Connect with us

Movie Reviews

அசுரன் – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 4/5

Published

on

அசுரன் விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

1980களில் நடக்கும் கதை. மனைவி இரண்டு மகன்கள், ஒரு மகள் என கிராமத்தில் வசிப்பவர் தனுஷ். அவருடைய குடும்பத்து சொத்தாக இருக்கும் 3 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்ற நினைக்கிறார் பக்கத்து ஊர் பெரிய மனிதர் ஆடுகளம் நரேன். அதனால் தொடரும் தகராறில் தனுஷின் மூத்த மகன் கொல்லப்படுகிறான். பதிலுக்கு நரேனை தனுஷின் சிறுவனாக இருக்கும் இளைய மகன் கென் கருணாஸ் கொலை செய்கிறார். அவர்களிடம் சிக்காமல் இருக்க தனுஷ் குடும்பத்தினர் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். நீதிமன்றத்தில் சரணடைய விரும்புகிறார் தனுஷ். அதைச் செய்ய விடாமல் தனுஷ் மற்றும் குடும்பத்தினரைக் கொல்லத் துடிக்கிறது நரேன் குடும்பம். இவர்களது போட்டியில் யார் வென்றார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடிப்பு

40, 50 வயதுள்ள நடுத்தரக் குடும்பத்து ஏழை, விவசாயி ஆக தனுஷ். ஒல்லியான தேகம், கத்தையான மீசை, லேசாக நரைத்த தாடி, கொஞ்சம் தளர்ந்த நடை, அனுபவப் பேச்சு, குடும்பத்தினர் மீது அதிக பாசம் என சிவசாமி கதாபாத்திரத்தில் தன்னை அப்படியே ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்றைய முன்னணி நடிகர்கள் ஏற்று நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரம். அதில் நடித்ததோடு மட்டுமல்லாமல், இதுவரையிலும் அவர் இப்படி நடித்ததில்லை என்று சொல்லுமளவிற்கு அப்படி ஒரு நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார். இந்த வருட தேசிய விருதுக்கான போட்டியில் வெல்வதில் தனுஷைத் தவிர வேறு யாரையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

மிகவும் தாமதமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய பேச்சியம்மாள் கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர். வேறு எந்த நடிகையரும் கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கலாம். ஆனாலும், மஞ்சு வாரியர் போல அவர்களால் இத்தனை நேர்த்தியாக ஒரு கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடித்துவிட முடியாது என்று தாராளமாகச் சொல்லலாம். சொந்தக் குரலில் வேறு பேசியிருக்கிறாராம் மஞ்சு.

தனுஷ், மஞ்சு வாரியர் பெயரை இப்போதே தேசிய விருதுப் பட்டியலில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை என எழுதி வைத்துவிடுங்கள். அது மட்டுமல்லாமல் பல விருதுகள் அவர்களுக்குக் காத்துக் கொண்டிருக்கிறது-

தனுஷ் கூடவே படம் முழுவதும் இருக்கும் அவருடைய இளைய மகன் கதாபாத்திரத்தில் கென் கருணாஸ். அப்பா செய்வது தவறு என்று சுட்டிக் காட்டி அப்பாவையே விமர்சிக்கும் ஒரு கதாபாத்திரம். தன் அண்ணன் இழப்பைத் தாங்க முடியாமல், அம்மா தவிப்பதைப் பார்க்க முடியாமல் திட்டம் போட்டு, உருண்டை (கிராமத்து வெடிகுண்டு) உருட்டி, ஆடுகளம் நரேனை ஒரே வெட்டில் சாய்த்து கொலை செய்கிறார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தனக்குத் தெரியும் என அப்பா தனுஷிடமே சவால் விடுபவர், நடிப்பிலும் சாதித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் கென்னுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.

தனுஷ் மச்சான் ஆக பசுபதி, வக்கீலாக பிரகாஷ் ராஜ். அவர்கள் இருவரின் நடிப்பிலும் அனுபவம் பேசுகிறது. அவர்கள் வரும் காட்சிகளில் வழக்கம் போல தனி முத்திரை பதித்துவிடுகிறார்கள்.

தனுஷ் மூத்த மகனாக டீஜே அருணாச்சலம். எதற்கும் பயப்படாத துணிச்சலான கதாபாத்திரம். நரேனை செருப்பால் அடித்து அவமானப்படுத்தியதால், கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தை நமக்குள் புகுத்தி விடுகிறார்.

சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல், சுப்பிரமணிய சிவா, நரேன், பவன் அவர்களது நடிப்பைப் பேச வைக்கிறார்கள்.

படத்தில் ஒவ்வொருவரின் நடிப்பைப் பற்றியும், படத்தில் உள்ள பல நுணுக்கங்கள் பற்றியும் எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம். அது ‘அசுரன்’ திரைக்கதை, வசனம் புத்தகத்தை விடவும் அதிகமாக வரும்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு தரமான படைப்பு இந்தப் படம். வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியிடமிருந்து இன்னும் பல வித்தியாசமான படங்கள் வரும் என்பதற்கு இந்தப் படம் அதீத நம்பிக்கை அளித்துள்ளது.

இசை, மற்றவை

ஜி.வி.பிரகாஷ் படத்தின் முதல் காட்சியிலேயே தன் திறமையை வெளிப்படுத்தி விடுகிறார். நல்ல கூட்டணி இணையும் போது எப்படியான தரமான படைப்பு வெளிப்படுகிறது என்பதற்கு வெற்றிமாறன், தனுஷ், ஜிவி பிரகாஷ் கூட்டணி ஒரு உதாரணம். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், கலை இயக்குனர் ஜாக்கி, படத் தொகுப்பாளர் ராமர் அசுரனுக்கு நல்ல கூட்டாளிகளாக இருந்து சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். சுகா, வெற்றிமாறனின் வசனங்கள் பல இடங்களில் ரசிகர்களின் கைத்தட்டலைப் பெறுகிறது.

+

படிப்பை மட்டுமே யாரும் பறிக்க முடியாது என்ற உயர்ந்த கருத்தைச் சொன்னதும், சாதீய கொடுமைகளை தெளிவாக விளக்கியதும், அனைவரின் நடிப்பும், உழைப்பும்.

கத்தி, வெட்டு, ரத்தம், கொலைகள்

 

Movie Reviews

மிக மிக அவசரம் – விமர்சனம்

4 Tamil Cinema Rating 3/5

Published

on

By

மிக மிக அவசரம் விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

விவிஐபிக்கள், விஐபிக்கள் ஒரு இடத்திற்கு வருகை தரும் போது, அவர்களது பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும் பெண் போலீசார், இயற்கை உபாதைகளைக் கூட செல்ல முடியாத ஒரு சூழலில் எப்படி சிரமப்படுகிறார்கள் என்பதைச் சொல்லும் கதை.

நடிப்பு

ஒரு பாலத்தின் நடுவின் இன்ஸ்பெக்டரால் பழி வாங்கும் நோக்கத்தில் தனி ஒரு பெண் போலீசாக நிறுத்தப்படுகிறார் ஸ்ரீபிரியங்கா. மண்டையைப் பிளக்கும் உச்சி வெயில், கடுமையான தாகம், அதோடு சிறுநீர் கூட கழிக்க முடியாமல் அவஸ்தைப்படும் ஒரு சூழ்நிலை. அதே சமயம், மேம்பாலத்தில் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும். போலீஸ் வேலை என்பதிலும் எவ்வளவு கஷ்ட, நஷ்டங்கள் இருக்கிறது என்பதை ஸ்ரீபிரியங்காவின் கதாபாத்திரமும், அதில் அவருடைய நடிப்பும் நம்மை மிகவும் நெகிழ வைக்கிறது.

பெண்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்திய எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், இப்படி ஒரு முக்கிய பிரச்சினையைப் பற்றி எந்தப் படமும் சொன்னதில்லை.

முத்துராமன், ஈ. ராமதாஸ், வி.கே. சுந்தர் அவரவர் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள்.

இசை, மற்றவை

இஷான் தேவ் இசையமைப்பில் கதைக்கும், காட்சிகளுக்கும் என்ன தேவையோ அந்த இசையைக் கொடுத்திருக்கிறார். படத்தை வளவளவென்று நீட்டி முழக்காமல் ஒரு பகலில் நடக்கும் சம்பவங்களை அதன் யதார்த்தம் மீறாமல் மிகவும் இயல்பாக அமைத்திருக்கிறார்கள். அதற்கு ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் சரியான உதவி புரிந்திருக்கிறார்கள்.

+

சினிமாத்தனமில்லாத யதார்த்தமான கதை, கதாபாத்திரங்கள்

ஓரிரு, பரபரப்பான திருப்பங்களை வைத்திருக்கலாம்.

Continue Reading

Movie Reviews

கைதி – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 4/5

Published

on

By

கைதி விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

பத்து வருடங்கள் சிறையிலிருந்து விடுதலை ஆகி இதுவரை பார்க்காத மகளைப் பார்க்கச் செல்கிறார் கார்த்தி. போகும் வழியில் ஒரு போலீசிடம் சிக்கி, கைதி ஆக கைவிலங்குடன் ஜீப்பில் இருக்கிறார். அந்த சமயத்தில் ஐஜி வீட்டிற்கு விருந்துக்கு வந்த மற்ற போலீஸ் அதிகாரிகளில் நரேன் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த நால்வரைக் கொல்ல போதைப் பொருள் கடத்தல்  கும்பல் களம் இறங்குகிறது. அதிலிருந்து தப்பிக்கிறார் நரேன். மற்ற போலீஸ் அதிகாரிகளைக் காப்பாற்றி அவர்களை மருத்துவமனையில் சேர்க்க கைதி கார்த்தியை லாரி ஒன்றை ஓட்ட வைக்கிறார். அதோடு, கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பல கோடி ரூபாய் போதைப் பொருளைக் காப்பாற்றும் வேலையிலும் இறங்குகிறார். நரேனுக்கு உதவி செய்து அவரையும், அவரது போலீஸ் டீமையும் கார்த்தி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

இந்தக் காலத்தில் உடன் நடிக்க ஜோடி இல்லாமல், டூயட் பாட பாடல்கள் இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க எந்த ஹீரோ சம்மதிப்பார். கார்த்தி அந்த ரிஸ்க்கையும் எடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார். அவருடைய கதாபாத்திரமும் சரி, நடிப்பும் சரி அவரை ஒரு தனித்துவமான நடிகர் எனப் பாராட்ட வைக்கின்றன. ‘பருத்தி வீரன்’ படத்திற்குப் பிறகு அடுத்து பல வருடங்களுக்குப் பேசப்படக் கூடிய ‘டெல்லி’ கதாபாத்திரத்தில் நடிப்பில் ஆளுமை செய்திருக்கிறார் கார்த்தி. வாக்கு கொடுத்த பிறகு அதைக் காப்பாத்தாம போக மாட்டேன் எனப் பேசி கைதிக்குள்ளும் ஈரம் இருக்கும் என புரிய வைக்கிறார். இப்படி ஒரு படத்தில் நடித்ததற்கு கங்கிராட்ஸ் கார்த்தி.

நான்கு பேர் கொண்ட டீமை வழி நடத்தி 900 கிலோ போதைப் பொருளைக் கைப்பற்றி அதை கடத்தல் காரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். விருந்தில் உடன் இருந்த 40, 50 போலீசின் உயிரையும் காப்பாற்ற வேண்டும். வலது கை வேறு அடிபட்டு கட்டுடன் இருக்கும் சூழ்நிலை. உடல்ரீதியாக இயங்க முடியவில்லை என்றாலும் புத்தி ரீதியாக இயங்கியாக வேண்டும். கார்த்தி ஒரு பக்கம் அமைதி என்றால் இவர் மறுபக்கம் உணர்ச்சி வேகத்தில் பரபரப்பு கூட்டுகிறார்.

கார்த்தி ஓட்டும் லாரி, தேர் என்றால் அதில் நரேன் கிருஷ்ணர், கார்த்தி அர்ஜுனர். இவர்களுக்கு அனுமாராய் இருந்து உதவுவதில் தீனா என மகாபாரதமும், இராமாயணமும் இணைந்த ஒரு கலவையாய் நகர்கிறது படம். சினிமாவில் அறிமுகமான கொஞ்ச நாட்களிலேயே குணச்சித்திர நடிப்பில் இந்தப் படம் மூலம் நல்ல பெயரைப் பெறுவார் தீனா.

கமிஷனல் அலுவலகத்தில் தனி ஒரு போலீஸ்காரராய் இருந்து கொண்டு 20, 30 ரவுடிகளை எதிர் கொள்கிறார் மரியம் ஜார்ஜ். அவருக்கு உதவியா ‘டிடி’ கேசில் வந்து சிக்கிய கல்லூரி மாணவர்கள். ஒருவர் உயிரையும் கொடுத்து கண்கலங்க வைக்கிறார்.

கார்த்தியின் மகளாய் பேபி மோனிகா. அப்பாவை முதன்முதலில் பார்க்கப் போகிறோம் என்ற தவிப்பைக் காட்டி கண்களில் கண்ணீர் வரவைக்கிறார்.

மெயின் வில்லனாக அர்ஜுன் தாஸ். கணீர் குரலிலேயே அழுத்தமான வில்லத்தனத்தைக் காட்டுகிறார். அவருக்கு அண்ணனாய் ஹரிஷ் உத்தமன், லாக்கப்பில் இருந்தாலும் மிரட்டுகிறார். அர்ஜுன் தாஸ் கூட்டணியில் ரமணா. லாரியில் இருந்தபடியே போட்டுக் கொடுக்கும் அந்த போலீஸ், அர்ஜுன் கூட்டணியில் இருக்கும் போலீஸ் ஆள், போலீசைக் காட்டிக் கொடுக்கும் நார்கோடிக்ஸ் அதிகாரி ஹரிஷ் பெரடி ஆகியோரும் பெயர் வாங்குகிறார்கள்.

இசை, மற்றவை

சாம் சி.எஸ் பின்னணி இசையில் காட்சிகளின் கனமும், அழுத்தமும் இன்னும் கூடுகிறது. ஒரே இரவில் மட்டுமே நகரும் கதை. சாலை, காட்டுப் பகுதி, கமிஷனர் அலுவலகம் என சேஸ் செய்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சூர்யன் சத்யன். எந்த இடத்திலும் தொய்வேயில்லாத வகையில் பிலோமின் ராஜ் படத் தொகுப்பு.

+

தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத ஒரு கதை, காட்சிகள், நாயகன் கதாபாத்திரம்.

சில இடங்களில் சில லாஜிக் மீறல்கள்.

 

Continue Reading

Movie Reviews

பிகில் – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 2.75/5

Published

on

By

பிகில் விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

தாதா அப்பா, கால்பந்து வீரர் மகன். இரண்டுமே விஜய். போட்டி தாதா அப்பாவைக் கொல்ல இந்திய அணிக்கு விளையாடத் தேர்வான மகன், கத்தியை எடுத்து உடனே அப்பாவைக் கொன்ற தாதாவைக் கொன்று அவரும் தாதாவாகிறார். ஏழு வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணிக்குக் கோச்சாக அவர் போக வேண்டிய சூழ்நிலை. அந்தப் பெண்கள் தாதா தங்களுக்குக் கோச்சா என எதிர்க்க, இன்னொரு புறம் கால்பந்து சங்கத் தலைவர் எதிர்க்க, மறுபக்கம் பழைய பகையும் சேர மகன் விஜய் அனைத்தையும் சமாளித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

அப்பா ராயப்பன், மகன் மைக்கேல் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய். அப்பா ராயப்பன் கதாபாத்திரத்தில் காவி வேட்டி, கருப்பு சட்டை, நெற்றியில் சந்தனம் குங்குமம், கழுத்தில் சிலுவை செயின், வீட்டு பூஜை அறையில் இயேசு, அல்லா, இந்துக் கடவுள் இருக்க மூன்று மதத்து ரசிகர்களையும் கவர முயற்சிக்கிறார்கள். தோற்றத்தில் மட்டும்தான் வயதானவர் ஆக்ஷனில் இளைஞராக அதிரடி காட்டுகிறார்.

மகன் மைக்கேல் என்கிற பிகில். மைக்கேல் தாதா, பிகில் ஏழு வருடங்களுக்கு முன்பு இந்திய அணியில் இடம் பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர். பிகில் ஆக இளமைத் துள்ளலுடன் அப்பாவைக் கண்டால் பயந்து நடுங்கும் இளைஞராக இருக்கிறார். மைக்கேல் ஆக வழக்கமான விஜய். காமெடி, காதல், ஆக்ஷன், கோபம், நகைச்சுவை என கலந்துகட்டி அடிக்கிறார்.

விஜய்யின் காதலியாக நயன்தாரா அதிக வேலையில்லை. யோகிபாபு ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஐ.எம்.விஜயன் என மூன்று வில்லன்கள். ஆனால், மூவருமே ஸ்ட்ராங்கான வில்லன்கள் இல்லை.

பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக அம்ரிதா, மற்ற வீராங்கனைகளாக கோபக்காரப் பெண்ணாக இந்துஜா, ஆசீட் வீச்சில் முகம் பாதிக்கப்பட்ட பெண்ணாக ரெபா மோனிக்கா, திருமணமாகி மீண்டும் அணிக்கு வந்த வர்ஷா கிடைத்த நேரத்தில் தங்களை கவனத்தில் கொள்ள வைக்கிறார்கள்.

இசை, மற்றவை

ஏஆர் ரகுமான் இசையில் ‘சிங்கப்பெண்ணே, வெற்றித்தனம்’ பாடல்கள் மட்டுமே ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் மிரட்டலாக எதுவுமில்லை. கடமைக்கு வாசித்தது போல வாசித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் விஷ்ணுவுக்குத்தான் படத்தில் அதிக வேலை. கால்பந்தாட்டப் போட்டிகளை கூடவே ஓடி ஓடி எடுத்திருக்கிறார்.

பெண்கள் தங்களுக்கு வரும் தடைகளைத் தகர்த்தெறிந்து போராட வேண்டும் என்ற கருத்து.

பல படங்களில் பார்த்த பல காட்சிகள். ஏற்கெனவே சில படங்களில் வந்த கதைகள். புதிதாக, சுவாரசியமான காட்சிகள் எதுவும் இல்லாதது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: