Connect with us

Reviews

திருமணம் – விமர்சனம்

Published

on

திருமணம் விமர்சனம்

தமிழ் சினிமாவில் குடும்பத்துடன் மக்கள் வந்து பார்க்கக் கூடிய படங்களைக் கொடுக்கும் இயக்குனர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் சேரன்.

அவருடைய பல படங்கள் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய படங்களாகவும் அமைந்த படங்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு அழுத்தமான குடும்பக் கதையுடன் இந்தத் ‘திருமணம்’ படம் மூலம் களம் இறங்கியிருக்கிறார்.

தங்கை காவ்யாயின் காதலுக்கு குறுக்கே நிற்காமல் சம்மதம் சொல்கிறார் அண்ணன் சேரன். காவ்யாவைக் காதலிக்கும் தம்பி உமாபதியின் காதலுக்கு சம்மதம் சொல்கிறார் அக்கா சுகன்யா. காவ்யாவின் குடும்பம் நடுத்தரக் குடும்பம். உமாபதியின் குடும்பன் ஜமீன் குடும்பம். இவர்களது திருமணத்தை நடத்தி வைக்க சேரன், சுகன்யா இடையில் பேச்சு வார்த்தை ஆரம்பமாகிறது. முதலில் சரியாகச் செல்வது, பின்னர் பிரச்சினையில் போய் முடிய, உமாபதி, காவ்யா திருமணம் தடைபடுகிறது. அதன் பின் அவர்களது திருமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் திருமணச் செலவுகள் பற்றிய பல உண்மைகளை நமக்கு உணர்த்தும் கதை.

இயக்குனராக சேரன் எப்போதுமே சரியான கருத்துக்களைச் சொல்வார். அது இந்தத் திருமணம் படத்திலும் தொடர்கிறது. அருமையான கதாபாத்திரங்கள், கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்கள், அழுத்தமான வசனங்கள் என இயக்குனர் சேரனின் இந்தத் திருமணத்தைப் பாராட்ட பல விஷயங்கள் உள்ளன. இந்தக் காலத்தில் துளி கூட கிளாமர் காட்டாத நடிகைகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத ஒரு படம், காமெடி என்ற பெயரில் கிண்டல் செய்வது ஆகியவை இல்லாமலும் ஒரு படத்தைக் கொடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்.

ஒரு அண்ணன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அந்தக் கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் சேரன். அப்பா இல்லாத ஒரு குடும்பத்தைத் தாங்கிச் சுமக்கும் பொறுப்பில் அண்ணனாக அவ்வளவு அம்சமாய் நடித்திருக்கிறார். பாசம் காட்ட வேண்டிய இடத்தில் பாசம், கோபம் காட்ட வேண்டிய இடத்தில் கோபம். பரிவு காட்ட வேண்டிய இடத்தில் பரிவு. தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ அண்ணன், தங்கை பாசக் கதைகளைப் பார்த்திருக்கிறோம். அதில் இந்தத் திருமணமும் பெயர் சொல்லும் படமாக இருக்கும்.

பணக்காரத் தோரணை, தம்பி மீது அதீத பாசம், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற எண்ணம், தமிழ் சினிமாவில் கம்பீரமான கதாபாத்திரங்களில் நடிக்க சுகன்யாவை யாரும் இதுவரை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நினைக்கத் தோன்றும். அவருடைய பார்வை, உடல் மொழி, வசன உச்சரிப்பு அனைத்திலும் அவ்வளவு தெளிவு. இந்தப் படத்திற்குப் பின் சுகன்யாவை தமிழ் சினிமா மேலும் பயன்படுத்திக் கொள்ளும்.

சினிமாத்தனமில்லாத யதார்த்தமான தோற்றத்தில் உமாபதி, காவ்யா சுரேஷ். இந்தக் கதாபாத்திரங்களுக்கு முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைத்தால் கூட பொருத்தமாக இருந்திருக்காது. இவர்கள் இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் காதலுக்கான எல்லை தாண்டாமல் அவ்வளவு கண்ணியமாக நடித்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் தற்போதைய சிறந்த குணச்சித்திர நடிகர்களில் தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர் இருவரும் முக்கியமானவர்கள். தங்கள் குடும்பங்களைப் பற்றி இருவரும் சொல்லும் அந்தக் காட்சியில் யாரும் கண் கலங்காமல் இருக்க முடியாது.

நகைச்சுவைக்கு பால சரவணன். சேரனுக்கு ஆலோசனை சொல்ல மேலதிகாரி ஜெயப்பிரகாஷ். சேரனின் அம்மாவாக சீமா நாயர். அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு.

சேரனின் படங்கள் என்றாலே ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலாவது காலத்திற்கும் கேட்கும்படியான பாடலாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அது இல்லை. சித்தார்த் விபின் ஏமாற்றிவிட்டார். பின்னணி இசையில் சபேஷ் முரளி காட்சிகளின் உணர்வை தங்கள் பின்னணி இசையால் மேலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவு கதைக்கு என்ன தேவையோ, உணர்வுகளை எப்படி ரசிகர்களுக்கு உணர வைக்க வேண்டுமோ அவற்றோடு காட்சிப்படுத்தியிருக்கிறது.

நம் குடும்பத்தில் நாம் என்னதான் பார்த்துப் பார்த்து ஒரு திருமணத்தை நடத்தி வைத்தாலும், நாம் சரியாகச் செய்து விட்டோமே என்ற பொறாமையில் சிலர் வேண்டுமென்றே சில குற்றங்களைச் சொல்வார்கள். அது அனைவரது வீட்டிலும் நடக்கும். குறையில்லாமல் ஒரு திருமணத்தை நடத்த முடியாது. இந்தத் திருமணத்திலும் சில குறைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றைவிட அதிகமான நிறைகள் உள்ளன.

திருமணச் செலவுகள் ஒவ்வொரு குடும்பத்தையும் எப்படி பாதிக்கிறது, அதை எப்படி தவிர்க்கலாம் என்ற சிறந்த ஆலோசனையை வெறும் 100 ரூபாய் செலவில் இந்தப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதற்காக இயக்குனர் சேரனுக்கு இந்தப் படத்தைப் பார்ப்பதன் மூலம் நாம் ‘மொய்’ வைத்து வாழ்த்தலாம்.

திருமணம் – நறுமணம்

Movie Reviews

ஜாக்பாட் – விமர்சனம்

4 Tamil Cinema – Rating – 3/5

Published

on

By

ஜாக்பாட் விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

அண்ணன் மகள் ஜோதிகாவை சிறு வயதிலிருந்து எடுத்து வளர்ப்பவர் ரேவதி. இருவரும் சிறு சிறு திருட்டுகள், ஏமாற்று வேலைகள் ஆகியவற்றை செய்வதை வழக்கமாகக் கொண்டவர்கள். தாதா ஆனந்தராஜை ஏமாற்றி அவரது நகை, கார் ஆகியவற்றை திருடுகிறார்கள். ஒரு சிறு பிரச்சினையில் சிறைக்குச் செல்பவர்கள் அங்கு கைதியாக இருக்கும் சச்சுவை சந்திக்கிறார்கள். அவர் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் ஒன்றை ஆனந்தராஜ் வீட்டில் மறைத்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த பாத்திரத்தில் எதை போட்டாலும் அது குறையாமல் வந்து கொண்டே இருக்கும் என்கிறார். அந்தப் பாத்திரத்தைத் திருட ஆனந்தராஜ் வீட்டுக்குச் செல்கிறார்கள் ஜோதிகாவும், ரேவதியும். அவர்கள் தன்னை ஏமாற்றியவர்கள் என்பதைத் தெரிந்து கொண்ட ஆனந்தராஜ் அவர்களை விரட்ட அங்கிருந்து தப்பிக்கிறார்கள். எப்படியாவது அந்த பாத்திரத்தைத் திருட வேண்டும் என ஜோதிகாவும், ரேவதியும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடிப்பு

ஜோதிகா முதன் முறையாக ஆக்ஷன் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம். சண்டைக் காட்சிகளில் எகிறி எகிறி அடிக்கிறார், கம்பு சண்டை போடுகிறார். இதுவரையிலும் கண்ணியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தவர், முதல் முறையாக திருடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முடிந்த வரையிலும் நகைச்சுவையை வெளிக்காட்ட முயற்சித்திருக்கிறார். ஜோதிகாவுக்கு இணையான கதாபாத்திரத்தில் ரேவதி. இவரை படத்தின் இரண்டாவது கதாநாயகி என்று தாராளமாகச் சொல்லலாம்.

ஜோதிகா, ரேவதி கூட்டணிதான் படத்தைத் தாங்கும் என இயக்குனர் நினைத்திருக்கிறார். ஆனால், படத்தை தாங்கிப் பிடிப்பது டபுள் ஆனந்தராஜ். ஒருவர் தாதா மானஸ்தான், மற்றொருவர் பெண் இன்ஸ்பெக்டர் மானஸ்தி. ஆமாம், முழுமையான பெண் கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ். இயக்குனரின் யோசனைக்கும், கற்பனைக்கும் ஆனந்தராஜ், ஆனந்திராஜ் ஆக நன்றாகவே உயிர் கொடுத்திருக்கிறார். யோகி பாபு படத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் சிரிப்பு வரவில்லை.

இசை, மற்றவை

விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் சாதாரணமாகக் கூட இல்லை. பின்னணி இசையில் சமாளித்திருக்கிறார். மற்ற கலைஞர்களில் சண்டை இயக்குனருக்கு மட்டும்தான் கொஞ்சம் வேலை அதிகம்.

இடைவேளைக்கு முந்தைய காட்சிகள், ஆனந்தராஜ்.

நகைச்சுவைப் படத்தில் இன்னும் கூடுதல் நகைச்சுவைக் காட்சிகள் இருந்திருக்க வேண்டும்.

Continue Reading

Movie Reviews

A 1 – விமர்சனம்

4 Tamil Cinema – Rating – 3.25/5

Published

on

By

சந்தானம் நடிக்கும் A 1 விமர்சனம் - 4 Tamil Cinema

கதை

சந்தானம் ஒரு லோக்கல் பையன். தாரா அலிசா பெரி பிராமணப் பெண். வீரமுள்ள பிராமணப் பையனை மணக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பவர். புரட்டாசி சனிக்கிழமைக்காக நாமம் போட்டு வந்த சந்தானத்தின் வீரத்தைப் பார்த்து, பிராமணப் பையன் என நினைத்து அவருக்கு முத்தம் கொடுத்து உடனே காதலிக்க ஆரம்பிக்கிறார். அதன் பின்தான் அவர் பிராமணப் பையன் இல்லை என்பது தெரிய வருகிறது. காதலர்கள் பிரிகிறார்கள். சாலையில் நெஞ்சு வலியால் துடித்த தாராவின் அப்பாவை சந்தானம் காப்பாற்றுகிறார். அதனால், மீண்டும் காதல் வருகிறது. சந்தானமும் பெண் கேட்டு குடும்பத்தாருடன் செல்ல, தாரா அப்பாவால் அவமானப்படுத்தப்படுகிறார். கோபமடையும் சந்தானத்திடம் அப்பா சொல்லை மீற முடியாது என்கிறார் தாரா. ஊரே போற்றும் உத்தமரான அப்பாவைப் பற்றி தவறான ஒரு விஷயத்தை ஆதாரத்துடன் காட்டினால் திருமணம் செய்து கொள்கிறேன் என்கிறார். கோபத்துடன் குடிக்கும் சந்தானத்தின் நிலையைப் பார்த்து, அவரது நண்பர்கள் தாராவின் அப்பாவை கொலை செய்து விடுகிறார்கள். ஆனால், அதைக் கொலை எனத் தெரியாமல் தாரா அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்ததாகச் சொல்லி அவரது சடலத்தை வீட்டில் சேர்க்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் முழுவதும் நம்மை சிரிக்க வைக்கிறார் சந்தானம். ஒரு காட்சியில் கூட காமெடி கிராப் இறங்காமல் பார்த்துக் கொள்கிறார். காமெடியில் இளைக்காதவர் ஆங்காங்கே உடல் இளைத்து காணப்படுகிறார். காமெடிக்கு சத்தான உடம்பும் தேவை சந்தானம் அவர்களே, கவனித்துக் கொள்ளுங்கள். நாயகி தாராவும் பிராமணப் பெண்ணாக கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தானத்தின் நண்பர்கள் மாறன், தங்கதுரை, கிங்ஸ்லி கூடுதல் நகைச்சுவைக்கு காரணகர்த்தாக்கள். சந்தானத்தின் அப்பா எம்எஸ் பாஸ்கர் , தாராவின் அப்பா யாட்டின் கார்யேகர் அவரவர் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள்.

இசை, மற்றவை

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘மாலை நேர மல்லிப்பூ‘ வித்தியாசமாய் ஒலிக்கிறது. ஒரு தெரு, இரண்டு வீட்டுக்குள்ளேயே அதிகக் காட்சிகள் நகர்கின்றன. அதையெல்லாம் கவனிக்காத அளவிற்கு ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் படம் பிடித்திருக்கிறார். லியோ ஜான்பால் படத் தொகுப்பு தேவையற்ற காட்சிகளை எடிட்டிங் டேபிளிலேயே கட் செய்து விட்டிருக்கிறது. 1 மணி நேரம் 50 நிமிடங்கள்தான் படம்.

 

சந்தானம்…சந்தானம்…சந்தானம்…

 

சாவு வீட்டிலேயே நகரும் இடைவேளைக்குப் பிறகான காட்சிகள். சில காட்சிகளில் நேரடியாகவும், சில காட்சிகளில் மறைமுகமாவும் பிராமண சமூகத்தை கிண்டலடிக்கும் வசனங்கள்.

Continue Reading

Movie Reviews

கொளஞ்சி – விமர்சனம்

4 Tamil Cinema – Rating – 2.75/5

Published

on

By

கதை

மிகவும் கண்டிப்பான அப்பா சமுத்திரக்கனி. ஆனால், மூத்த மகன் கிருபாகரன் மீதுதான் அவருடைய அனைத்து கண்டிப்பும். இளைய மகனுக்கு அவ்வளவு செல்லம் கொடுக்கிறார். கிருபாகரன் மிகவும் குறும்புத்தனங்கள் செய்து ஊரில் அப்பாவுக்கு கெட்ட பெயரை வாங்கித் தருகிறான். ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனி, அவருடைய மனைவி சங்கவி சண்டை போட்டு பிரிகிறார்கள். அப்பாவின் கண்டிப்பில் இருந்து தப்பிக்க கிருபாகரன் அம்மாவுடன் அவரது மாமா வீட்டிற்குச் சென்று விடுகிறான். பிரிந்த கணவன் மனைவி இணைந்தார்களா, அப்பா, மகன் இருவரும் தங்களது தவறுகளை உணர்ந்து இணைந்தார்களா என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

படத்தலைப்பு ‘கொளஞ்சி’ கதாபாத்திரத்தில்  சிறுவன் கிருபாகரன். ஒரு காட்சியில் கூட அவன் நடிக்கிறான் என்று சொல்ல முடியாதபடி அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறான். அவனது பேச்சிலும், முகபாவனையிலும், உடல்மொழியிலும் குறும்புத்தனம் கொப்பளிக்கிறது. பெரியார் கொள்கைகள்படி வாழ்ந்தாலும் அதிலிருந்து விலகி சிறு, சிறு தவறுகளைச் செய்யும் அப்பாவாக சமுத்திரக்கனி. மூத்த மகனிடம் கண்டிப்பும், இளைய மகனிடம் கனிவும் காட்டும், மனைவியை கை நீட்டி அடிக்கும் முரண் கொண்ட மனிதர்.

சமுத்திரக்கனி மனைவியாக சங்கவி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவி, அவருக்கு இன்னும் சிறப்பான காட்சிகளைக் கொடுத்திருக்கலாம். கிருபாகரன் நண்பனாக நசாத், நக்கல், நையாண்டி பண்ணுவதில் கைத்தட்டல் வாங்குகிறார். காதல் ஜோடிகளாக  ராஜாஜ், நைனா சர்வார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

இசை, மற்றவை

நடராஜன் சங்கரன் இசையில் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது, பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். கிராமத்தைக் காட்டுவதில் இயல்பு மீறாமல் இருக்கிறது விஜயன் முனுசாமியின் ஒளிப்பதிவு.

அனைவரின் இயல்பான நடிப்பு…

திரைக்கதையில் இன்னும் அழுத்தம் கூட்டியிருக்கலாம். காதல் காட்சிகள் கொஞ்சம் வரம்பு மீறி இருக்கின்றன.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: