‘ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து’ என இரண்டு ‘ஏ’ படங்களைக் கொடுத்ததால் கொஞ்சம் ஏளனமாக விமர்சிக்கப்பட்ட இயக்குனர் சன்தோஷ் பி ஜெயகுமார் ஒரு கலகலப்பான ‘யு’ படத்தைக் கொடுத்து குடும்பத்துடன் ரசிக்க வைத்திருக்கிறார்.
ரீமேக் படம் என்றாலும் அந்த வாசம் சிறிதும் இல்லாமல் ஒரு நேரடித் தமிழ்ப் படத்தைப் பார்த்து ரசிக்கும் உணர்வே ஏற்படுகிறது. அதற்கு படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் சரியான பங்களிப்பை அளித்ததும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
சிறு வயதிலிருந்தே ஒரு விஷயத்தைச் செய்து கொண்டிருக்கும் போது, வேறு ஒரு விஷயம் குறுக்கில் வந்தால் முதலில் செய்த விஷயத்தை மறந்துவிடும் ஞாபகமறதி குணம் கொண்டவர் ஆர்யா. அதனாலேயே அவருக்கு யாரும் பெண் தர மறுக்கிறார்கள். இந்த மறதியால் ஒரு முறை சாயிஷாவின் அப்பா சம்பத்திடமும் கெட்ட பெயரை வாங்கி விடுகிறார். பின்னர் சம்பத்தின் மகள்தான் சாயிஷா என்று தெரியாமலேயே காதலில் விழுகிறார். தான்தான் அந்த ஞாபக மறதி இளைஞன் என்பதைக் காட்டாமலேயே சம்பத்திடம் நல்ல பெயரை வாங்க முயற்சித்து, காதலி சாயிஷாவைக் கரம் பிடிக்க நினைக்கிறார் ஆர்யா. அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திற்குப் பிறகு அனைவரும் ரசிக்கும்படியான கதாபாத்திரத்தில் மீண்டும் மனம் கவர்கிறார் ஆர்யா. ஞாபக மறதியால் தடுமாறுவது, அதை சமாளிக்க முயற்சிப்பது என நகைச்சுவையும் அவருக்குக் கை கொடுக்கிறது. இதற்கு முன்பெல்லாம் மற்ற காமெடி நடிகர்களின் துணையுடன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டவர், இந்தப் படத்தில் யார் துணையும் இல்லாமல் தனியாகக் கலக்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகை என்ற இடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் சாயிஷா. அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுவது அதற்குக் காரணம். நடனத்தில் அசத்துபவர், கூடவே நடிப்பிலும் அசத்தினால் அவருக்கு நல்லது. ஆடையில் அதிக கவனம் செலுத்துபவர், தலைமுடி அலங்காரத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்.
கருணாகரன், சதீஷ் திடீரென வருகிறார்கள், திடீரென காணாமல் போகிறார்கள். இருவரில் யார் ஆர்யாவுடன் அதிகக் காட்சிகளில் இருக்கிறார்கள் என மீண்டும் பார்த்து கணக்கிட வேண்டும்.
மற்ற நடிகர்களில் இந்தப் படத்தில் அதிக ஸ்கோர் செய்திருப்பவர் ஆடுகளம் நரேன். இப்படி ஒரு கலகலப்பான நடிப்பை இத்தனை நாள் எங்கு ஒளித்து வைத்திருந்தாரோ தெரியவில்லை. படத்திற்குப் படம் ஆவசேமாகக் கத்திக் கொண்டிருக்கும் சம்பத் கூட யதார்த்தமான அப்பாவாக சத்தமில்லாமல் நடித்து கவர்கிறார்.
பாலமுரளி பாலு இசையில் ‘ஆரியனே…’ பாடல் இந்த ஆண்டின் சிறந்த பாடல்களில் ஒரு இடத்தைப் பிடிக்கும். பல்லு ஒளிப்பதிவு பளிச் என இருக்கிறது. நாயகியைக் காட்டும் போது தனி கவனம் செலுத்தியிருக்கிறார் என்பது கண் கூடாகத் தெரிகிறது.
ஒரு அலுவலகம், இரண்டு வீடு என மாறி மாறி அந்த இடங்களில் மட்டுமே கதை அதிகம் பயணிப்பது கொஞ்சம் அலுப்பைத் தருகிறது. இடைவேளைக்குப் பின் சிறிதும் நேரம் ஒரு தொய்வு வருகிறது. ஆள் மாறாட்டம், பின்னர் மாட்டிக் கொள்வது என்பதெல்லாம் பழைய பார்முலாதான். இருந்தாலும் ‘கஜினிகாந்த்’ ஒரு ‘கலகலகாந்த்’ ஆக அமைந்து சிரிக்க வைத்துவிடுகிறார்.