Connect with us

Tamil Cinema News

ரஜினிகாந்த் தலைவர் என்றால்…மற்றவர்கள்.., – சீமான் கேள்வி

Published

on

miga miga avasaram trailer launch

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார்கள்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். ‘புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை’, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் பாக்யராஜ், இயக்குனர் சேரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான், நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜேகே ரித்தீஷ், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் பாபு கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிலரின் பேச்சுகள்…

இயக்குனர் ஜெகன்நாத்

ஒரு நாள் சுரேஷ் காமாட்சியிடம் பேசும் போது இப்படி பெண் காவலர்கள் பற்றிய ஒரு கதை மனதில் உருவானதை அவரிடம் கூறினேன். அவருக்கு இந்தக் கதை பிடித்துப் போகவே நானே இயக்குகிறேன் எனக் கூறினார். எனது குருநாதர் இயக்குனர் சேரனுடன் ‘ராமன் தேடிய சீதை’ படத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கடந்த 10 வருடங்களாக பேசாமல் இருந்தேன். அப்படிப்பட்ட சேரன் இந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு மிக அருமையான கதை என வாழ்த்தியது மிகப் பெருமையாக இருக்கிறது. இதற்கு முன்பு ‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்கிற படத்தை எடுத்த போது அண்ணன் சீமான் என்னை அழைத்து திட்டினார். ஆனால் இந்தப் படத்தை பார்த்துவிட்டு மிகச் சரியான கதையை மிக நுட்பமாக உருவாக்கியுள்ளதாகப் பாராட்டினார். நான் எந்த கதை எழுதினாலும் அதன் முதல் உரிமை சுரேஷ் காமாட்சிக்குத் தான்.

படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்கா

நிறைய போராட்டங்களுக்குப் பிறகு ‘மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் மிகவும் துணிச்சலான தனி ஒரு பெண்ணாக, பெண் சிங்கமாக இன்று நான் நின்றிருக்கிறேன். அதற்கு சுரேஷ் காமாட்சி சாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எல்லோரும் ஏன் பெரிய படங்களில் நடிப்பதில்லை எனக் கேட்கிறார்கள்..

இங்கே நிறைய பேருக்கு இந்த பெண் கதாநாயகியாக ஒரு முழுநீள படத்தையும் தாங்கிப் பிடிப்பாரா என்கிற சந்தேகம் இருக்கிறது. ஆனால் என்னால் முடியும். தமிழ் பெண்ணான எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் இருக்கிறது என்பதை இந்தப் படம் சொல்லும். இன்றைக்கு படத்தின் போஸ்டர்களை வழியெங்கும் பார்த்துக் கொண்டு வரும்போது, இந்த விழாவில் இத்தனை ஜாம்பவான்கள் மத்தியில் இருக்கும்போது ஆஸ்கர் விருது வாங்கியது போல உணர்கிறேன்.

இந்த மாதிரி கதையும் கதாபாத்திரமும் நயன்தாராவிற்கு நீண்ட நாட்கள் கழித்துதான் கிடைத்தது. ஆனால் எனக்கு குறுகிய காலத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது. வெளியூரிலிருந்து வரும் கதாநாயகிகளின் திறமையை எந்த விதத்தில் இங்கிருப்பவர்கள் கணித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. ஆனால், தமிழ்ப் பெண்ணான என்னாலும் பெரிய நடிகருடன், பெரிய படங்களில் நடிக்க முடியும் என்பதை இங்கு இருக்கும் இயக்குனர்கள் தான் நம்ப வேண்டும்.

படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி

எப்போதுமே என்னை சர்ச்சையாகப் பேசுகிறான் என்கிறார்கள். உண்மையைப் பேசினால் அதை சர்ச்சை என்றால் நான் தொடர்ந்து அப்படித்தான் பேசுவேன். இந்த படத்தைப் பற்றி, படக்குழுவினரைப் பற்றி இந்தப் படத்தின் வெற்றிவிழாவில் பேசினால் தான் சரியாக இருக்கும்.

படத்தைப் பார்த்துவிட்டு குறை நிறை என எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகவே சொல்லுங்கள். ஏனென்றால் விமர்சனம் என்பது இங்கே கட்டாயம் தேவை. அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் விமர்சிப்பவர்கள் மீது புகார் கொடுப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை.

