September 21, 2018

சீமராஜா – ‘சிக்ஸ் பேக்’ வைத்த சூரி

சிவகார்த்திகேயன், சூரி இணைந்தாலே காமெடி களை கட்டும் என்பதை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்,’ உள்ளிட்ட பல படங்கள் நிரூபித்துள்ளன.

அந்த காமெடி ‘சீமராஜா’ படத்திலும் தெறிக்க விடப் போகிறது என்பதை படக்குழுவினர் ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள்.

சீமராஜாவின் காமெடி ஸ்பெஷல் என்ன என்பது பற்றி சூரி கூறியதாவது,

“வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் மிகச் சரியான நேரத்தில் எனக்கு தேவையான வெற்றிகளைத் தந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். சீமராஜா என்னை மிகப் பெரிய உயரத்துக்கு இட்டுச் செல்லும், சினிமாவில் நீண்ட காலத்துக்கு என்னை பயணிக்க வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் பொன்ராம் ஆகியோருடனான என் முந்தைய படங்களில் இருந்ததை விட இந்தப் படத்துடன் எனக்கு உணர்வு ரீதியான தொடர்பு நிறைய இருக்கிறது. வெறும் காமெடி நடிகராக என் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக மட்டும் இல்லாமல் என் உடல் ஆரோக்கியத்தை கவனிக்க வைத்தது.

sooriபொன்ராம் எழுதிய கதைப்படி சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து நானும் 6 பேக் வைக்க வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் நான் இதை காமெடியாக நினைத்தேன், ஆனால் ஜிம்மிற்கு போனபிறகு மிகவும் கடுமையான ஒரு அனுபமாக அமைந்தது. இறுதியாக, நான் கட்டுமஸ்தான உடலோடு சேர்த்து, உடல் நலத்தை பற்றிய புரிதலையும் பெற்றேன். அது என் வாழ்நாள் முழுவதிலும் எனக்கு உதவியாக இருக்கும்.

“டிரெய்லரின் இறுதியில் சில நொடிகள், படத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். அந்த காட்சிகளை திரையரங்குகளில் பார்ப்பது ஒரு பெரிய அனுபவமாக இருக்கும். சீமராஜா ரிலீஸுக்குப் பிறகு அந்த வகையில் ஒரு முழுமையான திரைப்படத்தை இயக்கும் முழுத் தகுதியும் பொன்ராம் அவர்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறேன்.

‘மனம் கொத்தி பறவை’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணிபுரிந்த நாட்களில், நள்ளிரவு நேரத்தில் ஒரு குழந்தையை போல ஃபோனில் அழைத்து நான் எப்படி நடித்தேன் எனக் கேட்பார். ஆரம்பத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் வழக்கமாக செய்யும் சேட்டை போல என்னிடம் விளையாடுகிறார் என்று நினைத்தேன். ஆனால், அவர் உண்மையிலேயே என் கருத்தைத் தொடர்ந்து கேட்டார்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன்’ படங்களின் மூலம் மிகப் பெரிய உயரத்தை அடைந்த பிறகும் கூட என் ஆலோசனைகளைத் தீவிரமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். சீமராஜா படப்பிடிப்பின்போதும், நள்ளிரவில் என்னை அழைத்து என்னுடைய கருத்துகளை கேட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரது பணிவு மற்றும் அர்ப்பணிப்பு தான் அவரது வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் சூரி.

Related Posts