November 17, 2018

யு டர்ன் – விமர்சனம்

ஒரு உண்மையான த்ரில்லர் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த ‘யு டர்ன்’ படம் சிறந்த உதாரணம்.

ஆரம்பத்தில் ஒரு காதல் கதை போலத் துவங்கும் கதை கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே ஒரு பரபரப்பான த்ரில்லிங்கான திரைக்கதையாக மாறி உச்சபட்ச வேகம் எடுக்கிறது. கிளைமாக்ஸ் வரை ‘அதை செய்தது யார்’ என்ற எந்த யூகத்திற்கும் இடம் கொடுக்காத திரைக்கதையே இந்தப் படத்தின் வரவேற்பிற்குக் காரணமாக அமையும்.

இயக்குனர் பவன்குமார் எந்த விதமான குழப்பமும் இல்லாமல் இந்தப் படத்தை அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். இடைவேளை வந்ததும் தெரியவில்லை, பின்னர் ஆரம்பித்து படம் முடிந்ததும் தெரியவில்லை, அவ்வளவு விறுவிறுப்பாக படம் நகர்கிறது.

ஒரு மேம்பாலத்தில் குறுக்கே உள்ள சிமெண்ட் சாலைத் தடுப்புகளை அகற்றிவிட்டு சிலர் ‘ராங்காக’ யு டர்ன் அடித்து செல்கிறார்கள். அப்படிச் செல்பவர்களைப் பற்றி செய்திக் கதை எழுதுபவர் சமந்தா. அப்படிச் சென்ற ஒருவரை சந்தித்து செய்தி சேகரிக்கச் செல்கிறார். அவர் சென்று வந்த பின் அந்த நபர் கொலை செய்யப்படுகிறார். இதனால், சமந்தாவை விசாரணைக்கு அழைத்து விசாரிக்கிறார்கள். தன்னிடம் அது போல பத்து பேர் முகவரி இருக்கிறது என சமந்தா அவர்களது முகவரிகளைக் கொடுக்கிறார். அவர்கள் அனைவருமே இறந்திருப்பது போலீசுக்குத் தெரிய வருகிறது. இதன் பின்னணியில் என்னவோ இருக்கிறது என சமந்தா செய்தித் தேடலில் இறங்க, இன்ஸ்பெக்டர் ஆதி விசாரணத் தேடலில் இறங்குகிறார். அவர்கள் அந்த உண்மையைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதிக் கதை.

சமந்தா அவருடைய வழக்கமான கதாநாயகி கதாபாத்திரங்களிலிருந்து விலகி, அவருக்கான, அவருடைய நடிப்பை வேறு கண்ணோட்டத்தில் வெளிப்படுத்துவதற்கான ஒரு கதையை, கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடித்திருக்கிறார். கொஞ்சம் காதல் மட்டுமே படத்தில் இருக்கிறது. டூயட் கிடையாது, கிளாமர் உடை கிடையாது, சமந்தாவின் நடிப்பு மட்டுமே திரையை முழுமையாக ஆக்கிரமிக்கிறது. நான்கு ஹீரோ படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் ஐந்தாவதாக இப்படிப்பட்ட ஹீரோயினிசப் படங்களிலும் நடியுங்கள் சமந்தா. உங்களைப் போன்றவர்களின் இந்த முயற்சிகள்தான் வித்தியாசமான படங்களையும், இயக்குனர்களையும் இந்த சினிமாவுக்கு அடையாளம் காட்டும்.

இன்ஸ்பெக்டராக ஒரு இயல்பான, நேர்த்தியான கதாபாத்திரத்தில் அசத்துகிறார் ஆதி. மேலதிகாரியின் பேச்சைக் கேட்காமல் களத்தில் இறங்குவதிலும், மேலதிகாரி கோவித்துக் கொண்டாலும் அதை நாசூக்காகத் தவிர்ப்பதிலும், அப்பாவியான சமந்தா பாதிப்படையக் கூடாது என அக்கறை கொள்வதிலும் அவர் கதாபாத்திரம் மீது ஒரு தனி மரியாதையே வருகிறது.

சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரன். இருவரது சந்திப்புகளும், பேச்சுகளும் காதல் இருக்கிறது, ஆனால் இல்லை என்று சொல்ல வைக்கிறது. அதிலும் கேண்டீனில் அவர்கள் இருவரும் ஒருவரை மற்றவர் வாரி விடும் பேச்சு சுவாரசியம்.

காவல் துறை மேலதிகாரி ஆடுகளம் நரேன், பூமிகா, நரேன் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு.

கதையின் தன்மையை மீறாத ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவை படத்திற்குப் பலம் சேர்க்கின்றன.

சில கதாபாத்திரங்களின் பெயர்களை நாயக், சௌத்ரி என்று வைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அதற்குப் பதிலாக வேறு ஏதாவது தமிழ்ப் பெயர்களை வைத்திருக்கலாம். அது மட்டுமே படத்தில் அந்நியமாகத் தெரிகிறது. சென்னையில் நடக்கும் கதை என்று சொல்லிவிட்டு வேறு ஊரில் படமாக்கினாலும், அதை சென்னையைப் போன்று உணர வைத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த த்ரில்லர் படங்களில் யு டர்ன், ஒரு திருப்புமுனையை  ஏற்படுத்தும் படமாக அமையும் என்பது உறுதி.

Related Posts