Connect with us

Tamil Cinema News

காதலில் மிரட்ட வரும் ‘மெஹந்தி சர்க்கஸ்’

Published

on

காதலில் மிரட்ட வரும் மெஹந்தி சர்க்கஸ்

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சரவண ராஜேந்திரன் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி மற்றும் பலர் நடிக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ்.

விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அப்பா ஈஸ்வரன் பேசியதாவது,

“இந்தப் படத்தை தயாரித்த என் மகனுக்கு முதல் நன்றி. இந்தக் கதையை ராஜு முருகனும் அவரது அண்ணன் சரவண ராஜேந்திரனும் சொன்னார்கள். சொன்ன போதே வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். இந்தப் படம் ஒரு காதல் காவியம். இன்று எத்தனையோ பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இந்தப்படம் அதற்கு மாற்றாக இருக்கும்.

நிச்சயமாக இந்தப்படம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து இந்தப் படத்தை இளைஞர்கள் தியேட்டரில் வந்து காணவேண்டும். படத்தில் பணியாற்றிய அனைவரும் அருமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் மிகப் பெரிய பெயரை சம்பாதிக்கும்,” என்றார்.

அம்மா கிரியேஷன் சிவா பேசுகையில்,

“ஞானவேல் ராஜாதான் நல்லா பேசுவார் என்றால் அவரை விட அவர் அப்பா நன்றாகப் பேசுகிறார். இந்தப் படத்தை வெளியிடும் சக்திவேலை நான் இரண்டாம் திருப்பூர் சுப்பிரமணியன் என்பேன். இந்த மெஹந்தி சர்க்கஸின் இன்னொரு நம்பிக்கை என்னவென்றால் ராஜு முருகனின் கதை. இந்தப் படத்தின் பாடல்கள் மிக அற்புதமாக வந்திருக்கிறது. இந்த மெஹந்தி சர்க்கஸ் பெரிய வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகிறேன்,” என்றார்.

ஆர்.ஜே விக்னேஷ் காந்த் பேசியதாவது,

“மெஹந்தி சர்க்கஸ் ஒரு சுகமான அனுபவம். ஒரு சாமானியனின் காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளை இரண்டு மணி நேரம் ஜாலியாக வைத்திருப்பது சர்க்கஸ் கலை தான். அந்தக் கலை இப்போது அழிந்து வருகிறது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம். அப்படியொரு கலையை சினிமாவில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஷான் ரோல்டன் இசையில் வச்சி செய்திருக்கிறார். ராஜா சார் இசை ஒரு இடத்தில் வருகிறது. ஷான் ரோல்டன் இசை ஒரு இடத்தில், இரண்டுமே கேட்க நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தின் செளக்கிதார் இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்குநரின் செளக்கிதார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளரின் செளக்கிதார் படத்தை வெளியீடும் சக்திவேல் சார் அவர்கள். எதற்காக இப்படி அரசியலைப் பேசுகிறேன் என்றால் இந்தப்படத்தில் என் கேரக்டர் அப்படி,” என்றார்.

இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில்,

“மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா சார் தான். அவரின் இசை தான் இந்தப்படத்திற்கு இன்புட். என்னைப்பொறுத்தவரைக்கும் நல்ல மியூசிக் என்பது நல்லா இருக்கிற மியூசிக் தான். இளையராஜா சாரின் இசை இன்னும் 50 வருடம் கழித்தாலும் அப்படியே இருக்கும். ஒரு படம் வெற்றி அடைய வேண்டுமானால் இரண்டு விசயம் முக்கியம். ஒன்று படம் பெரிதாக சத்தம் போட வேண்டும். இல்லை என்றால் மொத்த மீடியாவும் படத்தைக் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடும் படமாக மெஹந்தி சர்க்கஸ் இருக்கும். இயக்குநருக்கு என்னுடைய நன்றிகள். என் படத்தின் பாடல்களில் 50% உழைப்பு இயக்குநரின் உழைப்பு. ஹீரோ ரங்கராஜ் முதல் முறை நடித்த நடிகர் போல இல்லை. மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னும் பத்து வருடம் கழித்தாலும் இந்தப்படம் மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன்” என்றார்

பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது,

“ஒரு மகிழ்ச்சியான நெகிழ்வான மனநிலையில் இருக்கிறேன். இந்தப் படம் உண்மையாக வந்திருக்கிறது. ரொம்ப சின்ன வயதில் வெட்டா ஆற்றங்கரையில் நான் சரவண ராஜேந்திரன் எல்லாம் அரசியல் இலக்கியம் என்று பேசிக்கொண்டிருப்போம். அப்போது சரவண ராஜேந்திரன் சொன்னார். ராஜு முருகன் கதை எழுதி நீ பாட்டெழுதி நான் படம் இயக்கணும் என்று. அன்று விளையாட்டாக பேசியது இன்று நிஜமாகியுள்ளது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் இயக்குநர் நிதானமானவர் என்று சொன்னார்கள். இந்த நிதானம் நேர்மையான நிதானம் சத்தியமான நிதானம். உண்மையைச் சொல்கிறேன். இந்தப்படத்தை இயக்குநர் இன்னும் எனக்கு காட்டவில்லை. ஆனாலும் சொல்கிறேன். இந்தப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக இருக்கும்,” என்றார்.

படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் பேசும்போது,

“மீடியாவை அடிக்கடி மீட் பண்ணும் வாய்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தி கொடுக்கும் என்று நம்புகிறேன். எல்லோரும் ஏன் சமையல் பிஸ்னெஸை விட்டுவிட்டு நடிக்க வேண்டும் ? என்று கேட்டார்கள். ஆனால் இப்படியான தரமான சினிமாவை மிஸ் பண்ண முடியாது. என்னைப் பொறுத்தவரை சினிமா தொழிலும், சமையல் தொழிலும் ஒன்று தான். என்னைச் சரியாக வழிநடத்தும் ஈஸ்வரன் அப்பாவுக்கு நன்றி. இந்தப் படத்தை வெளியீடும் சக்திவேல் எப்படியும் இந்தப்படம் ஜெயிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான டீமிடம் இருந்து நான் அறிமுகமாவதை பெருமையாக நினைக்கிறேன்,” என்றார்

படத்தின் கதை வசனம் எழுதிய ராஜு முருகன் பேசுகையில்,

“இந்தப்படம் தொடங்குவதற்கான துவக்கப் புள்ளியாக இருந்த ரமேஷ் அவர்களுக்கும் ஈஸ்வரன் அப்பாவிற்கும் நன்றி. இந்தப் படம் ரொம்ப எளிமையான நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் படம். இந்தக் கதையின் பின்னணி வித்தியாசமாக இருக்கும். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் அடுத்த லெவலுக்குச் செல்வார். இசை அமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப் படத்தில் என் பெயர் இருக்கு. ஆனால் கதை முழுக்க முழுக்க என் அண்ணனும் இணைந்துதான் எழுதினார். அண்ணனின் உழைப்பு மிகப்பெரியது. அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது,

“இது காதல் படம் என்பதை படத்தின் போஸ்டர் சொல்லி இருக்கும். இந்தப்படத்தில் மூன்று காதல் உள்ளது. ராஜு முருகன், யுகபாரதி, சரவண ராஜேந்திரன் இந்த மூவருக்குள் உள்ள காதல் தான் முதல் காதல். இரண்டாவது காதல் என் அப்பாவிற்கு ஹீரோ ரங்கராஜுக்கும் உள்ள காதல். மூன்றாவது காதல் இளையராஜா மீது இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் கொண்ட காதல். இந்த மூன்று காதலும் இந்தப் படத்தின் மூலதனம். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டால் ஒரு சந்தோஷம் வரும். இந்தப்படத்தில் உள்ள கேமரா மேன், எடிட்டர் உள்பட அனைவரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைவரும் கலக்கி இருக்கிறார்கள். இந்த நல்லபடத்தை மீடியா நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்” என்றார்.

இயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசியதாவது,

“எல்லாரும் என்னை நிதானம் பொறுமை என்றார்கள். அது ப்ளான் பண்ணி எல்லாம் நிகழவில்லை. அந்தக் காத்திருப்புக்கான பலனாக இந்தப்படம் வந்துள்ளது. இந்தப் படத்திற்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் ஈஸ்வரன் அப்பா. அவரை சக இயக்குநர்கள் பயன்படுத்துங்கள், அவருக்குள் நல்ல நடிகர் இருக்கிறார். இந்த ரங்கராஜ் ப்ரதரைப் பார்க்கும் போது இவர் நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் படத்தில் அவர் ஜீவாவாக வாழ்ந்திருக்கிறார். இந்தப் படத்தில் மிக முக்கியமானவர் கேமராமேன் செல்வகுமார், அவர் சின்னப்பையனாக இருக்கிறாரே என்ற டவுட் எனக்கும், ரொம்ப பெரியாளா இருக்கிறாரே என்ற டவுட் அவருக்கும் வந்தது. ஒருமணி நேரம் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் இருக்கும் அலைவரிசை சரியாக இருந்தது.

ஷான் ரோல்டனை சின்ன இசைஞானி என்று சொல்லலாமா? என்று கூட பேசுவோம். அவர் சூப்பர் டீலக்ஸ் க்ளைமாக்ஸ் போல பேசுவார். ஒரு ட்யூன் கொடுப்பார், ஒரே ட்யூன் தான் கொடுப்பார். அதை யுகபாரதி ஒரு மணிநேரத்தில் பாட்டாக்கி கொடுப்பார். எடிட்டர் முதலில் சீரியஸாக இருந்தார். அவரிடம் பேசப்பேச அவர் மிகத் தெளிவானவர் என்று புரிந்தது. நாயகி மிகப் பிரம்மாதமாக நடித்துள்ளார். மாரிமுத்து சார், விக்னேஷ் காந்த், வேல.ராமமூர்த்தி சார் உள்பட அனைத்து நடிகர்களும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்கள். இந்தப்படம் குழந்தைகள் உள்பட அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும். ஞானவேல் ராஜா படத்தைப் பார்த்த பின் என்னை வரச் சொன்னார். படம் நல்லாருக்கு என்று அவர் சொன்ன பிறகு தான் நான் உயிர்த்தெழுந்தேன்,” என்றார்.

மெஹந்தி சர்க்கஸ் படம் வரும் 19-ம் தேதி அன்று வெளிவருகிறது.

Tamil Cinema News

‘சிந்துபாத்’ கதையைச் சொன்னால் அதுவே தலைப்புச் செய்தி

விஜய் சேதுபதி பேச்சு

Published

on

By

'சிந்துபாத்' கதையைச் சொன்னால் அதுவே தலைப்புச் செய்தி

கே புரொடக்ஷன்ஸ், வன்சன் மூவீஸ் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் படம் சிந்துபாத்.

இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, இயக்குனர் அருண்குமார், தயாரிப்பாளர் ராஜராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

விஜய் சேதுபதி பேசுகையில்,

“பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அருண் உடனான அறிமுகம் நட்பாக மாறியது. அதன் பிறகு அவர் எனக்கு சௌகரியமான நண்பராக மாறினார். பிறகு அவரிடம், என்னைத் தவிர்த்து வேறு நடிகர்களை வைத்து இயக்குவதற்கு முயற்சி செய் என்று அறிவுரை கூறினேன். ஆனால் திரையுலகில் யாரும் அவரை நம்பவில்லை. பிறகு நானே அழைத்து ‘சேதுபதி’ பட வாய்ப்பைக் கொடுத்தேன். அதன் பிறகு நானே சில முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்லுமாறு வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தேன். ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக அந்த முயற்சியும் நடைபெறவில்லை. பிறகு மீண்டும் அவரை அழைத்து இந்த பட வாய்ப்பினை அளித்தேன். தற்போதும் இந்த படம் ஹிட் ஆன பிறகு வெளியில் சென்று வேறு இயக்குனர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அருணின் தனி சிறப்பு என்னவென்றால் நாயகனை மிக மிக நல்லவனாகவும், நாயகியை கண்ணியமானவளாகவும், அழகுணர்ச்சி மிக்கவளாகவும், இயல்பானவளாகவும் வடிவமைப்பார். அதேபோல் வாழ்க்கையில் இடம் பெறக்கூடிய சின்ன சின்ன அழகான சம்பவங்களை ரசித்து, அதனை நேர்த்தியாக காட்சிப்படுத்த கூடிய திறமைசாலியும் கூட. அழகை நன்றாக ரசிக்கக் கூடியவர். சினிமாவில் தொடங்கிய அவருடைய நட்பு, பிறகு என்னுடைய குடும்ப நண்பரானார். அதனால் தான் என்னுடைய மகன் சூர்யாவை இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கு ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நான் நடிக்கிறோனோ இல்லையோ சூர்யா நடிப்பது உறுதி என்று இந்த படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அருண் என்னிடம் கூறியிருந்தார்.

சிந்துபாத் நமக்கு எல்லோருக்கும் நன்கு தெரிந்த அறிமுகமான கணவன் மனைவி பற்றிய எமோஷனல் படம். இதில் ஏராளமான சுவராசியமான காரணிகள் இருக்கிறது. அதனை விவரித்தால் அதுவே நாளை தலைப்பு செய்தியாகிவிடும். அதனால் அதை கடந்து விடுகிறேன். ஒருவனுடைய மனைவியை, ஒரு கும்பல் கடத்தி சென்று, கடல் கடந்து ஒரிடத்தில் சிறை வைத்திருக்கிறது. அந்த மனைவியை கணவன் கஷ்டப்பட்டு, போராடி எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.

இந்த படத்தில் அஞ்சலி, விவேக் பிரசன்னா, லிங்கா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கிறது. இவர்கள் கதையின் தூண்களும் கூட. படத்தில் நாயகனுக்கு காது சற்று மந்தம். உரத்துப் பேசினால் தான் கேட்கும். இது ஒரு சுவாரசியமான அம்சம். நடிகை அஞ்சலி இயல்பாகவே சத்தமாக பேசக்கூடிய கேரக்டர் . அவர் இந்த கேரக்டரில் பொருத்தமாக நடித்திருந்தார். அவரைத் தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்தில் சிந்திக்க முடியவில்லை.

இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் லிங்கா. நல்ல பையன். சற்று படபடப்பாகவும் பதற்றமாகவும் இருப்பார். ஆனால் நல்ல நடிகன். தன்னுடைய வேலையை மிகச் சரியாக நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடியவர். மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதை எனக்கு அனுப்பி, இவர்களுக்கு என்ன செய்யலாம் என்று கேட்பார். அவருக்கு நான் கோபப்படாதே நாம் வருத்தம் மட்டும் தான் பட முடியும். அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள்தான் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நாம் வருத்தம் மட்டுமே பட முடியும். மக்களுடைய வாழ்க்கை அழகாக இருக்க வேண்டும் என்று அவர்களின் அணுக்கமாக இருந்து நினைக்கக் கூடிய நல்ல உள்ளம் படைத்தவன். அவர் எதிர்காலத்தில் என்னைவிட சிறந்த நடிகராக வளரக் கூடும் என்று நம்புகிறேன்.

விவேக் பிரசன்னா ரொம்ப சின்சியரான நடிகர். தன்னை சுற்றி இருப்பவர்களை எளிதாக கிரகிக்கக்கூடியவர். இந்த படத்தில் 23 வயதுடைய பெண்ணுக்கு தந்தையாக அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறார் .அவரால் மட்டுமே இதுபோல் வித்தியாசமாக நடிக்க முடியும். மேயாத மான் படத்தில் 25 வயது நாயகனுக்கு நண்பனாகவும் நடிக்க முடிகிறது.

படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் கிளைமாக்ஸ் போலிருக்கும். ஏனென்றால் தொடர்ந்து சேசிங் இருக்கும். யுவனைப் பற்றி நான் சொல்லி எதுவும் ஆகப்போவதில்லை. நான் மிகவும் ரசிக்கும் ஆளுமை யுவன் சங்கர் ராஜா. அவருடைய இசை தன்மையாக இருக்கும். மனதிற்கு நெருக்கமாக இருக்கும். எந்த சூழலிலும் இடையூறு ஏற்படுத்தாத, நம்பகத்தன்மை மிக்கதாக இருக்கும். அவருடைய இசையை கேட்கும்போது, நம்முடைய இசை கேட்பது போல் இருக்கும். ராஜா சார் இசை மீது இருக்கும் ஈர்ப்பு போல, இவருடைய இசை மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது,” என்றார்.

Continue Reading

Tamil Cinema News

எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்‘

Published

on

By

ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஆயிரம் ஜென்மங்கள்

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஈஷா ரெபா மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘ஆயிரம் ஜென்மங்கள்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

சதீஷ், ஆனந்தராஜ், சாம்ஸ், நிகிஷா பட்டேல், சாக்ஷி அகர்வால், கோவை சரளா, மதுமிதா, ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், வையாபுரி, வெண்பா, மனோபாலா, சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

ரஜினிகாந்த் நடித்து 1978ல் வெளிவந்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் பெயரை 41 வருடங்கள் கழித்து மீண்டும் வைத்திருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி, 1, சென்னை 28 – 2ம் பாகம், இது நம்ம ஆளும் காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன்’ உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி பிள்ளை, தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகிறார்.

முதல் படமாக ‘சொல்லாமலே’ துவங்கி, ‘பிச்சைகாரன்’ வரை பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி வி பிரகாஷ் குமார் நடிக்க ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்.

அதைத் தொடர்ந்து இந்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.

‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போன்ற வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் எழில், இந்த முறை ஒரு வித்தியாசமான திகில் கதையை, அவருக்கே உரிய பாணியில் படமாக்கி வருகீறார்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கு, வெளி நாட்டில் பேய் பிடித்த ஒரு நபரிடம் இருந்து, பேயை விரட்ட வேண்டும் என்ற சவாலான வேலை வருகிறது. அந்த சவாலான வேலையை ஏற்றுக்கொண்ட ஹீரோ, பேயை விரட்டி அந்த நபரை காப்பாற்றினாரா, இல்லையா என்பதே இப்படத்தின் கதை.

யூகே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோபி கிருஷ்ணா கவனிக்கிறார்.

சத்யா இசையமைக்க, யுகபாரதி, விவேக், ராகேஷ், கருங்குயில் கணேஷ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். கதை, வசனத்தை எ முருகன் எழுதுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Continue Reading

Tamil Cinema News

‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ – ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியம்

Published

on

By

சுட்டுப் பிடிக்க உத்தரவு - ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியம்

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K. ராம் மோகன் தயாரிப்பில், ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’

இப்படம் பற்றி இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா கூறுகையில்,

‘மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோர் இயக்குனர்கள் என்பதையும் தாண்டி, தமிழ் சினிமாவில் எல்லாவற்றையும் அறிந்த மேதைகள். படப்பிடிப்பில் பல நேரங்களில், நானே அவர்களின் நுணுக்கமான நடிப்பைக் கண்டு வியந்திருக்கிறேன்.

ஸ்கிரிப்ட்டில் நான் எழுதிய கதாபாத்திரங்களுக்கு அவர்களின் நடிப்பு மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர்கள், அவர்களை இயக்கும் போது தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. இருப்பினும், அத்தகைய தவறான கருத்துக்களை படப்பிடிப்பில் தூள் தூளாக்கி விட்டனர். அவர்கள் நடிப்பில் மட்டுமே தங்கள் முழு கவனத்தையும் செலுத்தினார்கள், ஒரு சிறிய ஆலோசனையோ அல்லது மாற்றங்களையோ கூட என்னிடம் சொல்லவில்லை.

விக்ராந்த் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு நடிகர் என்பதை பல நேரங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். தற்போது நல்ல நல்ல படங்கள் அவர் கைவசம் உள்ளன. அவரது நடிப்பு நிச்சயம் அனைவராலும் மிகவும் பாராட்டப்படும். அதுல்யா ரவி தனது நடிப்பில் ஒரு யதார்த்தமான தன்மையைக் கொடுக்கும் ஒரு அரிதான நடிகை. இந்த படத்தில் நடித்த அத்தனை பேருமே மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியமான விஷயங்களைக் கொண்ட த்ரில்லர் படமாகவும் மற்றும் உணர்வுபூர்வமான படமாகவும் இந்தப் படம் இருக்கும்,” என்கிறார் இயக்குனர்.

ஜுன் 14ம் தேதி சுட்டுப் பிடிக்க உத்தரவு வெளியாகிறது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!