ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வசுந்தரா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கண்ணே கலைமானே’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், நாயகனுமான உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் சீனு ராமசாமி, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, தமன்னா, வசுந்தரா, வடிவுக்கரசி, சரவண சக்தி, ஷாஜி, ஒளிப்பதிவாளர் ஜலேந்தர் வாசன், படத் தொகுப்பாளர் காசி விஸ்வநாதன், கலை இயக்குனர் விஜய் தென்னரசு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குனர் சீனு ராமசாமி பேசியதாவது,
‘தென்மேற்குப் பருவக்காற்று’ படம் வந்த பின் அடுத்த படத்திற்காக இரண்டு வருடங்கள் காத்திருந்தேன். அப்போது ரெட் ஜெயன்ட் உதயநிதி சார் என்னை அழைத்து ‘நீர்ப் பறவை’ படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். அது போல, ‘தர்மதுரை’ படத்தை இயக்கி இரண்டு ஆண்டுகள் இடைவெளி விழுந்த போது மீண்டும் என்னை அழைத்து ரெட் ஜெயன்ட் மூர்த்தி சார் இந்த வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார்.
ஆனால், மூர்த்தி சார், படத்தில் ஒரு குத்துப்பாட்டு வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தக் கதைக்கு எங்குமே அப்படி ஒரு சூழல் பொருந்தவில்லை. அதனால், அதை வைக்கவில்லை. கடைசியில் உதயநிதி சாரிடம் சொல்லி அந்தப் பாடல் வைப்பதைத் தவிர்த்துவிட்டேன்.
பெண்களை, பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட ஒரு படத்திற்கு கதாநாயகனாக நடிக்க சம்மதித்த உதயநிதியின் பெருந்தன்மைதான் இந்தப் படம் உருவாகக் காரணம். மற்ற கதாபாத்திரங்களுக்குப் பெயர் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் சூழல்தான் இப்போது இருக்கிறது. இந்தப் படத்தில் மற்ற கதாபாத்திரங்களுக்குப் பெயர் கிடைத்தாலும் தானும் நடிக்க வேண்டும் என்று இருந்தார் உதயநிதி.
ரொம்ப இயல்பான, யதார்த்தமான ஒரு நடிகர் உதயநிதி. வாய்ப்பு கொடுத்தால் நான் இதைச் சொல்லவில்லை. இது மாதிரி யதார்த்தமான கதைக் களங்கள் கொண்ட படங்களில் அவர் நடித்தால் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக இருப்பார். அவ்வளவு இயல்பான நடிப்பை இந்தப் படத்தில் அவரிடம் பார்த்தேன். கிளிசரின் போடாமல் அழுது நடித்தார்.
படத்தின் ஆரம்பத்தில் அவருக்கு சில புரிதல் இல்லாமல் இருந்தது. படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களில் படத்தின் கமலக் கண்ணன் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்.
வேற யாருமே செய்ய முடியாத அளவிற்கு அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார். சில காட்சிகளில் நாம் சொல்வதைத் தாண்டியும் சிறப்பாக நடித்தார். முழு சுதந்திரம் கொடுத்தார். நன்றாகச் செய்யுங்கள் என்று எப்போதும் சொல்லிக் கொண்டே தயாரிப்பு நிறுவனத்தில் உற்சாகம் கொடுத்தார்கள்.
படப்பிடிப்பு நடந்த நாட்கள் எனக்கு ஆனந்தமான நாட்களாகவே போனது. படத்தில் நடித்த அனைவருமே அவ்வளவு சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
தமன்னா, ஒரு நல்ல ஆன்மா. காட்சியைச் சொன்னவுடன் புரிந்து கொண்டு அதை உள்வாங்கி அவ்வளவு யதார்த்தமாக நடித்தார். ஒரு கலையரசி அவர். நேரம் தவறாமல், பொருத்தமான ஆடை அணிந்து அப்படி நடித்துள்ளார்.
படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். தொழில்நுட்பக் கலைஞர்களும் நல்ல படம் கொடுக்க ஒத்துழைத்தார்கள்.
இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது, தவறான படத்தை நான் நிச்சயம் எடுக்க மாட்டேன்.