விஜய் டிவியில் வரும் அக்டோபர் 12ம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு ‘தி வால்’ எனும் கேம் ஷோ ஒளிபரப்பாக உள்ளது.
உலகின் மிகச்சிறந்த கேம் ஷோவான ‘தி வால்’ என்பது நாற்பதடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட சுவர் போன்ற டிஜிட்டல் போர்டில் விளைவயாடும் அறிவு மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாகும்.
இதில் இரண்டு நபர்கள் ஜோடியாக விளையாட வேண்டும். இதன் பரிசுத்தொகை இதுவரை எவரும் அளித்திராத பிரம்மாண்ட தொகையாகும். இதில் அதிர்ஷடமும் அறிவும் கைகொடுத்தால் இரண்டரை கோடி ரூபாயை வெல்லலாம்.
ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள், நண்பர்கள் இந்த போட்டியில் ஜோடியாக கலந்து கொள்ள வேண்டும். நகைச்சுவையாகவும், கலகலப்பாகவும் தொகுத்து வழங்குபவர்கள் எனப் பெயர் பெற்ற மகாபா ஆனந்த், பிரியங்கா இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்கள்.
‘தி வால்’ ஒரு பிரம்மாண்ட டிஜிட்டல் போர்டு. அதன் மேல் மட்டத்தில் ஏழு ஸ்லாட்டுகள் இருக்கும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வெள்ளை, பச்சை, சிவப்பு பந்துகளை ஆட்டத்திற்கு ஏற்றவாறு அதிலிருந்து செலுத்த வேண்டும். அந்த பந்துகள் இடையிடையே அமைக்கப்பட்டுள்ள இடறுகளைத் தாண்டி கீழே வந்து விழும். கீழ் வரிசையில் பல கூடைகள் அமைக்கப்பட்டிருக்கும். அதில் பல தரப்பட்ட பரிசு தொகைகள் ரூபாய் ஒன்றில் இருந்து இரண்டரை கோடி ரூபாய் வரை பண மதிப்புகள் அமைக்கப்பட்டிருக்கும்.
மேலிருந்து கீழ் வந்து விழும் பந்து எந்த கூடையில் விழுகிறதோ அதன்படி பரிசுத் தொகைகள் நிர்ணயிக்கப்படும். இந்தப் போட்டியில் மூன்று நிற பந்துகள் அளிக்கப்படும். வெள்ளை பந்துகள் மற்றும் பச்சை பந்துகள் பரிசுத் தொகையை அதிகரிக்கும். சிகப்புப் பந்துகள் வென்ற தொகையில் இருந்து பரிசுத்தொகையை கழித்துவிடும். போட்டியாளர்கள் சொல்லும் சரியான மற்றும் தவறான பதில்களின் அடிப்படையில் இந்த பந்துகளின் நிறங்கள் நிர்ணயிக்கப்படும்.
இவ்வாறாக போட்டி விறுவிறுப்பாக நடைபெறும். மேலும் முதல் 2 ரவுண்டில் மட்டுமே இரண்டு போட்டியாளர்கள் இணைத்து விளையாட முடியும். மூன்றாவது சுற்றில் இருந்து இருவரும் பிரிக்கப்படுவர். ஒருவர் வால் முன்பு நின்றும், மற்றொருவர் தனியறையில் இருந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் விளையாட்டைத் தொடரவேண்டும்.
கடைசி வரும் கட்டத்தில் ஒரு ஒப்பந்தக் கடிதம் தனியறையில் இருக்கும் போட்டியாளருக்குக் கொடுக்கப்படும். அவர் அதில் கையெழுத்து இடுகிறாரா அல்லது அதை கிழித்துப் போடுகிறாரா என்பதைப் பொறுத்து அவர்கள் சேர்த்த பரிசுத் தொகைகளை அவர்கள் எடுத்துச்செல்ல முடியும்.
மிகவும் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும் இந்த கேம் ஷோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஒரு ஷோவாக இருக்குமாம்.