Connect with us

Tamil Cinema News

‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷைப் புகழும் படக்குழுவினர்

Published

on

kanaa press meet news

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’.

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இணை தயாரிப்பாளர் கலையரசு பேசுகையில்

“கனா எங்கள் பேனரில் நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். எந்த ஒரு படத்தையும் பட்ஜெட்டில் எடுத்தால் தான் அது தயாரிப்பாளருக்கு சரியாக அமையும். இந்த படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், எங்களுக்கு கிடைத்த வரம். சின்ன படமாக இருந்த இந்த கனா, சத்யராஜ் சார் நடிக்க உள்ளே வந்தவுடன் பெரிய படமாகி விட்டது. சத்யராஜ் சாரை எல்லோரும் கட்டப்பா என்று தான் அழைக்கிறார்கள். இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு முருகேசன் என்று எல்லோரும் அழைப்பார்கள் என நம்புகிறேன். விளையாட்டே தெரியாமல் ஒரு கிரிக்கெட் வீராங்கணையாக ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். நாங்கள் வியர்வை சிந்தி உழைத்தால், ஐஸ்வர்யா ராஜேஷ் ரத்தம் சிந்தி வேலை பார்த்திருக்கிறார்,” என்றார்.

நடிகர் இளவரசு பேசும் போது,

“இந்த படத்தின் மீது எனக்கு ரொம்பவே காதல், இந்த படம் ரிலீஸுக்கு ரொம்ப நாளாகவே காத்திருக்கிறேன். ஒரு மகள் எந்த விஷயத்தை ஆசைப்பட்டாலும்  அதை அவரது தந்தை எப்பாடுபட்டாவது செய்து கொடுப்பார். இந்த படம் எல்லோருக்கும் அந்த உணர்வை கொடுக்கும். ஐஸ்வர்யா ராய் போல ஐஸ்வர்யா ராஜேஷ் புகழ் பெற வேண்டும், அந்த அளவுக்கு கடினமாக உழைத்திருக்கிறார்,” என்றார்.

எடிட்டிர் ரூபன் பேசுகையில்,

“என் நண்பர்கள் அருண், சிவா, கலை ஆகியோருக்காக இந்த படத்தில் வேலை செய்திருக்கிறேன். விவசாயமும் தெரியாது, கிரிக்கெட்டும் தெரியாது நான் எப்படி இந்த படத்தை எடிட் செய்வது என்று கேட்டேன், ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் தெரியாமல் நாயகியாக நடிக்கிறார், வாங்க என அழைத்தார் அருண்ராஜா. சத்யராஜ் சார் கதாபாத்திரம் மாதிரி ஒரு தந்தை இருந்தால் எல்லோருடைய கனாவும் இன்னும் சீக்கிரமே நிறைவேறும்,” என்றார்.

சவுன்ட் மிக்சர் சுரேன் பேசும் போது,

“சிவகார்த்திகேயன் முதல் தயாரிப்பில் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது. கனா ஒரு விளையாட்டை மையப்படுத்திய படம் என்பதால் சவுண்ட் டிபார்ட்மெண்டில் நிறைய வேலை பார்க்க வேண்டியிருந்தது. நிறைய சவால்கள் இருந்தன, இசையமைப்பாளர் திபு ஸ்போர்ட்ஸ் படத்துக்கு ஏற்றவாறு மிகச்சிறந்த இசையை வழங்கியிருக்கிறார்,” என்றார்.

நடிகர் தர்ஷன் பேசுகையில்,

“என் சினிமா ஆசையை நிறைவேற்றியது  சிவகார்த்திகேயன் அண்ணன் தான். இந்த படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒரு நாள் திடீரென சிவா அண்ணா படத்தில் நான் நடித்த காட்சிகளை பார்த்து விட்டு, நான் நினைத்ததை விட நல்லா நடிச்சிருக்க என சொன்னார், அதுவே எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது,” என்றார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் போது,

“நான் கடுமையா உழைச்சிருக்கேன்னு எல்லோரும் சொல்றாங்க. கடுமையா உழைக்கணும்னு ஆசை மட்டும் தான் எனக்கு இருக்கு, ஆனால், அதை சாத்தியப்படுத்த அருண்ராஜா முதல் இந்த குழுவின் நிறைய நண்பர்கள் தான் என்னை உந்தி உழைக்க வைத்தார்கள். என்னுடைய அப்பா இருந்தால் சத்யராஜ் சார் மாதிரி தான் இருந்திருப்பார் என நினைக்கிறேன், என் அப்பா ஸ்தானத்தில் தான் அவரை வைத்து பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு நடிகராக வருவார் தர்ஷன். தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும். எடிட்டர் ரூபன் படத்தை பார்த்து ரொம்ப நல்லாருக்குனு சொல்லிட்டார். அங்கேயே வெற்றி உறுதியாகி விட்டது. தயாரிப்பாளர் கலையரசு சார் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க இன்னமும் கடுமையாக உழைத்து வருகிறார்,” என்றார்.

சத்யராஜ் பேசுகையில்,

“படம் நன்றாக இருந்தால் மக்களே படத்தைக் கொண்டு சேர்ப்பார்கள். அதை புகழ்ந்து பேசி பயனில்லை. கிரிக்கெட் தெரியாமல், அதை கற்றுக் கொண்டு நடிப்பது மிகப்பெரிய சவால். ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய உழைப்பை கொடுத்திருக்கிறார். சினிமா தெரிந்த ஒரு படைப்பாளி ஜெயிக்கும்போது அது சினிமாவுக்கு நல்லது. அருண்ராஜா காமராஜ் அப்படிப்பட்ட ஒரு இயக்குனர். விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்கள் எங்கு போனாலும் வெற்றி பெறும். இந்த படம் தங்கல் மாதிரி சீனாவிலும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன்,” என்றார்.

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பேசும் போது,

“சின்ன பட்ஜெட்டில் நிறைய கதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு நாள் சிவா என்னிடம் கதை இருக்கா, நல்ல பெரிய கதையா இருந்தா சொல்லு என்றார். 3 கதைகள் தயார் செய்தேன், அதில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்தக் கதையை அவரிடம் சொன்னேன். அவருக்கு பிடித்துப் போய் தயாரிக்க முடிவு செய்தார். எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்பதை கூட சிவகார்த்திகேயன் என்னிடம் சொல்லவில்லை. நினைச்சத எடுங்க, நான் பார்த்துக்குறேன்னு சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார்.

என்னை இயக்கியது எல்லாமே என் நண்பர்கள் தான். அவர்கள் ஆதரவு இல்லாமல் நான் இந்த நிலையில் இல்லை. கௌசல்யா முருகேசன் என்ற பெண்ணின் வாழ்க்கைப் பயணம் தான் இந்த கதையை நகர்த்தி செல்லும். ஐஸ்வர்யா ராஜேஷ் உழைப்பு அபரிமிதமானது. கிரிக்கெட் மேட்சை இதுவரை சினிமாக்களில் காட்டாத வகையில் நாம் திரையில் கொண்டு வர வேண்டும் என நானும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனும் முடிவு செய்தோம். சத்யராஜ் சார் என்னை நிறைய தாங்கினார். எனக்கு தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுத்தார்.
வாயாடி பெத்த புள்ள பாடல் 70 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது என்றால் அதற்கு ஜிகேபி எழுதிய, எளிமையான பாடல் வரிகளும் தான் முக்கிய காரணம்,” என்றார்.

இந்த சந்திப்பில் நடிகர் முனீஷ்காந்த், சவுண்ட் டிசைனர் அழகிய கூத்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tamil Cinema News

அசுரன் – வியந்து பாராட்டும் இயக்குனர் வசந்தபாலன்

Published

on

By

அசுரன் - வியந்து பாராட்டும் இயக்குனர் வசந்தபாலன்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘அசுரன்’ படம் 100 நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

அப்படம் பற்றி இயக்குனர் வசந்தபாலன் அவருடைய முகப்புத்தகத்தில் வியப்பான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில்,

பூமணி அவர்கள் எழுதிய வெக்கை நாவல் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக மலர்ந்து 100 நாட்கள் கடந்து விஸ்வரூப வெற்றி அடைந்திருப்பதை பார்க்கிறபோது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு கேகே நகர் அறையில் நானும் இயக்குனர் லிங்குசாமி உட்பட்ட சில திரைப்பட நண்பர்களும் வெக்கை நாவலை திரைப்படம் ஆக்குவது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். இது சிறிய கதையாக இருக்கிறது இதை எப்படி திரைப்படமாக மாற்றுவது என்று அதுகுறித்து பலவாறு யோசித்த வண்ணம் இருந்தோம். கடைசியில் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன்பிறகு பல்வேறு சமயங்களில் நான் அடுத்த திரைப்படம் இயக்குவதற்கான சூழ்நிலை வரும்போது என்னுடைய நண்பன் வரதன் வெக்கை நாவலை திரைப்படமாக்கலாம் என்று கூறிக் கொண்டே இருப்பான்.

