Connect with us

Tamil Cinema News

உறியடி 2 – யோசிக்க வைக்கும் படம்

இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேச்சு

Published

on

உறியடி 2 - யோசிக்க வைக்கும் படம்

2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா, உறியடி 2 படத்தின் இயக்குனர் விஜய்குமார், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ், பாடலாசிரியர் நாகராஜி, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், விநியோகஸ்தர் சக்தி வேலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வருகை தந்தவர்களை இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்றார்.

அவர் பேசுகையில்,“ உறியடி 2 எங்களுக்கு ஸ்பெஷலான படம். உறியடி படத்தின் இயக்குனர் விஜய்குமார் அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் சொன்ன ஒன்லைன் எங்களைக் கவர்ந்தது. உறியடி படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சமூகத்துக்கு தேவையான அழுத்தமான செய்தி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தின் படபிடிப்பை திட்டமிட்டபடி 35 நாட்களுக்குள் நிறைவு செய்தனர் இயக்குனர் மற்றும் அவரது குழுவினர். இதற்காகவும் அப்படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்,

“உறியடி படத்தின் முதல் பாகத்தில் இயக்குனர் மற்றும் அவரது குழுவினர் காட்டிய உழைப்பு மற்றும் உண்மைக்காக உறியடி 2 படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனலாம். நிறைய உழைக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்களுக்கு சூர்யாவின் 2டி நிறுவனத்தின் வாய்ப்பு உறுதி என்பதை இதன் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். சமுதாயத்தில் நடைபெறும் அவலங்களுக்கு இளைஞர்களின் பார்வையில் எப்படி தீர்வு காண முடியும். எப்படி அதனை முன்னெடுக்க முடியும். என்ற வகையில் உருவான படம்தான் இந்த உறியடி 2,” என்றார்.

இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில்

“இந்தப் படத்திற்காக இசையமைக்க இயக்குனர் விஜய்குமார் என்னுடன் தொடர்பு கொண்ட போது, நான் 96 படத்தின் இசையமைப்புப் பணியை தொடங்கவில்லை. இந்த படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து, பின்னணி இசையமைத்து, கிட்டத்தட்ட இறுதி நிலையில் தான் படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் படத்தை பார்வையிட்டார். அது வரைக்கும் எனக்கு படைப்பு சுதந்திரம் இருந்தது. இயக்குனரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவரைப் போன்ற ஒரு பெருந்தன்மையான, நேர்மையான, உண்மையான மனிதரை காண்பது அரிது. அவர் ஒரு அரிய ஜீன். இந்தப் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாது. ஆனால் அவர்களின் உறக்கத்தைக் கெடுக்கும். அதுபோன்ற வீரியமுள்ள படைப்பு இது,” என்றார்.

படத்தின் இயக்குனர் விஜய்குமார் பேசுகையில்

“இசையமைப்பாளரைத் தேர்வு செய்யும் முன் ஒரு மூன்று விஷயங்களை மனதில் கொள்வோம். ஈகோ இருக்கக் கூடாது. திறமை இருக்க வேண்டும். டெடிகேஷன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். இந்த மூன்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிடம் இருந்தது. இந்த படத்தில் மூன்று பாடல்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு இசையமைத்திருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜேனரில் இருக்கும். முதன்முறையாக இந்த படத்தில் இரண்டு பாடல்களை கோவிந்த் வசந்தா பாடியிருக்கிறார்.

நடிகர் சூர்யா ஏன் உறியடி 2 வை தயாரிக்க வேண்டும், என்று நிறைய பேர் கேட்கிறார்கள், கேட்க நினைக்கிறார்கள். நடிகர் சூர்யா மக்கள் மீதும் சினிமா மீதும் பேரன்பு கொண்ட மனிதன். அவரது நம்பிக்கையை உறியடி 2 படம் காப்பாற்றும். இந்தப் படம் மக்களுக்கான படம் என்ற நம்பிக்கையும் காப்பாற்றும். தமிழ் திரையுலகிலுள்ள ஒவ்வொரு இயக்குனரும், ஒவ்வொரு நடிகரும் இந்த நிறுவனத்தில் படம் பண்ண வேண்டும் என்ற கனவு இருக்கிறது. ஏவிஎம் நிறுவனத்தைப் போல் ஒரு படத்தை தொடங்கியது முதல் அதனை திரைக்கு கொண்டுவந்து கொண்டு வருவது வரை சரியான, மிகச் சரியான திட்டமிடல் இந்த நிறுவனத்தில் இருக்கிறது.

படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றியை கூறி படைப்பை எனதாக்கிக் கொள்ள விரும்பவில்லை. தென்காசியில் படப்பிடிப்பு நடைபெற்ற பொழுது, ஒரு கலவர காட்சியை படமாக்கினோம். அப்போது உதவி இயக்குனர்களை போலீசாக நடித்தவர்களிடம் உண்மையான தடியைக் கொடுத்து அடிக்க வேண்டும் என்று சொன்னோம். அதேபோல் உதவி இயக்குனர்கள் யார் என்பதையும் போலீஸ்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, காட்சியின் போது உதவி இயக்குநர்களிடம் ‘கையைத் தூக்குங்க’ என்று ஒரு சைகையை சொல்லியிருந்தோம். ஆனால் படப்பிடிப்பு நடந்தபோது அந்த கூட்டத்தில் உள்ளவர்கள், துணை நடிகர்கள், ஒவ்வொருவரும் அவர்கள் கையை தூக்கி அந்த அடியை வாங்கிக் கொண்டு இந்த காட்சியை உயிர்ப்புடன் படமாக்க உதவி புரிந்தார்கள். அதற்காக யாருக்கும் நன்றியை தெரிவிக்க விரும்பவில்லை. இது அனைவருக்குமான படம் என்பேன். அத்துடன் இந்த படத்திற்காக நீங்கள் செலவழிக்கும் நேரத்தையும், பணத்தையும், புத்திசாலித்தனத்தையும் 100 சதவீதம் மதிக்கும் ஒரு படமாக உறியடி-2 இருக்கும்,” என்றார்.

நடிகர் சூர்யா பேசுகையில்,

“நான் நடிக்கும் படத்தின் வெளியீடு தாமதமாகிக் கொண்டே போனாலும், இதுபோன்று சந்தர்ப்பங்களில் உங்களை எல்லாம் சந்திப்பது சந்தோஷமாக இருக்கிறது. கேரளாவில் நடைபெற்ற ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். அங்குதான் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவை சந்தித்தேன். அவருடைய இசையையும் வீடியோவையும் பார்த்தேன். அதில் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால் அவர் இவ்வளவு தெளிவாக பேசியது என்னை ஈர்த்தது. அவர் படத்தைப் பற்றி கூறிய வார்த்தை, ‘இந்த படம் உங்களை எண்டர்டெயின் பண்ணாது. ஆனால் டிஸ்டர்ப் பண்ணும். என்று சொன்ன வார்த்தைகள் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருந்தது.

இங்கு வந்தவுடன் ஒரு தொழில்நுட்பக் கலைஞர் என்னிடம் ‘நீங்கள் ‘காக்க காக்க’ படத்தில் நடிக்கும்போது, நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன் சார்’ என்று சொன்னபோது, என்னுள் நாம் சீனியராகி விடுகிறோமோ..! என்ற எண்ணம் எழுந்தது. இதுவரை திரையில் நான் என்ன செய்திருக்கிறேனோ அவை எல்லாம் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கற்பனையில் உருவானது. எங்களுக்கான அடையாளம், இமேஜ் இதெல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் அளித்தது.

இந்நிலையில் அவர்களுடைய வேலையில் சென்று குறுக்கீடு செய்யவும், ஆலோசனை செய்யவும், என்னை நான் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். அது தேவையற்றது என்றும் நினைக்கிறேன். ஆனால் நல்ல விஷயங்களை ரசிக்கப் பிடிக்கும். நல்ல விசயங்களுக்கு துணையாக உடன் நிற்கப் பிடிக்கும் .எனக்கான நிலையிலிருந்து, என்ன வகையான உதவிகளைச் செய்ய முடியுமோ, அதைத்தான் இந்த படத்திற்கு செய்திருக்கிறேன். இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுடன் தொடர்ந்து 2டி நிறுவனம் பயணிக்கும். அத்துடன் எங்கள் நிறுவனத்தில் முதன் முதலாக அவர் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார் அதுவும் எங்களுக்கு சந்தோஷமே.

2டி நிறுவனம் 10 படங்களுக்கு மேல் தயாரித்திருக்கிறது என்றால், அதற்குக் காரணம் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு தான். இயக்குனர் விஜய்குமார், என்னைப் போலவே அவரும் ஒரு இன்ட்ரோவெர்ட் (introvert). மனதில் நினைத்ததை டக்கென்று வெளிப்படுத்த மாட்டார், விவாதிக்க மாட்டார், அனைத்தையும் புரிந்து கொள்வார்.

ஒரு அறிமுகத்திற்குப் பிறகு இயக்குனர் விஜய்குமாரின் உறியடியை பார்த்தேன். அதன் பின்னர் அவருடைய முதல் சந்திப்பிலேயே நான் எப்படி ராஜா சாருடன் பழகுகிறேனோ அதேபோல் இயக்குனர் விஜய்குமாரிடமும் பழகினேன். ஒருவர் சினிமாவுக்காக இவ்வளவு உண்மையாக இருக்க முடியுமா…? என்ற பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் என்னுள் ஏற்படுத்தினார். ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனுள் எவ்வளவு தூரம் உண்மையாக பயணிக்க முடியும் என்பதையறிந்து, அந்தளவிற்கு பயணித்து அதை வெளிக்கொணர்பவர் விஜயகுமார். அவர் சினிமாவிற்காக குடும்பத்தை விட்டு பிரிந்து, குழந்தைகளை விட்டுப் பிரிந்து, அவ்வளவு நேர்மையாக இருக்கும் ஒருவரை நான் விஜய்குமாரிடம் பார்த்தேன்.

எங்க அப்பா படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததில்லை. எனக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டது கிடையாது. ஒரு இயக்குனரை சந்தித்தது கிடையாது. கதை கேட்டது கிடையாது. தயாரிப்பாளரை சந்தித்தது கிடையாது. இருந்தாலும் நான் ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளம் எனக்கிருக்கிறது. ஆனால் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் உறியடி என்ற படத்தை எடுத்த விஜய்குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை நான் பாராட்டுகிறேன். திரையில் ஒரு ஒரு உண்மை வெளிப்பட்டது. அதன் ஆயுள் அதிகம்.

உறியடி 2 ஏன் வரவில்லை? என்ற வினா எழுந்தது. உறியடி வந்து நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு, 2டி நிறுவனத்தின் மூலமாக உருவானதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் எண்டர்டெயின் பண்ணாது. டிஸ்டர்ப் பண்ணும். யோசிக்க வைக்கும். எப்போதும் போல் நியாயமான தீர்ப்பை வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் படத்தின் டீஸர் மற்றும் பாடல்களை நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா வெளியிட்டார்.

Tamil Cinema News

சென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு

Published

on

By

சென்னை, உத்தண்டியில் பிவிஆர் சினிமாஸ் திறப்பு

இந்தியா முழுவதிலும் பல நகரங்களில் தியேட்டர்களை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் சென்னை, பழைய மகாபாலிபுரம் சாலையில் உள்ள உத்தண்டியில் 10 தியேட்டர்கள் கொண்ட புதிய மல்டி பிளக்ஸ் வளாகம் ஒன்றை இன்று திறந்துள்ளது.

குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘பிளே ஹவுஸ்’ வகை திரையரங்கு சென்னையிலேயே இங்கு மட்டும் தான் உண்டு என்பது இதன் சிறப்பம்சம்.

இந்த பிவிஆர் திரையரங்கை பிரசன்னா, சினேகா தம்பதியினர் ரிப்பன் கத்தரித்து, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். திரையரங்கை திறந்து வைத்து அவர்கள் பேசியதாவது,

“பிவிஆர் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு அங்கம். அவர்கள் சென்னையில் திறந்திருக்கும் 6வது மல்ட்டிபிளெக்ஸ் இது என்பது சிறப்பான அம்சம். சென்னையின் சத்யம் திரையரங்கம் எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரையரங்கு. சத்யம் திரையரங்கையும் பிவிஆர் தான் வாங்கி, நிர்வகிக்கிறது என்பதால் பிவிஆர் இன்னும் மனதுக்கு நெருக்கம். ஏற்கனவே கேம் ஓவர் திரைப்படத்தை இங்கு பார்த்தேன்.

மிகச்சிறந்த ஒளி, ஒலி வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இருக்கைகளும் மிகவும் வசதியாக இருக்கிறது. உலகிலேயே இந்தியர்கள் போல சினிமா விரும்பிகளை எங்கேயும் பார்க்க முடியாது. இந்தியா மாதிரி சினிமாவை கொண்டாடும் ஒரு நாடு உலகிலேயே இல்லை. வெளிநாடுகளில் கூட இந்தியா அளவுக்கு வசதிகளை தரும் திரையரங்குகள் அதிகம் இல்லை. ஆனால் படம் பார்க்கும் ரசிகர்களை மதித்து புதுப்புது அம்சங்களை பிவிஆர் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

சிங்கிள் திரையரங்குகள் பலவும் மூடப்பட்டு, திருமண மண்டபங்களாக மாறி வரும் நிலையில் பிவிஆர் போன்றோர் தொடர்ந்து பெரிய பெரிய மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்குகளை துவக்குவது சினிமாவுக்கு ஊக்கம் அளிக்கிறது.

10 திரைகள் இருக்கிறது, பெரிய படங்களுக்கு மட்டும் திரையரங்குகளை ஒதுக்காமல் சின்ன படங்களுக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருப்பதால், தொடர்ந்து இங்குதான் படங்களை பார்ப்போம்,” என்றார் நடிகர் பிரசன்னா.

“நான், பிரசன்னா இருவருமே சினிமா பைத்தியம். எந்த ஒரு படத்தையும் முதல் நாளே பார்த்து விடும் அளவுக்கு சினிமா எங்களுக்கு பிடிக்கும். நகருக்குள் இருந்து வெளியே ஈசிஆருக்கு குடிபெயர்ந்தபோது, ஒவ்வொரு சினிமா பார்க்கவும் 40 கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமே என்ற ஒரு வருத்தம் இருந்தது. நல்ல வேளையாக எங்கள் வீட்டுக்கு அருகிலேயே PVR திரையரங்கை திறந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். சென்னையிலேயே எங்கும் இல்லாமல் முதன்முறையாக குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக ‘பிளே ஹவுஸ்’ என்ற திரையரங்கும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை பார்க்கவும் மிகவும் ஆவலாக இருக்கிறேன்,” என்றார் நடிகை சினேகா.

Continue Reading

Tamil Cinema News

பிக் பாஸ் 3 – போட்டியாளர்கள் முழு விவரம்

Published

on

By

பிக் பாஸ் 3 - போட்டியாளர்கள் முழு விவரம்

விஜய் டிவியில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வீட்டுக்குள் ஒவ்வொருவராக நுழைந்தவர்கள் விவரம்…

பாத்திமா பாபு – செய்தி வாசிப்பாளர்
லாஸ்லியா – இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர்
சாக்ஷி அகர்வால் – நடிகை
மதுமிதா – நடிகை
கவின் – நடிகர்
அபிராமி – மாடல் மற்றும் நடிகை
சரவணன் – நடிகர்
வனிதா விஜயகுமார் – நடிகை
சேரன் – இயக்குனர், நடிகர்
ஷெரின் – நடிகை
மோகன் வைத்யா – கர்நாடக இசைப் பாடகர்
தர்ஷன் – இலங்கை மாடல்
சாண்டி – நடன இயக்குனர்
முகின் – மலேசியா பாடகர்
ரேஷ்மா – நடிகை

கடந்த 2 சீசன்களில் முதல் சீசனில் 16 போட்டியாளர்களும், இரண்டாவது சீசனில் 15 போட்டியாளர்களும் நுழைந்திருக்கிறார்கள். இந்த 3வது சீசனில் 15 போட்டியாளர்கள் நுழைந்திருக்கிறார்கள்.

கடந்த 2 சீசன்களில் வெளிநாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் இல்லை. ஆனால், இந்த சீசனில் இலங்கையிலிருந்து இருவரும், மலேசியாவிலிருந்து ஒருவரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிகழ்ச்சி இன்று திங்கள் முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

Continue Reading

Tamil Cinema News

பிகில் – இரு வேடங்களில் விஜய் ?

Published

on

By

பிகில் - இரு வேடங்களில் விஜய் ?

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயர் ‘பிகில்’ என அறிவிக்கப்பட்டு, அதன் முதல் பார்வை சற்று முன் வெளியிடப்பட்டது.

அட்லீ, விஜய் இதற்கு முன்பு கூட்டணி சேர்ந்த ‘தெறி, மெர்சல்’ படங்களின் தலைப்பைப் போன்றே இந்தப் படத்திற்கும் லோக்கலாக பிகில் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், இந்துஜா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொல்லம்மா, ராஜ்குமார், தேவதர்ஷினி, யோகிபாபு மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பெரும்பாலான காட்சிகள் மிகப் பெரும் கால்பந்தாட்ட மைதான செட்டில் படமாக்கப்பட்டுள்ளன.

முதல் பார்வை வெளியான பிறகு படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

‘பிகில்’ முதல் பார்வை வெளியான உடனேயே டிவிட்டரில் உலக அளவிலும், இந்திய அளவிலும் முதலிடத்தில் டிரென்டிங்கில் உள்ளது.

இரண்டாவது பார்வை நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தை வரும் தீபாவளி தினமான அக்டோபர் 27ம் தேதி வெளியிட உள்ளார்கள்.

Continue Reading
Advertisement

Tamil Movies Database

Trending

error: Content is protected !!