக்கடி ரொம்ப தொந்தரவு பண்றானே, அவனை எதுலயாவது சிக்க வைக்கணும்னு நினைக்கிற பிரண்ட் விக்னேஷ், காதல்ல சிக்க வச்சிடறாரு. பேஸ்புக் மூலமா யார் பத்துக்குள்ள முதல்ல வராங்களோ அவங்கதான் காதலின்னு பிரண்ட்ஸ் சொல்றாங்க. அப்படி வந்து நிக்கிறவங்கதான் ரகுல் ப்ரீத் சிங். அமெரிக்காவுல வசிக்கிற தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பிசினஸ் உமன். ரகுலைக் காதலிக்க வைக்க கார்த்தி என்ன பண்றாரு, அவங்க காதல் சேர்ந்துதா இல்லையாங்கறதுதான் இந்த ‘தேவ்’.
‘பையா’ படத்துக்கு அப்புறமா ஒரு ஜாலியான கேரக்டர்ல கார்த்தி. சிட்டியோ, வில்லேஜோ, பணக்காரனோ, ஏழையோ, மிடில் கிளாஸோ எல்லா கேரக்டர்லயும் தன்னை அழகா செட் பண்ணிக்கிறாரு கார்த்தி. இந்தப் படத்துல 20 காஸ்ட்லி பைக் சொந்தமா வச்சிருக்கிற ஒரு பணக்கார வீட்டுப் பையன். பைக்லயே மும்பை வரைக்கும் போய் காதலியைப் பார்த்து காதலை சொல்ற கேரக்டர். படிக்கிறதுக்கும் நல்லா இருக்கு, கார்த்தி பண்றதும் நல்லா இருக்கு. ஆனால், கார்த்தியோட நடிப்புக்கு இயக்குனர் ரஜத் இன்னும் தீனி போட்டிருக்கலாம்.
ரகுல் ப்ரீத் சிங், பார்த்ததுமே ஒரு திமிரான பொண்ணுன்னு சொல்ற மாதிரிதான் இருக்காங்க. அவங்க கண்கள்தான் கார்த்தியை காதல்ல விழ வைக்குதுன்னு சீன் வச்சிருக்காங்க. காதலி என்பதையும் மீறி படம் முழுவதும் அவரை பிசினஸ் உமனாக மட்டுமே பார்க்க முடிகிறது. அந்தக் கேரக்டரில் அப்படியே மூழ்கி விட்டார் போலிருக்கிறது. காதலியாக காதலிலும் கொஞ்சம் மூழ்கியிருக்கலாம்.
தமிழ் சினிமாவில், நாயகனுக்கு பிரண்டாக ஒரு பெண்ணை நடிக்க வைத்து மச்சி, மச்சான் என அழைக்க வைத்த முதல் படமாக இதுதான் இருக்கும். அவ்வளவு நெருக்கமான தோழியாக அம்ருதா, அப்படியே கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். இப்படிப்பட்ட பிரண்ட் தான் பல இளைஞர்களின் கனவாகவும் இருக்கிறது. விக்னேஷ் போன்ற நண்பர்களும் பலருடைய வாழ்வில் உண்டு. ஆனால், படத்தில் விக்னேஷ் சிரிக்க வைப்பார் என்று பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றமே.
கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ் ராஜ், ரகுலின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன். இந்தக் காலத்து அப்பா, அம்மா. தங்கள் பிள்ளைகளின் விருப்பமே தங்கள் விருப்பம் என நினைப்பவர்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘அனங்கே…’ பாடலின் வரிகளும், குரல்களும் இனிமை. இந்தப் பாடலும், மற்ற பாடல்களும் கேட்ட உடனேயே ஹாரிஸ் இசை என்று எளிதில் சொல்லிவிடலாம். காதலைக் குழைத்து இன்னும் சில பாடல்களை அமைத்திருக்கலாம்.
வேல்ராஜின் ஒளிப்பதிவுக்கு நிறைய காட்சிகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். சூரியன் உதிப்பதும், எவரெஸ்ட் உயரமும், வெளிநாட்டு சாலைகளும் படத்திற்கு வேறு ஒரு கலரைக் கொடுக்கின்றன.
பிரிந்தால்தான் காதலும் சேரும் என்பதுதான் இன்றைய 2019 தேவ் காதல்.