Connect with us

Tamil Cinema News

சினிமா ஒரு துப்பாக்கி போல…. – சீமான்

Published

on

ameera-movie-seeman-speech

தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’.

சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

சீமானிடம் உதவியாளராகப் பணியாற்றிய இரா. சுப்ரமணியன் இயக்கும் இந்தப் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார், செழியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

‘அமீரா’ படத்தின் பூஜை நேற்று சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா உள்ளிட்ட படக்குழுவினருடன், சிறப்பு விருந்தினர்களாக வைரமுத்து, இயக்குநர்கள் அமீர், மீரா கதிரவன், ஜெகன்னாத், ’டோரா’ தாஸ், கேபிள் ஷங்கர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

படம் பற்றி நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும் போது,

“ஒரு நேர்த்தியான படத்தில் நானும் இருக்கிறேன் என நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. அதிலும் அண்ணன் சீமானுடன் இணைந்து நடிக்கிறோம் என்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். இந்த படத்தில் உண்மையிலேயே கதாநாயகன் என்றால் அது நாயகி அனு சித்தாரா தான்,” என்றார்.

சீமான் பேசுகையில்,

“இது தமிழ் தலைப்பு அல்ல தான். ஆனால் இஸ்லாமிய பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை. அதனால் அமீரா எனப் பெயர் வைத்துள்ளோம்.

அமீரா என்றால் இளவரசி என அர்த்தம். அமீரா தான் மையக்கரு. நாங்கள் இருவரும் அவரை நோக்கி செல்லும் கதாபாத்திரங்கள்தான். அதே சமயம் கதையின் ஒவ்வொரு அடுக்கிலும் விறுவிறுப்பும் வேகமும் எதிர்பார்ப்பும் அதிகரிக்கவே செய்யும்.

அரசியலை கவனிக்காமல் அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் படத்தில் நாட்களை செலவிடுகிறீர்களே என்கிறார்கள். எனக்கு இருபது நாள்தான் படப்பிடிப்பு இருக்கிறது. மற்றவர்கள் கூட்டணி அமைக்க நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த நேரம் எனக்கு மிச்சம் என்பதால் அதை நான் படப்பிடிப்பிற்கு செலவிடுகிறேன், அவ்வளவுதான்.

சமூக அவலங்கள், பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகள், ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்படுகிறது. இஸ்லாம் தீவிரவாதம் என்பது ஒரு கட்டுக்கதை. இந்து, கிறிஸ்து, பௌத்தம் என எல்லா மதங்களிலும் தீவிரவாதம் உண்டு. அதேசமயம் எல்லா மதங்களும் நன்னெறியைத் தான் போதிக்கின்றன. இது ஒரு சமூக அக்கறை உள்ள படம். இன்றைய சூழலில் குடும்ப உறவுகளைச் சொல்வதே ஒரு சமூக அக்கறைதானே..?

திரையில் தோன்றுவது எவ்வளவு அவசியம் என்று இயக்குநர்கள் மணிவண்ணன், பாரதிராஜா ஆகியோர் எனக்கு போதித்துள்ளார்கள். படங்கள் இயக்கினாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் ஒரு நடிகனாகத்தான் நம்மை சட்டென அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அதற்காக எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்துவிட முடியாது.

எனக்கேற்ற கதாபாத்திரங்கள், அதன் மூலம் நாம் சொல்ல விரும்பும் விஷயங்கள் சரியாக அமைந்தால் நடிப்பதில் தவறில்லை. திரையுலகத்தை நாங்கள் ஒரு வலிமை மிக்க கருவியாகப் பார்க்கிறோம். அது வெறும் பொழுதுபோக்கு சாதனம் அல்ல. திரைக்கலை என்பது ஒரு தீக்குச்சி போல, இதை நீங்கள் என்னவாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் முக்கியம். பொழுதுபோக்கு படங்களில் நடிப்பதற்கு என்னை அழைக்கவும் மாட்டார்கள். நான் அதற்கு தேவைப்படவும் மாட்டேன்.

நடிகர்கள் நாடாளக்கூடாது என்று சொல்லும் சீமான், திரைத்துறையில் இருந்துதானே வந்திருக்கிறார் என பலரும் கேட்கிறார்கள். நான் எனது ரசிகர்களை சந்தித்து, அவர்களை தொண்டர்களாக மாற்றி கட்சியைத் துவங்கவில்லை. என்னுடைய பிறப்பு, வளர்ப்பு, பாதை, பயணம் எல்லாமே வேறு.

கமல், ரஜினி இவர்களெல்லாம் திரைப்படத்துறையில் இருந்து வருகிறார்கள். திமுக, அதிமுக ஊழல் கட்சி என்பது இப்போதுதான் இவர்களுக்கு தெரிந்ததா..? இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்..? ரஜினிகாந்த்திடம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களை ஏன் சென்று சந்திக்கவில்லை எனக் கேட்டால் நான் இன்னும் முழு நேர அரசியலுக்கு வரவில்லை என்கிறார்.

அப்படியானால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்கு எதற்காக சென்றார்..? எந்த நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக் கொள்ளமாட்டேன், ஆனால் சட்டமன்ற தேர்தலில் நின்று நேராக முதலமைச்சர் நாற்காலியில் தான் போய் உட்காருவேன் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது ?.

நான் அப்படி இல்லை. கட்சி தொடங்கி எட்டு வருடமாக மக்களுக்காக போராடி வருகிறேன். இதில் ஒன்றரை வருடம் சிறையிலேயே இருந்திருக்கிறேன். இவர்கள் எல்லாம் பணத்தைத் தேடி ஓடிக்கொண்டிருந்த காலத்தில் நான் இனத்தைத் தேடி ஓடிக்கொண்டிருந்தேன். அதனால் என்னை சினிமா நடிகர் என்கிற பார்வையில் பார்க்க முடியாது. சினிமாவில் நடிப்பது மட்டுமே நாடாளும் தகுதியாகி விடும் என்பதைத்தான் நாங்கள் வெறுக்கிறோம்.

தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லும் ரஜினிகாந்த் அதை யார் தீர்ப்பார் என, தன் பின்னால் இருப்பவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் அல்லவா ?. அப்படி செய்தால்தான் அவருக்கு பெயர் வழிகாட்டி. அவருக்குப் பெயர்தான் தலைவன்.

உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்துவிட்டுப் போங்கள் என்று சொல்வதற்கு ஒரு தலைவன் தேவை இல்லை. யார் தீர்ப்பார்கள் என வெளிப்படையாக சொல்ல வேண்டும். யாரோ ஒருவர் பக்கம் கைகாட்ட வேண்டும். நடுநிலை வகிக்கிறேன் என இப்படிக் கூறுவது ஒரு மேம்போக்கான அறிவிப்பு. அதைத்தான் நாம் விமர்சிக்கிறோம்.

மேடையில் பேசுவது போல சினிமாவும் ஒரு தளம். மேடையில் என்ன பேசுகிறேனோ அதே கருத்தை திரையில் பேசுகிறேன், அவ்வளவுதான். நான் அங்கங்கே மேடையில் பேசிய ஒரு சில விஷயங்கள் திரையில் வரும்போது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்கிறீர்கள்.

அடுத்ததாக நான் சிலம்பரசனை வைத்து எடுக்கப்போகிற படம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அதனால்தான் நான் சினிமாவை ஒரு துப்பாக்கி போல, ஒரு கோடாரி போல, ஒரு அரிவாள் போல பயன்படுத்துகிறேன்.

பெரியதிரை மட்டுமல்ல, சின்னத்திரையும் இன்று தேவைப்படுகிறது. யூ டியூப் என்ற ஒன்று இல்லை என்றால் நான் எப்போதோ இறந்து விட்டேன் என்றும், அடக்கம் பண்ணி ஆகிவிட்டது என்றும் சொல்லியிருப்பார்கள். அதுவும் ஒரு வலிமையான ஊடகம் தான். ஆக, திரை என்பது எல்லோருக்கும், ஏன் நாட்டின் பிரதமருக்குக் கூட தேவைப்படுகிறது. பிரதமரையோ முதல்வரையோ பேட்டி கொடுக்காமல் இருக்கச் சொல்லுங்கள். நாங்களும் பேசாமல் இருந்து விடுகிறோம்.

தேர்தலில் தனியாக நிற்கிறீர்களே என்கிறார்கள். நான் தனியாக நிற்பதால் யாருக்கு நட்டம்..? மற்ற கூட்டணிகளுக்கு நட்டம் என்றால் அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்..? இப்போது அவர்கள் அமைப்பது கூட்டணியா..? இல்லை.. வெறும் நோட்டணி.. சீட்டணி.. என்னையாவது விடுங்கள்.. அப்படி என்றால் மக்களுக்கு நம்பிக்கையானவர்கள் யார் தான் என சொல்லுங்கள்.. தனியாக நின்று விட்டுப் போகிறேன்.

இதோ இங்கே காவல் தெய்வமாக இந்த முனியப்பசாமி இருப்பது போல, நானும் ஒரு சாமியாக நின்று விட்டுப் போகிறேன். இந்தியா மக்களுக்கான தேசமா.? இது ஒரு சந்தைப் பகுதியாக மாறிவிட்டது. இங்கே வியாபாரம் நடக்குமா..? வாழ்க்கை நடக்குமா..? நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தியில் 100 விழுக்காடு அன்னிய முதலீடு இருக்கிறது. இதில் எங்கே ரகசியம் காக்க முடியும்?

தமிழக அரசு 2000 ரூபாயும் மத்திய அரசு 6 ஆயிரம் ரூபாயும் தருகிறது. இதை வேண்டாம் என ஒதுக்கும் நிலையில் நம் மக்களை அவர்கள் வைக்கவில்லையே..? நல்லாட்சி கொடுத்திருந்தால் இப்படி பணம் கொடுக்கத் தேவை இல்லையே.. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாமல் அந்த இழிநிலைக்கு மாற்றியது யார்..?,” என்றார் சீமான்.

Tamil Cinema News

அமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ… !

Published

on

By

அமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ... !

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் ஜோன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குனர் திருமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜோன்ஸ் பேசும்போது,

“பல படங்களை ஜான் மேக்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளேன். மைனா படத்தில் இருந்து அமலாபால் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் அவரின் அர்ப்பணிப்பு ரொம்ப உணர்வுபூர்வமானது. மிக வித்தியாசமான கதை. அமலாபாலிடம் இந்தக்கதையை சொன்னதும் ஓ.கே என்றார். கதை பிடித்ததால் இந்த ப்படத்தை இயக்குநர் கே.ஆர்.வினோத் சிறப்பாக இயக்கித் தந்துள்ளார்,‘’ என்றார்.

இயக்குனர் கே.ஆர்.வினோத் பேசும் போது,

‘என்னோட குடும்பத்தினர், நண்பர்கள் இல்லாமல் எனக்கு இந்த மேடை அமைந்திருக்காது. என் உழைப்பை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. மற்றும் என்னுடைய படக் குழுவினருக்கு நன்றி. எங்கள் படத்தில் அமலாபால் ஹீரோயின் இல்லை, ஹீரோ. அவரை அப்படித்தான் அழைத்து வருகிறேன். அமலாபாலுக்கு இந்தப் படம் ரொம்ப சிறப்பா இருக்கும் என்று நம்புகிறோம்.

சண்டைக்காட்சிகள் எல்லாம் நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அமலாபாலிடம் காட்டினோம். அதைப் பார்த்து பயிற்சி செய்து படத்திற்கு தயாரானார். அதை அப்படியே படப்பிடிப்பில் மிகச்சிறப்பாக செய்துவிட்டார். 60 அடி உயரமுள்ள மரத்தில் இருந்து இறங்குவது, சண்டை போடுவது என நடிப்பில் அமலாபால் அசத்தியுள்ளார். குறிப்பாக சேற்றுக்குள் இறங்கி மூச்சு விடாமல் நடிக்க வேண்டும். அதை நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாதளவிற்கு நடித்து கொடுத்தார். இந்த தைரியம் யாருக்கு வரும். எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் படம் சிறப்பாக வந்திருக்கிறது,” என்றார்.

அமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ... !

நடிகை அமலாபால் பேசுகையில்,

“இந்தப் படம் ரொம்ப சந்தோசத்தை கொடுத்தது. தயாரிப்பாளருக்கு கண்டிப்பாக நல்ல லாபத்தைக் கொடுக்கும். காரணம் படத்தோட கதை. ஒரு இளம்பெண் எந்த உதவியுமே இல்லாம தனி ஆளா காட்டுல சிக்கிக்கிட்ட பிறகு அதுல இருந்து எப்படி வெளியில வர்றாங்கறது தான் படம்.

இன்னிக்கு நாடு இருக்கற நிலையில பெண்கள் பாதுகாப்புங்கறது எந்த அளவுக்கு இருக்குங்கிறது தான் பெரிய விவாதமா இருக்கு. இந்த சூழ்நிலையில இப்படி ஒரு படம் வர்றது ஒட்டு மொத்த பெண்களுக்கான படமாக இருக்கும்.

இந்த படத்தோட டீம் பக்காவா திட்டமிட்டு உழைச்சாங்க. கதை சொல்லும் போது கூட பக்கா பிளான் பண்ணித்தான் வந்திருந்தாங்க. இந்த படத்துக்காக புதுசா ‘கிராமகா’ என்னும் தற்காப்பு கலையை கத்துக்கிட்டேன். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூட ஒரு சண்டை போட்டுருக்கேன். அந்த சண்டை பெரிசா பேசப்படும்.

கதை ஆசிரியர் அருண் அவ்வளவு திறமையா இந்த கதையை எழுதி இருந்தாரு. படம் ஷூட் போறதுக்கு முன்னாடியே எனக்கான ஸ்டண்ட் காட்சிகளை ஷூட் பண்ணி டெமோ காட்டி எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க.

இயக்குனர் வினோத், நிர்வாகத் தயாரிப்பாளர் கவாஸ்கர், கதாசிரியர் அருண் இவர்கள் எல்லாம் பெரிய போராட்டத்தைச் சந்தித்து இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டம் முன்னாடி படத்தில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை.

ரொம்ப இளமையான டீம். இவர்கள் இருக்கிற படத்தில் நான் இருக்கிறது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஒரு ஹீரோயின் காட்டுக்குள் ஆக்‌ஷன் பண்ணா எப்படி இருக்கும் என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால் கதை அதை சரி செய்துவிடும்.

எங்க டீமில் எல்லாரும் பெண்கள் பலத்தை உணர்ந்தவர்கள். தயாரிப்பாளர் ஜோன்ஸ் மைனாவில் இருந்தே நல்ல நண்பர். சிறுவன் பிரவீன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறான். நிச்சயமாக அவனுக்கு தேசிய விருது கிடைக்கும்.

மேலும் இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னோடு நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் வேலை செய்த அனைவரும் இப்படத்தை ஒரு பேஷனாக எடுத்து வேலை செய்தார்கள்.

இந்தப்படத்திற்காக நான் கற்றுக்கொண்ட தற்காப்புக் கலை, எனக்கு நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப தைரியத்தைக் கொடுத்துள்ளது. கதை பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் நடிப்பேன். கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்,’’ என்றார்.

Continue Reading

Tamil Cinema News

ஜீ திரை – நாளை முதல் புதிய சினிமா டிவி சேனல்

Published

on

By

ஜீ திரை - நாளை முதல் புதிய சினிமா டிவி சேனல்

தமிழில் ஒளிபரப்பாகும் பொதுவான பொழுதுபோக்கு சேனல்கள் (GEC) பிரிவில், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்ப்ரைசஸ் லிமிடெட் (ZEEL) தனது ஜீ தமிழ் சேனலின் மூலமாக ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.

தற்போது, இந்நிறுவனம் தமிழ் திரைப்பட பொழுதுபோக்கு பிரிவில் – ‘ஜீ திரை’ என்ற புதிய சேனலை நாளை முதல் ஆரம்பிக்க உள்ளது.

தென்னிந்தியாவில் இது, இந்த நெட்வொர்க்கின் ஆறாவது சேனலாகவும், தெலுங்கில் ‘ஜீ சினிமாலு’ சேனலை அடுத்து துவங்கப் பெற்ற இரண்டாவது சினிமா சேனலாகவும் திகழ்கிறது.

ஜீ சினி அவார்ட்ஸ் 2020 நிகழ்ச்சியின் போது, இந்த சேனல் துவங்கப்பட்ட அறிவிப்பானது வெளியிடப்பட்டது.

நடிகர் கமலஹாசன் மற்றும் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்ப்ரைசஸ் லிமிடெட்டின் தலைமை நிர்வாக இயக்குனர் (உள்நாட்டு ஒளிபரப்புத் துறை) புனித் மிஷ்ரா ஆகியோர் இணைந்து இதனை அறிவித்தனர்.

உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு சினிமாவின் மீதுள்ள ஆழமான சமுதாய மற்றும் கலாச்சார ரீதியான அன்பினைப் புரிந்து கொண்டும், தமிழர்களின் உணர்வுகளோடு ஒத்துப்போகும் வகையிலும் ஜீ திரை சேனல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்னணி DTH ஆப்பரேட்டர்களான டாடா ஸ்கை (சேனல் எண். 1599), ஏர்டெல் DTH (சேனல் எண். 775), டிஷ் டிவி (சேனல் எண். 547) மற்றும் D2H (சேனல் எண். 547) ஆகியவற்றில் கிடைக்கும்.

கேபிள் சந்தாதாரர்கள் ரூபாய் 12 சந்தா செலுத்தி, ஜீ பிரைம் மூவி பேக் தமிழை பெறலாம்; இதில் ஜீ தமிழ், ஜீ திரை மற்றும் இதர ZEEL சேனல்கள் கிடைக்கும்.

ஜீ திரை சேனலின் அறிமுகம் குறித்து பேசிய, ZEEL நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவின் தலைவர் சிஜூ பிரபாகரன் அவர்கள் கூறியதாவது,

“இன்று, நமது சேனல்களான – ஜீ கன்னடா, ஜீ தெலுகு, ஜீ சினிமாலு, ஜீ தமிழ் மற்றும் சமீபத்தில் துவங்கப்பெற்ற ஜீ கேரளம் ஆகிய சேனல்கள் நமது நெட்வொர்க்கில் 28.5% மேலான பங்களிப்பினை வழங்குகிறது. இதன் மூலம் தென்னிந்திய மார்கெட்டில் நமக்கு உள்ள வலுவான இணைப்பு வெளிப்படுகிறது.

சினிமாவின் மீது தமிழர்கள் கொண்டுள்ள அன்பையும், பற்றையும் புரிந்துகொண்டு, அவர்கள் விரும்பும் சினிமாவை அவர்களுக்கு வழங்கும் பொருட்டு நாம் நமது ஜீ திரை சேனலை துவங்கியுள்ளோம்.

மேலும், தமிழ் நேயர்களுக்கு நமது நெட்வொர்க் வழங்கும் சேவைகளுக்கு வலுசேர்க்கும் விதத்திலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விரும்பும் ரசிகர்களின் தேடலுக்கான சிறந்த தேர்வாகவும் திகழ வேண்டுமென்ற இலக்கினை அடைவதில் இது ஒரு மைல் கல் ஆகும்.”என்றார்.

கடந்த பத்து ஆண்டுகளில், ZEEL நிறுவனத்தின் தமிழ் பொது பொழுதுபோக்கு சேனலான (GEC) – ஜீ தமிழ், உலகம் முழுவதும் உள்ள தமிழ் நேயர்களின் மனதிலும், இதயத்திலும் ஒரு பிரியமான இடத்தினைப் பெற்றுள்ளது. தனித்துவமான அனைத்து அம்சங்களும்  நிறைந்த இதன் நிகழ்ச்சிகளுள் செம்பருத்தி, யாரடி நீ மோகினி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, கோகுலத்தில் சீதை போன்றகற்பனைதொடர்களும்; சூப்பர் மாம், ச ரி க ம ப, டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் போன்ற நிஜ பங்கேற்பு நிகழ்ச்சிகளும்தமிழ் தொலைக்காட்சி பொழுதுபோக்கிலேயே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. மேலும் இந்த சேனல் திரைப்பட உரிமைகளை பெறுவதில் முன்னணி வகித்ததன் மூலம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை சரியான விகிதத்தில் வழங்கியது.

தென்னிந்தியாவில் நேயர்கள் பற்றிய புரிதல், எண்ணற்ற நிகழ்ச்சிகளின் வலிமை மற்றும் புதிய முயற்சிகளின் மூலம் கற்றுக் கொண்டவை ஆகியவற்றின் துணையுடன் இந்த நெட்வொர்க் தனது ஜீ திரை சேனலின் மூலம்திரைப்பட பிரிவில் ஒரு சவாலான இடத்தை அடைய முயல்கிறது.

இந்த சேனலின் மிகப்பெரிய அம்சமாக திகழ்வது 52 புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது; அதாவது வருடம் முழுவதும் வாரம் ஒரு புதிய திரைப்படம் – தமிழ் திரைப்பட சேனல்களில் முதல் முறையாக ஒளிபரப்பப்படும்.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையினை பூர்த்தி செய்யும் விதத்தில், மெகாஹிட் திரைப்படங்கள் மற்றும் பலரின் பாராட்டைப் பெற்ற படங்கள் என சரிவிகிதத்தில் சிறந்த திரைப்படங்களை ஜீ திரை வழங்கும்.

ஒவ்வொரு வாரமும்வெள்ளி தோறும் ஒளிபரப்பாகவிருக்கும் ‘தெறி ஃபிரைடேஸ்”, கடந்த கால சிறந்த படங்களை வழங்கும் ‘ஃபில்ட்டர் காவியம்’ மற்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விளம்பரம் இல்லாத ‘நடுவுல கொஞ்சம் பிரேக்க காணும்’ படங்கள் என இதுபோன்ற பல தனித்துவமான அம்சங்களை இந்த சேனல் தரவுள்ளது.

தமிழ் சினிமாத்துறையின் சிறந்த படைப்புகளை வழங்க ஒரு சேனலை துவங்கியதன் மூலம், சினிமா குறித்த உரையாடல்களை ‘என்ன’ என்பதிலிருந்து‘ ஏன்’ என்றஅ றிவார்ந்த புரிதல்களை நோக்கி செலுத்தும் இலக்கினை ஜீ திரை கொண்டுள்ளது.

‘மெர்சல், 2.0, கனா, நேர்கொண்ட பார்வை, இரும்புத்திரை, தில்லுக்கு துட்டு 2, கோலமாவு கோகிலா போன்ற சிறந்த திரைப்படங்கள் உட்பட 400-க்கும் மேலான பல வகை திரைப்படங்களை இந்த சேனல் ஒளிபரப்பும் உரிமையை வைத்துள்ளது.

Continue Reading

Tamil Cinema News

‘தலைவி’ – அச்சு அசல் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி

Published

on

By

‘தலைவி’ - அச்சு அசல் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி

வைப்ரி மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘தலைவி’.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகும் இந்தப் படத்தை விஜய் இயக்குகிறார். கங்கனா ரணவத், அரவிந்த்சாமி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

நேற்று எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தில் நடிக்கும் அரவிந்த்சாமியின் தோற்றத்தை வெளியிட்டார்கள்.

புகைப்படம் ஒரு டீசர் ஆகியவை வெளியிடப்பட்டன. இரண்டிலுமே எம்ஜிஆர் போலவே அச்சு அசலாக அரவிந்த்சாமி இருப்பதாக பலரும் பாராட்டி வருகிறார்கள்.

வீடியோவில் ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்ற பாடலைப் பாடி, ஆடும் அரவிந்த்சாமி அப்படியே எம்ஜிஆரின் உடல்மொழியைக் கொண்டு வந்திருக்கிறார்.

இது பற்றி இயக்குனர் விஜய் கூறுகையில்,

“தலைவி” படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்குக் கிடைத்த வரம். தமிழ்நாட்டினை இன்றைக்கு இருக்கும் இந்த உயர்நிலைக்கு மாற்றிய, இரண்டு சகாப்தங்களின் வாழ்வை நெருங்கிப் பார்த்து, அதனை திரைவடிவமாக்குவது எவருக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு. இது ஒரு மிகப்பெரிய அனுபவம்.

இதிலுள்ள மிகப்பெரும் சவால் என்பது, இப்படத்திற்கு சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதே. நிஜத்தில் வாழ்ந்தவர்களின் தோற்றத்தை பிரதிபலிப்பதுடன், திரையில் அந்த ஆளுமையை மறு உருவாக்கம் செய்வதும் மிக அவசியம் ஆகும்.

நடிகை கங்கனா ரனாவத்தை முதல்வர் புரட்சிதலைவி ஜெயலலிதா பாத்திரத்திற்கு தேர்வு செய்த பின், எம். ஜி. ஆரின் பாத்திரத்திற்கு பலரை கருத்தில் கொண்டு முயன்று பார்த்தோம். இறுதியாக அரவிந்த்சாமி மிகப்பொருத்தமானவர் என அவரைத் தேர்ந்தெடுத்தோம்.

இன்றும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர் எம். ஜி.ஆர். அவரை திரையில் கொண்டு வருவது எளிதான செயல் அல்ல. அவரைப் பற்றிய அத்தனை தகவல்களையும் திரட்டி அரவிந்த்சாமியை அதே விதமான லுக்கிற்கு மாற்றினோம்.

எங்களை விட அவர் இந்தக் கதாப்பாத்திரத்தின் மீது அதிக காதல் கொண்டு தன்னை பல விதங்களில் தயார் செய்து கொண்டார். திரையில் அந்த ஆளுமைக்கு நியாயம் செய்யும்படியான உழைப்பை நாங்கள் அனைவரும் தருவோம்.

பாரத ரத்னா வாங்கி, இந்தியாவின் மிகப் பெரும் தலைவராக விளங்கிய எம்.ஜி. ஆரை திரையில் வடிப்பது எங்கள் அனைவரின் பாக்கியம்,” என்றார்.

‘தலைவி’ படம் 2020 ஜுன் 26ம் தேதியன்று வெளியாக உள்ளது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: