January 22, 2019

விளையாட்டு ஆரம்பம் விமர்சனம்

சினிமாவுக்காக எதை வேண்டுமானாலும் கதையாக எழுதிவிடலாம். ஆனால், அதை எப்படி விறுவிறுப்புடன் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொள்வார்கள்.

‘விளையாட்டு ஆரம்பம்’ என அற்புதமான டைட்டிலை வைத்துவிட்டு, அதிகமாக விளையாடாமல் கொஞ்சமாக விளையாடியிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாக அமைந்திருக்கும்.

யுவன் அவருடைய நண்பர்கள் சிலருக்கு கால் சென்டர் வேலை போய்விட்டதால் நண்பர்களுடன் சேர்ந்து எம்எல்எம் வியாபாரத்தில் ஈடுபடுகிறார் யுவன். அவருக்கும் மத்திய மந்திரியின் மகள் ஸ்ராவியாவுக்கும் காதல். ஆனால், யுவனைக் கண்டால் ஸ்ராவியன் அண்ணனான ஏ.சி. ரியாஸ்கானுக்கும் பிடிக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் எம்எல்எம் வியாபாரத்தில் தில்லு முல்லு செய்ததாகக் யுவனை சிறையில் தள்ளி விடுகிறார்கள். அதிலிருந்து அவர் மீண்டாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

‘சாட்டை’ படத்திற்குப் பிறகு யுவன் பல படங்களில் நடித்திருந்தாலும் ‘சாட்டை’ படம் போன்ற கதாபாத்திரமும், கதையும் அவருக்கு அமையவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தில் கதாபாத்திரமும், கதையும் வலுவாக அமைந்திருக்கிறது. ஆனால், திரைக்கதையில் இன்னும் வெயிட்டான சில விஷயங்களைச் சேர்த்திருந்தால் யுவனும் விளையாடி இருந்திருப்பாரோ என்று யோசிக்க வைக்கிறது.

ஸ்ராவியாவின் இரண்டு கண்களே அதிகம் நடித்து விடுகிறது. படத்தின் மெயின் வில்லன் ரியாஸ் கான். படம் முழுவதும் யுவனுடன் முறைத்துக் கொண்டேயிருக்கிறார்.

எம்எல்எம் வியாபாரம் என்றாலே அது பொதுமக்களை ஏமாற்றும் ஒன்று என்றுதான் மக்களிடம் அதிகம் பரவியிருக்கிறது. ஆனால், இந்தப் படத்தில் அது மக்களை அதிகமாகவே காப்பாற்றும் என்று ஆதரவுப் படமாக எடுத்திருக்கிறார்கள்.

திடீரென தேசப்பற்றுப் பாடல் எல்லாம் படத்தில் ஒளி,ஒலிக்கிறது. எம்எல்எம் வியாபாரம் என்றால் என்ன, அது மக்களை எப்படி ஏமாற்றுகிறது, அல்லது எப்படி பணம் சம்பாதிக்க வைக்கிறது என்பதையெல்லாம் கொஞ்சம் விவரமாகக் காட்டியிருந்தால் மக்களுக்கு இன்னும் புரிந்திருக்கும்.

Related Posts