December 11, 2018

சீமராஜா – விமர்சனம்

இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன், இமான் கூட்டணி இந்த கிராமத்துக் கதையிலும் தங்களது முத்திரையைப் பதித்திருக்கிறது. கூடவே, போனசாக ஒரு சரித்திரக் கதையையும் சேர்த்துக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

‘சீமராஜா’ என்ற பெயருக்கேற்றபடியே எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாகச் சுற்றித் திரியும் ராஜா சிவகார்த்திகேயன், தன்னை ராஜாதி ராஜாவாக சொல்லிக் கொண்டு திரிகிறார். படத்தில் நிறையவே ரஜினி சாயல் தெரிகிறது. அந்த கலகலப்பும், பக்கத்து வீட்டுப் பையன் தோற்றமும் சிவகார்த்திகேயனுக்குப் பொருத்தமாகவே அமைந்துவிடுவதால் ‘சீமராஜா’வும் சிறப்பாகவே இருக்கிறார்.

ராஜ பரம்பரையில் வந்த வாரிசு சிவகார்த்திகேயன். அவரை வாழ்த்துபவர்களுக்கு வாரி வழங்கும் குணம் கொண்டவர். அப்படிப்பட்டவருக்கு சமந்தாவின் அழகில் காதல் வருகிறது. ஊரே மரியாதையுடன் பார்க்கும் ராஜா சிவகார்த்திகேயனை கொஞ்சம் ஏளனமாக, நம்பிக்கையில்லாமல் பார்க்கிறார் சமந்தா. இருவரது காதலும் கனியும் சமயத்தில் தன் மகள் சமந்தாவை சிவகார்த்திகேயனுக்குக் கொடுக்க முடியாது என சிறை வைக்கிறார் வில்லன் லால். கறிக்கடை கண்ணன் ஆக இருந்த லால், ஊர் மக்களுக்குத் துரோகம் செய்து பணக்காரன் ஆகி, தன்னையும் ஒரு ராஜா போல நினைத்துக் கொண்டு சுற்றி வருபவர். பொறுப்பே இல்லாமல் இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் தன் பரம்பரையின் வீரம், வலிமை கேட்டு களத்தில் இறங்கி காதலியைக் கைபிடிக்கிறாரா, ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறாரா என்பதுதான் படத்தின் கதை.

சீமராஜாவாக சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபராக, ரஜினி முருகனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சீமராஜாவாக சீரும் சிறப்புமாகவே இடம் பிடிக்கிறார். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை அவருக்காகவே உருவாக்குகிறார்களா அல்லது கதாபாத்திரத்திற்காக அவ்வளவு பொருத்தமாக சிவகார்த்திகேயன் இருக்கிறாரா என்று சொல்லுமளவிற்கு இறங்கி விளையாடியிருக்கிறார். காதல், காமெடி, ஆக்ஷன் என படம் முழுவதும் இந்த ராஜாவின் ராஜ்ஜியம் பரவலாக இருந்தாலும், பிளாஷ்பேக்கில் அந்த சரித்திர ராஜா, கொஞ்ச நேரமே வந்தாலும் வெற்றிக் கொடி, வீரக் கொடி நாட்டிவிடுகிறார்.

காலையில் தோட்டத்தில் இருந்த பறித்த தக்காளி போல அவ்வளவு பிரஷ் ஆக இருக்கிறார் சமந்தா. கோபப்படும் ஒரு சில காட்சிகளைத் தவிர அந்த சிரித்த முகம் சமந்தா, சிக்கனமில்லாமல் ரசிக்க வைக்கிறார். அளவான கிளாமர், நிறைவான அழகு, அசத்தலான வீரம் என சமந்தாவுக்கும் இந்தப் படம் ஒரு சக்சஸ் படம்.

சிவகார்த்திகேயன் படம் என்றாலே சூரிக்கு தனி ‘மேத்ஸ்’ வந்துவிடுகிறது. கிடைக்கும் கேப்பில் மட்டுமே கமெண்ட்டுகளை அள்ளிவிடுகிறார்.  வில்லனாக லால், வில்லியாக சிம்ரன் ஆவேசக் குரலில் அதிர வைக்கிறார்கள். சிவகார்த்திகேயன் அப்பாவாக நெப்போலியன் மகனைக் கண்டிக்க முயன்று தோற்றுப் போகும் அன்பான அப்பா. மற்ற கதாபாத்திரங்களில் பிளாஷ் பேக்கில் ராணியாக வரும் கீர்த்தி சுரேஷ் தனி கவனம் பெறுகிறார்.

இமானின் இசையில் அனைத்துப் பாடல்களுமே ஏற்கெனவே ஹிட்டாகிவிட்டன. ‘மச்சக்கன்னி…., உன்னை விட்டா யாரும்…’ இந்த வருடத்தின் ரிபீட் பாடல்களாக இருக்கும்.

படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் படத்திற்கு இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். ‘மல்யுத்தப் போட்டி, நாயை சிறுத்தை என்று சொல்லி ஊருக்குள் விடுவது’ ஆகிய காட்சிகளை தாராளமாகக் குறைத்திருக்கலாம்.

தியேட்டருக்குப் போய் ஜாலியாகப் படம் பார்க்க வேண்டும் என்ற என்டர்டெயின்மென்ட் ரசிகர்களுக்கு சீமராஜா, சிறப்பு ராஜா.

Related Posts