நாம் இதுபோல செய்தால், படத்தில் நாம் கடுமையாக விமர்சிக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் இதே விஷயத்தை பின்பற்றி நம் மீது திரும்பினால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும். சின்ன படங்கள் ஓடுவதற்கு கட்டாயம் விமர்சனம் தேவை. அவை குறையாக இருந்தாலும் நிறையாக இருந்தாலும் நமது படம் பேசும் பொருளாக இருக்க வேண்டும். அது தான் முக்கியம்.

இயக்குனர் சேரன்

சுரேஷ் காமாட்சி என்றாலே ஏதாவது மேடைகளில் சினிமாவில் உள்ள பிரச்சனைகளைப் பற்றியே பேசுபவராக, முக்கியமான தலைகளை எதிர்த்து குரல் கொடுப்பவராக பார்க்கப்படுகிறார். ஆனால் அவருக்கு இரண்டு முகங்கள் உண்டு. அவர் பேசும் போது நமக்கு தெரிவது ஒரு முகம். ஆனால் ஒரு படைப்பாளியாக அவரைப் பார்க்கும்போது நிச்சயம் முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கிறார்.

இந்தப் படத்தை நான் பார்த்ததும் அவரிடம் நீங்கள் இனிமேல் நிறைய பேசாதீர்கள், அடுத்தடுத்து படங்களை இயக்குவதில் கவனம் செலுத்துங்கள் எனக் கூறினேன். காரணம் அடுத்தடுத்து அவர் இயக்க இருப்பதாக சொன்ன கதைகள் எல்லாம் அவ்வளவு வித்தியாசமானவை. அவருடன் துணையாக இருக்கும் ஜெகன்நாத் என்னிடம் உதவியாளராக இருந்து, எனக்காக பத்துவருடங்கள் உழைத்தார் என்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஜெகன் மீது எனக்கு எப்போதும் கோபம் இல்லை. வருத்தம் மட்டும் தான் இருந்தது, அதுவும் போய்விட்டது.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்ததும் அதில் இடம்பெற்றுள்ள நல்லதொரு வீணை பாடல் மட்டும் புதிய கதையை கொஞ்சம் பழையதாக மாற்றுகிறது என மனதில் தோன்றியதை சுரேஷ் காமாட்சியிடம் சொன்னேன். பின்னர் வீடு வந்தும்கூட அந்த படம் பற்றிய நினைவாகவே இருந்ததால் எனக்குள் ஒரு பாடல் தோன்றியது. அதை உடனே எழுதி சுரேஷ் காமாட்சிக்கு அனுப்பினேன். அவரும் நன்றாக இருக்கிறது எனக் கூறி அந்த பாடலை படத்தில் இடம்பெற செய்து விட்டார். அனேகமாக அந்தப் பாடல் இப்போது நிலவிவரும் ‘மீ டூ’ பிரச்சனைக்கு மிகப் பொருத்தமான பாடலாக இருக்கும்.

இந்தப் படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்கா தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம் நான் என்னைத்தான் சொல்கிறார்கள் என நினைத்துக்கொள்வேன்.. காரணம் கேரளாவில் இருந்து அடிக்கடி புது நாயகிகளை எனது படத்தில் அதிகம் அறிமுகப்படுத்தியது நான்தான். அதற்கு காரணம் தமிழ்நாட்டில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நடிப்புத் திறமையுள்ள பெண்கள் நடிக்க ஆர்வமாக முன் வராததுதான்.

குறும்படத்தில் ஆல்பத்தில் நடிக்கும் பெண்கள் கூட சினிமாவில் நடிக்க தயங்குகிறார்கள். ஆனால் ஒரு முகம் தெரியாத பெண்ணாக இருந்து உன் நடிப்பால் இந்தப் படத்தை பார்க்கும்படி செய்துவிட்டாய். உன் மீது பரிதாபம் வந்துவிட்டது. அதுவே உனக்கும் இந்த படத்திற்கும் கிடைத்த வெற்றி. உனக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும், கவலை வேண்டாம்.

இயக்குனர் பாக்யராஜ்

இந்தப் படத்தின் திரைக்கதை, டைரக்ஷன் சுரேஷ் காமாட்சி என்ற பெயர் பார்த்த போது, கதையை யார் எழுதியிருப்பார்கள் என்கிற யோசனை கொஞ்ச நாளாகவே இருந்தது. இங்கே வந்து போதுதான் அது ஜெகன் என எனக்குத் தெரிந்தது. பொதுவாகவே கதாசிரியர்களுக்கு இங்கே பொருளாதார ரீதியாக மரியாதை சற்று குறைவாகவே இருக்கிறது. அதிலும் நான் சங்கத்தில் பொறுப்பேற்ற பிறகு தான் அது நன்றாகவே தெரிய வருகிறது.

தான் இயக்கும் முதல் படத்தில் கமர்ஷியலாக யோசிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கியதற்காகவே சுரேஷ் காமாட்சியைப் பாராட்டலாம். நானே பல மேடைகளில் சுரேஷ் காமாட்சி தொடர்ந்து காரசாரமாக பேசுவதை கவனித்து இருக்கிறேன். ஆனால் உன்னிப்பாக கவனிக்கும்போது தான் அவர் பேச்சில் ஒரு நியாயம் இருக்கிறது தென்படும்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

பொதுவாகவே காவலர்கள் பற்றிய ஒரு வெறுப்பு அனைவருமே இருக்கிறது. காவல்துறையில் சில குறைகள் இருக்கிறது உண்மைதான். குற்றவாளிகளை தண்டிப்பதைவிட, குற்றம் நடக்காமல் பார்த்துக் கொள்வது தான் காவல்துறையின் கடமையாக இருக்க வேண்டும். அதேசமயம் அதிகப்படியான பணிச்சுமை அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது. அவர்களுக்கு பண்டிகை, விழா என எந்த கொண்டாட்டங்களும் கிடையாது.

ஆண் காவலர்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தாலும் அவர்களை விட பெண்களுக்கு அதிகம் சங்கடங்கள் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரம், பெண் காவலர்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே பணி செய்ய ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது அங்கு இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது அவர்களிடம் பேசிப் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்காக நானும் அமீர் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தோம். அப்போது அங்கே பாதுகாப்புக்காக வந்திருந்த பெண் காவலர்கள் எங்களைப் பார்த்து அழுதபடி, நாங்கள் வீட்டை விட்டு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. மாற்றுத் துணி கூட கொண்டு வரவில்லை. எங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதுகூட எங்களுக்கு தெரியவில்லை. தயவு செய்து இந்தப் போராட்டத்தை சீக்கிரம் முடியுங்கள். அப்போதுதான் நாங்கள் வீடு திரும்ப முடியும் என கெஞ்சியதை பார்த்ததும் பெண் காவலர்களின் நிலை என்னவென்று தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

காவலர்களுக்கு பணிச் சுமையைக் குறைத்து, நல்ல ஊதியம், நல்ல வீடு என அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் போதுதான் அவர்களால் நேர்மையாக பணியாற்ற முடியும். தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி மூலம்தான் லஞ்சம் ஊழலை ஒழித்து நல்லாட்சி கொடுக்க முடியும்.

இந்தப் படம் பார்த்துவிட்டு நீங்கள் சாலையில் போகும்போது பாதுகாவலுக்கு நிற்கும் பெண் போலீசாரை பார்த்தால் உங்களுக்கு அவர்கள் மீது மிகப் பெரிய மரியாதை ஏற்படும். ஜெகன் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு. இந்தப் படம் பார்த்துவிட்டு அது இன்னும் அதிகமானது.. இவ்வளவு நல்ல கதைகளை வைத்திருக்கும்போது, எதற்காக ‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்கிற படங்களை எடுக்கிறாய் என்று நான் திட்டியது உண்மைதான்.

இந்தப் படத்தை சிறந்த சமூகப் பார்வையாளனாக பெண் காவலர்களைப் பற்றி ஜெகன் உருவாக்கி இருப்பதும் அதை சுரேஷ் காமாட்சி படமாக இயக்கி இருப்பதும் எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்தப் படத்தில் பிரியங்கா நடிக்காமல் ஒரு பெரிய நடிகை நடித்திருந்தால் தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் மிகப் பெரிய மார்கெட் இந்த படத்திற்கு கிடைத்திருக்கும். ஆனால் படத்தில் அந்த கதாபாத்திரத்தை பார்க்கும்போது அந்த நடிகை தான் தெரிவார். ஆனால் அவ்வளவாக அறிமுகம் இல்லாத பிரியங்கா நடித்திருப்பதால்தான் அந்த கதாபாத்திரம் நம் மனதில் ஆழமாகப் பதிகிறது. அதுதான் இந்தப் படத்திற்கு பலம்.

சினிமா ஒரு சாக்கடை என பேசிப் பேசியே தமிழ் பெண்கள் சினிமாவுக்கு வருவதை தடுத்துவிட்டார்கள்.. சீரியலில் நடிக்க வரும் பெண்கள் கூட சினிமா பக்கம் வருவதற்கு யோசிக்கிற மாதிரி சூழலை உருவாக்கி விட்டார்கள்.. பிரியங்காவை போன்ற பெண்களைப் பார்த்து இனி பலரும் சினிமாவிற்கு வர ஆரம்பிப்பார்கள்.

இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பார்த்தால் அதில் பேசும் அனைவரும், ரஜினி பற்றி பேசும்போது, தலைவருடன் நடித்தேன், தலைவருடன் பேசினேன், தலைவருக்காக கதையைத் தயார் செய்தேன் என அவரை எப்போதுமே தலைவர் என்றுதான் கூறுகிறார்கள். அவர் தலைவர் என்றால் பிரபாகரன், காமராஜர், கக்கன் போன்றவர்களெல்லாம் யார்..? சினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவன் ஆக முடியாது அவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே.

இயக்குனர் பாரதிராஜா

நாங்கள் கலைஞர்கள், எங்களுக்கு எல்லா முகமும் உண்டு. என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படத்தை எடுத்தவன்தான் மிக மிக அவசரம் என்கிற இந்த சமூக அக்கறையுள்ள படத்தின் கதையையும் எழுதி இருக்கிறான். இந்தப் படம் பார்க்கும் வரை சுரேஷ் காமாட்சியை ஒரு சாதாரண தயாரிப்பாளர் என்கிற அளவிலேயே அறிந்திருந்தேன். ஆனால் இந்தப் படம் பார்த்துவிட்டு நிஜமாக நீதான் இந்த படத்தை இயக்கினாயா என்று கேட்டேன். அப்புறம் தான் தெரிந்தது சுரேஷ் காமாட்சி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர் என்பது.

எல்லா மேடைகளிலும் சுரேஷ் காமாட்சி பிரச்சனைகளைப் பேசுகிறான் என்கிறார்கள். பிரச்சனைகளை கிளப்பாதவன் மனிதனே இல்லை. குற்றம் கண்ட இடத்தில் விரலை நீட்ட வேண்டும். சுரேஷ் காமாட்சி சரியாக இருப்பதால் தான் அப்படி பேசுகிறான். அதனால்தான் சமூக பொறுப்புடன் இப்படி ஒரு படம் எடுத்துள்ளான்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களைப் பார்க்கும் போது இப்படி வெயிலில் காய்ந்து வாடுகிறார்களே என நினைக்கும் போது கொடுமையாக இருக்கும். நான் சொல்ல நினைத்த ஒரு விஷயத்தை சுரேஷ் காமாட்சி சொல்லிவிட்டார். வசனங்கள் இல்லாமல் உடல் மொழியாலும் முகபாவத்தாலும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்து இந்தப் படத்தைத் தாங்கி பிடித்து இருக்கிறார் நாயகி ஸ்ரீ பிரியங்கா. வழக்கு எண் முத்துராமனும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், எழுந்துபோய் அடிக்கத் தோன்றும் விதத்தில் மிக தத்ரூபமாக நடித்துள்ளார்.

சமீபத்தில் திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அதில் கலந்துகொள்ள வந்த வெளிமாநிலத்தவர் பலர் என்னிடம் பேசியபோது, நாங்கள் திருப்பூர், கோவை என பல இடங்களில் மிகப் பெரிய அளவில் தொழில்துறையில் முதலீடு செய்துள்ளோம். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் 30% இடங்கள் வேண்டுமென குரல் கொடுக்கிறோம் என என்னிடம் கூறினார்கள். அப்போது வந்ததே பாருங்கள் எனக்கு ஒரு கோபம். இந்த தீ இன்னும் அணையவில்லை. இங்கே முன்பு பல பட்டறைகள் போட்டிருந்தார்கள். அதில் பலபேர் கிளம்பிவிட்டார்கள் இன்னும் சில பட்டறைகள் மட்டும் மிச்சம் இருக்கின்றன.

தென்னிந்திய பிலிம் சேம்பர் என்பதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதையும் தமிழ்நாடு பிலிம் சேம்பர், தமிழ் நடிகர் சங்கம் என பெயரை மாற்ற 25 வருடங்களாக போராடி வருகிறோம் இன்னும் அதை நிறைவேற்ற முடியாத நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

Tamil Cinema News

அமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ… !

Published

on

By

அமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ... !

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் ஜோன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குனர் திருமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜோன்ஸ் பேசும்போது,

“பல படங்களை ஜான் மேக்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளேன். மைனா படத்தில் இருந்து அமலாபால் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் அவரின் அர்ப்பணிப்பு ரொம்ப உணர்வுபூர்வமானது. மிக வித்தியாசமான கதை. அமலாபாலிடம் இந்தக்கதையை சொன்னதும் ஓ.கே என்றார். கதை பிடித்ததால் இந்த ப்படத்தை இயக்குநர் கே.ஆர்.வினோத் சிறப்பாக இயக்கித் தந்துள்ளார்,‘’ என்றார்.

இயக்குனர் கே.ஆர்.வினோத் பேசும் போது,

‘என்னோட குடும்பத்தினர், நண்பர்கள் இல்லாமல் எனக்கு இந்த மேடை அமைந்திருக்காது. என் உழைப்பை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. மற்றும் என்னுடைய படக் குழுவினருக்கு நன்றி. எங்கள் படத்தில் அமலாபால் ஹீரோயின் இல்லை, ஹீரோ. அவரை அப்படித்தான் அழைத்து வருகிறேன். அமலாபாலுக்கு இந்தப் படம் ரொம்ப சிறப்பா இருக்கும் என்று நம்புகிறோம்.

சண்டைக்காட்சிகள் எல்லாம் நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அமலாபாலிடம் காட்டினோம். அதைப் பார்த்து பயிற்சி செய்து படத்திற்கு தயாரானார். அதை அப்படியே படப்பிடிப்பில் மிகச்சிறப்பாக செய்துவிட்டார். 60 அடி உயரமுள்ள மரத்தில் இருந்து இறங்குவது, சண்டை போடுவது என நடிப்பில் அமலாபால் அசத்தியுள்ளார். குறிப்பாக சேற்றுக்குள் இறங்கி மூச்சு விடாமல் நடிக்க வேண்டும். அதை நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாதளவிற்கு நடித்து கொடுத்தார். இந்த தைரியம் யாருக்கு வரும். எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் படம் சிறப்பாக வந்திருக்கிறது,” என்றார்.

அமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ... !

நடிகை அமலாபால் பேசுகையில்,

“இந்தப் படம் ரொம்ப சந்தோசத்தை கொடுத்தது. தயாரிப்பாளருக்கு கண்டிப்பாக நல்ல லாபத்தைக் கொடுக்கும். காரணம் படத்தோட கதை. ஒரு இளம்பெண் எந்த உதவியுமே இல்லாம தனி ஆளா காட்டுல சிக்கிக்கிட்ட பிறகு அதுல இருந்து எப்படி வெளியில வர்றாங்கறது தான் படம்.

இன்னிக்கு நாடு இருக்கற நிலையில பெண்கள் பாதுகாப்புங்கறது எந்த அளவுக்கு இருக்குங்கிறது தான் பெரிய விவாதமா இருக்கு. இந்த சூழ்நிலையில இப்படி ஒரு படம் வர்றது ஒட்டு மொத்த பெண்களுக்கான படமாக இருக்கும்.

இந்த படத்தோட டீம் பக்காவா திட்டமிட்டு உழைச்சாங்க. கதை சொல்லும் போது கூட பக்கா பிளான் பண்ணித்தான் வந்திருந்தாங்க. இந்த படத்துக்காக புதுசா ‘கிராமகா’ என்னும் தற்காப்பு கலையை கத்துக்கிட்டேன். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூட ஒரு சண்டை போட்டுருக்கேன். அந்த சண்டை பெரிசா பேசப்படும்.

கதை ஆசிரியர் அருண் அவ்வளவு திறமையா இந்த கதையை எழுதி இருந்தாரு. படம் ஷூட் போறதுக்கு முன்னாடியே எனக்கான ஸ்டண்ட் காட்சிகளை ஷூட் பண்ணி டெமோ காட்டி எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க.

இயக்குனர் வினோத், நிர்வாகத் தயாரிப்பாளர் கவாஸ்கர், கதாசிரியர் அருண் இவர்கள் எல்லாம் பெரிய போராட்டத்தைச் சந்தித்து இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டம் முன்னாடி படத்தில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை.

ரொம்ப இளமையான டீம். இவர்கள் இருக்கிற படத்தில் நான் இருக்கிறது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஒரு ஹீரோயின் காட்டுக்குள் ஆக்‌ஷன் பண்ணா எப்படி இருக்கும் என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால் கதை அதை சரி செய்துவிடும்.

எங்க டீமில் எல்லாரும் பெண்கள் பலத்தை உணர்ந்தவர்கள். தயாரிப்பாளர் ஜோன்ஸ் மைனாவில் இருந்தே நல்ல நண்பர். சிறுவன் பிரவீன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறான். நிச்சயமாக அவனுக்கு தேசிய விருது கிடைக்கும்.

மேலும் இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னோடு நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் வேலை செய்த அனைவரும் இப்படத்தை ஒரு பேஷனாக எடுத்து வேலை செய்தார்கள்.

இந்தப்படத்திற்காக நான் கற்றுக்கொண்ட தற்காப்புக் கலை, எனக்கு நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப தைரியத்தைக் கொடுத்துள்ளது. கதை பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் நடிப்பேன். கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்,’’ என்றார்.

Continue Reading

Tamil Cinema News

ஜீ திரை – நாளை முதல் புதிய சினிமா டிவி சேனல்

Published

on

By

ஜீ திரை - நாளை முதல் புதிய சினிமா டிவி சேனல்

தமிழில் ஒளிபரப்பாகும் பொதுவான பொழுதுபோக்கு சேனல்கள் (GEC) பிரிவில், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்ப்ரைசஸ் லிமிடெட் (ZEEL) தனது ஜீ தமிழ் சேனலின் மூலமாக ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.

தற்போது, இந்நிறுவனம் தமிழ் திரைப்பட பொழுதுபோக்கு பிரிவில் – ‘ஜீ திரை’ என்ற புதிய சேனலை நாளை முதல் ஆரம்பிக்க உள்ளது.

தென்னிந்தியாவில் இது, இந்த நெட்வொர்க்கின் ஆறாவது சேனலாகவும், தெலுங்கில் ‘ஜீ சினிமாலு’ சேனலை அடுத்து துவங்கப் பெற்ற இரண்டாவது சினிமா சேனலாகவும் திகழ்கிறது.

ஜீ சினி அவார்ட்ஸ் 2020 நிகழ்ச்சியின் போது, இந்த சேனல் துவங்கப்பட்ட அறிவிப்பானது வெளியிடப்பட்டது.

நடிகர் கமலஹாசன் மற்றும் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்ப்ரைசஸ் லிமிடெட்டின் தலைமை நிர்வாக இயக்குனர் (உள்நாட்டு ஒளிபரப்புத் துறை) புனித் மிஷ்ரா ஆகியோர் இணைந்து இதனை அறிவித்தனர்.

உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு சினிமாவின் மீதுள்ள ஆழமான சமுதாய மற்றும் கலாச்சார ரீதியான அன்பினைப் புரிந்து கொண்டும், தமிழர்களின் உணர்வுகளோடு ஒத்துப்போகும் வகையிலும் ஜீ திரை சேனல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்னணி DTH ஆப்பரேட்டர்களான டாடா ஸ்கை (சேனல் எண். 1599), ஏர்டெல் DTH (சேனல் எண். 775), டிஷ் டிவி (சேனல் எண். 547) மற்றும் D2H (சேனல் எண். 547) ஆகியவற்றில் கிடைக்கும்.

கேபிள் சந்தாதாரர்கள் ரூபாய் 12 சந்தா செலுத்தி, ஜீ பிரைம் மூவி பேக் தமிழை பெறலாம்; இதில் ஜீ தமிழ், ஜீ திரை மற்றும் இதர ZEEL சேனல்கள் கிடைக்கும்.

ஜீ திரை சேனலின் அறிமுகம் குறித்து பேசிய, ZEEL நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவின் தலைவர் சிஜூ பிரபாகரன் அவர்கள் கூறியதாவது,

“இன்று, நமது சேனல்களான – ஜீ கன்னடா, ஜீ தெலுகு, ஜீ சினிமாலு, ஜீ தமிழ் மற்றும் சமீபத்தில் துவங்கப்பெற்ற ஜீ கேரளம் ஆகிய சேனல்கள் நமது நெட்வொர்க்கில் 28.5% மேலான பங்களிப்பினை வழங்குகிறது. இதன் மூலம் தென்னிந்திய மார்கெட்டில் நமக்கு உள்ள வலுவான இணைப்பு வெளிப்படுகிறது.

சினிமாவின் மீது தமிழர்கள் கொண்டுள்ள அன்பையும், பற்றையும் புரிந்துகொண்டு, அவர்கள் விரும்பும் சினிமாவை அவர்களுக்கு வழங்கும் பொருட்டு நாம் நமது ஜீ திரை சேனலை துவங்கியுள்ளோம்.

மேலும், தமிழ் நேயர்களுக்கு நமது நெட்வொர்க் வழங்கும் சேவைகளுக்கு வலுசேர்க்கும் விதத்திலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விரும்பும் ரசிகர்களின் தேடலுக்கான சிறந்த தேர்வாகவும் திகழ வேண்டுமென்ற இலக்கினை அடைவதில் இது ஒரு மைல் கல் ஆகும்.”என்றார்.

கடந்த பத்து ஆண்டுகளில், ZEEL நிறுவனத்தின் தமிழ் பொது பொழுதுபோக்கு சேனலான (GEC) – ஜீ தமிழ், உலகம் முழுவதும் உள்ள தமிழ் நேயர்களின் மனதிலும், இதயத்திலும் ஒரு பிரியமான இடத்தினைப் பெற்றுள்ளது. தனித்துவமான அனைத்து அம்சங்களும்  நிறைந்த இதன் நிகழ்ச்சிகளுள் செம்பருத்தி, யாரடி நீ மோகினி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, கோகுலத்தில் சீதை போன்றகற்பனைதொடர்களும்; சூப்பர் மாம், ச ரி க ம ப, டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் போன்ற நிஜ பங்கேற்பு நிகழ்ச்சிகளும்தமிழ் தொலைக்காட்சி பொழுதுபோக்கிலேயே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. மேலும் இந்த சேனல் திரைப்பட உரிமைகளை பெறுவதில் முன்னணி வகித்ததன் மூலம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை சரியான விகிதத்தில் வழங்கியது.

தென்னிந்தியாவில் நேயர்கள் பற்றிய புரிதல், எண்ணற்ற நிகழ்ச்சிகளின் வலிமை மற்றும் புதிய முயற்சிகளின் மூலம் கற்றுக் கொண்டவை ஆகியவற்றின் துணையுடன் இந்த நெட்வொர்க் தனது ஜீ திரை சேனலின் மூலம்திரைப்பட பிரிவில் ஒரு சவாலான இடத்தை அடைய முயல்கிறது.

இந்த சேனலின் மிகப்பெரிய அம்சமாக திகழ்வது 52 புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது; அதாவது வருடம் முழுவதும் வாரம் ஒரு புதிய திரைப்படம் – தமிழ் திரைப்பட சேனல்களில் முதல் முறையாக ஒளிபரப்பப்படும்.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையினை பூர்த்தி செய்யும் விதத்தில், மெகாஹிட் திரைப்படங்கள் மற்றும் பலரின் பாராட்டைப் பெற்ற படங்கள் என சரிவிகிதத்தில் சிறந்த திரைப்படங்களை ஜீ திரை வழங்கும்.

ஒவ்வொரு வாரமும்வெள்ளி தோறும் ஒளிபரப்பாகவிருக்கும் ‘தெறி ஃபிரைடேஸ்”, கடந்த கால சிறந்த படங்களை வழங்கும் ‘ஃபில்ட்டர் காவியம்’ மற்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விளம்பரம் இல்லாத ‘நடுவுல கொஞ்சம் பிரேக்க காணும்’ படங்கள் என இதுபோன்ற பல தனித்துவமான அம்சங்களை இந்த சேனல் தரவுள்ளது.

தமிழ் சினிமாத்துறையின் சிறந்த படைப்புகளை வழங்க ஒரு சேனலை துவங்கியதன் மூலம், சினிமா குறித்த உரையாடல்களை ‘என்ன’ என்பதிலிருந்து‘ ஏன்’ என்றஅ றிவார்ந்த புரிதல்களை நோக்கி செலுத்தும் இலக்கினை ஜீ திரை கொண்டுள்ளது.

‘மெர்சல், 2.0, கனா, நேர்கொண்ட பார்வை, இரும்புத்திரை, தில்லுக்கு துட்டு 2, கோலமாவு கோகிலா போன்ற சிறந்த திரைப்படங்கள் உட்பட 400-க்கும் மேலான பல வகை திரைப்படங்களை இந்த சேனல் ஒளிபரப்பும் உரிமையை வைத்துள்ளது.

Continue Reading

Tamil Cinema News

‘தலைவி’ – அச்சு அசல் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி

Published

on

By

‘தலைவி’ - அச்சு அசல் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி

வைப்ரி மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘தலைவி’.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகும் இந்தப் படத்தை விஜய் இயக்குகிறார். கங்கனா ரணவத், அரவிந்த்சாமி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

நேற்று எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தில் நடிக்கும் அரவிந்த்சாமியின் தோற்றத்தை வெளியிட்டார்கள்.

புகைப்படம் ஒரு டீசர் ஆகியவை வெளியிடப்பட்டன. இரண்டிலுமே எம்ஜிஆர் போலவே அச்சு அசலாக அரவிந்த்சாமி இருப்பதாக பலரும் பாராட்டி வருகிறார்கள்.

வீடியோவில் ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்ற பாடலைப் பாடி, ஆடும் அரவிந்த்சாமி அப்படியே எம்ஜிஆரின் உடல்மொழியைக் கொண்டு வந்திருக்கிறார்.

இது பற்றி இயக்குனர் விஜய் கூறுகையில்,

“தலைவி” படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்குக் கிடைத்த வரம். தமிழ்நாட்டினை இன்றைக்கு இருக்கும் இந்த உயர்நிலைக்கு மாற்றிய, இரண்டு சகாப்தங்களின் வாழ்வை நெருங்கிப் பார்த்து, அதனை திரைவடிவமாக்குவது எவருக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு. இது ஒரு மிகப்பெரிய அனுபவம்.

இதிலுள்ள மிகப்பெரும் சவால் என்பது, இப்படத்திற்கு சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதே. நிஜத்தில் வாழ்ந்தவர்களின் தோற்றத்தை பிரதிபலிப்பதுடன், திரையில் அந்த ஆளுமையை மறு உருவாக்கம் செய்வதும் மிக அவசியம் ஆகும்.

நடிகை கங்கனா ரனாவத்தை முதல்வர் புரட்சிதலைவி ஜெயலலிதா பாத்திரத்திற்கு தேர்வு செய்த பின், எம். ஜி. ஆரின் பாத்திரத்திற்கு பலரை கருத்தில் கொண்டு முயன்று பார்த்தோம். இறுதியாக அரவிந்த்சாமி மிகப்பொருத்தமானவர் என அவரைத் தேர்ந்தெடுத்தோம்.

இன்றும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர் எம். ஜி.ஆர். அவரை திரையில் கொண்டு வருவது எளிதான செயல் அல்ல. அவரைப் பற்றிய அத்தனை தகவல்களையும் திரட்டி அரவிந்த்சாமியை அதே விதமான லுக்கிற்கு மாற்றினோம்.

எங்களை விட அவர் இந்தக் கதாப்பாத்திரத்தின் மீது அதிக காதல் கொண்டு தன்னை பல விதங்களில் தயார் செய்து கொண்டார். திரையில் அந்த ஆளுமைக்கு நியாயம் செய்யும்படியான உழைப்பை நாங்கள் அனைவரும் தருவோம்.

பாரத ரத்னா வாங்கி, இந்தியாவின் மிகப் பெரும் தலைவராக விளங்கிய எம்.ஜி. ஆரை திரையில் வடிப்பது எங்கள் அனைவரின் பாக்கியம்,” என்றார்.

‘தலைவி’ படம் 2020 ஜுன் 26ம் தேதியன்று வெளியாக உள்ளது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: