Connect with us

Reviews

என்னமோ நடக்குது – விமர்சனம்

Published

on

Yennamo Nadakkuthu_00010

எதிர்பார்ப்பு…. தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் பேசப்படும் ஒரு வார்த்தை. சில படங்களை எதிர்பார்த்து போய் பார்த்து ஏமாந்து விடுவோம். சில படங்களை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் பார்த்து அதிகம் ரசிப்போம். இந்த ‘என்னமோ நடக்குது’ இதில் இரண்டாம் வகை.

‘என்னமோ நடக்குது’ என்ற தலைப்பே என்பதே ஏதோ ஒரு விறு விறுப்பான த்ரில்லர் படமாக இருக்கும் என்று மட்டுமே படம் பார்க்கச் செல்லும் முன் நம்மால் ஊகிக்க முடிந்த ஒரு விஷயமாக இருக்கும். மற்றபடி திரையரங்கிற்குள் நுழைந்து படத்தைப் பார்க்க ஆரம்பித்ததும், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது எந்த விதத்திலும் சொல்ல முடியாத ஒன்றாகவே அமைந்திருக்கிறது.

அறிமுக இயக்குனர் ராஜபாண்டி முதல் படத்திலேயே அவரைப் பற்றி பேச வைத்து விட்டார். சுவாரசியமான கதை, விறுவிறுப்பான திரைக்கதை, நடிகர்களுக்காக கதாபாத்திரங்களா, கதாபாத்திரங்களுக்காக நடிகர்களா என யோசிக்க வைக்கும் அளவிற்கு சரியான தேர்வு, தேவையற்ற காட்சிகள் இப்படி எதுவும் இல்லாமல் தெளிவான ஒரு படத்தைக் கொடுத்து நடப்பதை ‘என்னமோ’….என காட்டாமல் நன்றாகக் காட்டியிருக்கிறார்.

போஸ்டர் ஒட்டும் கான்டிராக்ட் வேலையைச் செய்பவர் விஜய் வசந்த். இவருக்கும் நர்ஸாக இருக்கும் மஹிமாவுக்கும் காதல். கனடாவிற்குச் சென்று மேல் படிப்பு படிக்க நினைக்கும் மஹிமாவுக்காக அவரது அப்பா வட்டிக்குக் கடனாக வாங்கி கட்டிய 5 லட்ச ரூபாய் பணம், ஏஜண்டால் ஏமாற்றப்படுகிறது. கடன் கொடுத்தவர் பணத்தைக் கேட்டு மிரட்டல் விடுக்கிறார். காதலிக்காக விஜய் வசந்த் பணத்தை புரட்டுவதற்காக, வில்லன் ரகுமானுக்காக சில பணப் பரிமாற்ற வேலைகளைச் செய்கிறார். அப்போது 10 கோடி ரூபாய் பணத்தை விஜய் வசந்திடமிருந்து யாரோ கொள்ளை அடித்து விட, விஜய் வசந்தை ரகுமான் மிரட்டுகிறார். காதலியைக் காப்பாற்றிக் கொள்ளவும், தன்னையும் காப்பாற்றிக் கொள்ளவும் விஜய் வசந்த் என்ன செய்கிறார் என்பதே படத்தின் மீதி கதை.

விஜய் வசந்த், இதற்கு முன் சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், இந்த படத்தின் கதையும், கதாபாத்திரமும் அவருக்காகவே உருவாக்கப்பட்டது போல தன்னை படத்துடன் ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார். பெரிய ஹீரோக்கள் பண்ண வேண்டிய ஒரு ஹீரோயிசமான கதையில் விஜய் வசந்தைப் பொருத்திப் பார்த்த இயக்குனரை அதிகம் பாராட்ட வேண்டும். இயக்குனரின் நம்பிக்கையை துளி கூட வீணாக்காமல் அந்த கதாபாத்திரத்திற்காக நியாயமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் வசந்த்.

‘சாட்டை’ படத்தில் ஹீரோயினாக நடித்தவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார். நடிப்பு, அழகு இரண்டிலுமே பெரிய முன்னேற்றம் தெரிகிறது. ஒரு ‘லோக்கல்’ பையனான விஜய் வசந்த், தன்னைச் சுற்றி வருவதை விரும்பாதவர், கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது காதல் கொள்வது யதார்த்தமாக வெளிப்பட்டுள்ளது. தொடர்ந்து நல்ல படங்களையே தேர்வு செய்து நடித்தால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வருவார் மஹிமா.

விறுவிறுப்பான த்ரில்லர் படமாக இருந்தாலும் படத்தை இடைவேளை வரை தாங்கிப் பிடிப்பவர்களில் சரண்யா முக்கியமானவர். சென்னைத் தமிழைப் பேசி அப்படியே அந்த கதாபாத்திரத்தை நம் கண்முன் நிறுத்தி விடுகிறார். அது எப்படி அவர்களுக்கு மட்டும் எல்லாவிதமான அம்மா கதாபாத்திரங்களும் அம்சமாகப் பொருந்திப் போகிறது எனத் தெரியவில்லை. ஆனாலும், விஜய் வசந்த் அம்மாவான இவரை அடிப்பதும், எட்டி உதைப்பதும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. யதார்த்தமாக சொல்கிறோம் என்பதற்காக இப்படிப்பட்ட காட்சிகளை வைத்திருப்பதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.

படத்தின் மெயின் வில்லனாக அடியாளாக இருந்து அரசியல்வாதியாக மாறும் ரகுமான். இவருக்கு உதவியாளராக தம்பி ராமையா. இவர்களது கூட்டாளியாக சுகன்யா. இவர்கள் செய்யும் வங்கி சம்பந்தமான பணப் பரிமாற்ற வித்தைகள் பலருக்குத் தெரியாத ஒன்று. அடப்பாவிகளா….? என ஆச்சரியப்பட வைக்கிறார்கள்.

இடைவேளைக்குப் பிறகே பிரபு வந்தாலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்திற்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. ‘கும்கி’ அஸ்வின், நமோ நாராயணன், வின்சென்ட் அசோகன், அழகம்பெருமாள் இவர்களும் படத்தில் இருக்கிறார்கள்.

பிரேம்ஜி அமரன் பின்னணி இசையில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார். நல்ல படம் அமைந்தால்தான் நல்ல பெயரும் கிடைக்கும். இந்த படத்தில் பிரேஜிக்கு அந்தப் பெயர் கிடைத்திருக்கிறது. ‘ஓரக்கண்ண சாச்சு…நீ, மீச கொக்கு….’ பாடல்கள் ரசிக்க வைத்துள்ளன.

ஜி.ராதாகிருஷ்ணனின் வசனம் பல இடங்களில் கைதட்டலைப் பெறுகிறது. குறிப்பாக “என் கடனைக் கொடுக்கிறதுக்கு அஜித்தை ஏண்டா அடகு வைக்கிற” என நமோ நாராயணன் பேசும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது.

ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவும், பிரவீண் – ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் இயக்குனருக்கு பக்கபலமாக அமைந்துள்ளன.

இடைவேளைக்குப் பின்னர் வழக்கமான ‘பழி வாங்கும்’ கமர்ஷியல் சினிமாவாக பயணிக்க ஆரம்பித்ததை தவிர்த்திருக்கலாம். ஒரு சீரியசான த்ரில்லரில், கடைசி நேர ட்விஸ்ட்டுக்காக ‘சினிமா துப்பாக்கி’ என ‘என்னென்னமோ’ நடத்தி விட்டார்  இயக்குனர். இருந்தாலும் இயக்குனர் ராஜ பாண்டியை இந்த படம் தமிழ்த் திரையுலகில் ராஜ நடை போட வைக்கும்.

என்னமோ நடக்குது – நல்லதே நடக்கும்…

 

Uncategorized

அயோக்யா – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 3.5/5

Published

on

அயோக்யா - விமர்சனம் - 4 Tamil Cinema

வெங்கட் மோகன் இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில், விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் ‘அயோக்யா’.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமையைப் பற்றியும், அதற்கான உடனடித் தீர்வையும் சொல்லும் படம். தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘டெம்பர்’ படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். ஒரிஜனல் படத்தில் உள்ள கிளைமாக்சை மட்டும் மாற்றியிருக்கிறார்கள்.

அயோக்கியத்தனமாக செயல்படும் ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணுக்காக எப்படி மிக மிக யோக்கியத்தனமாக மாறுகிறார் என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை.

விஷால் ஒரு அனாதை. போலீசார்தான் அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்கள் நினைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என சிறு வயதிலேயே அவர் மனதில் ஆழமாகப் பதிகிறது. பொய் சான்றிதழ் கொடுத்து இன்ஸ்பெக்டர் ஆகவும் ஆகிறார். சென்னையில் பல கடத்தல் வேலைகளைச் செய்யும் பார்த்திபன் அவருடைய தொழிலுக்கு தொந்தரவு செய்யாத இன்ஸ்பெக்டர் வேண்டும் என்பதற்காக அவருடைய ஏரியாவில் விஷாலை வேலைக்கு மாற்றிக் கொண்டு வருகிறார்.

பார்த்திபனுக்காக செய்யும் வேலைகளுக்கு பதிலுக்கு தன் பல தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார் விஷால். ஆனால், ஒரு பெண் கொலை வழக்கில் பார்த்திபனுக்கும், விஷாலுக்கும் பிரச்சினை வருகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஆக்ஷன் ஹீரோ கதாபாத்திரம் என்றால் கேட்கவே வேண்டாம். விஷால் வெளுத்து வாங்குகிறார். அயோக்கியத்தனம் செய்யும் ஒருவன் இப்படித்தான் இருப்பான் என யாரையும் மதிக்காமல் சுற்றி வருகீறார். அப்படிப்பட்டவரை காதலும், ஒரு பெண்ணின் கொலையும் மாற்றுகிறது. கிளைமாக்சை தன் இமேஜுக்காகவே விஷால் மாற்றியிருப்பார் போலிருக்கிறது. நெகிழ வைக்கும் கிளைமாக்ஸ்தான் என்றாலும் நம்பவே முடியாத ஒரு கிளைமாக்ஸ்.

‘நானும் ரௌடிதான்’ படத்திற்குப் பிறகு பார்த்திபனின் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது. விஷாலை அசால்ட்டாக ஹேண்டில் செய்கிறார். இருவருக்குமிடையிலான வசன சண்டை ரசிக்க வைக்கிறது.

ராஷி கண்ணா விஷாலின் காதலியாக அழகுப் பதுமையாக வந்து போகிறார். கே.எஸ்.ரவிக்குமாரின் கதாபாத்திரமும் அதில் அவருடைய நடிப்பும் போலீஸ் மீதான மரியாதையை இன்னும் அதிகமாக்குகிறது.

சாமி சிஎஸ் பின்னணி இசையில் அசத்துகிறார். ஒளிப்பதிவும், சண்டைக் காட்சிகளும் படத்திற்கு பக்கபலம்.

பக்காவான கமர்ஷியல் படத்தை சில லாஜிக் மீறல்களுடன் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் மோகன்.

அயோக்யா – ஆக்ஷன் படம்யா…

Continue Reading

Movie Reviews

கீ – விமர்சனம்

4TamilCinema – Rating – 3/5

Published

on

கீ விமர்சனம் - 4 Tamil Cinema

காளீஸ் இயக்கத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், ஜீவா, நிக்கி கல்ரானி, அனைகா சோதி, கோவிந்த் பத்மசூர்யா, ஆர் ஜோ பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘கீ’.

சைபர் கிரைம் பற்றிய ஒரு படம். நமது மொபைல் போன்களை ஹேக்கர்கள் யார் வேண்டுமானாலும் ஹேக் செய்து நம் ரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாம் என அதிர்ச்சியான கதையைக் கொண்ட படம்.

பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நாம் பதிவிடும் அனைத்துமே எந்த ரகசியமும், ஒளிவு மறைவும் இல்லாமல் யார், யாருக்கோ பரப்பி வைக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி நம்மைப் பற்றி பரவும் விஷயங்கள் சமயங்களில் நமக்கு எதிராகவே திரும்பும் என்பதையும் அதிர்ச்சிகரமான உண்மையுடன் சொல்லியிருக்கும் படம்தான் கீ.

இந்தப் படத்தை டெக்னாலஜி படமாக மட்டும் சொல்லாமல் காமெடி, காதல், சென்டிமென்ட் என சேர்த்து சொல்ல இயக்குனர் ஆசைப்பட்டதால் மெயின் கதையிலிருந்து படம் கொஞ்சம் நகர்ந்து சுவாரசியத்தைக் கொஞ்சம் குறைக்க வைக்கிறது.

ஜீவா ஒரு ஜாலியான கல்லூரி மாணவர். எந்தவிதமான கம்ப்யூட்டரையும், மொபைல் போனையும் அவருடைய ‘பாட்ஷா’ வைரசால் ஹேக் செய்துவிடுவார். அவருடைய தோழியாகப் பழக ஆரம்பிக்கும் அனைகாவின் கொலைக்குப் பிறகு அவருக்கும் ஹேக் செய்து பணம் சம்பாதிப்பதையே தொழிலாக வைத்திருக்கம் கோவிந்த் பத்மசூர்யாவுக்கும் இடையே மோதல் வருகிறது. பத்மசூர்யா சம்பந்தப்பட்ட ரகசியத்தை ஜீவா வைத்திருக்கிறார். அதைக் கைப்பற்ற பத்மசூர்யா துடிக்கிறார். இதன் பின்ன என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

ஒரு வழக்கமான இளம் நாயகன் கதாபாத்திரத்தில் ஜீவா. ஜாலியாக நடித்துவிட்டுப் போகிறார். காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் அவர் கதாபாத்திரத்தில் வைத்துவிட்டார் இயக்குனர். இந்தக் கதைக்கு முற்றிலும் ஆக்ஷன் சம்பந்தமாகவே வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

நிக்கிக்கு அவ்வளவாக வாய்ப்பில்லை. ஜீவாவின் பெற்றோர்களாக ராஜேந்திர பிரசாத், சுகாசினி சென்டிமென்ட்டில் நனைய வைக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்.

விஷால் சந்திரசேகரின் இசையில் பின்னணி இசை ஓகே. பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

இந்தக் காலத்திற்கேற்ற வித்தியாசமான கதை. அதை இன்னும் சுவாரசியமாக ஆக்ஷனுடன் சொல்லியிருந்தால் பெரிய த்ரில்லர் படமாக அமைந்திருக்கும்.

கீ – இன்னும் கொடுத்திருக்கலாம்.

Continue Reading

Movie Reviews

மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்

Published

on

மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்

காதலித்தவர்கள், காதலில் ஊறியவர்களால் மட்டுமே ஒரு சிறந்த காதல் படத்தைக் கொடுக்க முடியும். இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தை, சினிமா மீது ரசனையான காதல் கொண்ட அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரன் இயக்கியிருக்கிறார்.

இளையராஜா இசையமைத்த படங்களில் கூட அவருடைய பாடல்களை திரும்பத் திரும்ப இந்த அளவிற்குப் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், இந்தப் படத்தில் இளையாராஜாவின் பாடல்கள் நமக்கு ஒரு கதாபாத்திரமாகவே உள்ளுக்குள் இறங்கிவிடுகின்றன.

1989ல் வெளிவந்த ‘இதயத்தை திருடாதே’ படத்தில் இடம் பெற்ற ‘ஓ பாப்பா லாலி’ பாடலை 30 வருடங்கள் கழித்து இந்த 2019ல் திரையில் மீண்டும் கேட்டாலும் ஏதோ நேற்று வெளிவந்த ஒரு பாடல் போலவே ஒலிக்கிறது. அந்த அளவிற்கு காட்சிகளுக்குத் தகுந்தபடி இளையராஜாவின் பாடல்களை இந்தப் படத்தில் ஆங்காங்கே பயன்படுத்தியிருப்பது இயக்குனரின் ரசனையை வெளிக்காட்டுகிறது.

சாதி வெறி பிடித்த மாரிமுத்துவின் மகன் ரங்கராஜ், கொடைக்கானலில் ராஜகீதம் என்ற பெயரில் சினிமா பாடல்களை ரெக்கார்டிங் செய்து தரும் கடையை நடத்துகிறார். அந்த ஊரில் சர்க்கஸ் நடத்த வரும் வட இந்தியப் பெண்ணான ஸ்வேதா திரிபாதியின் அழகு ரங்கராஜை காதலில் வீழ்த்துகிறது. சிலபல சந்திப்புகளுக்குப் பின் காதலர்கள் ஆகிறார்கள் ரங்கராஜ், ஸ்வேதா. இவர்கள் காதல் மாரிமுத்துவுக்குத் தெரியவர, ஓடிப் போன காதலர்களைக் கண்டு பிடித்து மீண்டும் ஊருக்கு அழைத்து வந்து இருவரையும் பிரித்து வைக்கிறார். ஸ்வேதாவின் சர்க்கஸ் கூட்டம் அந்த ஊரை விட்டே கிளம்புகிறது. காதலர்கள் பிரிகிறார்கள். 20 வருடங்களுக்குப் பிறகு ஸ்வேதாவின் மகள், தன் அம்மாவின் காதலன் ரங்கராஜைத் தேடி கொடைக்கானல் வருகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

காதல் கதை என்றாலே அதில் புதுமுகங்கள் நடித்தாலும், காதலை சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் அவர்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதை இயக்குனர் சரியான கதாபாத்திரங்களாக வடிவமைத்து, காதலையும் சொல்லியிருப்பதால் ரங்கராஜ், ஸ்வேதா இருவருமே புதுமுகங்கள் என்பதையும் மீறி நம் மனதில் இடம் பிடிக்கிறார்கள். அதிலும், ஸ்வேதாவின் கள்ளம் கபடமற்ற சிரிப்பு அடிக்கடி கண்முன் வந்து போகிறது.

படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் கூட பொருத்தமான தேர்வு. ரங்கராஜ் அப்பா மாரிமுத்து, ஸ்வேதாவின் அப்பா சன்னி சார்லஸ், கணவர் ஜாதவ், பாதிரியார் வேல ராமமூர்த்தி, நண்பன் ஆர்ஜே விக்னேஷ் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு.

இளையராஜாவின் பாடல்கள் படத்தில் அடிக்கடி ஒலிப்பதால், அவற்றையும் மீறி சிறந்த பாடல்களைக் கொடுக்க வேண்டும் என ஷான் ரோல்டன் உழைத்திருக்கிறார். பின்னணி இசையில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவில் கொடைக்கானல் அழகு அற்புதம்.

காதல் உணர்வை இன்னும் உள்ளுக்குள் இறக்கும்படியான காட்சிகளை வைத்திருக்கலாமோ என்று மட்டும் படம் முடிந்த பின் நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. கதாபாத்திரங்கள், கதைக் களம் ஆகியவற்றில் செலுத்திய கவனத்தை, திரைக்கதையில் இன்னும் செதுக்கியிருக்கலாம் என்பது மட்டுமே சிறு குறையாகத் தெரிகிறது.

ஆனாலும், கைகளுக்கு அழகு மெஹந்தி, காதலுக்கு அழகு இந்த மெஹந்தி சர்க்கஸ்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!