Connect with us

Movie Reviews

நோட்டா – விமர்சனம்

Published

on

nota-review

அரசியலைத் தொடும் சினிமாக்கள் தமிழில் வருவது குறைந்து வரும் இந்தக் காலத்தில் இந்தக் காலத்திற்குத் தேவையான சரியான ஒரு அரசியல் படமாக வந்திருக்கிறது ‘நோட்டா’.

இயக்குனர் ஆனந்த் சங்கர், தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களில் நடந்த சில அரசியல் சம்பவங்களை மிகச் சரியாக இந்தக் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார். அந்தக் காட்சிகள் வரும் போதெல்லாம் படம் பார்க்கும் ரசிகர்கள் அவர்களை மீறி கைத்தட்டி ரசிக்கிறார்கள்.

குறிப்பாக, முதல்வரின் காலில் பலமாக குனிந்து மந்திரிகள் வணங்குவது, நலத்திட்ட உதவிகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது, மருத்துமனையில் முதல்வர் நலமடைந்ததை மறைக்கும் காட்சி, ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் குடித்துக் கொண்டு கும்மாளம் போடும் ஆகிய காட்சிகள் வரும் போதெல்லாம் தியேட்டர் முழுவதுமே கைத்தட்டலால் அதிர்கிறது.

அரசியல் என்றாலே வாரிசு இல்லாமலா ?. அப்படித்தான் இந்தக் கதையிலும் வாரிசு அரசியல் வருகிறது. அடுத்து ஒரு வழக்கில் தன்னைக் கைது செய்வார்கள் என்று நினைக்கும் முதல்வர் நாசர், அவருடைய மகன் விஜய் தேவரகொன்டாவை முதல்வராகப் பதவியேற்க வைக்கிறார். குடித்துக் கொண்டு, நண்பர்கள், தோழிகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் விஜய் வீடியோ கேம் டிசைன் செய்யும் ஒரு நிபுணர். அப்பா பேச்சுக்கிணங்க 15 நாட்கள் மட்டுமே பதவியில் இருக்க சம்மதிக்கிறார். ஆனால், காலம் அவரை நிரந்தரமாக முதல்வர் பதவியில் அமர வைக்கிறது. அவருடைய அப்பா நாசரை ஒருமுறை கொல்ல திட்டம் நடக்கிறது. அதுபற்றி விசாரிக்கும் விஜய்க்கு அதன் பின் பல கோடி ரூபாய் விஷயம் இருப்பது தெரிய வருகிறது. அதைக் கண்டுபிடிக்க முயல்கிறார், அதற்குள் அவருடைய பதவிக்கும் ஆபத்து வருகிறது. அதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

விஜய் தேவரகொன்டா, தமிழ் சினிமாவுக்கு அழகாகவும், இயல்பாக மட்டும் நடிக்கவும் தெரிந்த ஒரு அறிமுகம். படத்தின் ஆரம்பத்திலேயே அவரும் கதாபாத்திரத்திற்குள் வந்துவிடுகிறார், நாமும் படத்திற்குள் நுழைந்து விடுகிறோம். ஒரு தெலுங்கு ஹீரோ, தமிழை இந்த அளவிற்குத் தெளிவாகவும், நல்ல உச்சரிப்புடனும் பேசியதற்கு தனியாக சில ஓட்டுகளை தாராளமாக வழங்கலாம். ஜாலியாக சுற்றிக் கொண்டிருப்பவருக்குள் ஒரு சிறுமியின் பஸ் எரிப்பு சம்பவம் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதன்பிறகே அரசியலில் தன்னை முழுமையாக நுழைத்துக் கொள்கிறார். அதன்பின் காட்சிக்குக் காட்சி விஜய்யின் வீர நடை படத்தில் இருக்கிறது. தீர்க்கமான பார்வை, கம்பீரமான நடை, முடிவெடுப்பதில் துணிச்சல் என விஜய் முதல்வர் கதாபாத்திரத்தில் முழு மெஜாரிட்டியுன் முத்திரை பதிக்கிறார். ஒரு படத்துடன் நின்றுவிடாமல் தமிழில் தொடர்ந்து படங்களில் நடியுங்கள் விஜய்.

அரசியல் என்றாலே ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, பத்திரிகை ஆகியவற்றின் பலம் இல்லாமல் இருக்குமா ?. ஆளும் கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர், நடிகர் என நாசர் அந்தந்த சமயங்களில் அதற்கான நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார். எந்தக் காட்சிக்கு எப்படி நடிக்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என நடிக்கும் ஆசை உள்ளவர்கள் நாசரின் நடிப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

எதிர்க்கட்சித் தலைவராக கே.எஸ்.ஜி வெங்கடேஷ். அவரை விட அவருடைய அரசியல் பெண் வாரிசு சஞ்சனாவுக்கு முக்கியத்துவம் அதிகம். கயல் என்ற அவருடைய பெயர் இன்றைய வாரிசு தலைவி ஒருவரை ஞாபகப்படுத்துகிறது. படத்தின் நாயகியாக மெஹ்ரீனை விட சஞ்சனா அதிக காட்சிகளில் வருகிறார். இடைவேளைக்குப் பின் விஜய், சஞ்சனா இடையிலான கூட்டணி ஆச்சரியப்பட வைக்கிறது. மெஹ்ரீன் ஆரம்பத்தில் ஒரே ஒரு அதிரடி கேள்வி கேட்கிறார். அதன்பின் காணாமல் போய்விடுகிறார்.

விஜய்க்கு வலதுகரமாக அரசியல் ஆலோசகராக சத்யராஜ். பத்திரிகையாளராக இருக்கும் சத்யராஜ் மீது மிகுந்த மரியாதையுடன் இருக்கிறார் விஜய். சத்யராஜ் தரும் அனைத்து ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்கிறார். அவர் சொல்வதற்கு முன்பும் செய்கிறார். அரசியல் படங்களில் சத்யராஜ் ‘பன்ச்’ வசனம் இல்லாமலா, அவர் பேசும் அரசியல் வசனங்களுக்கு இன்றைய தலைமுறை ரசிகர்களும் கைதட்டுகிறார்கள்.

எம்எஸ். பாஸ்கரின் நாசரின் வலதுகரமாக இருந்து பின்னர் நம்பிக்கையை இழக்கிறார். காலம் முழுவதும் இரண்டாமிடத்திலேயே இருந்த சில அரசியல் தலைவர்களை ஞாபகப்படுத்துகிறார். கருணாகரன் ஆரம்பத்தில் மட்டும் சில காட்சிகளில் வந்து கமெண்ட் அடித்து கைத்தட்டல் வாங்கி விடுகிறார்.

அரசியல் படத்தில் பாடல்களுக்கு அதிகத் தேவையிருக்காது, இருப்பினும் இரண்டு ஆட்டமான பாடல்களை இசைத்திருக்கிறார் சாம் சிஎஸ். பின்னணி இசையும் படத்தின் பலத்தைக் கூட்டுகிறது.

விஜய் தேவரகொன்டா போன்ற ஒரு புதுமுகம் இந்தப் படத்தில் நடித்திருப்பது பலம். அதுவே படத்திற்கு ஒரு புது அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. ஹீ‘ரோயின் இருக்கிறார் என்பதற்காக தேவையற்ற காதல் காட்சிகள், நண்பன் இருக்கிறார் என்பதற்காக தேவையற்ற நகைச்சுவைக் காட்சிகள் என இல்லாமல் அனைத்தும் அளவாகவே இருக்கிறது.

இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கும் அரசியல் என்ன என்பதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். அதைக் கொஞ்சம் ‘கிளாசிக்’ டச்சுடன் அணுகியிருப்பது போலத் தோன்றுகிறது, இன்னும் அதிரடியாக ‘லோக்கல் அரசியல்’ ஆகவும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

நோட்டா – கள்ள ஓட்டு இல்லாத நல்ல ஓட்டு

Movie Reviews

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 3.5/5

Published

on

By

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்

கதை

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்படாமல் விட்ட குண்டுகள் சில இந்திய கடற்கரையில் கரை ஒதுங்குகின்றன. மாமல்லபுரத்தில் அப்படி கரை ஒதுங்கும் ஒரு குண்டு, சென்னைக்கு வந்து, அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு செல்கிறது. அந்த குண்டடை சென்னையிலிருந்து மற்ற இரும்பு சாமான்களுடன் ஏற்றிச் செல்லும் லாரி டிரைலர் தினேஷுக்கு அந்த குண்டு பற்றி தெரிய வருகிறது. அதை செயலிழக்க வைக்க அவர் முயற்சி செய்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

நடிப்பு

தனக்கான கதையும், கதாபாத்திரங்களும் கிடைக்கும் போது தினேஷுக்குள் ஒளிந்திருக்கும் நடிகர் மிக யதார்த்தமாக எட்டிப் பார்க்கிறார். இந்தப் படத்தில் ஒரு நிஜமான இளம் லாரி டிரைவர் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார். வாயைத் திறந்தாலே பேசிக் கொண்டே இருக்கும் ஒரு குணம். பல காட்சிகள் அட, அசத்துகிறாரே என சொல்ல வைத்திருக்கிறார்.

நாயகி ஆனந்திக்கு தினேஷைக் காதலிப்பதும், குடும்பத்தினரிடம் திட்டு வாங்குவதும்தான் வேலை. இவருக்கும் தினேஷுக்குமான காதலில் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தைக் காட்டியிருக்கலாம்.

காயலான் கடை முதலாளியாக மாரிமுத்து, இவர் சொன்னதை அப்படியே செய்து காட்டும் முனிஷ்காந்த் மனதில் பதிகிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் ரித்விகா அதிகம் கவர்கிறார். இன்ஸ்பெக்டர் லிஜேஷ் குறிப்பிட வைக்கிறார்.

இசை, மற்றவை

தென்மாவின் இசையில் கதையுடன் சேர்ந்து பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலத்தைக் கொடுத்திருக்கின்றன. கிஷோர் குமார் ஒளிப்பதிவு கதைக்கு என்ன தேவையோ அதனுடன் இயல்பாய் அமைந்துள்ளது. கலை இயக்குனர் ராமலிங்கம் தன் முழு உழைப்பை படத்தில் காட்டியிருக்கிறார்.

+

புதிய கதைக்களம், இயல்பான கதாபாத்திரங்கள், அதில் அனைவரின் சிறந்த நடிப்பு

இடைவேளைக்குப் பின் பயணத்திலேயே நகர்கிறது கதை. திரைக்கதை சிறப்பாக இருந்தாலும் இன்னும்  சில அழுத்தமான காட்சிகள் படத்தில் இருந்திருக்கலாம்.

Continue Reading

Movie Reviews

ஜடா – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 2.5/5

Published

on

By

ஜடா - விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

வட சென்னை பகுதியைச் சேர்ந்த கதிருக்கு கால்பந்து விளையாட்டு வீரராக வேண்டும் என ஆசை. அதே சமயம் தனக்கு கால்பந்து விளையாட சொல்லிக் கொடுத்து ‘செவன்ஸ்’ என்ற முரட்டுத்தமான கால்பந்து போட்டியில் மரணமடைந்த கிஷோருக்காக ‘செவன்ஸ்’ விளையாடி, அவரைக் கொன்றவர்களைப் பழி வாங்க நினைக்கிறார். அது நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடிப்பு

‘பிகில்’ படத்திற்குப் பிறகு மீண்டும் கால்பந்து விளையாட்டு வீரராக கதிர். இந்தப் படத்தில் தனி நாயகனாக ஜொலிக்கிறார். கால்பந்து விளையாட்டில் தேர்ந்தவராக நடித்திருக்கிறார். கிளைமாக்சுக்கு முன்பாக ஆக்ஷனிலும் இறங்குகிறார். இரண்டாவது கதாநாயகன் போல படம் முழுவதும் வருகிறார் யோகி பாபு. ஆனால், அடிக்கடி காணாமல் போய்விடுகிறார். நாயகி ரோஷினி பிரகாஷுக்கு அதிக வேலையில்லை. வில்லனாக ஓவியர் எபி ஸ்ரீதர், தோற்றத்தில் மிரட்டுகிறார். கால்பந்து கோச்சாக கிஷோர், வழக்கம் போல மனதில் இடம் பிடிக்கிறார்.

இசை, மற்றவை

சாம் சிஎஸ் இசையில் ‘அப்படிப் பார்க்காதே’ பாடல் இனிமை. ஒளிப்பதிவாளர் கால்பந்து காட்சிகளிலும், இடைவேளைக்குப் பின் கிராமத்துக் காட்சிகளிலும் நன்றாக லைட்டிங் செய்திருக்கிறார்.

+

இடைவேளை வரையிலான படம்

இடைவேளைக்குப் பிறகான படம்

Continue Reading

Movie Reviews

தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 2.25/5

Published

on

By

தனுசு ராசி நேயர்களே விமர்சனம்

கதை

ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளவர் ஹரிஷ் கல்யாண். ஏற்கெனவே ஒரு காதல் தோல்வியடைந்தவருக்கு டிகங்கனா சூர்யவன்ஷி மீது காதல் வருகிறது. ஆனால், டிகங்கனா மார்ஸ் கிரகத்திற்குச் செல்லும் ஆசையில் இருப்பவர். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

இந்தக் கதை மீதும், தன் கதாபாத்திரம் மீதும் எப்படி நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை. கொஞ்சம் நகைச்சுவை கலந்த கதாபாத்திரம். ஆனால், அவருக்கு அந்த நடிப்பே வரவில்லை. காதலில் மட்டும் கொஞ்சம் ஜொலிக்கிறார்.

நாயகி டிகங்கனா மிக அழகாக இருக்கிறார், சிரிக்கிறார், கொஞ்சம் நடிக்கிறார், கிளாமர் காட்டவும் தயங்காமல் இருக்கிறார். நல்ல படங்களைத் தேர்வு செய்தால் தமிழ் சினிமாவில் தனி இடத்தைப் பிடிக்கலாம். இந்தப் படத்தில் இவருக்குத்தான் ராசி வேலை செய்யும் போலிருக்கிறது.

யோகி பாபு, ஒரு நடிகராகவே வந்து படத்தைத் தொகுத்து வழங்குகிறார். இவருக்கும், படத்திற்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை. ரெபா மோனிக்கா ஜான், ரேணுகா, முனிஷ்காந்த் கொடுக்கப்பட்ட வேடத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்கள்.

இசை, மற்றவை

ஜிப்ரான் இசையில் பாடல்கள் ஒன்று கூட தேறவில்லை. மற்றவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.

+

நாயகி டிகங்கனா சூர்யவன்ஷி

மற்றவை எல்லாம்…

 

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: