Connect with us

Movie Reviews

சீமராஜா – விமர்சனம்

Published

on

seemaraja-review

இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன், இமான் கூட்டணி இந்த கிராமத்துக் கதையிலும் தங்களது முத்திரையைப் பதித்திருக்கிறது. கூடவே, போனசாக ஒரு சரித்திரக் கதையையும் சேர்த்துக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

‘சீமராஜா’ என்ற பெயருக்கேற்றபடியே எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாகச் சுற்றித் திரியும் ராஜா சிவகார்த்திகேயன், தன்னை ராஜாதி ராஜாவாக சொல்லிக் கொண்டு திரிகிறார். படத்தில் நிறையவே ரஜினி சாயல் தெரிகிறது. அந்த கலகலப்பும், பக்கத்து வீட்டுப் பையன் தோற்றமும் சிவகார்த்திகேயனுக்குப் பொருத்தமாகவே அமைந்துவிடுவதால் ‘சீமராஜா’வும் சிறப்பாகவே இருக்கிறார்.

ராஜ பரம்பரையில் வந்த வாரிசு சிவகார்த்திகேயன். அவரை வாழ்த்துபவர்களுக்கு வாரி வழங்கும் குணம் கொண்டவர். அப்படிப்பட்டவருக்கு சமந்தாவின் அழகில் காதல் வருகிறது. ஊரே மரியாதையுடன் பார்க்கும் ராஜா சிவகார்த்திகேயனை கொஞ்சம் ஏளனமாக, நம்பிக்கையில்லாமல் பார்க்கிறார் சமந்தா. இருவரது காதலும் கனியும் சமயத்தில் தன் மகள் சமந்தாவை சிவகார்த்திகேயனுக்குக் கொடுக்க முடியாது என சிறை வைக்கிறார் வில்லன் லால். கறிக்கடை கண்ணன் ஆக இருந்த லால், ஊர் மக்களுக்குத் துரோகம் செய்து பணக்காரன் ஆகி, தன்னையும் ஒரு ராஜா போல நினைத்துக் கொண்டு சுற்றி வருபவர். பொறுப்பே இல்லாமல் இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் தன் பரம்பரையின் வீரம், வலிமை கேட்டு களத்தில் இறங்கி காதலியைக் கைபிடிக்கிறாரா, ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறாரா என்பதுதான் படத்தின் கதை.

சீமராஜாவாக சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபராக, ரஜினி முருகனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சீமராஜாவாக சீரும் சிறப்புமாகவே இடம் பிடிக்கிறார். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை அவருக்காகவே உருவாக்குகிறார்களா அல்லது கதாபாத்திரத்திற்காக அவ்வளவு பொருத்தமாக சிவகார்த்திகேயன் இருக்கிறாரா என்று சொல்லுமளவிற்கு இறங்கி விளையாடியிருக்கிறார். காதல், காமெடி, ஆக்ஷன் என படம் முழுவதும் இந்த ராஜாவின் ராஜ்ஜியம் பரவலாக இருந்தாலும், பிளாஷ்பேக்கில் அந்த சரித்திர ராஜா, கொஞ்ச நேரமே வந்தாலும் வெற்றிக் கொடி, வீரக் கொடி நாட்டிவிடுகிறார்.

காலையில் தோட்டத்தில் இருந்த பறித்த தக்காளி போல அவ்வளவு பிரஷ் ஆக இருக்கிறார் சமந்தா. கோபப்படும் ஒரு சில காட்சிகளைத் தவிர அந்த சிரித்த முகம் சமந்தா, சிக்கனமில்லாமல் ரசிக்க வைக்கிறார். அளவான கிளாமர், நிறைவான அழகு, அசத்தலான வீரம் என சமந்தாவுக்கும் இந்தப் படம் ஒரு சக்சஸ் படம்.

சிவகார்த்திகேயன் படம் என்றாலே சூரிக்கு தனி ‘மேத்ஸ்’ வந்துவிடுகிறது. கிடைக்கும் கேப்பில் மட்டுமே கமெண்ட்டுகளை அள்ளிவிடுகிறார்.  வில்லனாக லால், வில்லியாக சிம்ரன் ஆவேசக் குரலில் அதிர வைக்கிறார்கள். சிவகார்த்திகேயன் அப்பாவாக நெப்போலியன் மகனைக் கண்டிக்க முயன்று தோற்றுப் போகும் அன்பான அப்பா. மற்ற கதாபாத்திரங்களில் பிளாஷ் பேக்கில் ராணியாக வரும் கீர்த்தி சுரேஷ் தனி கவனம் பெறுகிறார்.

இமானின் இசையில் அனைத்துப் பாடல்களுமே ஏற்கெனவே ஹிட்டாகிவிட்டன. ‘மச்சக்கன்னி…., உன்னை விட்டா யாரும்…’ இந்த வருடத்தின் ரிபீட் பாடல்களாக இருக்கும்.

படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் படத்திற்கு இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். ‘மல்யுத்தப் போட்டி, நாயை சிறுத்தை என்று சொல்லி ஊருக்குள் விடுவது’ ஆகிய காட்சிகளை தாராளமாகக் குறைத்திருக்கலாம்.

தியேட்டருக்குப் போய் ஜாலியாகப் படம் பார்க்க வேண்டும் என்ற என்டர்டெயின்மென்ட் ரசிகர்களுக்கு சீமராஜா, சிறப்பு ராஜா.

Movie Reviews

பக்கிரி – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 3/5

Published

on

By

பக்கிரி விமர்சனம் - 4 Tamil Cinema

பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட, ‘The Extraordinary Journey of the Fakir’ படத்தின் தமிழ் டப்பிங் படம்தான் இந்த ‘பக்கிரி’.

கென் ஸ்காட் என்ற கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குனர் இயக்கியிருக்கிறார்.

தனுஷ், அவருடைய அம்மாவுடன் மும்பையில் வசித்து வருகிறார். அவருக்கு தன் அப்பா பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த ஒருவர் என்று மட்டும்தான் தெரியும். ஆனால், அவரை நேரில் பார்த்ததில்லை. தான் எப்போதும் ஏழையாக இருக்கக் கூடாது என்பதற்காக மேஜிக் செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். தன் அம்மாவின் மறைவுக்குப் பிறகு அப்பாவைத் தேடி பாரிஸ் செல்கிறார். அங்கு அவர் சந்திக்கும் விஷயங்கள்தான் படத்தின் மீதிக் கதை.

தமிழ்ப் படங்களில் பார்ப்பதை விட ஆங்கிலப் படங்களில் பார்ப்பதற்கு தனுஷ் வேறு விதமான தோற்றத்தில் இருக்கிறார். மேஜிக் செய்து ஏமாற்றுவது, குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது, பிரான்ஸ் சென்று அங்கு சிக்கல்களில் மாட்டி, தப்பிப்பது என தனுஷின் நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பு.

தனுஷைக் காதலிப்பவராக எரின் மொரியார்டி. ஆரம்பத்திலும், பின்னர் கடைசியிலும் வருகிறார். இடைவேளைக்குப் பின் நடிகையாக வரும் பெரினிஸ் பிஜோ தனுஷுக்கு உதவி செய்கிறார்.

படத்தின் கிளைமாக்ஸ்தான் மிகவும் டச்சிங்கானது. தனக்குக் கிடைத்த பணத்தை அப்படியே அகதிகளுக்குப் பிரித்துக் கொடுக்கும் காட்சியில் கண் கலங்க வைக்கிறார்.

ஒரு பயணக் கதையாக நகர்ந்தாலும் ஆரம்பமும், முடிவும் நமக்கேற்ற சென்டிமென்ட்டாக அமைந்து ரசிக்க வைக்கிறது.

Continue Reading

Movie Reviews

கொலைகாரன் – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 3.5/5

Published

on

By

கொலைகாரன் விமர்சனம் - 4 Tamil Cinema

ஒரு பரபரப்பான த்ரில்லர் படம்தான் ‘கொலைகாரன்’. ஒரு கொலை, அதைச் சுற்றி நடக்கும் மர்மமான விஷயங்கள், யார் கொலைகாரன் என கண்டுபிடிக்கப் போராடும் போலீஸ் அதிகாரி…எதிர்பார்க்க முடியாத கிளைமாக்ஸ் என அடுத்து என்ன நடக்கப் போகிறது என நம்மால் யூகிக்க முடியாத அளவிற்கு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ்.

படத்தின் மிகப் பெரும் பிளஸ் பாயின்டாக இருப்பது கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அதற்கான பொருத்தமான நட்சத்திரத் தேர்வு மற்றும் அவர்களின் அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பு.

கட்டுமானக் கம்பெனி ஒன்றில் வேலை செய்பவர் விஜய் ஆண்டனி. அவரது எதிர் பிளாட்டில் அம்மா சீதா, மகள் அஷிமா நர்வால் குடியிருக்கிறார்கள். சென்னை, வியாசர்பாடி பகுதியில் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒரு கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அந்த வழக்கை டிசிபி அர்ஜுன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இறந்தவர் ஆந்திர மந்திரி ஒருவரின் தம்பி எனத் தெரிய வருகிறது. அஷிமா நர்வால் ஹைதராபாத்தில் இருக்கும் போது அவருக்கு டார்ச்சர் செய்தவர்தான் அந்த மந்திரியின் தம்பி. அதனாலேயே அஷிமா அம்மா சீதாவுடன் சென்னைக்கு வந்திருக்கிறார். அஷிமா, சீதா இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பார்களா என்ற கோணத்தில் விசாரிக்க ஆரம்பிக்கிறார் அர்ஜுன். ஆனால், விஜய் ஆண்டனி அந்தக் கொலையை தான் தான் செய்ததாக போலீசில் சரணடைகிறார். இதன் பின்ன என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு போலீஸ் அதிகாரி இப்படித்தான் விசாரணையை நடத்துவாரோ என்று நம்பும் அளவிற்கு அவ்வளவு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அர்ஜுன். இவரும் விஜய் ஆண்டனியும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் அவ்வளவு அழுத்தமாக அமைந்துள்ளன. அதிலும் விஜய் ஆண்டனி வேலை செய்யும் இடத்திற்குச் சென்று அர்ஜுன் பேசும் காட்சியில், அர்ஜுன் அவரது போலீஸ் அதிகாரத்தைக் காட்ட, அதற்கு அலட்சியமாக விஜய் ஆண்டனி பதிலளித்து அந்த இடத்தை விட்டுச் செல்லும் காட்சி, அதில் அவர்கள் இருவரின் நடிப்பு சிம்ப்ளி சூப்பர்ப். ஒவ்வொரு கட்டத்திலும் தான் தோற்றுப் போய்விடக் கூடாது, உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அர்ஜுனின் கடமை உணர்வு நடிப்புக்கு ஒரு சல்யூட்.

விஜய் ஆண்டனி யார், அவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார், அவருடைய பின்னணி என்ன என ஆரம்பம் முதலே அவர் கதாபாத்திரம் மீது நமக்கும் ஒரு தெளிவான குழப்பம் வருவது போன்ற பாத்திரப் படைப்பு, அதை உணர்ந்து நடிக்கும் விஜய் ஆண்டனி, இவையெல்லாம் படத்திற்கு பக்கபலம். இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் என்றால் விஜய் ஆண்டனிக்கு சொல்லவா வேண்டும். அந்த வெறித்த பார்வையிலும், தெனாவெட்டான பேச்சிலும் அவர் கதாபாத்திரத்தை மிகச் சரியாக நியாயப்படுத்துகிறார்.

அஷிமா நர்வால், தமிழில் முதல் படம். பொதுவாக ஹீரோயின்களுக்கு படங்களில் நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைப்பது அரிது. அதிலும், முதல் படத்தில் பாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தப் படத்தில் அஷிமாவுக்கும் ஒரு அழுத்தமான கதாபாத்திரம். தவறு செய்துவிட்டு, அந்தத் தவறைச் செய்யாத மாதிரி நடிக்க வேண்டிய கதாபாத்திரம். தமிழ் தெரியாமல் கதாபாத்திரத் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்.

சீதா, நாசர், பகவதி பெருமாள் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் கூட எந்த ஒரு இடத்திலும் மிகைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தாமல், அந்தந்த கதாபாத்திரங்களில் அளவுடன், இயல்புடன் நடித்திருக்கிறார்கள்.

இம்மாதிரியான சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் பின்னணி இசைக்கு மிகப் பெரும் பங்கு இருக்கும். அதை மிகச் சரியாக உணர்ந்து படத்தை தன் பின்னணி இசையாமல் மேலும் பேச வைத்திருக்கிறார் சைமன் கே கிங். அதிலும் அந்த தீம் மியூசிக் அப்படியே உள்ளுக்குள் இறங்குகிறது. ஒளிப்பதிவாளர் முகேஷ், படத் தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின், சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் டெக்னிக்கலாக அசத்தியிருக்கிறார்கள்.

கிளைமாக்சுக்கு முன்பாக எதிர்பாராத சில திருப்பங்கள் வித்தியாசமான படம் என்பதிலிருந்து கொஞ்சம் மாறி, பழி வாங்கும் கதையாகக் கொஞ்சம் தடம் மாறுகிறது. படத்தில் வைத்துள்ள அந்த இரண்டு பாடல்கள் கூடத் தேவையில்லை. பாடல்கள் இல்லாத படமாக இருந்தால் கூட நன்றாகத்தான் இருந்திருக்கும்.

காமிரா கோணம், எடிட்டிங் ஸ்டைல், திரைக்கதை யுக்தி, நடித்தவர்களின் மெச்சூர்டான நடிப்பு என மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு தரத்துடன் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறது ‘கொலைகாரன்’ குழு.

கொலைகாரன் Vs காவல்காரன்….ஏட்டிக்குப் போட்டி…

Continue Reading

Movie Reviews

7 – விமர்சனம்

4 Tamil Cinema Rating – 2.5/5

Published

on

By

7 விமர்சனம் - 4 Tamil Cinema

ஒரு படத்தில் 6 நாயகிகள் என்பதே ஆச்சரியமான விஷயம். அனைவருக்கும் சரியான விதத்தில் முக்கியத்துவம் கொடுத்து ஒரு படத்தைக் கொடுப்பது சாதாரணமானதும அல்ல.

அறிமுக இயக்குனர் நிசார் ஷபி, ‘7’ என தலைப்பை வைத்திருந்தாலு இழு, இழுவென இழுக்காமல் கொஞ்சம் பரபரப்பாகவே இந்தப் படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

ஆனாலும், 80களிலேயே சினிமாவில் அழிந்து போன சில பாத்திரப் படைப்புகளை அவர் இந்தப் படத்தில் வைத்து நம் பொறுமைகளை சோதித்துள்ளார். குறிப்பாக உதவி போலீஸ் கமிஷனர் ரகுமான் எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கிறார். ஒரு ஜோல்னாப் பை மாட்டிக் கொண்டால் அவர் ஒரு பத்திரிகையாளர் என அரதப் பழசான கதாபாத்திரப் படைப்பை உருவாக்கியிருக்கிறார்.

வித்தியாசமான கதையாக யோசித்தவர், கதாபாத்திர வடிவமைப்பு, வசனங்கள், சில டெம்பிளேட் காட்சிகள் ஆகியவற்றால் படத்தை அவரே பின்னோக்கி இழுத்துவிடுகிறார்.

நந்திதா ஸ்வேதா,  அனிஷா அம்புரோஸ், அதிதி ஆர்யா, த்ரிதா சௌத்ரி ஆகியோர் ஹவிஷ் தான் எங்களது கணவர், அவரைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள். ஒரே சமயத்தில் நால்வரும் ஒருவர்தான் தங்களது கணவர் என சொல்லி குழப்புகிறார்கள். போலீஸ் அதிகாரி ரகுமான் ஹவிஷைக் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருக்க, அவரை த்ரிதா கொல்ல முயற்சிக்கிறார். ஏன் இத்தனை குழப்பங்கள் என்பதற்கான விடைதான் 7.

அட ஒரு அற்புதமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தைப் பார்க்கப் போகிறோம் என ஆர்வமுடன் உட்கார்ந்தால், அதை அப்படியே காதல் படமாக மாற்றுகிறார் இயக்குனர். அடுத்து பேய்ப் படமாக இருக்குமோ என ஒரு சந்தேகம் வருகிறது. மீண்டும் காதல் படமாக மாறி, த்ரில்லர் படமாகவும் மாறி, பழி வாங்கும் சம்பவத்துடன் படம் முடிகிறது. அடுத்தடுத்து டிவிஸ்ட், டேர்ன் என இயக்குனர் யோசித்தாலும் அதை சரியான திரைக்கதையால் சொல்ல முடியாமல் கொஞ்சம் திணறிப் போயிருக்கிறார்.

நடிப்பைப் பொறுத்தவரையில் ரெஜினா நடிப்பு நாடகத்தனமாக இருந்தாலும் அவர் கதாபாத்திரம்தான் படத்தின் மையம். ரெஜினாவின் வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாட்டிதான் கிளைமாக்சில் மிரட்டுகிறார். இவர்களுக்குப் பிறகு ரகுமான் மிடுக்குடன் நடித்துள்ளார். மற்ற கதாநாயகிகளுக்கு அதிக வாய்ப்பில்லை. நந்திதா, அனிஷா, த்ரிதா ஆகியோருக்கு மட்டும் பேசுவதற்காவது காட்சிகள் உள்ளன. அதிதி ஆர்யா, புஜிதா பொன்னடா பேசாமலே வந்து போகிறார்கள்.

படத்தின் நாயகன் ஹவிஷ் எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரிதான் நடிக்கிறார். பிளாஷ்பேக்கில் மட்டும் கொஞ்சம் பளிச்செனத் தெரிகிறார்.

சென்னை, ஹைதராபாத் என காட்சிகள் மாறி மாறி வருவது வேறு படத்தின் நேட்டிவிட்டியை கூடுதலாகக் குழப்புகிறது.

பாடல்களும், பின்னணி இசையும் இப்படிப்பட்ட படங்களைக் காப்பாற்ற வேண்டும். அதை செய்யத் தவறியிருக்கிறார் சேத்தன் பரத்வாஜ். இயக்குனரே ஒளிப்பதிவாளர் என்பதால் லைட்டிங்கிற்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

பெரிய இயக்குனர்கள் கூட ஆறு நாயகிகளை வைத்து படமெடுக்கத் தயங்குவார்கள். அதை செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குனர். முதல் அனுபவம் என்பதால் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். அடுத்த படத்தில் அதை சரி செய்வார் என நம்புவோம்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!