Connect with us

Movie Reviews

வடசென்னை – விமர்சனம்

Published

on

vadachennai-review

தமிழ் சினிமாவில் வாழ்வியல் படங்கள் என்றாலே மதுரை, கோவை, நெல்லை ஆகிய வட்டாரப் படங்கள்தான் அதிகம் வரும். சென்னை என்று சொன்னாலே அது வடசென்னை பற்றிய படமாகத்தான் இருக்கும். தற்போதைய மத்திய சென்னை, தென் சென்னை ஆகியவை வடசென்னைக்குப் பிறகு உருவானவைதான்.

வடசென்னையை மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. அவை கொலை, ரத்தம் என்று வன்முறை அதிகம் சார்ந்த திரைப்படங்களாக மட்டுமே இருந்தன. மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படங்கள், அவர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் படங்கள் வந்தது குறைவுதான்.

இந்த ‘வடசென்னை’ படத்தை ஒரு வாழ்வியல் சார்ந்த படமாக, மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் படமாக இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்திருக்கிறார். ஆரம்பம் முதல் கடைசி வரை நாமும் வடசென்னைக்குள் நுழைந்துவிட்ட ஒரு உணர்வு ஏற்படுகிறது.

முதல் பாதியில் சிறைச்சாலையும், அவர்கள் வசிக்கும் பகுதியும் எது செட், எது நிஜம் என்று தெரியாத அளவிற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், கலை இயக்குனர் ஜாக்கி ஆகியோர் நம்மை அந்தப் பகுதிவாசியாகவே மாற்றிவிடுகிறார்கள்.

ஒரு வழக்கில் சிறைக்கு வருகிறார் தனுஷ். அவரை சிறைக்குள்ளிருக்கும் பவன் ஆட்கள் மிரட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். இதனால், பவனின் எதிர்கோஷ்டியான செந்தில் தயவு தனக்குக் கிடைத்தால் நல்லது என நினைக்கிறார் தனுஷ். கேரம் பிளேயரான தனுஷ், அதை வைத்தே கிஷோரை நெருங்கி நட்பு கொள்கிறார். சிறைக்குள் ஒரு நாள் நடக்கும் கேரம் போட்டியில் கிஷோரையே கொலை செய்ய முயற்சிக்கிறார். தனுஷால் குத்து வாங்கும் கிஷோர் நரம்பு பாதிக்கப்பட்டு பேசவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் பாதிக்கப்படுகிறார். தனுஷ் ஏன் கிஷோரைக் கொலை செய்ய முயற்சித்தார். அவர்களுக்குள் என்ன பகை என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கதையாகச் சொல்ல வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் யாரை வைத்து வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த அளவிற்கு படத்தில் உள்ள முக்கியக் கதாபாத்திரங்களுக்குள் கதையும், சம்பவங்களும் பின்னிப் பிணைந்திருக்கிறது.

கிஷோர், சமுத்திரக்கனி, பவன் அனைவருமே கடத்தல் தொழில் செய்யும் அமீரிடம் வேலை பார்த்தவர்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அமீரால் அவமானப்படுத்தப்பட அவரைக் கொலை செய்து மூவருமே பெரிய ஆளாகிறார்கள். அந்தக் கொலையாலேயே கிஷோரும், சமுத்திரக்கனியும் பிரிகிறார்கள். பவன், சமுத்திரக்கனியின் நண்பர். இவர்களுக்கும் தனுஷுக்கும் என்ன சம்பந்தம் என்பதும் படத்தின் சஸ்பென்ஸ்.

அன்பு என்ற கதாபாத்திரத்தில் தனுஷ். தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில் தனுஷ் எப்போதுமே தனிச் சிறப்புடன் இருப்பார். அது இந்தப் படத்தில் அதிகமாக இருக்கிறது. அப்படி என்றால் அவர் இந்தப் படத்தையும், அன்பு கதாபாத்திரத்தையும் எந்த அளவிற்கு நேசித்திருப்பார் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த முதல் பாகம் முழுவதும் அன்புவின் வளர்ச்சிதான் சொல்லப்பட்டிருக்கிறது, அன்புவின் எழுச்சியைப் பார்ப்பதற்கு இரண்டாம் பாகத்திற்காகக் காத்திருக்க வேண்டும். தாமதிக்காமல் சீக்கிரமே கொடுத்துவிடுங்கள்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் உருவாக்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பத்மா கதாபாத்திரத்தில் பத்து மடங்கு உயர்ந்து தெரிகிறார். வாயைத் திறந்தால் அசிங்கமான கெட்ட வார்த்தைதான் வருகிறது. அதிலும் படத்தின் துவக்கத்தில் அவர் சொல்லும் அந்த கெட்ட வார்த்தை சென்சாருக்கு எப்படி தப்பித்ததோ தெரியவில்லை. பாவாடை சட்டை, பாவாடை தாவணி, புடவை என ஐஸ்வர்யாவிற்கும் படத்தில் வளர்ச்சி உண்டு.

ஆன்ட்ரியாவை தமிழ் சினிமா அவ்வப்போது இப்படி பயன்படுத்திக் கொள்கிறதே என மகிழ்ச்சிதான். மேற்கத்திய பாணி நடிகையை வடசென்னைவாசியாகவே மாற்றிவிட்டார்கள். கணவனைப் பறி கொடுத்த ஆத்திரத்தை அவர் வெளிப்படுத்தும் விதம் மிரட்டல். இரண்டாம் பாகத்தில் ஆன்ட்ரியாவின் ஆவேசத்தை இன்னும் எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது.

கிஷோர், சமுத்திரக்கனி படத்தில் மட்டும் போட்டியாளர்கள் இல்லை, நடிப்பிலும் போட்டி போடுகிறார்கள். இவர்களுடன் கூடவே டேனியல் பாலாஜி, பவன், சுப்பிரமணிய சிவா, ராதாரவி என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான தேர்வும், அதில் அவர்களது நடிப்பும் அவ்வளவு யதார்த்தம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பின்னணி இசை படத்திற்கு தனி பலம். சென்னை வாசம் வீசும் கானா பாடல்கள் படத்தில் ஸ்பெஷல். கொஞ்சமாக வருவது மட்டும்தான் குறை.

சிறைச்சாலை, குப்பம் என இரண்டு இடங்களில்தான் படத்தின் கதை பெரும்பாலும் நகர்கிறது. தனித் தனியாக ஒவ்வொரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்ட விதம், அவற்றின் பின்னணி, அவற்றுக்கான சம்பந்தம் ஆகியவை திரைக்கதையில் அருமையான கோர்வையாக இணைக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்ட ஒரு சினிமாவாக இந்த ‘வடசென்னை’ தெரிகிறது. ரசிகர்களுக்கான படம் என்று சொல்வதைவிட ரசனைக்கான படம் என ‘வடசென்னை’ படத்தைக் கொண்டாடலாம்.

வடசென்னை – வரவேற்பு

Movie Reviews

தேவ் – விமர்சனம்

Published

on

dev-movie-review

ஒரு ஆக்ஷன் படம்னா ஆக்ஷன் இருக்கணும், சென்டிமென்ட் படம்னா சென்டிமென்ட் இருக்கணும், காதல் படம்னா காதல் இருக்கணும். இந்த ‘தேவ்’ படமும் ஒரு காதல் படம்தான். படம் முழுக்க நாயகனும், நாயகியும் காதலிச்சிட்டே இருக்கிற படம்.

காதல் படம்னாலே வில்லன்கள் கண்டிப்பா இருப்பாங்க. ஆனா, இந்தக் காதல் படத்துல வில்லனே கிடையாது. காதலுக்கு காதலிக்கிற நாயகிதான் கொஞ்சமே கொஞ்சமான வில்லி. அதுவும் அவங்க குணத்தால, சுயநலத்தால வர வில்லத்தனம்.

அழ வேண்டாம், அதிகமா சிரிக்க வேண்டாம், அப்படியே ஒரு டிராவல் பண்ற மாதிரி ஜாலியா ஒரு படம் பார்க்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.

ஊரைச் சுத்தறது, அதையும் பிடிச்ச மாதிரி ஜாலியா, சாகசம் பண்ணிக்கிட்டே சுத்தறது நாயகன் கார்த்திக்கு ரொம்பவே பிடிக்கும். கூடவே, தன் பிரண்ட்ஸ் விக்னேஷ், அம்ருதா அவங்களோடதான் சுத்துவாரு. சின்ன வயசுல இருந்தே அடிக்கடி ரொம்ப தொந்தரவு பண்றானே, அவனை எதுலயாவது சிக்க வைக்கணும்னு நினைக்கிற பிரண்ட் விக்னேஷ், காதல்ல சிக்க வச்சிடறாரு. பேஸ்புக் மூலமா யார் பத்துக்குள்ள முதல்ல வராங்களோ அவங்கதான் காதலின்னு பிரண்ட்ஸ் சொல்றாங்க. அப்படி வந்து நிக்கிறவங்கதான் ரகுல் ப்ரீத் சிங். அமெரிக்காவுல வசிக்கிற தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பிசினஸ் உமன். ரகுலைக் காதலிக்க வைக்க கார்த்தி என்ன பண்றாரு, அவங்க காதல் சேர்ந்துதா இல்லையாங்கறதுதான் இந்த ‘தேவ்’.

‘பையா’ படத்துக்கு அப்புறமா ஒரு ஜாலியான கேரக்டர்ல கார்த்தி. சிட்டியோ, வில்லேஜோ, பணக்காரனோ, ஏழையோ, மிடில் கிளாஸோ எல்லா கேரக்டர்லயும் தன்னை அழகா செட் பண்ணிக்கிறாரு கார்த்தி. இந்தப் படத்துல 20 காஸ்ட்லி பைக் சொந்தமா வச்சிருக்கிற ஒரு பணக்கார வீட்டுப் பையன். பைக்லயே மும்பை வரைக்கும் போய் காதலியைப் பார்த்து காதலை சொல்ற கேரக்டர். படிக்கிறதுக்கும் நல்லா இருக்கு, கார்த்தி பண்றதும் நல்லா இருக்கு. ஆனால், கார்த்தியோட நடிப்புக்கு இயக்குனர் ரஜத் இன்னும் தீனி போட்டிருக்கலாம்.

ரகுல் ப்ரீத் சிங், பார்த்ததுமே ஒரு திமிரான பொண்ணுன்னு சொல்ற மாதிரிதான் இருக்காங்க. அவங்க கண்கள்தான் கார்த்தியை காதல்ல விழ வைக்குதுன்னு சீன் வச்சிருக்காங்க. காதலி என்பதையும் மீறி படம் முழுவதும் அவரை பிசினஸ் உமனாக மட்டுமே பார்க்க முடிகிறது. அந்தக் கேரக்டரில் அப்படியே மூழ்கி விட்டார் போலிருக்கிறது. காதலியாக காதலிலும் கொஞ்சம் மூழ்கியிருக்கலாம்.

தமிழ் சினிமாவில், நாயகனுக்கு பிரண்டாக ஒரு பெண்ணை நடிக்க வைத்து மச்சி, மச்சான் என அழைக்க வைத்த முதல் படமாக இதுதான் இருக்கும். அவ்வளவு நெருக்கமான தோழியாக அம்ருதா, அப்படியே கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். இப்படிப்பட்ட பிரண்ட் தான் பல இளைஞர்களின் கனவாகவும் இருக்கிறது. விக்னேஷ் போன்ற நண்பர்களும் பலருடைய வாழ்வில் உண்டு. ஆனால், படத்தில் விக்னேஷ் சிரிக்க வைப்பார் என்று பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றமே.

கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ் ராஜ், ரகுலின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன். இந்தக் காலத்து அப்பா, அம்மா. தங்கள் பிள்ளைகளின் விருப்பமே தங்கள் விருப்பம் என நினைப்பவர்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘அனங்கே…’ பாடலின் வரிகளும், குரல்களும் இனிமை. இந்தப் பாடலும், மற்ற பாடல்களும் கேட்ட உடனேயே ஹாரிஸ் இசை என்று எளிதில் சொல்லிவிடலாம். காதலைக் குழைத்து இன்னும் சில பாடல்களை அமைத்திருக்கலாம்.

வேல்ராஜின் ஒளிப்பதிவுக்கு நிறைய காட்சிகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். சூரியன் உதிப்பதும், எவரெஸ்ட் உயரமும், வெளிநாட்டு சாலைகளும் படத்திற்கு வேறு ஒரு கலரைக் கொடுக்கின்றன.

பிரிந்தால்தான் காதலும் சேரும் என்பதுதான் இன்றைய 2019 தேவ் காதல்.

Continue Reading

Movie Reviews

கோகோ மாக்கோ – விமர்சனம்

Published

on

goka-mako-review

டிஜிட்டல் வளர்ச்சி வந்த பிறகு திரைப்படத்திற்கென இருந்த இலக்கணம் இல்லாமல் போய்விட்டது. பல புதியவர்கள் அவர்கள் எழுதும் சாதாரண கதையைக் கூட திரைப்படங்களாக வெளியிடுகிறார்கள்.

அவற்றில் சில வித்தியாசமாக அமைகின்றன. சில படங்கள் இன்னும் கூடுதலாக விஷயங்களைச் சேர்த்திருக்கலாம் என எண்ண வைக்கின்றன.

இந்த ‘கோகோ மாக்கோ’ என்றால் என்ன அர்த்தம் என்று கூட தெரியவில்லை. ‘கோக்கு மாக்காக’ செய்வதைத்தான் படத்தின் தலைப்பாக வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

தலைப்பில் வைத்த நகைச்சுவை உணர்வை படம் முழுவதும் வைத்திருந்தால் ஒரு நகைச்சுவைப் படத்தை ரசித்த திருப்தியாவது இருந்திருக்கும்.

இசையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு இளம் இசையமைப்பாளரின் ஆல்பத்தை ஒரு இசை நிறுவனம் வெளியிட சம்மதிக்கிறது. அதற்காக மியூசிக் வீடியோ ஒன்றைத் தயார் செய்ய முடிவு செய்கிறார். சாலைப் பயணம் மேற்கொள்ளும் ஒரு காதல் ஜோடியின் பயணத்தை அவர்களுக்கே தெரியாமல் கேமரா வைத்து எடுத்து அதை வீடியோ ஆல்பமாக உருவாக்குகிறார்கள். அந்த ஆல்பம் வெளியானதா, காதல் ஜோடியின் சாலைப் பயணம் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

படம் முழுவதையும் ‘கோ-ப்ரோ’ கேமராவில் எடுத்திருக்கிறார்கள். இளம் காதல் ஜோடியாக நடித்திருப்பவர்கள் நிஜக் காதல் ஜோடி போலவே யதார்த்தமாய நடித்திருக்கிறார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து படம் எடுக்கும் சாம்ஸ் மற்றும் அவரது உதவியாளர் காமெடி என்ற பெயரில் நம் பொறுமையை சோதிக்கிறார்கள்.

இசையமைப்பாளர், படத் தொகுப்பாளர் என நண்பர்களாக நடிப்பவர்கள் கூட ஓரளவிற்கு சிரிக்க வைக்கிறார்கள். ஆனால், அவர்களது நடிப்பு நாடகத்தனமாக உள்ளது.

சீனியர் நடிகர்களான ஒய்ஜி மகேந்திரா, சந்தான பாரதி, டெல்லி கணேஷ், அஜய் ரத்தினம் ஆகியோர்தான் படத்தில் தெரிந்த முகங்கள்.

ஒன்றரை மணி நேரத்தில் படத்தை முடித்துவிட்டார்கள். டெக்னிக்கலாக புதிய முயற்சி என்பதால் பாராட்டலாம். கூடவே கதை, திரைக்கதை ஆகியவற்றை திரைப்படத்திற்காக யோசிக்காமல் ஒரு குறும்பட அளவில் யோசித்திருக்கிறார்கள். அடுத்த படத்தில் சரி செய்து கொள்வது நல்லது.

Continue Reading

Movie Reviews

தில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்

Published

on

dhillukku-dhudu-2-review

தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களும், நகைச்சுவைக் காட்சிகளும் நிறையக் குறைந்துவிட்டது என்று வருத்தப்படும் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்டுள்ள படம்தான் ‘தில்லுக்கு துட்டு 2’.

இப்படி சிரித்து எவ்வளவு நாளாயிற்று என்று படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகர்கள் கண்டிப்பாகச் சொல்வார்கள். ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பழைய சந்தானத்தைப் பார்ப்பது எவ்வளவு ஆறுதல்.

சந்தானத்தின் காமெடி சரவெடி ஒவ்வொரு காட்சியிலும் இருக்கிறது. படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வசனம் வரை சந்தானத்தின் காமெடி சரக்கு நமக்கு நிச்சயம் போதையை ஏற்படுத்தும். படத்தில் அடிக்கடி சந்தானம் சரக்கடித்துக் கொண்டிருந்தாலும் காமெடி சரக்கில் அவர் எந்தக் குறையும் வைக்கவில்லை. குடிக்கும் காட்சிகளை படங்களில் குறைத்துக் கொள்வது அனைவருக்கும் நல்லது.

இயக்குனர் ராம்பாலா ‘தில்லுக்கு துட்டு’ படத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் கூடுதலாக நகைச்சுவைக் காட்சிகளை வைத்திருக்கிறார். சில படங்களைப் பார்க்கும் போது எப்போது முடியும் என்று இருக்கும். ஆனால், இந்தப் படம் முடியும் போது, அடடா..அதற்குள் முடித்துவிட்டார்களே, இன்னும் கொஞ்ச நேரம் சிரிக்க வைத்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது. அது இயக்குனருக்குக் கிடைத்த வெற்றி.

தான் நாயகனாக நடிப்பதற்குரிய இப்படிப்பட்டக் கதைகளைத் தேடிப் பிடித்து நடிப்பதுதான் சந்தானத்திற்கு சிறப்பு. மற்ற படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தப் படத்தை ஆரம்பித்து சீக்கிரமே முடித்து வெளியிட்டு இந்தப் புது வருடத்தில் புது வெற்றியுடன் ஆரம்பித்துவிட்டார். வருடத்திற்கு இப்படி மூன்று படங்களிலாவது நடித்து மக்களை மகிழ்ச்சியடைய வையுங்கள் சந்தானம், புண்ணியமாப் போகும்.

நாயகியாக ஷ்ரிதா சிவதாஸ். கேரள தேசத்துப் பெண்கள் என்றாலே தமிழக இளைஞர்களுக்கு ஒரு கிறக்கம் வந்துவிடும். அந்த அளவிற்கு இந்தப் படத்திலும் சிரித்த முகத்துடன், குடும்பக் குத்து விளக்காக நம்மைக் கவர்கிறார் ஷ்ரிதா.

ஷ்ரிதா சந்தானத்தின் காதல் ஜோடி என்றால், நான் கடவுள் ராஜேந்திரன் காமெடி ஜோடியாக கலக்குகிறார். இரண்டு பேரும் படம் முழுவதும் இணை பிரியாமல் இருக்கிறார்கள். கவுண்டமணி, செந்தில் ஜோடி போல இந்த சந்தானம், ராஜேந்திரன் காமெடி ஜோடி கலக்குகிறது.

ஊர்வசி, பிபின், சிவசங்கர், டி.எம். கார்த்திக், பிரசாந்த் ராஜ் ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து கூடுதல் சிரிப்பை வரவழைக்கிறார்கள்.

ஷபிர் இசையில் ‘மவனே யாரு கிட்ட’ லோக்கல் பாடலாகவும், ’காத்தாடி போல’ பாடல் மெலடியாகவும் ஒலிக்கிறது.

பேய்ப் படம் என்பதால் எந்த லாஜிக்கையும் பார்க்கத் தேவையில்லை. காமெடிப் படமாக இருந்தாலும் ஏமாற்றும் சாமியார்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது படம்.

இரண்டு மணி நேரம் சிரித்து ரசிக்க வேண்டும் என்றால் துட்டு செலவாகிறது என்று பார்க்காமல் ‘தில்லுக்கு துட்டு 2’ போகலாம். தியேட்டரில் சிரித்து விட்டு வந்தால் உடலுக்கும், மனதுக்கும் நல்லது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

No feed items found.

Trending