சிறிய கதையாக இருக்கிறது அதை விரிவாக ஆக்குவது எப்படி என்று தொடர்ந்து விவாதிப்போம். திட்டம் அவ்வப்போது கையில் எடுக்கப்பட்டு கைவிடப்படும் . என்னை போன்று திரை உலகம் முழுக்க வெக்கை நாவலை திரைப்படமாக ஆக்குகிற முயற்சிகள் தொடர்ந்து கையில் எடுக்கப்பட்டு கைவிடப்பட்டுக் கொண்டே இருந்தது.

ஒருசமயம் நடிகர் சத்யராஜ் அவர்கள் நடிக்க இருப்பதாக இருந்து திரைப்படம் கைவிடப்பட்டதாக திரை உலகத்தில் பல கதைகள் உலவும். நானும் விருதுநகர் செல்லும்போதெல்லாம் கோவில்பட்டிக்கு சென்று எழுத்தாளர் பூமணியை சந்தித்து வெக்கை நாவலை திரைப்படம் ஆக்குவது குறித்து உரையாடியிருக்கிறேன்.அவரும் திரைப்படமாக மாறினால் சந்தோஷம் என்று ஒரு விட்டேத்தியான மனநிலையோடு அந்த பேச்சைத் தொடர்வார் ஆனாலும் அவருக்குள் வெக்கை நாவல் திரைப்படமாக ஆகவேண்டும் என்ற எண்ணம் மிக வலுவாக இருந்தது.

அப்பொழுது சுசீந்திரன் அவர்கள் இயக்கத்தில் பாண்டிய நாடு திரைப்படம் வெளிவந்து இருந்தது. ஏறக்குறைய வெக்கை நாவலின் பல்வேறு கூறுகள் வேறு வடிவத்தில் பாண்டிய நாடு திரைப்படத்தில் இருப்பதை பரவலாக நண்பர்கள் அனைவரும் பேசிக் கொண்டோம்.பாண்டியநாடு திரைப்படத்தின் திரைக்கதை மூத்த மகன் கொலைக்கு, தந்தையும் இளைய மகனும் தனித்தனியாக பழி வாங்குவதாக அமைந்திருக்கும். ஆகவே இனிமேல் வெக்கை நாவலை திரைப்படம் ஆக்குவது குறித்து யோசிப்பது வீண் என்று என் நண்பர்கள் உட்பட நானும் அந்த முடிவுக்கு வந்துவிட்டோம்.

எழுத்தாளர் பூமணி அவர்களை சந்தித்தபோது பாண்டியநாடு திரைப்படத்தின் கதையை அவரிடம் விவரித்தேன். பூமணி மிகவும் வருத்தத்துக்கு உள்ளானார். இந்த சமயத்தில்தான் வெக்கை நாவலை வெற்றிமாறன் திரைப்படமாக எடுப்பது குறித்த அறிவிப்பு வெளியானது. மிகப்பெரிய ஆச்சரியமும், மிகப்பெரிய எதிர்பார்ப்பும் என்னிடம் உருவானது. எப்படி வெக்கை நாவலை ஒரு திரைப்படமாக வெற்றிமாறன் உருவாக்கப் போகிறார் என்ற பல்வேறு ஆச்சரியங்களும் கேள்விகளும் என் மனதில் சுழன்ற வண்ணம் இருந்தன. சிறிய கதையை வைத்துக்கொண்டு இவர் எப்படி திரைப்படமாக மாற்றுவார் என்று நான் யோசித்துக் கொண்டே இருந்தேன்.

பொல்லாதவன் திரைப்படம் கமர்ஷியல் தன்மையுடன் உள்ள திரைப்படம் அதன் திரைக்கதை வேறு வகை சேர்ந்தது. ஆடுகளம் திரைப்படத்தின் திரைக்கதையும் விசாரணை படத்தின் திரைக்கதையும் ஒரே வடிவமைப்பைக் கொண்டவை. வெற்றிமாறன் இரு சிறுகதைகளை ஒரே நேர்கோட்டில் இணைப்பதில் தேர்ந்தவர். .

ஆடுகளத்தில் பேட்டைக்காரனுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் நடக்கும் சண்டையை முதல் பாதியிலும் குருவுக்கும் சீடனுக்கும் நடக்கிற சண்டை இரண்டாம் பாதியிலும் அமைந்திருக்கும். அதே போன்று விசாரணை திரைப்படத்திலும் ஆந்திரா காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட இளைஞர்களை இன்ஸ்பெக்டர் மீட்பது முதல் பாதியிலும் , இரண்டாம் பாதியில் காவல் நிலையத்தை சுத்தம் செய்ய வந்த இளைஞர்கள் எப்படி என்கவுண்டர் செய்யப்பட்டனர் என்பது விவரிக்கப்பட்டிருக்கும்..

இப்படி திரைக்கதையில் இரு வேறு சம்பவங்களை அல்லது கதைகளை ஒன்றாக இணைத்து ஒரே திரைக்கதையாக எழுதுகிற ஆற்றல் வெற்றிமாறனுக்கு மிக எளிதாக கைகூடி வந்திருக்கிறது.வெற்றிமாறனுடைய கடந்த நான்கு படங்களை நாம் கூர்ந்து பார்க்கும் போது ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு மிக அழகாக திரைக்கதை அமைந்திருப்பதை கண்டிருக்கிறோம்.

ஒரு பைக் திருடு போன கதையை மட்டும் வைத்துக்கொண்டு பொல்லாதவன் மிக அழகான கமர்சியல் திரைக்கதையாக மாற்றியது. சேவற்சண்டையை வைத்துக்கொண்டு ஆடுகளம். அப்பாவி இளைஞர்கள் குற்றவாளிகளாக எப்படி ஆக்கப்படுகிறார்கள் என்பது விசாரணை. வடசென்னையை எடுத்துக்கொண்டால் பல்வேறு கதாபாத்திரங்களுடைய கதையை ஒரே நேர்கோட்டில் இணைக்கிற லாவகம் வெற்றிமாறனுக்கு எளிதாகவே உள்ளது.

ஆகவே வெக்கை நாவலை வெற்றிமாறன் மிக அழகான திரைக்கதையாக மாற்றி விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. திரைப்படம் வெளியான நாளில் திரைப்படத்தைக் கண்டபோது, அவர் விசாரணையிலும் ஆடுகளத்திலும் கையாண்ட அதே யுக்தியை அசுரன் திரைப்படத்திலும் கையாண்டு இருப்பதை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது.

முதல் பாதி வெக்கை இரண்டாவது பாதி கீழ் வெண்மணி சம்பவம் மற்றும் பஞ்சமி நில மீட்பு என்று இருவேறு கதைகளை ஒரே நேர்கோட்டில் உணர்ச்சிகள் மாறாமல் கதையின் கருத்து மாறாமல் நிலம் சம்மந்தமான பிரச்சனையை அடிநாதமாக வைத்துக் கொண்டு மொத்த கதையையும் அழகாக எழுதியிருந்தார்.

திரைக்கதை அமைப்பில் மட்டுமல்ல அந்த படத்திற்கான படமாக்கத்திலும் உணர்வுக் கடத்தலை பார்வையாளனுக்கு கடத்தியது தான் வெற்றி. இந்த காலகட்டத்தில் அசுரனுடைய வெற்றி என்பது மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன் ஏனெனில் தமிழ் மண் மணத்துடன் கூடிய தமிழ் வாழ்க்கையை மிக அழகாக பதிவு செய்தது.

ஒரு நாவலில் இருந்து ஒரு தமிழ்த்திரைப்படம் உருவாவது மிக மிக ஆரோக்கியமான விஷயம். நாளைய உதவி இயக்குனர்களுக்கு புதிய வழிகாட்டியாக அசுரன் மாறி இருக்கிறது.

தமிழ்ச்சிறுகதைகள், தமிழ் நாவல்களில் இருந்து திரைப்படங்கள் உருவாக்குகிற புதிய பாணியை ( பழைய பாணி தான்.ஆனால் அசுரன் வெற்றி அதை புதிய பாணியை பார்க்க வைக்கிறது.) வெற்றிமாறன் வெற்றிகரமாக நிறுவியிருக்கிறார்.

அசுரன் திரைப்படத்தின் மூலம், அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவர் அடுத்து இயக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தைக் காண கோடிக்கண்களுடன் காத்திருக்கிறேன்,” என வியந்து பாராட்டியிருக்கிறார்.

 

Continue Reading

Tamil Cinema News

மாஸ்டர் – வாங்கியது யார், யார் ?

Published

on

By

விஜய் நடிக்கும் மாஸ்டர் - படப்பிடிப்பில்... 4 Tamil Cinema

எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.

இப்படத்தின் வினியோக உரிமையை யார், யார் வாங்கியிருக்கிறார்கள் என்பதை பட நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாய் அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள படத்தின் வியாபாரத்தை ஜனவரி மாதத்திலேயே முடித்து திரையுலக வட்டாரங்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள்.

சென்னை ஏரியா

ஸ்ரீ கற்பக வினாயகா பிலிம் சர்க்யூட்ஸ்

செங்கல்பட்டு

தனம் பிக்சர்ஸ்

வட ஆற்காடு, தென்னாற்காடு

கே.செந்தில் (5 ஸ்டார்)

சேலம்

ஸ்ரீராஜ் பிலிம்ஸ்

கோவை

கந்தசுவாமி ஆர்ட்ஸ் சென்டர் பிலிம் டிஸ்டிரிபியூட்டர்ஸ்

திருச்சி, தஞ்சாவூர்

பிளஸ் மேக்ஸ் பிலிம்ஸ்

மதுரை

சுஷ்மா சினி ஆர்ட்ஸ்

திருநெல்வேலி, கன்னியாகுமரி

ஸ்ரீ சாய் கம்பைன்ஸ்

கேரளா

மலபார், கொச்சின்

பார்ச்சூன் சினிமாஸ்

திருவாங்கூர்

மேஜிக் பிரேம்ஸ்

ஆந்திரா, தெலங்கானா

ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன்ஸ்

கர்நாடகா

தீரஜ் என்டர்பிரைசஸ்

Continue Reading

Tamil Cinema News

‘மூக்குத்தி அம்மன்’ – 90 சதவீத படப்பிடிப்பு நிறைவு

Published

on

By

மூக்குத்தி அம்மன் - 90 சதவீத படப்பிடிப்பு நிறைவு

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன் இணைந்து இயக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’.

நயன்தாரா இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். மௌலி, ஊர்வசி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு 44 நாட்களில் 90 சதவீதம் முடிந்துவிட்டது.

‘அவள்’ படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ‘தானா சேர்ந்த கூட்டம்’” பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி ஆர்ஜே பாலாஜி கூறுகையில்,

“ஐசரி கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் நம் பக்கம் இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருக்கும் போது நாம் படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைகொள்ள வேண்டிய ஒரே விஷயம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அளவில்லா சுதந்திரத்தை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்பது தான். அதைப் படக்குழு தெளிவாக உணர்ந்து வேலை செய்திருக்கிறோம்.

படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவது ஒன்று தான் எங்கள் குறிக்கோள். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாகப் பூர்த்தி செய்வோம். மொத்த படக்குழுவும் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நவம்பர் 29, 2019 அன்று படப்பிடிப்பை துவக்கி 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். இன்னும் ஒரே ஒரு வார சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம்.

இயக்குநர் என்ஜ சரவணன் இல்லையென்றால் இத்தனை சீக்கிரம் படப்பிடிப்பை முடித்திருக்க முடியாது. அவரது உழைப்பு அபாரமானது. நயன்தாரா இப்படத்திற்காக தந்திருக்கும் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இந்த கதாபாத்திரத்திற்காக அவர் விரதம் இருந்திருக்கிறார். தன் முழு ஆத்மாவையும் ஒருங்கிணைத்து பணிபுரிந்திருக்கிறார். இப்படம் அவர் சினிமா வாழ்வில் வெகு முக்கியமான படமாக என்றென்றும் நிலைத்திருக்கும். மேலும் அவரது கதாபாத்திரம் படத்திற்கு பெரும் பலமாகவும் இருக்கும்,” என்றார்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: