Connect with us

Tamil Cinema News

சிவாஜியும், கமலும் ஏன் நடிப்பு ராட்சசர்கள் – அருண் வைத்யநாதன்

Published

on

சிவாஜியும், கமலும் ஏன் நடிப்பு ராட்சசர்கள் - அருண் வைத்யநாதன்

தமிழ்த் திரையுலகில் பன்முகக் கலைஞனாய், சினிமாவை நேசிப்பவர்கள் மத்தியில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் கமல்ஹாசன்.

பல புதிய தொழில்நுட்பங்களை இந்தியத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். அவரை நேசித்து அவருடைய சினிமாவால் ஈர்க்கப்பட்டு திரையுலகத்திற்குள் நுழைந்தவர்கள் பல பேர்.

இப்போது சினிமா பிரபலங்கள் ஆனாலும், தங்களை கமல்ஹாசனின் ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் அவர்கள் பெருமைப்படுபவர்கள். அப்படி ஒருவர்தான் இயக்குனர் அருண் வைத்யநாதன். நாளை கமல்ஹாசனின் பிறந்தாளை முன்னிட்டு அவருடைய முகப்புத்தகத்தில் கமல்ஹாசனைப் பற்றி அவர் பதிவிட்டிருப்பதாவது,

“சிவாஜியும், கமலும் ஓவர் ஆக்டிங் என்று பிதற்றுபவர்களைப் பார்த்தால் , அவர்கள் செய்யும் பரிகாசத்தைப் பார்த்து பரிகாசிக்கவே தோன்றுகிறது. தமிழர்கள், பெரும்பான்மையாய் உணர்ச்சிவசப்படுவதில் மன்னர்கள். 

நாம் சட்டென கொதிப்போம், சிரிப்போம், அழுவோம். அந்தந்த காலத்தில் அவரவர் நடிப்பு…சற்று மிகையே என்று சில இடங்களில் இப்போது தென்பட்டாலும், அன்றைய பொழுதில் அந்த நடிப்பு சிலாகிக்கப்பட்டதே!

திரிசூலம் தொலைபேசிக் காட்சியை பலர் கிண்டல் அடித்திருப்பதை இப்போது பார்க்கிறேன் – ஆனால், மாயவரம் பியர்லெஸ்ஸில் எழுந்த கரவொலியும், விசில் சத்தமும் இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது. தெய்வமகனில் தந்தை சிவாஜி, கையை நீட்டி…தலையை உதறி, கால்களை டப் டப்பென்று தட்டுவார்…கோபத்தில்! ஏன், நவராத்திரியில் கடைசி காட்சிகளில் பேசாமலேயே கண்களால் நடிக்கத் தெரிந்த சிவாஜிக்கு, தெய்வமகனில் அடக்கி வாசிக்கத் தெரியாதா?

உதாரணத்திற்கு பார் மகளே பார் படத்தில் ஒரு காட்சியில் சிவாஜி அழ, படப்பிடிப்பு தளமே கண்கள் கலங்கி கரகோஷம் எழுப்ப, சோ மட்டும் சிரித்தபடி வெளியே சென்றாராம்.

சிவாஜி மேக்கப் அறைக்கு கூப்பிட்டு ‘என்னடா உனக்கு பிடிக்கலையா?’ என்று கேட்டாராம். சோ உடனே ‘ஆமாம்….எதுக்கு இப்படி அழணும்…கொஞ்சம் யதார்த்தத்தை மீறி இருக்கே!’ என்று கேட்க, சிவாஜி உடனே பத்து விதமாய் அந்தக் காட்சியை யதார்த்த பாணியில் நடித்துக் காட்டினாராம். கடைசியாக ‘என் மக்களுக்கு எத்தகைய நடிப்பு சென்றடையும்’ என்று தெரியும் என்று சொன்னாராம். சோவே சிலாகித்து எழுதிய விஷயம் இது!

இதே போன்று, கமல்ஹாசனுக்கும் என்னால் ஏன் ஏதற்கு எப்படி என்று எழுத முடியும்.

They are masters – They are legends. They know exactly what they are doing!

மகாநதியில் ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால், கண்கள் கலங்க, கட்டை விரலை வாய்க்குள் பக்கவாட்டில் நுழைத்து ‘ஏன்’ என்று குரல் கமறக் கேட்கத் தெரிந்த நடிப்புத் தகப்பனுக்கு, நாயகன் தகப்பனாய் எண்பதுகளில் ஏன் ஓலமிட்டார் என்பதற்கும் ஒரு காரணம் இருந்திருக்கும். இல்லையென்றால் அந்தப் படம் இன்றளவும் அப்படி பேசப்பட்டுக்கொண்டிருக்குமா?

சச்சின் இரண்டு முறை பரிசோதனையில் ஏதேனும் ஒரு ஷாட் அடித்து அவுட் ஆகும் போது, இந்த சச்சினே இப்படித்தான் என்று சொல்வது போல் ….அவர் அதே போல பல முயற்சிகளில் எத்தனையோ பரிசோதனைகள் செய்து வெற்றி பெற்றதை மறந்து விடுவோம். அது போலத் தான், இந்த விவாதங்கள்.

சிவாஜியும், கமலும் ஏன் நடிப்பு ராட்சசர்கள் என்றால்….ஒரு கதாபாத்திரத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் விதம்.

சின்னதாய் ஒரு விஷயம் எடுத்துக் கொள்வோம்….

எல்லோரும் கொண்டாடுவோம் என்று பாவமன்னிப்பில் ஒரு பாட்டு வரும், அதில் ஆரம்பித்து ‘உன்னை ஒன்று கேட்பேன்’ பாடலில் பியானோ, சாக்ஸபோன் என்று ஒவ்வொரு வாத்தியமாய் வாசிப்பார்.

அதே போல் நம்மவர் படத்தில் கமல்ஹாசன் பியானோ வாசிப்பார், அபூர்வ ராகங்களில் மிருந்தங்கம் …பாருங்கள். அதில் ஒரு நேர்த்தியும் மெனக்கெடலும் இருக்கும் – அதற்குப் பெயர் தான் உழைப்பு. செய்யும் தொழிலுக்கு நேர்மையுடன் பணிபுரியும் ஒரு உழைப்பாளியின் நேர்த்தி.

சிவாஜி, கமல் மேல் எனக்கு விமர்சனங்கள் இல்லையா…இருக்கின்றது…. சிவாஜி தவறான கதையமைப்பில், இயக்கத்தில் சில படங்களில் எண்பதுகளின் கடைசியில் செய்ய ஆரம்பித்தார். அதே கதையமைப்பில் சிறந்து விளங்கிய கமல், வேறு எந்தக் கதையாசிரியரையும், திறமையையும் தற்போதெல்லாம் சேர்த்துக் கொள்ளத் தவறி விட்டார். அதனால் தான் ஒரு வேட்டையாடு விளையாடு பல போராட்டங்களுக்குப் பின்னர் வந்தாலும், மிகப் புதியதானதொரு பரிமாணத்தில் கமல் வெளிப்படுகிறார். முழு பாராட்டும் கௌதம் மேனனுக்கே!

தமிழ்த்திரையுலகில் சிவாஜி,கமல் இருவரும் கடைசியாக நடித்த தேவர்மகனில் ‘தந்தை-மகன்’ வாக்குவாதக் காட்சி – இன்றளவும் யதார்த்த நடிப்பின் உச்சக்கட்டம்.

தமிழ்த்திரையுலகில் எந்த நாற்காலியையும் யாருக்கு வேண்டுமானால் கொடுத்து அமரச் செய்யுங்கள். பரிசோதனை முயற்சி, கதாபாத்திரத்திற்காக தன்னை தயார் செய்து கொள்வது, வெற்றி தோல்விகளைக் குறித்து கவலைப்படாமல் முன்னேறிக்கொண்டே இருந்தது என்ற விஷயங்களை எடுத்துக் கொண்டால்…அந்த சிம்மாசனம் சிம்மக்குரலோனுக்கும், அதற்குப் பிறகு அவரது கலையுலகப் பிள்ளை கமல்ஹாசனுக்கும் தான்.

தேவர் மகன் – ஒரு திரைப்படம் மட்டுமல்ல. சிவாஜி அமர்ந்த நாற்காலியில், அதுவரை பவ்யமாய் மரியாதை காட்டும் கமல், மறைவுக்குப் பிறகு அமருவார்.

கதையைக் கேட்டவுடன் ‘நீ ஏண்டா என் நாற்காலிக்கு ஆசைப்படறே’ என்று சிவாஜி கேட்க, ‘எனக்கு அது தான் வேணும்…அது மட்டும் போதும்!’ என்று கமல் பதில் சொன்னாராம்.

ஏனெனில், கமலுக்குத் தெரியும்…அது நாற்காலி அல்ல, சிம்மாசனம்!

They are masters – They are legends. They know exactly what they are doing!

 

Tamil Cinema News

பெண்கள் வீராங்கனைகள் – நமீதா

Published

on

By

பெண்கள் வீராங்கனைகள் - நமீதா

தமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன் பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நுழைந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார்.

‘ருத்ர வீணை, அரசி, இளவரசி, பொண்டாட்டி தேவை, வாழ்க்கை’ உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில் நடித்த இவர் ‘இளவரசி’ சீரியலில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடித்தார்.

அதன்பிறகு ஒரு கட்டத்தில் தனக்கு ஃபேஷன் டிசைனிங் வேலைகளில் அதிக ஆர்வம் இருந்ததால் ஆறு வருஷத்துக்கு முன்பு, தனது கணவருடன் சேர்ந்து `PLUSH Boutique & Beauty Lounge’ கடையை சென்னையில் தொடங்கினார். இது மணமகளுக்கான ஆடைகள், மேக்கப், ஆபரணங்கள் என எல்லாமே கிடைக்கும் பிரத்யேக ஷோரூம். வெட்டிங் போட்டோகிராபியும் இதன் இன்னொரு சிறப்பம்சம். தற்போது சென்னையில் இரண்டு, மதுரையில் ஒன்று என மொத்தம் மூன்று கிளைகள் இருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்தும் கூட பலரும் சந்தோஷியிடம் பயிற்சிக்கு வருகின்றனர்.

இந்தநிலையில் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் குறித்த செமினார் நிகழ்ச்சி ஒன்றை நேற்று (நவ-17) சென்னையில் பிரபலமான ஐடிசி சோழா ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடத்தினனார் சந்தோஷி.

இந்த நிகழ்வில் பிரபல நடிகை நமீதா, ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளான டில்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால், சின்னித்திரை நடிகைகள் ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரக்சிதா தினேஷ், ‘ரோஜா’ புகழ் பிரியங்கா, பிரபல மாடல் பிராச்சி சோலங்கி, பிக்பாஸ் (தெலுங்கு) புகழ் ஷியாமளா, நடிகையும் தொகுப்பாளருமான பரினா, உதவி இயக்குனரும் விடிலிகோ மாடலுமான ரம்யா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வின்போது இதில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களின் பேஷன் வாக் நடைபெற்றது. அதற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த நிகழ்ச்சி குறித்த தங்களது கருத்துக்களையும் அனைவரும் பகிர்ந்துகொண்டனர்.

சந்தோஷி பேசும்போது,

“கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்ததுடன் பல சீரியல்களிலும் நடித்தேன். சினிமா, சீரியல் இவற்றைத் தாண்டி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மிகச்சிறிய அளவில் பொட்டிக், பெண்களுக்கான சலூன், கல்யாண பெண்களுக்கான மேக்கப், அவர்களுக்கான உடை, வெட்டிங் போட்டோகிராபி என ஒரு சிறிய கடையாக ஆரம்பித்து இன்று ஆழ்வார்திருநகர், வடபழனி, மதுரை கேகே நகர் என மூன்று கிளைகளை உருவாக்கியுள்ளேன்.

இந்த ஏழு வருடங்களில் செமினார் பண்ண வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் அப்படி செய்தால் ஏதாவது புதுமையாக செய்யவேண்டும் என்று நினைத்தேன். அது நிறைவேறிய நாள் இன்றுதான். இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக நடத்த எனக்கு கைகொடுத்து உறுதுணையாக இருந்தவர் நடிகை நமீதா தான். இப்படி ஒரு செமினார் நடத்தப்போவதாக கூறியதும் எங்களுடைய உடைகள், ஆபரணங்கள் அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றை அணிந்து அவற்றை பிரபலப்படுத்த தயாராக முன்வந்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு எங்களது மேக்கப் செமினாருக்கு ஒத்துழைத்த லட்சுமி அகர்வால், டெல்லியிலிருந்து இதற்காகவே வந்துள்ளார். அவருக்கும் எனக்கும் முன்பின் தொடர்பு கிடையாது. இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் அவரை தொடர்பு கொண்டேன். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு, இதில் என்னுடைய மேக்கப் கலையின் திறமையை காட்டுவதற்கு லட்சுமி அகர்வால் ஒரு பொருத்தமான நபராக இருப்பார் என அவரை அழைத்தேன். அவரும் ஒப்புக்கொண்டு இங்கே வருகை தந்திருக்கிறார்.

இவரது வாழ்க்கை வரலாறைத்தான் தற்போது தீபிகா படுகோனே நடிப்பில் இந்தியில் படமாக எடுத்து வருகிறார்கள். விரைவில் அந்த படம் வெளியாக இருக்கிறது. அவருக்கு இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமா அதற்கு அனுமதி இருக்கிறதா என்பது கூட எங்களுக்கு தெரியாது. ஆனாலும் என் அழைப்பை ஏற்று அவர் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டுள்ளார். இவர்கள் தவிர இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த மற்ற அனைவருக்கும் நன்றி,” என்றார் சந்தோஷி.

ரக்சிதா தினேஷ் பேசும்போது,

“8 வருடத்திற்கு மேலாக சந்தோஷியுடன் எனது நட்பு தொடர்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சந்தோஷி மீது வைத்துள்ள அன்பும் மரியாதையும் தான் காரணம். இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டது பெருமையாக இருக்கிறது,” என்றார்

சின்னத்திரை சீரியலில் ரோஜாவாக வலம்வரும் பிரியங்கா பேசும்போது,

‘தமிழில் முதன்முறையாக நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுதான்,” என்றார்.

சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ரம்யா பேசும்போது,

‘இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்போவதாக சந்தோஷி என்னிடம் கூறி இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொண்டால் உங்களைப் பார்த்து பலருக்கு உற்சாகஙம தூண்டல் ஏற்படும் என்று கூறினார். நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. என்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்வதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னை இன்னும் அழகாக மாற்றியிருக்கிறார் சந்தோஷி.” என்றார்.

லட்சுமி அகர்வால் பேசும்போது,

“இங்கு யாரையும் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்வதற்கு, பாதிக்கப்பட்டவர்களாக பரிதாபப்படுவதற்கும் யாருக்கும் உரிமை இல்லை. 2005ல் என் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடைபெற்றது. இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக பிறந்து வாழ்வது தான் மிகப்பெரிய கஷ்டம். அதிலும் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு வாழ்வது என்பது கடினமான ஒன்று.

2009 வரை முகத்தை மறைத்தபடி தான் எங்கும் சென்று வந்தேன். ஆனால் அதன் பிறகுதான் நான் ஒன்றும் கிரிமினல் இல்லையே எதற்காக முகத்தை மூடி மறைக்க வேண்டும். யாருக்கெல்லாம் என்னைப் பார்த்து அசிங்கமாக தோன்றுகிறதோ முதலில் அவர்கள்தான் தங்களைப் பார்த்து அசிங்கப்பட்டுக் கொள்ளவேண்டும் என முடிவெடுத்தேன். ஆசிட் வீச்சால் தாக்குதலுக்கு ஆளானது ஒருமுறைதான். ஆனால் இந்த சமூகத்தில் அதை சுட்டிக்காட்டியே பலமுறை நான் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறேன்.

ஆனால் அதையெல்லாம் தகர்த்து எறிந்து அதிலிருந்து வெளியே வந்து உங்கள் முன் தைரியமான ஒரு பெண்ணாக நான் நின்று கொண்டிருக்கிறேன். மேக்கப் என்பது ஒரு பெண்ணுக்கு அழகு தான் என்றாலும் மனசு அழகாக இருந்தால் முகத்தில் அது தானாக தெரியும். அதனால் நான் எப்போதும் இந்த அழகாகவே உணர்கிறேன்,” என்றார்.

நடிகை நமீதா பேசும்போது,

‘ராஜஸ்தான் மாநிலத்தில் பிப்லாந்திரி என்கிற ஒரு சாதாரண கிராமத்தில் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது அதை கொண்டாடும் விதமாக 111 மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்க்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இதுபோன்று முயற்சி. இயற்கையை பாதுகாக்கும் முயற்சி மட்டுமல்ல. மொத்த கிராமத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் ஒரு விஷயமும் கூட. அந்தவகையில் ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் விதமாக பிறக்கிறாள்..

பெண்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. பெண்கள் வாழப் பிறந்தவர்கள், வீராங்கனைகள், இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். என்னைப் பொருத்தவரை இந்த நிகழ்ச்சியில் நான் நிகழ்ச்சியின் பிரதான நபர் கிடையாது, நான் அழகு ராணி கிடையாது. லட்சுமி அகர்வாலும் ரம்யாவும் தான் இதற்கு தகுதியானவர்கள். வரலாற்றில் இவர்கள்தான் ஜாம்பவான்கள் என போற்றப்படுவார்கள். அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

நான் இதற்கு முன்பு மிகப்பெரிய ஜாம்பவான்கள் வீற்றிருக்கும் மேடையில் இருந்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் இல்லாத அளவுக்கு இன்று தான் உண்மையிலேயே நான் பெருமையாக உணர்கிறேன்” என்று கூறினார்.

Continue Reading

Tamil Cinema News

கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’

Published

on

By

கார்த்தி, ஜோதிகா நடிக்கும் தம்பி - 4 Tamil Cinema

வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் மைன்ட்ஸ் தயாரிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘தம்பி’ எனப் பெயரிட்டுள்ளார்கள்.

கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படத்திற்குப் பிறகு ஜீத்து தமிழில் இயக்கும் படம் இது. ‘96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கார்த்தி அவருடைய அண்ணி ஜோதிகாவின் தம்பியாக இந்தப் படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு, முதல் பார்வையை இன்று வெளியிட்டார்கள்.

சீமான் இயக்கத்தில் மாதவன் நடிக்க 2005ம் ஆண்டு ‘தம்பி’ என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்துள்ள- மீண்டும் அந்தப் பெயரை 14 வருடங்களுக்குப் பிறகு வைத்துள்ளனர்.

இப்படம் தெலுங்கில் ‘தொங்கா’ என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.

படத்தை டிசம்பர் 2019ல் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

Continue Reading

Tamil Cinema News

விஷால் நடிக்கும் ‘சக்ரா’

Published

on

By

விஷால் நடிக்கும் சக்ரா - 4 Tamil Cinema

விஷால் பிலிம் பாக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் எம்எஸ் ஆனந்தன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஷால், ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘சக்ரா’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் பார்வையை இன்று இயக்குனர் கௌதம் மேனன் வெளியிட்டார்.

படம் பற்றி இயக்குனர் ஆனந்தன் கூறுகையில்,

“குடும்ப உணர்வுகளோடு, தொழில் நுட்பம் சார்ந்த ஆக்ஷன் திரில்லர் மற்றும் தேசபக்தியோடு உருவாகும் படம் தான் ‘சக்ரா’.

தொழில் நுட்பம் சார்ந்தது என்பதால் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுப் படமாகவும் இருக்கும்.

அறிமுக இயக்குநருக்கு முதல் படத்திலேயே பெரிய நாயகன் கிடைப்பது அதிர்ஷ்டம். அதிலும், விஷால் நாயகனாக கிடைத்தது என்னுடைய மிகப் பெரிய அதிர்ஷ்டம்.
ஒரு இயக்குநராக ‘சக்ரா’ படத்திற்கு கதை எழுதும்போதே இந்த மிலிட்டரி அலுவலர் கதாபாத்திரத்திற்கு முதலில் தோன்றியது விஷால் தான். ஏனென்றால், இப்படியொரு வலிமையான கதாபாத்திரத்தை படம் முழுக்க சிதையாமல், ஆர்ப்பாட்டமில்லாமல் பக்குவமாகக் கையாளும் திறமை வாய்ந்தவர் விஷால். அதேபோல், விஷாலும் சிறப்பாக நடித்து வருகிறார்.

விஷால் எதற்காக மிலிட்டரி அலுவலராக இருக்கிறார் என்பதற்கு முக்கிய காரணம் இருக்கும். கதையோடு சேர்ந்து ஒரு புள்ளியில் இணையும். அது படம் பார்க்கும் போது தான் புரியும். மேலும், பெண் காவல் துறை அதிகாரி பாத்திரம் இருக்கிறது. அதை நான் உருவாக்கிய கதாபாத்திரமாக பார்க்க வேண்டுமென்றால், வித்தியாசமான முக அமைப்பு கொண்ட நடிகையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஷ்ரத்தா ஸ்ரீனிவாஸ் தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கதாபாத்திரத்தைப் பற்றி கூறினேன். அவரும் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார்/

பொதுவாக ஒரு இயக்குநருக்கு கதை எழுதும் போது அப்படியே அதைக் காட்சி படுத்துதல் என்பது எளிதானதல்ல. எனக்கும் அப்படித்தான். ஆனால், எனது ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் ஒவ்வொரு காட்சியும், நான் எழுதியதை அப்படியே காட்சிப்படுத்திய தருணங்கள் மறக்க முடியாதவை.

சென்னையில் நடக்கும் கிரைம் கதை என்பதால் சென்னை மற்றும் கோயம்பத்தூரில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கிறது. 2020-ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

ரெஜினா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரோபோ ஷங்கர், ஸ்ருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா, மனோபாலா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு ஷமீர் முகமதுவும், சண்டை பயிற்சியை அனில் அரசும், கலையை எஸ்.கண்ணனும் கவனிக்கிறார்கள். உடைகள் – சத்யா, பல்லவி சிங், ஜெயலட்சுமி சுந்தரேசன் பகிர்ந்து கொள்கிறார்கள். மக்கள் தொடர்பு ஜான்சன் மற்றும் தயாரிப்பு மேற்பார்வை ஆண்டனி சேவியர்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: