Connect with us

Movie Reviews

யு டர்ன் – விமர்சனம்

Published

on

u-turn-movie-review

ஒரு உண்மையான த்ரில்லர் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த ‘யு டர்ன்’ படம் சிறந்த உதாரணம்.

ஆரம்பத்தில் ஒரு காதல் கதை போலத் துவங்கும் கதை கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே ஒரு பரபரப்பான த்ரில்லிங்கான திரைக்கதையாக மாறி உச்சபட்ச வேகம் எடுக்கிறது. கிளைமாக்ஸ் வரை ‘அதை செய்தது யார்’ என்ற எந்த யூகத்திற்கும் இடம் கொடுக்காத திரைக்கதையே இந்தப் படத்தின் வரவேற்பிற்குக் காரணமாக அமையும்.

இயக்குனர் பவன்குமார் எந்த விதமான குழப்பமும் இல்லாமல் இந்தப் படத்தை அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். இடைவேளை வந்ததும் தெரியவில்லை, பின்னர் ஆரம்பித்து படம் முடிந்ததும் தெரியவில்லை, அவ்வளவு விறுவிறுப்பாக படம் நகர்கிறது.

ஒரு மேம்பாலத்தில் குறுக்கே உள்ள சிமெண்ட் சாலைத் தடுப்புகளை அகற்றிவிட்டு சிலர் ‘ராங்காக’ யு டர்ன் அடித்து செல்கிறார்கள். அப்படிச் செல்பவர்களைப் பற்றி செய்திக் கதை எழுதுபவர் சமந்தா. அப்படிச் சென்ற ஒருவரை சந்தித்து செய்தி சேகரிக்கச் செல்கிறார். அவர் சென்று வந்த பின் அந்த நபர் கொலை செய்யப்படுகிறார். இதனால், சமந்தாவை விசாரணைக்கு அழைத்து விசாரிக்கிறார்கள். தன்னிடம் அது போல பத்து பேர் முகவரி இருக்கிறது என சமந்தா அவர்களது முகவரிகளைக் கொடுக்கிறார். அவர்கள் அனைவருமே இறந்திருப்பது போலீசுக்குத் தெரிய வருகிறது. இதன் பின்னணியில் என்னவோ இருக்கிறது என சமந்தா செய்தித் தேடலில் இறங்க, இன்ஸ்பெக்டர் ஆதி விசாரணத் தேடலில் இறங்குகிறார். அவர்கள் அந்த உண்மையைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதிக் கதை.

சமந்தா அவருடைய வழக்கமான கதாநாயகி கதாபாத்திரங்களிலிருந்து விலகி, அவருக்கான, அவருடைய நடிப்பை வேறு கண்ணோட்டத்தில் வெளிப்படுத்துவதற்கான ஒரு கதையை, கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடித்திருக்கிறார். கொஞ்சம் காதல் மட்டுமே படத்தில் இருக்கிறது. டூயட் கிடையாது, கிளாமர் உடை கிடையாது, சமந்தாவின் நடிப்பு மட்டுமே திரையை முழுமையாக ஆக்கிரமிக்கிறது. நான்கு ஹீரோ படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் ஐந்தாவதாக இப்படிப்பட்ட ஹீரோயினிசப் படங்களிலும் நடியுங்கள் சமந்தா. உங்களைப் போன்றவர்களின் இந்த முயற்சிகள்தான் வித்தியாசமான படங்களையும், இயக்குனர்களையும் இந்த சினிமாவுக்கு அடையாளம் காட்டும்.

இன்ஸ்பெக்டராக ஒரு இயல்பான, நேர்த்தியான கதாபாத்திரத்தில் அசத்துகிறார் ஆதி. மேலதிகாரியின் பேச்சைக் கேட்காமல் களத்தில் இறங்குவதிலும், மேலதிகாரி கோவித்துக் கொண்டாலும் அதை நாசூக்காகத் தவிர்ப்பதிலும், அப்பாவியான சமந்தா பாதிப்படையக் கூடாது என அக்கறை கொள்வதிலும் அவர் கதாபாத்திரம் மீது ஒரு தனி மரியாதையே வருகிறது.

சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரன். இருவரது சந்திப்புகளும், பேச்சுகளும் காதல் இருக்கிறது, ஆனால் இல்லை என்று சொல்ல வைக்கிறது. அதிலும் கேண்டீனில் அவர்கள் இருவரும் ஒருவரை மற்றவர் வாரி விடும் பேச்சு சுவாரசியம்.

காவல் துறை மேலதிகாரி ஆடுகளம் நரேன், பூமிகா, நரேன் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு.

கதையின் தன்மையை மீறாத ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவை படத்திற்குப் பலம் சேர்க்கின்றன.

சில கதாபாத்திரங்களின் பெயர்களை நாயக், சௌத்ரி என்று வைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அதற்குப் பதிலாக வேறு ஏதாவது தமிழ்ப் பெயர்களை வைத்திருக்கலாம். அது மட்டுமே படத்தில் அந்நியமாகத் தெரிகிறது. சென்னையில் நடக்கும் கதை என்று சொல்லிவிட்டு வேறு ஊரில் படமாக்கினாலும், அதை சென்னையைப் போன்று உணர வைத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த த்ரில்லர் படங்களில் யு டர்ன், ஒரு திருப்புமுனையை  ஏற்படுத்தும் படமாக அமையும் என்பது உறுதி.

Movie Reviews

கொரில்லா – விமர்சனம்

4 Tamil Cinema – Rating 3/5

Published

on

By

தயாரிப்பு – ஆல் இன் பிக்சர்ஸ்
இயக்கம் – டான் சாண்டி
இசை – சாம் சி.எஸ்.
நடிப்பு – ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, சதீஷ், விவேக் பிரசன்னா, ராதாரவி மற்றும் பலர்

கதை

ஜீவா, ஒரு ஏமாற்றுக்காரர். காலையில் பஸ்ஸில் பணத்தை அடிப்பது, அடுத்து மருந்துக் கடையில் வேலை செய்து பணம் அடிப்பது, இரவில் போலி மருத்துவராக பணம் சம்பாதிப்பது என இருக்கிறார். அவருக்கு வேலையை இழந்த சதீஷ், சினிமாவில் நடிக்கத் துடிக்கும் விவேக் பிரசன்னா ஆகியோர் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை பணம். அதை வங்கியில் கொள்ளையடித்து எடுக்க நினைக்கிறார்கள். அவர்களுடன் பக்கத்து அறையில் இருக்கும் ஒருவரும் சேர்ந்து கொள்கிறார். வங்கி ஒன்றிற்கு கொள்ளை அடிக்கச் சென்று அங்குள்ளவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து அரசாங்கத்திடம் 20 கோடி பணம், விவசாயக் கடன் தள்ளுபடி என கோரிக்கை வைக்கிறார்கள். அவர்கள் கேட்டது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நடிப்பு

லோக்கலாக பேசிக் கொண்டு நடிப்பது ஜீவாவுக்கு கை வந்த கலை. அதை இந்தப் படத்திலும் இயல்பாக செய்திருக்கிறார். சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோர் சிரிக்க வைப்பதை விட, சில காட்சிகளில் மட்டும் வரும் யோகி பாபு அதைச் செய்து விடுகிறார். ஜீவாவின் காதலியாக ஷாலினி பாண்டே. அதிக வேலையில்லை. காவல் துறை அதிகாரியாக ராதாரவி, வழக்கம் போல் அவருடைய அனுபவம் பேசுகிறது.

இசை, மற்றவை

இசை உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள் படத்திற்கு பலத்தைக் கொடுக்கவில்லை. சிம்பன்சி காங்கிற்கு டிரைனிங் கொடுத்த டிரைனரை மட்டும் பாராட்டியே ஆக வேண்டும்.

 

படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் நகைச்சுவைப் படத்தில் அதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள் என இயக்குனர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப் போராடுவதற்காக  இயக்குனரைப் பாராட்டலாம். குழந்தைகளுக்குப் பிடிக்கும் விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

 

‘கொரில்லா’ எனப் பெயர் வைத்துவிட்டு அதைச் சுற்றி கதை நகராமல் வங்கிக் கொள்ளை, விவசாயக் கடன் என எங்கெங்கோ நகர்கிறது. சிம்பன்சி காங்-கிற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

Continue Reading

Movie Reviews

கூர்கா – விமர்சனம்

4 Tamil Cinema – Rating – 3/5

Published

on

By

கூர்கா விமர்சனம் - 4 Tamil Cinema

தயாரிப்பு – 4 மங்கிஸ் ஸ்டுடியோ
இயக்கம் – சாம் ஆண்டன்
இசை – ராஜ் ஆர்யன்
நடிப்பு – யோகி பாபு, எலிசா, சார்லி, ஆனந்தராஜ், மனோபாலா, ஆடுகளம் நரேன், ரவி மரியா மற்றும் பலர்

கதை

கூர்கா யோகி பாபுவுக்கு, போலீஸ் வேலையில் சேர வேண்டும். ஆனால், அது நடக்காமல் போக செக்யூரிட்டி வேலைக்குச் சேர்கிறார். ஒரு வீட்டில் அவருக்கு பணி கொடுக்கப்படுகிறது. அந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் அமெரிக்க தூதரக பெண் அதிகாரி மீது யோகி பாபு காதல் கொள்கிறார். பின்னர் யோகி பாபு ஒரு ஷாப்பிங் மாலில் பணி மாற்றப்படுகிறார். அங்கு சிலர் புகுந்து கொண்டு தியேட்டரில் படம் பார்ப்பவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைக்கிறார்கள். அவர்களிடம் அந்த பெண் அதிகாரியும் மாட்டிக் கொள்கிறார். அவர்களைக் காப்பாற்ற யோகி பாபு களம் இறங்குகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

‘தர்ம பிரபு’ படத்திற்குப் பிறகு யோகி பாபு நாயகனாக நடித்து வந்திருக்கும் படம். தனக்குப் பொருத்தமான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்தாலும், நகைச்சுவை நாயகனாக நடிக்கும் போது கூடுதல் நகைச்சுவைக் காட்சிகளை அவர் சேர்த்துக் கொள்வது நல்லது. அமெரிக்கத் தூதரக பெண் அதிகாரியாக எலிசா. அதிக வேலையில்லை. மற்ற நடிகர்களில் ஆனந்தராஜ் தான் கலக்குகிறார். அவருக்கும், யோகி பாபுவுக்கும் இடையிலான காட்சிகள்தான் படத்தின் ஹைலைட். ரவி மரியா எரிச்சலூட்டுகிறார்.

இசை, மற்றவை

‘கூர்கா’ பற்றிய கதை என்பதால் இரவு நேரத்தில் மட்டுமே காட்சிகள் நகர்கின்றன. ஒளிப்பதிவாளர் கடுமையாக உழைத்திருக்கிறார். இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.

 

நகைச்சுவை படம் என்பது மட்டும்தான் படத்திற்கு பிளஸ். யோகி பாபு முடிந்தவரையில் படத்தைக் காப்பாற்றுகிறார். அவருக்கு உறுதுணையாக ஆனந்தராஜ் இருக்கிறார்.

 

காமெடி என்ற பெயரில் ரவி மரியா, மனோபாலா, மயில்சாமி, நமோ நாராயணன் ஆகியோர் செய்வது கடுப்பேத்துகிறது.

Continue Reading

Movie Reviews

வெண்ணிலா கபடி குழு 2 – விமர்சனம்

4 Tamil Cinema – Rating – 2.75/5

Published

on

By

வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்

தயாரிப்பு – ஆல் இன் பிக்சர்ஸ்
இயக்கம் – செல்வ சேகரன்
இசை – செல்வ கணேஷ்
நடிப்பு – விக்ராந்த், அர்த்தனா பினு, பசுபதி, கிஷோர், அனுபமா குமார், சூரி மற்றும் பலர்

கதை

மியூசிக்கல் கடை வைத்திருப்பவர் விக்ராந்த். அவருடைய அப்பா கபடி மீது அதிக ஆர்வம் உள்ளார். அந்த ஆர்வத்தால், அவர் பார்த்த அரசு டிரைவர் வேலையிலிருந்து சஸ்பென்ட் ஆகிறார். கபடியே பிடிக்காத விக்ராந்த் இதனால், அப்பா மீது கோபம் கொள்கிறார். ஆனால், பசுபதி யார் என்று பிளாஷ் பேக் சொல்கிறார் அம்மா அனுபமா குமார். அதன் பின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அப்பாவின் சொந்த ஊருக்குச் சென்று கபடி பயிற்சி எடுக்கிறார். அப்பா மீதான பழியைப் போக்க நினைக்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

கிராமத்து இளைஞராக பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ராந்த். அவருடைய காதலியாக அர்த்தனா பினு, பாவாடை தாவணியில் அழகாக வந்து போகிறார். விக்ராந்த் அப்பாவாக பசுபதிக்கு, கனமான கதாபாத்திரம். கண்களை நனைக்கிறார். கபடி பயிற்சியாளர் கிஷோர், கபடி ஆடும் சூரி ஆகியோரும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.

இசை, மற்றவை

செல்வகணேஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் கிராமத்து அழகை அருமையாய் படமாக்கியிருக்கிறார்.

 

நம் மண்ணின் கதை, நம் மண்ணின் விளையாட்டு. அதற்காக முக்கியத்துவம் கொடுத்து யதார்த்தமாய் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். நடித்திருப்பவர்கள் அனைவருமே இயல்பாய் நடித்திருப்பது கூடுதல் பலம்.

 

படத்தின் திரைக்கதையில் திருப்பங்கள் அதிகமில்லை. இப்படித்தான் படம் முடியப் போகிறது என்பதை முன்னரே கணிக்க முடிகிறது.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!