Connect with us

Tamil Cinema News

தணிக்கை பெற்ற ‘தடம்’

Published

on

thadam movie

‘குற்றம் 23’ வெற்றிப் படத்தைத் தயாரித்த ரெதான் – தி சினிமா பியூப்பிள் சார்பாக இந்தர் குமார் தயாரித்துள்ள படம் ‘தடம்’.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய், தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள இந்தப் படம் சமீபத்தில் தணிக்கை குழுவினருக்கு காண்பிக்கப்பட்டு யு/ஏ (U/A) சான்றிதழ் பெற்றுள்ளது.

இப்படத்தின் இசை மற்றும் பட வெளியீடுடு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Cinema News

‘தம்பி’க்காக காத்திருக்கும் நிகிலா விமல்

Published

on

By

‘தம்பி’க்காக காத்திருக்கும் நிகிலா விமல் - 4 Tamil Cinema

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், ஜோதிகார், கார்த்தி, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் ‘தம்பி’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் நிகிலா விமல்.

இவர் தமிழில் சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல், கிடாரி’ படங்களில் நாயகியாக நடித்தவர்.

‘தம்பி’ படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன். சரி, அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றார். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் ‘தம்பி’ படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.

எல்லோரும் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற மாட்டார்கள். ஆனால், ஜீத்து ஜோசப் தமிழில் ஒரு படம் இயக்குகிறேன், கார்த்தியின் ஜோடியாக ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. ஆனால் கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் மூவருக்கும் தான் முக்கியத்துவம் இருக்கும். நீ நடிக்கிறாயா ? என்றார். அவர் நேர்மையாகக் கூறியதும் நான் ஒப்புக் கொண்டேன். மேலும், தொழில்நுட்பம் மற்றும் பெரிய நடிகர்கள் இருப்பதால், ஒரு நல்ல படத்தில் நாமும் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நடிக்க ஒப்புக்கொண்டேன்.

நான் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இப்படத்தில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைக்க, கோவிந்த் வசந்தா இருக்கிறார்.

என்னுடைய கதாபாத்திரமும் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து செல்வது என்றில்லாமல், ஒரு புள்ளியில் கதையோடு தொடர்பு இருக்கும். நடிப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க தான் எனக்கும் விருப்பம். ஐந்து வருடங்கள் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்துவிட்டு, நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள விருப்பமில்லை. காத்திருந்தாலும் நல்ல படம், நல்ல குழுவுடன் இணைந்து நடிப்பதே விருப்பம். என் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் அதில் நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தால் மட்டுமே நடிப்பேன், அது வரை காத்திருப்பேன்.

‘கிடாரி’க்குப் பிறகு மலையாளத்தில் வாய்ப்பு வந்தது. நான் நடித்த படம் வெற்றி பெற்றவுடன் தொடர்ந்து அதிக படங்கள் அங்கேயே நடிக்கும்படியான சந்தர்ப்பம் அமைந்தது. மேலும், சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.

‘தம்பி’ படம் மூலம் தமிழில் இது மறு பிரவேசம் என்று கூட சொல்லலாம்.

எனக்கு தமிழ் தெரிந்ததால் இப்படத்தில் நடித்தது எளிதாக இருந்தது. சிறந்த இயக்குனரிடம் பணியாற்ற வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தில் நடித்தேன்.

சில நடிகர்களுக்கு ஒரே பாணியான படங்கள் மற்றும் அவர்களுக்கென்று ஒரு தனி அடையாளம் வந்து விடும். ஆனால், கார்த்தி எந்தவிதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சரியாக நடிக்கக் கூடிய திறமை வாய்ந்தவர்.
தனக்கு என்று ஒரு தனி பாணியை வைத்துக்கொள்ளாமல் கமர்சியல் படமாக இருந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருந்தாலும், இல்லை இரண்டும் கலந்து இருந்தாலும் அவர் திறமையாக நடிப்பார். இது போன்ற நடிகருடன் நடிப்பதை பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன். அதேபோல் தன்னுடைய பகுதி மட்டும் முடிந்தால் போதும் என்று நினைக்கக்கூடிய கலைஞர் கிடையாது. தன்னுடன் நடிப்பவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்ற எண்ணக்கூடிய மனிதர் தான் கார்த்தி. அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் வரும்போது, படப்பிடிப்பு தளத்தில் அலங்காரம் செய்து கொண்டிருப்பார். அப்போது நான் உங்களைப் பார்த்துக் கொண்டு வசனம் பேசி ஒத்திகைப் பார்த்துக் கொள்ளட்டுமா என்று கேட்டேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். இது போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை.

எல்லோரையும் போல் சூர்யா, ஜோதிகாவை நானும் திரையில் கண்டிருக்கிறேன். இப்படத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி. எனக்கு உறுதுணையாக இருந்தார். பேச்சிலும் மிக மென்மையானவர். ஜோதிகாவும் தன்னுடன் நடிப்பவர்களுக்கு சரி சமமான முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பார். இது அவர்களின் குடும்ப வழக்கமாகவே இருக்கிறது.

ஊட்டி, பாலக்காடு, கோயம்பத்தூர், கோவா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. கோவாவில் கார்த்தியின் பகுதி மட்டும் நடந்தது. சரியான திட்டமிடுதல் இருந்ததால், திட்டமிட்டபடி 65 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம்.

படப்பிடிப்பு தளத்தில் நன்றாக அரட்டை அடிப்போம். ஒருத்தருக்கொருத்தர் கலாய்த்துக் கொள்வோம். இதற்கிடையில், சத்யராஜ் குடும்பத்தார்கள் வந்தார்கள், கோயம்பத்தூரில் இருந்து சிவகுமாரின் உறவினர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்தாருடனும் பேசுவோம். சூர்யாவும் ஒரு நாள் வந்தார். அவரிடமும் பேசினேன்.

என்னுடைய தோழி அபர்ணா ‘சூரரைப் போற்று’ படத்தில் நடிக்கிறார். அதை நினைத்து இருவரும் உற்சாகமானோம். சிறந்த நடிகருடன் நடிக்கும் போது இதுபோன்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கும். தங்களுடைய கதாப்பாத்திரத்திற்காக எப்படி மாறுகிறார்கள் என்பதை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ஆசையும் இருக்கிறது.

பொதுவாக படப்பிடிப்பின் துவக்கத்தில் சில நாட்களுக்கு சிறு சிறு காட்சிகள் தான் கொடுப்பார்கள். ஏனென்றால், அப்போதுதான் அனைவரிடமும் நமக்கு இயல்பான நிலை வரும். ஆனால், இந்த படத்தில் எனக்கு முதல் நாள் படப்பிடிப்பே டூயட் பாடல் தான். அதுவும் உதட்டோடு பதிக்கும் முத்தக் காட்சி என்றதும் சிறிது பதட்டமாக இருந்தது. கார்த்தியைப் பார்த்ததும் இவரைப் பார்த்து நடிக்க வேண்டுமே என்ற பயம் வேறு. ஆனால், கார்த்தி என்னை சமாதானப்படுத்தி இலகுவாக இருக்கும்படி கூறினார். முதலில், பாடலைக் கேட்கும் போது பதட்டமாக இருக்கும். இப்போது நன்றாக இருக்கிறது என்று தோன்றுகிறது. இது தவிர, விருந்து பாடலும், கோவாவில் கார்த்திக்கு ஒரு பாடலும் இருக்கிறது.

நான் கோவிந்த் வசந்தாவின் பேண்ட் வாத்தியத்தின் விசிறி. சமீபத்தில், கேரளாவில் அவருடைய இசை ஆல்பம் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. அவருடைய ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ’96’ மற்றும் ‘அசுரவதம்’ படத்தில் அவருடைய பின்னணி இசை பிடிக்கும்.

இப்படம் இரண்டு குடும்ப உறவுகள் கலந்த திரில்லர் படமாக இருக்கும். ஒவ்வொரு காட்சிக்கும் தொடர்பு இருப்பதால் இப்படத்தின் கதையைப் பற்றி விளக்க முடியாது. படம் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்க டிசம்பர் 20-ம் தேதி வரை நாங்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறோம்.

மேலும், ‘கிடாரி’ படத்தில் நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று இன்னமும் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், இந்த படத்திற்கும் வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

இந்த படத்திற்குப் பிறகு தமிழ்ப் படங்கள் இல்லாததால், மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்,” என்றார்.

Continue Reading

Tamil Cinema News

‘டெடி’ படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா ?

Published

on

By

டெடி படத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா ?

ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ஆர்யா, சாயிஷா, கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, மாசூம் ஷங்கர், சாக்‌ஷி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டெடி’.

படம் பற்றி இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன் பகிர்ந்து கொண்டவை….

“டெடி பியர் பொம்மைக்கும் ஆர்யாவுக்கு கதையில் ஒரு பெரிய இணைப்பிருக்கிறது. அதனால், நிறைய பெயர்கள் யோசித்தோம். இறுதியில் பரிச்சயமான வார்த்தையான ‘டெடி’ என்ற பெயரையே வைக்கலாம் என முடிவு பண்ணினேன்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்தீர்கள் என்றால் அதற்கான காரணம் விளங்கிவிடும் என நினைக்கிறேன். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை டெடி பியர்களை எப்படி கொஞ்சி மகிழ்வார்களோ, அதே போல் அடுத்தாண்டு இந்த ’டெடி’ படத்தையும் பார்த்து மகிழ்வார்கள். அப்படியொரு விருந்து வைக்கத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு வார்த்தையில் படத்தின் ஜானரைச் சொல்லிவிட முடியாது. படத்தின் நாயகனோடு ஒரு கம்யூட்டர் சம்பந்தப்பட்ட கதாபாத்திரம் கூடவே இருக்கும். முழுமையாக அதை கிராபிக்ஸில் மட்டுமே பண்ண முடியும். அப்படிப்பட்ட ஒரு டெடி பியர் கேரக்டர். அதுவே புதுமையான விஷயம் என நினைக்கிறேன்.

படத்தின் 2-வது முக்கிய கேரக்டர் இது தான் என்று சொல்லலாம். முழுக்க தொழில்நுட்பத்தை வைத்தே செயற்கையாக உருவாக்கி, நடிக்க வைக்கிறோம், சண்டை போட வைக்கிறோம். அது தான் பார்வையாளர்களுக்கு புதுமையாக இருக்கும்.

திருமணத்துக்குப் பிறகு ஆர்யா – சாயிஷா ஜோடியை நடிக்க வைக்க முதலில் பயந்தேன். கல்யாணத்துக்கு முன்பு ஒரு படம் சேர்ந்து பண்ணியிருந்தாங்க. ‘காப்பான்’ படத்தில் ஜோடியாக இல்லாவிட்டாலும், இணைந்து நடித்திருந்தார்கள். அடுத்தடுத்து கேட்டால் பண்ணுவார்களா என்ற சந்தேகத்தில்தான் போய் கேட்டேன். சாயிஷாவின் கேரக்டர் ரொம்பவே முக்கியமானது. கதையைக் கேட்ட ஒரே வாரத்தில் தேதிகள் கொடுத்துவிட்டார்கள்.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகூ, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய ஊர்களில் ஷுட் பண்ணியிருக்கேன். ரொம்பவே பழமையான நாடு. ஒரு காலத்தில் அதுதான் ரஷ்யாவாக இருந்தது. ரஷ்யாவாக இருக்கும் போது, இந்தியப் படங்கள் மீது பயங்கர ஆர்வமாக இருந்துள்ளார்கள்.
சாயிஷா மேடம் திலீப் குமாருடைய பேத்தி. அதைத் தெரிந்து கொண்டவர்கள் ஷுட்டிங் நடந்த இடத்துக்கு வந்து, ’திலீப் குமார், திலீப் குமார்’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

கருப்பு – வெள்ளை காலத்து இந்திப் படங்களைப் பற்றிக் கேட்டால் அவ்வளவு விஷயம் சொல்கிறார்கள். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. தமிழ்ப் படங்கள் சில இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு, யூ-டியூப் பக்கத்தில் இருக்கிறது. அதை இன்றுவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கு ஒரு பாட்டி, ஆர்யா சாரை இழுத்து இழுத்து சத்தமாக பேசிக் கொண்டிருந்தது. நாங்கள் ஏன் இப்படி தொந்தரவு செய்கிறார் என தடுக்கப் போனோம். உடனே ‘மதராசப்பட்டினம்’ டிவிடியை எடுத்து ஆர்யாவிடம் காட்டி ‘இது நீ தானே’ என்று காட்டிக் கொண்டிருந்தது.

பொதுவாகவே இந்தியப் படங்கள் மீது அவ்வளவு காதல் வைத்திருக்கிறார்கள். அங்கு 15 நாட்கள் ஷுட் பண்ணியிருக்கோம்.

‘டிக்:டிக்:டிக்’ படத்துக்கு அப்புறம் ஞானவேல்ராஜா சாரை சந்தித்தேன். பட்ஜெட், எத்தனை நாள் ஷுட்டிங் என எதுவுமே கேட்காமல் படம் பண்ணலாம் என்று சொன்னார். படத்தின் பட்ஜெட் இது தான் என இப்போது வரை முடிவு பண்ணவே இல்லை. படத்துக்கு என்ன தேவையோ, கொடுத்துக்கிட்டே இருக்கார்.

‘மதராசப்பட்டினம்’ படத்துக்குப் பிறகு ஆர்யா சாருக்கு ஒரு பெரிய பட்ஜெட் படமாக இந்தப் படம் இருக்கும். முழுமையான சுதந்திரம் கொடுத்திருக்கார். கண்டிப்பாக அவருடைய நிறுவனத்துக்கு நிறைய மைல்கல் படங்கள் இருக்கிறது. அதில் ‘டெடி’ இணையும் என்று சொல்வேன்.

’நாணயம்’ படத்தில் 2-வது யூனிட் கேமராமேனாக யுவராஜ் பணிபுரிந்திருந்தார். அப்போதிலிருந்தே பழக்கம். அவர் கேமராமேனாக பணிபுரிந்த ‘ஜாக்சன் துரை’ மற்றும் ‘ராஜா ரங்குஸ்கி’ படங்கள் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஆகையால் இந்தப் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தேன். உண்மையிலேயே காட்சிகள் எல்லாம் மிரட்டலாக வந்துள்ளது.

இசையமைப்பாளராக இமான், சண்டை இயக்குநராக சக்தி சரவணன், எடிட்டராக சிவநந்தீஸ்வரன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாக ரொம்ப ஸ்ட்ராங்கான படம்.

’குறும்பா’ என்ற பாடல் ‘டிக்:டிக்:டிக்’ படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருந்தது. அதே போல் ‘டெடி’ படத்திலும் இமான் இசை பேசப்படும்.

கிராபிக்ஸ் வேலைகள் மட்டும் 4 மாதம் முழுமையாக நடக்கப் போகிறது. ‘டிக்:டிக்:டிக்’ படத்துக்கு கிராபிக்ஸ் பணிகளை ஒருங்கிணைத்த அருண்ராஜ் தான் இந்தப் படத்துக்கும் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ள உள்ளார். நெக்ஸ்ட் ஜென் நிறுவனம் செய்யவுள்ளது. இப்போதே ஷுட்டிங் முடிச்சுட்டோம். ஆனால், மார்ச் மாதம் வரை கிராபிக்ஸ் வேலை மட்டும் நடக்கப் போகுது. அது ஏன் என்பதை எல்லாம் படமாகப் பார்க்கும் போது புரியும்,” என்றார்.

Continue Reading

Tamil Cinema News

ரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் – யார் ஜோடி ?

Published

on

By

ரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் - யார் ஜோடி ?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்களின் அறிவிப்பு நேற்று முதல் வெளியானது.

நேற்று கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாக அறிவித்தார்கள். அடுத்து பிரகாஷ் ராஜ் நடிக்கப் போவதாகவும் அறிவித்தார்கள்.

இன்று மீனா, குஷ்பு ஆகியோர் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

1995ம் ஆண்டு வெளிவந்த ‘முத்து’ படத்திற்குப் பிறகு 24 வருடங்கள் கழித்து ரஜினிகாந்த், மீனா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்கள். அது போல, 1992ம் ஆண்டுவெளிவந்த ‘பாண்டியன்’ படத்திற்குப் பிறகு 27 வருடங்கள் கழித்து ரஜினிகாந்த்துடன் குஷ்பு நடிக்க உள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா நடிகை மேனகா, 1981ல் ரஜினிகாந்த் ஜோடியாக ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் 1999ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘படையப்பா’ படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். ஒரு முழுமையான கதாபாத்திரத்தில் ரஜினியுடன் அவர் நடித்ததில்லை.

இப்படி பெரிய இடைவெளிக்குப் பிறகு சிலர் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்கள். கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் இமான், இயக்குனர் சிவா முதல் முறையாக ரஜினியுடன் பணிபுரிய உள்ளார்கள்.

படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என மூன்று முக்கிய நடிகைகள் இருப்பதால் இவர்களில் யார் ரஜினி ஜோடியாக நடிக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் 168 படத்தில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு கூறியிருக்கும் வீடியோக்கள்…

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: